ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
பக்தாம்ருதம் விஶ்வஜநாநுமோதநம் ஸர்வார்த்ததம் ஸ்ரீஶடகோபவாங்மயம் |
ஸஹஸ்ரஶாகோபநிஷத்ஸமாகமம் நமாம்யஹம் த்ராவிட வேதஸாகரம் ||
எம்பெருமானின் பக்தர்களுக்கு அமுதம் போன்றிருக்கும், எல்லோருக்கும் ஆனந்தத்தைக் கொடுக்ககூடியதும், எல்லா அர்த்தங்களையும் காட்டகூடியதும், ஸ்ரீ சடகோபரின் திருவாக்கிலே உதித்ததும், ஆயிரம் சாகைகளையுடைய ஸாம வேதமாய், அதன் ஸாரமான சாந்தோக்ய உபநிஷத்தாய் இருக்கும், தமிழ் வேதக் கடலான திருவாய்மொழியை நான் வணங்குகிறேன்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூர் என்றும்
மருவினிய வண்பொருநலென்றும் அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே ஏப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே தெளிந்து
நெஞ்சே! திருவழுதி நாடு என்கிற ப்ராந்தியத்தை நினைத்தும், அதனுள் இருக்கும் அழகிய திருக்குருகூர் என்ற திவ்யதேசத்தை நினைத்தும், அனைவரும் விரும்பும்படி இனிமையாய் இருக்கும் தாமிரபரணி ஆற்றை நினைத்தும், பெறுதற்கரிய வேதங்களை அந்தாதி க்ரமத்தில் திருவாய்மொழியாகப் பாடின ஆழ்வாரின் இரண்டு திருவடிகளை எப்பொழுதும் தெளிவுடன் சிந்திப்பாயாக.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரையல்லாது இறைஞ்சேன் தனத்தாலும்
ஏதும் குறைவிலேன்எந்தை சடகோபன்
பாதங்கள் யாமுடைய பற்று
என்னுடைய மனத்தாலும் வாக்காலும் வள்ளல் தன்மையுடைய திருக்குருகூரை ஆதரிக்கும் கோஷ்டியில் இருப்பவர்களைத் தவிர மற்றவர்களை வணங்கமாட்டேன். கைங்கர்யச் செல்வத்திலும் எவ்விதமான குறையும் என்னிடத்தில் இல்லை. ஏனெனில் என்னுடைய ஸ்வாமியான நம்மாழ்வாரின் திருவடிகள் நம்முடைய பற்றுக்கோலாக இருப்பதால்.
ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனிதன்
வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன் ஆய்ந்த பெருஞ்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம்தரிக்கும்
பேராத உள்ளம் பெற
குற்றமில்லாத சிறந்த குணங்களால் நிறைந்து இருப்பவரான நம்மாழ்வார் அருளிச்செய்த நேர்மை மிகுந்த தமிழ் வேதத்தை தாங்கிக்கொள்ளும் சக்தி கொண்டதாய் வேறொரு விஷயத்தில் செல்லாத நெஞ்சை அடைவதற்காக தகுதியான பெரிய புகழையுடைய எம்பெருமானாரின் பொருத்தமான திருவடித்தாமரைகளை வணங்குகிறேன்.
வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வன்புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற
முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த
இதத் தாய் இராமானுசன்
ஆகாசத்தளுவும் வளர்ந்திருக்கும் மரங்களையுடைய சோலைகளையும் ஏழு மதிள் சுற்றுக்களையும் உடைய திருவரங்கத்தில் சயனித்திருக்கும் பெரிய பெருமாளின் திருக்கல்யாண குணங்கள் விஷயமாக அமைந்த தமிழ் வேதமான ஆயிரம் பாசுரங்களையும் முதலிலே பெற்றெடுத்த தாய் நம்மாழ்வார், மிடுக்குடன் அதனை வளர்த்த, அதன் நன்மையைப் பார்க்கும் இரண்டாம் தாய், எம்பெருமானார்.
மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ் வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழின் இசை வேதத்தியல்
ஆழ்வார் திருநகரியில் இருப்பவர்களுக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்த வீணையின் இசை போன்ற திருவாய்மொழிப் பாசுரங்கள் மிகவும் உயர்ந்தவனான எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனின் தன்மையையும், நித்யமாக இருக்கும் ஜீவாத்மாவின் தன்மையையும், ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த உபாயத்தின் தன்மையையும், அந்த எம்பெருமானை அடைந்து அனுபவிக்கும் நிலைக்கு விரோதியாய்ச் சேர்ந்து இருக்கும் முன்னை வினைகளின் தன்மையையும், வாழ்வாகிற உயர்ந்த புருஷார்த்தத்தின் தன்மையும் விளக்கிக் கூறும்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org