ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஐம்பத்தொன்றாம் பாசுரம். எம்பெருமானார் இந்த லோகத்தில் அவதரித்தருளினது என்னை அடிமைகொள்ளுகைக்காகவே என்று சொல்லுகிறார்.
அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்கட்காய் அன்று பாரதப் போர்
முடியப் பரி நெடுந்தேர் விடும் கோனை முழுதுணர்ந்த
அடியர்க்கு அமுதம் இராமாநுசன் என்னை ஆள வந்து இப்
படியில் பிறந்தது மற்று இல்லை காரணம் பார்த்திடிலே
தன்னுடைய திருவடிகளைப் பின்சென்று அதனால் கர்வத்தையுடையவராய் இருக்கிற பாண்டவர்களுக்காக, தன்னைத் தவிர துணையற்றிருந்த அன்று, பாரத யுத்தத்திலே குதிரைபூட்டப்பட்ட நெடிய தேரை நடத்தினான் ஸர்வேச்வரனான கண்ணன் எம்பெருமான். அவன் அடியார்களுக்கு எல்லாமாக இருக்கும் தன்மைகளை உணர்ந்து அடிமையாய் இருப்பவர்களுக்கு அமுதமாக இருக்கும் எம்பெருமானார் இந்த பூமியிலே வந்த அவதரித்தது என்னை ஆளுகைக்காக. ஆராய்ந்து பார்க்கில் வேறொரு காரணம் இல்லை.
ஐம்பத்திரண்டாம் பாசுரம். எம்பெருமானாருக்கு உம்மையே ஆளக்கூடிய அளவுக்கு ஸாமர்த்யம் உள்ளதா என்று கேட்க, அவருடைய பெரியதான ஸாமர்த்யத்தை அருளிச்செய்கிறார்.
பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இப்பார் முழுதும்
போர்த்தான் புகழ்கொண்டு புன்மையினேனிடைத் தான் புகுந்து
தீர்த்தான் இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு
ஆர்த்தான் இவை எம் இராமாநுசன் செய்யும் அற்புதமே
வேத பாஹ்யங்களான (வேதத்தை ஒத்துக்கொள்ளாத) ஆறு ஸமயங்களும் நடுங்கும்படியாகக் கண்டார். இந்த பூமியெங்கும் தம்முடைய கீர்த்தியாலே மூடிவிட்டார். தாழ்ந்த குணங்களை உடைய என்னிடத்திலே நான் கேட்காமலேயே வந்து புகுந்து என்னுடைய பெரிய பாபங்களைப் போக்கினார். இப்படிப் பாபங்களைப் போக்கி, பெரிய பெருமாளுடைய அழகிய திருவடிகளோடே எனக்கு ஸம்பந்தத்தையும் ஏற்படுத்தினார். எங்களுக்கு நாதரான எம்பெருமானார் செய்யும் அற்புதங்கள் இவை.
ஐம்பத்துமூன்றாம் பாசுரம். எம்பெருமானார் பிற மதங்களைக் குலையப்பண்ணி என்ன ஸ்தாபித்தார் என்று கேட்க, எல்லா ஆத்மாக்களும் அசேதனப்பொருள்களும் ஸர்வேச்வரனுக்குக் கீழ்ப்படிந்தவை என்ற் உயர்ந்த அர்த்தத்தை ஸ்தாபித்தருளினார் என்கிறார்.
