ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
தொண்ணூற்றொன்றாம் பாசுரம். இவர்கள் இப்படி ஈடுபாடில்லாமல் இருந்தாலும் எம்பெருமானார் இவர்களுடைய வாழ்ச்சிக்காகச் செய்த முயற்சியை நினைத்து அவரைக் கொண்டாடுகிறார்.
மருள் சுரந்து ஆகமவாதியர் கூறும் அவப் பொருளாம்
இருள் சுரந்து எய்த்த உலகு இருள் நீங்கத் தன் ஈண்டிய சீர்
அருள் சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம் இராமாநுசன் மிக்க புண்ணியனே
அறியாமையெல்லாம் ஒன்றாகத் திரண்டு சைவாகமத்தைக் கொண்டு வாதம் செய்ய வரும் பாசுபதர் முதலியவர்கள் ருத்ர பரத்வத்தை ஸ்தாபிக்கக் கூறும் மிகவும் தாழ்ந்த அர்த்தங்களாகிற இருள் மிகுந்து அத்தாலே வருந்திய லோகத்தினுடைய அந்தகாரமானது போகும்படியாகத் தம்முடைய அடியார்களின் ரக்ஷணங்களாகிற திரண்ட உயர்த்தியையுடைய க்ருபை ஒன்றாகச் சேர்ந்து “எல்லா ஆத்மாக்களுக்கும் தலைவன் பெரிய பெருமாள்” என்னும் அர்த்தத்தைக் கொடுத்தருளினார். இப்படிச் செய்த எம்பெருமானார் பரமதார்மிகர்.
தொண்ணூற்றிரண்டாம் பாசுரம். எம்பெருமானார் ஒரு காரணமும் இல்லாமல் தம்மை ஏற்றுக்கொண்டதையும் அது மட்டுமல்லாமல் உள் மற்றும் வெளி இந்த்ரியங்களுக்கு விஷயமாக எழுந்தருளியிருப்பதையும் நினைத்து மிகவும் மகிழ்ந்து இதற்குக் காரணம் என்னவென்று அருளிச்செய்யவேண்டும் என்று கேட்கிறார்.
புண்ணிய நோன்பு புரிந்தும் இலேன் அடி போற்றி செய்யும்
நுண் அரும் கேள்வி நுவன்றும் இலேன் செம்மை நூல் புலவர்க்கு
எண் அரும் கீர்த்தி இராமாநுச இன்று நீ புகுந்து என்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற இக்காரணம் கட்டுரையே
இப்பேற்றுக்கு உறுப்பான புண்ய வ்ரதத்தை நான் செய்யவில்லை. திருவடிகளை அடைவதற்குக் காரணமான, நுண்ணியதாய், செய்தற்கரிய ச்ரவணத்தைச் செய்வதற்கு ஆசைப்பட்டது இல்லை. வேறு ப்ரயோஜனத்தை எதிர்பார்க்காதவராய், சாஸ்த்ரத்தைப் போலே இருக்கும் கவிகளைச் சொல்ல வல்லவர்களுக்கும் புரிந்து கொள்ளவரிதான கீர்த்தியையுடைய எம்பெருமானாரே! இன்று உகந்து என்னுடைய வெளிக்கண்ணுக்கும் உட்கண்ணுக்கும் விஷயமாய் நின்ற இதன் காரணத்தை தேவரீர் தாமே அருளிச்செய்ய வேண்டும்.
தொண்ணூற்றுமூன்றாம் பாசுரம். எம்பெருமானார் இதற்கு விடை ஒன்றும் அருளிச்செய்யாமல் இருக்க, இவர் எப்படி எம்பெருமானார் யாரும் கேட்காமலே தாமே வந்து குத்ருஷ்டி (வேதத்துக்குத் தவறான அர்த்தம் சொல்லும்) மதங்களை ஜயித்தாரோ, அதேபோல நான் கேட்காமலே நிர்ஹேதுகமாக வந்து என் ப்ரபலகர்மங்களை அறுத்தருளினார் என்று தெளிவடைந்து, எம்பெருமானார் எல்லாமே நிர்ஹேதுகமாகச் செய்பவர் என்கிறார்.
