நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – பதிநான்காம் திருமொழி – பட்டி மேய்ந்து

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

நாச்சியார் திருமொழி

<< பதின்மூன்றாம் திருமொழி – கண்ணனென்னும்

திருப்பாவையில் ப்ராப்ய (குறிக்கோள்) ப்ராபகங்களை (வழி) உறுதி செய்தாள். அப்பொழுதே அந்த ப்ராப்யம் கிடைக்காமல் போக, அதனாலே கல ங்கி, நாச்சியார் திருமொழியில் முதலில் காமன் காலிலே விழுந்து நோன்பு நோற்றாள். அதற்குப் பிறகு பனிநீராடி, கூடல் இழைத்து, குயில் வார்த்தை கேட்டு, எம்பெருமானை நேராகப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அது கிடைக்காமையாலே ஸ்வப்னத்தின் மூலம் அவனை அனுபவித்து தரித்து, அதற்கு மேலே ஸ்ரீ பாஞ்சஜந்யாழ்வானிடத்தில் எம்பெருமானின் திருவாயமுதத்தை விசாரித்து, மேகங்களிடத்திலே எம்பெருமானைப் பற்றி விசாரித்து, அந்த மேகங்களையே தூது விட்டு, மழை பொழிந்து மலர்கள் எல்லாம் மலர்ந்து எம்பெருமானை நினைவூட்ட அதனால் துன்புற்று, தன்னை அவை மிகவும் துன்புறுத்தியதைச் சொல்லி, எம்பெருமான் திருவாக்கையும் பெரியாழ்வார்க்குப் பெண்ணாய்ப் பிறந்ததையும் நினைத்துப் பார்த்து அதனாலும் எம்பெருமான் வாராமல் போகவே பெரியாழ்வார்க்காக வருவான் என்று மனதைத் தேற்றிக் கொண்டு, அதற்குப் பிறகும் எம்பெருமான் வாராமல் போக மிகவும் துன்பப்பட்டு, அருகில் இருப்பவர்களை என்னை எப்படியாவது அவன் இருக்கும் இடத்தில் கொண்டு சேருங்கள் என்று ப்ரார்த்தித்து, அதற்கு மேலே அவன் ஸம்பந்தம் உடைய வஸ்த்ரம், மாலை முதலியவற்றையாவது கொண்டு வந்து தாருங்கள் என்று ப்ரார்த்தித்து அப்படியும் எம்பெருமான் வரவில்லை.

ப்ரபன்ன குலத்தில் பிறந்திருந்தும் தன் முயற்சியால் எம்பெருமானைப் பெறலாம் என்ற நிலைக்கு இவள் ஆளானதற்குக் காரணம் எம்பெருமானை அடையவேண்டும் என்ற இவளின் எல்லையில்லாத ஆசை. எம்பெருமானுக்கும் இவளுக்குப் பரமபக்தி வரை வரவேண்டும் என்று காத்திருந்தான். இவளும் நம்மாழ்வாரைப்போலே நிர்ப்பந்தித்தாகிலும் பெறவேண்டும் என்று இப்பொழுது பார்க்கிறாள். இந்த வருத்தத்தின் மிகுதியால் “கண்டீரே” (பார்த்தீர்களா) என்று ஒருவர் கேட்பதைப் போலேயும் “கண்டோமே” (பார்த்தோமே) என்று ஒருவர் சொல்வதைப் போலேயும் இப்பதிகத்தை அருளிச்செய்கிறாள்.

இவளுடைய இந்த முயற்சியை வைத்து இவள் எம்பெருமானைத் தவிர வேறு ஒன்றை உபாயமாகக் கொண்டாள் என்று சொல்லலாமா என்றால் அது சொல்ல முடியாது. இவளுக்கு இருக்கும் மிக அதிகமான ப்ரேமத்தாலும் எம்பெருமானின் சிறந்த தன்மையாலும் இவளின் பிரிவாற்றாமையாலும் விளைந்த நிலையே தவிர, இதை இவள் உபாயமாக எண்ணிச் செய்யவில்லை. ஏனெனில், அது ஸ்வரூபத்துக்குச் சேராது. எம்பெருமானையே உபாயமாகக் கொண்டிருக்கும் ப்ரபந்நர்கள் ஒருநாளும் அவ்வாறு வேறு ஒரு உபாயத்தைத் தங்களுக்கு உபாயமாக நினைக்க மாட்டார்கள்.