அற்புதன் செம்மை இராமாநுசன் என்னை ஆள வந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருது அரிய
பற்பல் உயிர்களும் பல் உலகு யாவும் பரனது என்னும்
நற்பொருள் தன்னை இந் நானிலத்தே வந்து நாட்டினனே
எம்பெருமானார் என்னை ஆளுகைக்காக நான் கிடந்த இடம் தேடிவந்த பரம உதாரராய், அறிவுடையார் ஆசைப்படும்படியான எளிமையையுடையராய், ஆச்சர்யமானவராய், அடியார்களுக்குத் தக்கவாறு தம்மை அமைத்துக் கொள்ளும் நேர்மையையுடையராய் இருப்பவர். நினைக்கவரிதாய், கணக்கிலடங்காத ஆத்மாக்களும், அவர்களுக்கு இருப்பிடமாக இருக்கும் எல்லா லோகங்களும் பரம்பொருளான எம்பெருமானுக்குக் கீழ்ப்படிந்தவை என்கிற உயர்ந்த அர்த்தத்தை இந்த லோகத்திலே யாரும் கேட்காமலே தாமே வந்து ஸ்தாபித்தருளினார்.
ஐம்பத்துநான்காம் பாசுரம். இப்படி எம்பெருமானார் உண்மை நிலையை ஸ்தாபிக்க, பாஹ்ய மதங்களுக்கும் வேதத்துக்கும் திருவாய்மொழிக்கும் ஏற்பட்ட நிலைகளை அருளிச்செய்கிறார்.
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல்
வாட்டம் இலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமாநுசன் தன் இயல்வு கண்டே
பூலோகத்திலே மேன்மேலும் திரட்டிக்கொண்ட சீலகுணத்தையுடையரான எம்பெருமானாரின் இயல்பைக்கண்டு ஆதித்யன் வரவால் இருள் விலகி புஷ்பங்கள் மலருமாபோலே தங்கள் திறமையாலே ஸ்தாபிக்கப்பட்டதாய் இருக்கும் தாழ்ந்த ஸமயங்கள் மாண்டன. வேதத்தாலேயே அறியப்படும் நாராயணான ஸர்வேச்வரனை ப்ரகாசிப்பித்த வேதமானது நமக்கு இனி ஒரு குறையில்லை என்று கர்வத்தை அடைந்தது. உயர்ந்த திருநகரியை தமக்கு இருப்பிடமாக உடைய பரம உதாரரான நம்மழ்வார் அருளிச்செய்ததாய் ஒரு குறையுமில்லாத வள்ளல் தன்மையை உடைய த்ராவிட வேதமான திருவாய்மொழி வாழ்ச்சியைப் பெற்றது.
ஐம்பத்தைந்தாம் பாசுரம். இப்படி எம்பெருமானார் வேதங்களுக்குச் செய்த நன்மையை நினைத்து அவருடைய வள்ளல்தன்மையில் ஈடுபட்டு அவரை சரண்டைந்திருக்கும் குடி எங்களை ஆளத்தகுந்த குடி என்கிறார்.
கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென் அரங்கன்
தொண்டர் குலாவும் இராமாநுசனை தொகை இறந்த
பண் தரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித்தொழும் குடியாம் எங்கள் கோக்குடியே
கண்டவர்கள் நெஞ்சை அபஹரிக்கும் பரிமளைத்தையுடைய திருச்சோலைகளையுடைய அழகிய கோயிலிலே (ஸ்ரீரங்கத்திலே) நித்யவாஸம்பண்ணும் பெரியபெருமாளுடைய திருவடிகளில் அடிமைபூண்டவர்களாலே கொண்டாடப்படுபவர் எம்பெருமானார். எல்லையில்லாத பல விதமான ஸ்வரங்களைக் காட்டக்கூடிய வேதங்களானவை பூமியிலே வாழும்படி பண்ணியருளின, பரம உதாரரான எம்பெருமானரை அவருடைய தன்மைகளிலே ஈடுபட்டு மற்ற விஷயங்களைக் காணாமல் இருக்கும் குலம் அவருடைய ஸம்பந்திகளே விரும்பப்படுபவர்கள் என்றிருக்கும் எங்களை ஆளும் குலமாயிருக்கும்.
ஐம்பத்தாறாம் பாசுரம். முன்பே வெளி விஷயங்களில் இப்படி மிகவும் ஈடுபட்டுச் சொல்லுவீரே என்று கேட்க எம்பெருமானாரை அடைந்தபின்பு என்னுடைய வாக்கும் மனஸ்ஸும் வேறோரு விஷயத்தை அறியாது என்கிறார்.