கட்டப் பொருளை மறைப் பொருள் என்று கயவர் சொல்லும்
பெட்டைக் கெடுக்கும் பிரான் அல்லனே என் பெரு வினையை
கிட்டி கிழங்கொடு தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி
வெட்டிக் களைந்த இராமாநுசன் என்னும் மெய்த்தவனே
ஒழிக்க முடியாத என்னுடைய மஹா பாபங்களைக் கண்டு அருகில் வந்து வாஸனையாகிற கிழங்கோடேகூட தம்முடைய க்ருபையாகிற அழகிய வாளைச் சுழற்றி வெட்டியருளின ப்ரபந்ந ஜந கூடஸ்தரானவர் எம்பெருமானார். அவர் மிகவும் தாழ்ந்ததான அர்த்தங்களை வேதார்த்தங்கள் என்று குத்ருஷ்டிகள் சொல்லுகிற மயக்கமூட்டும் வாக்யங்களைப் போக்கிய உபகாரகரன்றோ?
தொண்ணூற்றுநான்காம் பாசுரம். எம்பெருமானார் தம்மை அடைந்தவர்களுக்கு ப்ரபத்தி நிஷ்டை முதல் பரமபதம் வரை எல்லாம் அருளுவரேயாகிலும், நான் அவர் குணங்களைத் தவிர வேறொன்றை விரும்பி அனுபவிக்க மாட்டேன் என்கிறார்.
தவம் தரும் செல்வும் தகவும் தரும் சலியாப் பிறவிப்
பவம் தரும் தீவினை பாற்றித் தரும் பரந்தாமம் என்னும்
திவம் தரும் தீது இல் இராமாநுசன் தன்னைச் சார்ந்தவர்கட்கு
உவந்து அருந்தேன் அவன் சீர் அன்றி யான் ஒன்றும் உள் மகிழ்ந்தே
தம்மை அடைந்தவர்களுக்கு நன்மையை ஏற்படுத்தாத குற்றமில்லாத எம்பெருமானார், தம்மை அடைந்தவர்களுக்கு சரணாகதி என்னும் தவத்தில் நிஷ்டையை கொடுத்தருளுவார். மேலும் பக்தியாகிற செல்வத்தை ப்ராப்யத்துப் (குறிக்கோள்) பொருத்தமாகக் கொடுத்தருளுவர். எம்பெருமானைத் தவிர வேறு ஒருவராலும் அசைக்க முடியாத பிறவி என்னும் ஸம்ஸாரத்தை மேன்மேலும் உண்டாக்கும் தீவினைகளைப் பொடிப்பொடியாகப் பண்ணிக்கொடுப்பார். பரந்தாமம் என்று சொல்லப்படுகிற பரமாகாசமான ஸ்ரீவைகுண்டத்தையும் கொடுப்பார். இப்படி அவர் எல்லாம் தந்தாலும், நான் அவருடைய குணங்களைத்தவிர வேறொன்றையும் உள்ளத்தில் மகிழ்ச்சியுடன் விரும்பி அனுபவிக்கமாட்டேன்.
தொண்ணூற்றைந்தாம் பாசுரம். எம்பெருமானாரின் ஞானம் சக்தி முதலியவைகளை நினைத்துப் பார்த்து, இவர் இந்த லோகத்தைச் சேர்ந்தவர் இல்லை, ஸம்ஸாரம் தீண்டாத நித்யஸூரிகளில் ஒருவர் பிறருக்காக இங்கே வந்து அவதரித்துள்ளார் என்று அருளிச்செய்கிறார்.
உள் நின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம்படி பல் உயிர்க்கும்
விண்ணின்தலை நின்று வீடு அளிப்பான் எம் இராமாநுசன்
மண்ணின் தலத்து உதித்து உய்மறை நாலும் வளர்த்தனனே
உள்ளே நின்று இவ்வாத்மாக்கள் எப்படி உஜ்ஜீவிக்குமோ அதுக்கான முயற்சிகளைப் பண்ணி அவர்களுக்கு உஜ்ஜீவனத்தையே பண்ணும் ஸர்வேச்வரனும் ஆத்மாக்கள் விஷயத்தில் எம்பெருமானார் அளவுக்கு அன்புடையவன் இல்லை என்று சொல்லும்படி எல்லா ஆத்மாக்களுக்கும் பரமபுருஷார்த்தமான மோக்ஷத்தை கொடுத்தருளுவதற்காக நம்முடைய நாதரான எம்பெருமானார் விண்ணில் உயர்ந்த ஸ்தானமான ஸ்ரீவைகுண்டத்திலிருந்து பூதலத்தில் வந்து, இங்குள்ள தோஷங்களில்லாமல் அவதரித்து, எல்லாருக்கும் உஜ்ஜீவனத்துக்குக் காரணமான நான்கு வேதங்களும் குறைவின்றி வளரும்படிச் செய்தருளினார்.