முதல் பாசுரம். பரமபதத்திலே இருக்கும் அனுபவத்தைவிட்டு திருவாய்ப்பாடியில் இருக்கும் மிகுதியான வெண்ணெயை அனுபவிக்கலாம், நப்பின்னைப்பிராட்டியைத் திருக்கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணி இங்கே வந்து அவதரித்து தன் விருப்பத்துக்கு வ்ருந்தாவனத்தில் நன்றாகச் சுற்றித் திரிந்து அதனாலே பெருமை பெற்றான்.

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கு ஓர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே?
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே

தனித்துவம் வாய்ந்த கறுத்த காளை போன்ற கண்ணன் காவலில்லாமல் பட்டி மேய்ந்து திரிந்து கொண்டும் நம்பிமூத்தபிரான் என்னும் பலராமனுக்குக் கீழ்ப்படிந்த ஒப்பற்ற தம்பியாய், ஆனந்தத்துக்குப் போக்குவீடாக பலவிதமான சேஷ்டிதங்களைச் செய்து விளையாடிக்கொண்டும் இருக்க அதை நீங்கள் கண்டீர்களா? கண்ணன் தனக்கு மிக விருப்பமான பசுக்களை இனிமையாகப் பேர்சொல்லி அழைத்து நீர் குடிக்கும்படிச் செய்து அவற்றை மேய விட்டுக்கொண்டு விளையாடுவதை வ்ருந்தாவனத்திலே கண்டோம்.

இரண்டாம் பாசுரம். வைஜயந்தி என்னும் வனமாலையை அணிந்துகொண்டு தன் தோழர்களுடன் வ்ருந்தாவனத்தில் விளையாடுபவனைக் கண்டோம் என்கிறாள்.

அனுங்க என்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே?
கணங்களோடு மின்மேகம் கலந்தாற் போல வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே

நான் வருந்தும்படியாக என்னை விட்டுப் பிரிந்துபோய் திருவாய்ப்பாடியை ஆக்ரமித்து அனுபவிக்கின்றவனாய் வெண்ணெயின் நாற்றம் வீசுபவனாய் இளம் காளையைப் போன்றவனுமான பசுக்களை நன்றாக வளர்க்கும் கண்ணனைப் பார்த்தீர்களா? மின்னலும் மேகமும் கலந்திருப்பதுபோலே கறுத்த திருமேனியில் வெளுத்த வனமாலை விளங்கும்படி நின்று தன் தோழர்களுடன் விளையாடுவதை வ்ருந்தாவனத்தில் கண்டோமே.

மூன்றாம் பாசுரம். கருடாழ்வார் வானத்தில் தன் சிறகை விரித்துக் குடைபிடித்துக் கைங்கர்யம் செய்ய, வ்ருந்தாவனத்தில் கண்ணனைக் கண்டோம் என்கிறாள்.

மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே?
மேலால் பரந்த வெயில் காப்பான் விநதை சிறுவன் சிறகென்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே

கோபிகைகளிடத்தில் கொண்ட அன்பையே ஒரு வடிவமாகக் கொண்டு அவதரித்தவனாய் அன்பைச் செய்கின்ற மணவாளனாய் பொருந்தாத பொய்களைச் சொல்லுபவனான கண்ணபிரானை இங்கே பார்த்தீர்களா? மேலே பரவின வெயில் கண்ணன் திருமேனியில் விழாமல் தடுப்பதற்காக கருடாழ்வார் தன் சிறகை மேற்கட்டியாகப் பிடிக்க அதன் கீழே இருக்கும் எம்பெருமானை வ்ருந்தாவனத்திலே கண்டோம்.

நான்காம் பாசுரம். எம்பெருமான் ஒரு ஒளிமிகுந்த யானைக்குட்டியைப்போலே இருப்பதை அனுபவிக்கிறாள்.

கார்த்தண் கமலக்கண் என்னும் நெடுங்கயிறு படுத்தி என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே?
போர்த்த முத்தின்குப்பாயப் புகர்மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே

காளமேகத்திலே குளிர்ந்த தாமாரை மலர் பூத்தாற்போன்றிருக்கும் திருக்கண்கள் என்கிற பெரிய கயிறைக் கொண்டு என்னை அகப்படுத்தி என் நெஞ்சையும் இழுத்துக் கொண்டுபோய் விளையாடும் ஸர்வேச்வரனான எம்பெருமானைப் பார்த்தீர்களா? போர்வையாகப் போர்த்திய முத்துச் சட்டையை உடையதாய் தேஜஸ்ஸை உடையதாய் பெரிய யானைக்குட்டிபோலே வேர்த்து நின்று விளையாட வ்ருந்தாவனத்தே கண்டோமே [வேர்வைத்துளிகளை ஒளிமிகுந்த முத்துக்களாக விளக்குகிறாள்].