கோக்குல மன்னரை மூவெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமாநுசனை அடைந்தபின் என்
வாக்கு உரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே
ராஜகுலத்தில் பரம்பரையாகப் பிறந்த ராஜாக்களை இருபத்தொரு தலைமுறைகள் தனித்துவம் வாய்ந்த கூரிய மழுவாலே அழித்த, பரசுராம அவதாரம் செய்தருளிய, எதிரிகளை அழித்ததால் ஒளியையுடைய ஸர்வேச்வரனை அந்த குணத்தாலே வெல்லப்பட்டுக் கொண்டாடுவார் எம்பெருமானார். தன்னுடைய ஸம்பந்தத்தாலே அசுத்தரையும் சுத்தராக்கவல்ல மிகவும் புனிதரான, லோகமெங்கும் பரவியிருக்கும்படி பண்ணின கீர்த்தியையுடைய எம்பெருமானாரை அடைந்தபிறகு, மேலுள்ள காலமெல்லாம் வேறொரு விஷயத்தை என் வாக்கானது கொண்டாடாது. என்னுடைய மனஸ்ஸானது நினைக்காது.
ஐம்பத்தேழாம் பாசுரம். இனி என் வாக்குரையாது, என் மனம் நினையாது என்று சொல்லலாமா, இது ஸம்ஸாரமாயிற்றே, இங்கே அஜ்ஞானம் வந்தால் என்ன செய்ய முடியும் என்று கேட்க இவ்வுலகில் எம்பெருமானாரை அடைந்த பிறகு விவேகமில்லாமல் வேறொன்றை விரும்பும் பேதைத்தனம் ஒன்றுமறியேன் என்கிறார்.
மற்று ஒரு பேறு மதியாது அரங்கன் மலர் அடிக்கு ஆள்
உற்றவரே தனக்கு உற்றவராய்க் கொள்ளும் உத்தமனை
நல் தவர் போற்றும் இராமாநுசனை இந் நானிலத்தே
பெற்றனன் பெற்றபின் மற்று அறியேன் ஒரு பேதைமையே
வேறு ப்ரயோஜனங்களை ஒரு பொருளாக நினைக்காமல் பெரிய பெருமாளுடைய மிக இனிமையான திருவடிகளுக்கு அடிமையாயிருக்கும் தன்மையே புருஷார்த்தமென்று அதிலே ஊன்றியிருக்குமவர்களையே தமக்கு உறவினராக அங்கீகரிக்கும் உத்தம அதிகாரிகளாய், உயர்ந்த தபஸ்ஸான சரணாகதி தர்மத்திலே நிஷ்டரானவர்கள் புகழும்படியான எம்பெருமானாரை இந்த உலகத்திலே பெற்றேன். பெற்றபிறகு, இத்தைவிட்டு வேறொரு விஷயத்தில் ஈடுபடுத்தும் அஜ்ஞானத்தைப் பார்த்ததில்லை.
ஐம்பத்தெட்டாம் பாசுரம். எம்பெருமானார் குத்ருஷ்டி (வேதத்துக்குத் தவறான அர்த்தம் சொல்லும்) மதங்களை ஒழித்ததை நினைத்து மகிழ்கிறார்.
பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னி பிரமம் நன்று என்று
ஓதி மற்று எல்லா உயிரும் அஃது என்று உயிர்கள் மெய்விட்டு
ஆதிப் பரனோடு ஒன்று ஆம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமாநுசன் மெய்ம் மதிக் கடலே
வேதத்தை உண்மை என்று ஏற்றுக்கொண்டும் அதன் அர்த்தங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாத அறிவிலிகள் வேதத்தினுடைய அர்த்தம் இதுதான் என்று நிரூபித்து, ப்ரஹ்மம் உயர்ந்ததென்று சொல்லி, ப்ரஹ்மத்தைத் தவிர இருக்கும் மற்ற எல்லா ஜீவாத்மாக்களும் அந்த ப்ரஹ்மமே என்றும், இதற்கு பிறகு மோக்ஷத்தை விளக்கும் இடத்தில், ஜீவாத்மாக்கள் தேஹத்தைவிட்ட பின் காரணபூதனான பரம்பொருளுடன் ஐக்யமாகிவிடும் என்று இப்படிச் சொல்லுகிற அந்த கோஷத்தையெல்லாம் தத்வஜ்ஞானக் கடலாய், நம்முடைய நாதராய் இருக்கிற எம்பெருமானார் லோகரக்ஷணத்துக்காக வாதம் செய்து ஜயித்தருளினார். என்ன ஆச்சர்யம்!
ஐம்பத்தொன்பதாம் பாசுரம். இவரின் மகிழ்ச்சியைக் கண்ட சிலர் ஆத்மாக்கள் தாங்களே சாஸ்த்ரத்தைக் கொண்டு எம்பெருமான் தான் தலைவன் என்பதை அறிந்து கொண்டிருப்பார்களே என்று சொல்ல, கலியுகத்தில் அஜ்ஞானத்தை எம்பெருமானார் போக்காமல் இருந்திருந்தால் ஒருவரும் ஆத்மாவுக்கு ஈச்வரனே தலைவன் என்று தெரிந்திருக்காது என்கிறார்.
கடல் அளவாய திசை எட்டினுள்ளும் கலி இருளே
மிடை தரு காலத்து இராமாநுசன் மிக்க நான்மறையின்
சுடர் ஒளியால் அவ்விருளைத் துரந்திலனேல் உயிரை
உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை உற்று உணர்ந்தே
கடல் அளவுக்கு இருக்கும் எல்லா திக்குக்களிலும் கலியாலே இருக்கும் அஜ்ஞான ரூபத்தில் இருக்கும் தமஸ்ஸே நெருங்கி இருக்கும் காலத்திலே எம்பெருமானார் எல்லா ப்ரமாணங்களிலும் சிறந்ததான நான்கு வேதங்களின் எல்லையில்லாத தேஜஸ்ஸாலே அந்தத் தமஸ்ஸை ஓட்டாமல் இருந்திருந்தால், ஆத்மாவுக்குத் தலைவனானவன், அதுவும் தன்னைத் தவிர எல்லாவற்றையும் தனக்குச் சரீரமாகக் கொண்டிருப்பவன், நாராயணன் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுபவன் என்று புரிந்து கொண்டு நினைத்துப் பார்ப்பவர் ஆருமில்லை.
அறுபதாம் பாசுரம். எம்பெருமானாரின் பக்தி எப்படி இருக்கும் என்று கேட்க அதை விரிவாக விளக்குகிறார்.
உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம்தொறும் திருவாய்மொழியின்
மணம் தரும் இன் இசை மன்னும் இடம்தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமாநுசன் எம் குலக் கொழுந்தே
ஆத்ம குணங்கள் ஒளிவிடும் மேகத்தைப் போன்று எல்லோருக்கும் அருள்புரிபவரும் எங்கள் குலத்துக்குத் தலைவருமான எம்பெருமானார் அறிய வேண்டிய அர்த்தங்களை அறிந்திருக்கும் உண்மை ஞானம் உடையவர்களின் கூட்டங்கள் தோறும், திருவாய்மொழியின் நறுமணம் தரும் உயர்ந்ததான இசை நிரந்தரமாக நடக்கும் ஸ்தலங்கள் எல்லாவற்றிலும், பெரிய பிராட்டியாராலே நித்யவாஸம் பண்ணப்பட்ட திருமார்பை உடையவன் உகந்தருளி வாழும் திருப்பதிகள் தோறும், அவற்றை எல்லாம் அனுபவிக்கும் ஆசையினால் அவ்விடங்களிலெல்லாம் மூழ்கி இருப்பார்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org