தொண்ணூற்றாறாம் பாசுரம். எம்பெருமானார் வேதாந்த க்ரமத்திலே பக்தி ப்ரபத்தி ஆகிய இரண்டு வழிகளையும் அருளிச்செய்தாரே. இதில் எளிதில் செய்யக்கூடிய ப்ரபத்தி நிஷ்டை உம்முடையதோ என்று கேட்க, அதன்று, நான் எம்பெருமானார் அபிமானத்திலே ஒதுங்கியவன் என்கிறார்.
வளரும் பிணிகொண்ட வல்வினையால் மிக்க நல்வினையில்
கிளரும் துணிவு கிடைத்தறியாது முடைத்தலை ஊன்
தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்கு
உளர் எம் இறைவர் இராமாநுசன் தன்னை உற்றவரே
எல்லையில்லாத துக்கத்தைக் கொடுக்கும் ப்ரபலமான வினையாலே உயர்ந்த தர்மமான சரணாகதியில் மஹாவிச்வாஸம் என்பது எளிதில் ஏற்படாதே. தீய கந்தத்துக்கு இருப்பிடமாய், மாமிசம் முதலியவைகளால் செய்யப்பட்ட சரீரம் மரணத்தருவாயில் கட்டுக்குலையும்போது நல்லுபதேசங்களைக் கொண்டு தரித்தும், உலக விஷயங்களில் விழுந்தும், ஒரு துணையின்றித் திரியும் எனக்கு நமக்குத் தலைவரான எம்பெருமானாரே கதி என்று இருப்பவர்கள் துணையாக உளர்.
தொண்ணூற்றேழாம் பாசுரம். இப்படி எம்பெருமானார் விஷயம் மட்டுமில்லாமல் அவர் அடியார்கள் வரை விரும்பத்தக்கவர்கள் என்று இருப்பதற்குக் காரணம் என்ன என்று கேட்க, அதுவும் எம்பெருமானாருடைய க்ருபையாலேயே வந்தது என்கிறார்.
தன்னை உற்று ஆட்செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள்
தன்னை உற்று ஆட்செய்ய என்னை உற்றான் இன்று தன் தகவால்
தன்னை உற்றார் அன்றி தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து
தன்னை உற்றாரை இராமாநுசன் குணம் சாற்றிடுமே
எம்பெருமானார், தம்மைப் பற்றியிருப்பவர்களைத் தவிர, தம்மைப் பற்றியிருப்பவர்களைக் கொண்டாடும் தன்மையுடையவர்கள் வேறொருவர் இல்லை என்று தன் திருவுள்ளத்தில் எண்ணி, தம்மைத் தவிர மற்ற விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் தமக்கு அடிமைசெய்யும் தன்மையுடையவர்களின் ஒன்றுக்கொன்று ஒப்பாய், மிகவும் இனிமையாயிருக்கிற திருவடிகளைத் தவிர வேறொன்றுமறியாதபடி என்னைப் பண்ணி, அவர்களுக்கு அடிமை செய்யும்படி, எம்பெருமானார் தம்முடைய க்ருபையாலே இன்று என்னை ஏற்றுக்கொண்டார்.
தொண்ணூற்றெட்டாம் பாசுரம். இவர் திருவுள்ளம் முன்புபோலே எம்பெருமான் நம்மை நம் கர்மத்துக்கு ஏற்றாப்போலே ஸ்வர்க்க நரகங்களில் தள்ளி விடக்கூடுமே என்று கேட்க, எம்பெருமானார் தம்மிடம் சரணமடைந்தவர்களை அப்படி விடமாட்டார், அதனால் நீ கலங்காதே என்கிறார்.
இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகில் இட்டுச்
சுடுமே அவற்றைத் தொடர் தரு தொல்லைச் சுழல் பிறப்பில்
நடுமே இனி நம் இராமாநுசன் நம்மை நம் வசத்தே
விடுமே சரணம் என்றால் மனமே நையல் மேவுதற்கே
நம்மை கைதூக்கிவிட வந்த எம்பெருமானாரிடத்தில் “தேவரீரே தஞ்சம்” என்று ஒரு வார்த்தை சொன்னால், உலக விஷயங்களில் ஈடுபட்டிருப்பவர்க்கு இனிதாகத் தோற்றி இருக்கும் ஸ்வர்க்கத்திலே இட்டு வைப்பாரோ? தம் திருவடிகளைப் பற்றிய பின்பும் நரகத்திலே இட்டு வைத்து துன்புறுத்துவாரோ? இப்படி ஸ்வர்க்க நரகங்களை நினைத்துக்கொண்டிருப்பதாய் அநாதியாய் சுற்றிச்சுற்றி வரும் பிறவியிலே நிறுத்துவாரோ? மேலுள்ள காலம், நம்மை நம்முடைய ருசிப்படி வாழ விடுவாரோ? நெஞ்சே! நமக்குக் கிடைக்க வேண்டிய பலனைக் குறித்து வருந்தாதே.
தொண்ணூற்றொன்பதாம் பாசுரம். எப்படி இருந்தாலும் பாஹ்ய குத்ருஷ்டிகள் அதிகமாக இருக்கும் தேசமே நாம் மனம் கலங்க வாய்ப்புள்ளதே என்று கேட்க, எம்பெருமானார் அவதரித்த பின்பு அவர்களெல்லாரும் நஷ்டரானார்கள் என்கிறார்.
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன்
சொல் கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான்மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீள் நிலத்தே
பொன் கற்பகம் எம் இராமாநுச முனி போந்த பின்னே
தர்க்க ஸாமர்த்யத்தாலே தங்கள் மதத்தை நடத்துகிற சமணரும், பேய்போலே பிடித்தை விடாமல் இருக்கும் பௌத்தரும், பெரிய ஜடாமுடியுடன் ஸாதனத்தை அனுஷ்டித்து பகவானின் அனுமதியாலே மோஹசாஸ்த்ரங்களை வளர்த்த ருத்ரனுடைய வசனமான சைவாகமத்தைக் கற்றிருக்கும் தாமஸ குணத்தையுடையவரான சைவர்களும், எல்லாம் சூன்யம் என்று வாதம் பண்ணும் மாத்யமிக மதத்தவரும் (பௌத்தத்தில் ஒரு பிரிவு) இவர்களைப்போல் இல்லாமல் நான்கு வேதங்களையும் ஒத்துக்கொண்டு அது நிற்கச்செய்தே அதற்குத் தொடர்பில்லாத தவறான அர்த்தங்களை சொல்லிக் குறும்பு செய்யும் தாழ்ந்தவர்களான குத்ருஷ்டிகளும், விரும்பத்தக்க கற்பகமரம் போலே பரம உதாரராய் இவற்றை நமக்குக் காட்டியருளின எம்பெருமானார் இந்தப் பெரிய உலகிலே எழுந்தருளிய பின்பு, முடிந்து போனார்கள்.
நூறாம் பாசுரம். தம்முடைய திருவுள்ளம் எம்பெருமானார் திருவடிகளில் இனிமையான அனுபவத்தை ஆசைப்பட்டு ஈடுபடுவதைக் கண்டு அதின் தன்மையை அவருக்கு விண்ணப்பம் செய்து, இனி வேறொன்றைக் காட்டி மயக்காமல் இருக்க வேண்டும் என்கிறார்.
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனது அடிப்போதில் ஒண் சீர்
ஆம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி நின்பால் அதுவே
ஈந்திட வேண்டும் இராமாநுச இது அன்றி ஒன்றும்
மாந்தகில்லாது இனி மற்று ஒன்று காட்டி மயக்கிடலே
என்னுடைய மனஸ்ஸாகிற அழகிய வண்டு தேவரீருடைய திருவடிகளாகிற பூவிலே குளிர்ச்சி, மென்மை போன்ற குணங்களாகிற நிர்மலமான தேனைப் பருகி அங்கேயே நிரந்தரமாக வாழவேண்டும் என்று தேவரீரிடத்தில் வந்தது. அதையே தேவரீர் கொடுத்தருள வேண்டும். உடையவரே! இதைத் தவிர வேறொன்றை அனுபவிக்காது. இனி வேறொன்றைக் காட்டி என்னை மயங்கப்பண்ணாமல் இருக்க வேண்டும்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org