ஐந்தாம் பாசுரம். மின்னலோடு கூடிய கார்மேகக் குட்டிபோலே எம்பெருமான் திருப்பீதாம்பரம் தரித்து வீதியார வருபவனை வ்ருந்தாவனத்திலே கண்டோம் என்கிறாள்.

மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல்
ஏதும் ஒன்றும் கொளத்தாரா ஈசன் தன்னைக் கண்டீரே?
பீதக ஆடை உடை தாழப் பெருங்கார் மேகக் கன்றே போல்
வீதியார வருவானை விருந்தாவனத்தே கண்டோமே

ச்ரிய:பதியாய் எனக்கு நீலரத்னம் போலே மிகவும் இனியவனாய் வலையில் நின்று பிழைத்த பன்றியைப் போலே செருக்குடன் தன்னிடத்தில் இருக்கும் எதையும் பிறருக்குக் கொடுக்காதவனாய் இருக்கும் உயர்ந்தவனான ஸர்வேச்வரனைப் பார்த்தீர்களா? திருப்பீதாம்பர வஸ்த்ரமானது தாழ்ந்து விளங்க பருத்துக் கறுத்திருக்கும் ஒரு குட்டி மேகம்போலே திருவீதி நிறைய எழுந்தருளும் பெருமானை வ்ருந்தாவனத்திலே கண்டோம்.

ஆறாம் பாசுரம். உதயகிரியின் மேல் உதிக்கும் ஸூர்யனைப்போலே கறுத்த திருமேனியில் சிவந்த ஒளியுடன் வருகின்றவனை வ்ருந்தாவனத்திலே கண்டோம் என்கிறாள்.

தருமம் அறியாக் குறும்பனைத் தன் கைச் சார்ங்கம் அதுவே போல்
புருவ வட்டம் அழகிய பொருத்தமிலியைக் கண்டீரே?
உருவு கரிதாய் முகம் செய்தாய் உதயப் பருப்பதத்தின் மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே

கருணை என்பதை அறியாதவனாய் குறும்புகளையே செய்யுமவனாய் தனது திருக்கையில் இருக்கும் சார்ங்கம் என்னும் வில்லைப் போலே திருப்புருவ வட்டங்களால் அழகுபெற்றவனாய் அடியார்களுடன் பொருந்தி வாழாதவனான எம்பெருமானைப் பார்த்தீர்களா? கறுத்த திருமேனியில் சிவந்த ஒளியுடன் இருப்பதனால் உதயகிரியின் மேலே விரிகின்ற ஸூர்யனைப் போல் விளங்கும் அவனை வ்ருந்தவனத்திலே கண்டோம்.

ஏழாம் பாசுரம். நக்ஷத்ர கூட்டத்தோடு கூடிய பெரிய ஆகாசம் போலே தோழர்கள் நடுவிலே வரும் எம்பெருமானை வ்ருந்தாவனத்திலே கண்டோம் என்கிறாள்.

பொருத்தம் உடைய நம்பியைப் புறம்போல் உள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்ற அக்கருமா முகிலைக் கண்டீரே?
அருத்தித்தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே

பொருத்தம் உடைய ஸ்வாமியாய் திருமேனியைப் போலே உள்ளே நெஞ்சும் கறுத்தவனாய் என்னுடைய எண்ணத்துக்கு மாறுபட்டு இருப்பவனாய் கறுத்துப் பெருத்த முகில் போன்றவனான கண்ணனைப் பார்த்தீர்களா? உலகியல் இன்பங்களை ஆசைப்படுபவர்களால் விரும்பப்படுகிற நக்ஷத்ரக் கூட்டங்களாலே மிகவும் நிறைந்துள்ள ஆகாசம் போலே தன் தோழர்களுடன் பெரிய கூட்டமாக எழுந்தருளுகின்ற அந்த எம்பெருமானை வ்ருந்தாவனத்திலே கண்டோம்.

எட்டாம் பாசுரம். அழகிய கூந்தல் தோளில் விளங்க, விளையாடும் எம்பெருமானை வ்ருந்தாவனத்திலே கண்டோம் என்கிறாள்.

வெளிய சங்கொன்றுடையானைப் பீதக ஆடை உடையானை
அளிநன்குடைய திருமாலை ஆழியானைக் கண்டீரே?
களிவண்டு எங்கும் கலந்தாற்போல் கமழ்பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே

வெளுத்த மற்றும் ஒப்பற்ற ஸ்ரீபாஞ்சஜந்யத்தை உடையவனாய் திருப்பீதாம்பரத்தை உடையாகக் கொண்டவனாய், நன்றாக க்ருபையை உடையனாய் திருவாழியாழ்வானை உடையவனாய் ச்ரிய:பதியான கண்ணனைப் பார்த்தீர்களா? தேனை உண்டு களித்துள்ள வண்டுகள் எப்புறத்திலும் பரந்திருப்பதுபோல் பரிமளிக்கின்ற அழகிய திருக்குழல்களானவை (கூந்தல்) பெரிய திருத்தோள்களின்மேலே தாழ்ந்து விளங்க, விளையாடுபவனை வ்ருந்தாவனத்திலே கண்டோம்.

ஒன்பதாம் பாசுரம். காட்டிலே பல அஸுரர்களை வேட்டையாடிவரும் எம்பெருமானை வ்ருந்தாவனத்திலே கண்டோம் என்கிறாள்.

நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த நளிர் மாமலர் உந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே?
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டையாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே

“உலகங்களைப் படை” என்று ப்ரஹ்மா முதலான ப்ரஜாபதிகளை உண்டாக்கின குளிர்ந்த பெரிய மலரை உடைத்தான திருநாபியாகிற வீட்டை உண்டாக்கி இப்படி லீலாரஸத்தை அனுபவிக்கும் பரமபாவனான (பரிசுத்தன்) எம்பெருமானைப் பார்த்தீர்களா? தேனுகாஸுரனும் குவலாயாபீடம் என்னும் யானையும் பகாஸுரனும் உடனே மாளும்படியாக காட்டில் சென்று வேட்டையாடி வரும் கண்ணனை வ்ருந்தாவனத்திலே கண்டோம்.

பத்தாம் பாசுரம். இந்தப் பதிகத்தை அனுஸந்திப்பவர்களுக்கு எப்பொழுதும் எம்பெருமானுடன் பிரியாமல் இருந்து அடிமை செய்யும் பலன் கிட்டும் என்று சொல்லி ப்ரபந்தத்தை முடிக்கிறாள்.

பருந்தாட்களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னை பாரின் மேல்
விருந்தாவனத்தே கண்டமை விட்டுசித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக் கீழ்ப் பிரியாதென்றும் இருப்பாரே

பருத்த கால்களையுடைய ஸ்ரீகஜேந்த்ராழ்வானுக்கு க்ருபை பண்ணின ஸர்வேச்வரனை இந்த உலகத்திலே வ்ருந்தாவனத்திலே ஸேவிக்கப்பெற்றமையைப்பற்றி பெரியாழ்வார் திருமகளான ஆண்டாள் (நான்) அருளிச்செய்த இப்பாசுரங்களை பிறவி என்னும் நோய்க்கு மருந்தாகத் தங்கள் மனத்திலே அனுஸந்தித்துக்கொண்டு வாழ்பவர்கள் பெருமை பொருந்திய திருவடிகளை உடைய எம்பெருமானின் திருவடிகளின் கீழே எப்பொழுதும் பிரியாமல் இருந்து நித்ய கைங்கர்யத்தைச் செய்யப் பெறுவார்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  https://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

1 thought on “நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – பதிநான்காம் திருமொழி – பட்டி மேய்ந்து”

  1. வணக்கம் நண்பரே, கடந்த பல நாட்களாக உங்கள் உரையுடன் கூடிய நாச்சியார் திருமொக்ஷி வாசித்தேன். என் நாட்களுக்கு வெளிச்சம் தந்தன ஆண்டாளின் வரிகள். முழுமையாக இப்போது நாச்சியார் திருமொழி வாசித்து விட்டேன். உங்கள் சேவைக்கு மிக்க நன்றி. ஆண்டாளின் அருள் உங்களுக்கு என்றும் இருக்கும்.

    Reply

Leave a Comment