நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – பதின்மூன்றாம் திருமொழி – கண்ணனென்னும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

நாச்சியார் திருமொழி

<< பன்னிரண்டாம் திருமொழி – மற்றிருந்தீர்கட்கு

இவளுடைய நிலையைப் பார்த்தவர்களுக்கு வருத்தத்தின் மிகுதியால் இவளை அழைத்துக் கொண்டு போகுமளவுக்கு சக்தி இருக்காதே. அப்படிப் பெருமுயற்சி செய்தார்களாகிலும் இவளை ஒரு படுக்கையிலே கிடத்தி எழுந்தருளப்பண்ணிக் கொண்டுபோக வேண்டியிருக்கும். இந்நிலையில் இவள் “என் நிலையைச் சரி செய்ய நினைத்தீர்களாகில் அந்த எம்பெருமான் ஸம்பந்தப்பட்ட பொருள்களில் ஒன்றைக் கொண்டு வந்து என் மீது தடவி என் உயிரைக் காக்கப்பாருங்கள்” என்கிறாள்.

அவர்கள் “எம்பெருமானிடத்தில் முழுவதுமாக ஈடுபட்டிருக்கும் நீ உண்மையிலேயே துன்பப்பட்டாயோ? இப்படித் துன்பப்படலாமா? ப்ரபன்ன குலத்தில் உதித்த நீ அந்தக் குலத்தின் பெருமையைப் பார்க்க வேண்டாமா? நீ இப்படிச் செய்வதால் அவனுக்கு வரும் பழியைப் பற்றி நினைக்கவேண்டாமா?” என்றெல்லாம் கேட்க இவள் “நீங்கள் இப்பொழுது நம் குடிக்குப் பழி வரக்கூடாது என்கிற காரணத்தால் சொல்லும் வார்த்தை என் தற்போதைய நிலைக்குப் பொருத்தமானதன்று. என்னை ரக்ஷிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அவன்பக்கல் உள்ள ஒன்றைக் கொண்டு வந்து அதைக் கொண்டு என்னைத் தீண்டி என்னை ரக்ஷிக்கப் பாருங்கள்” என்கிறாள்.

முதல் பாசுரம். அவன் திருவரையில் சாத்திய பீதாம்பரத்தைக் கொண்டுவந்து என் வாட்டம் தணியும்படியாக வீசுங்கள் என்கிறாள்.

கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப்பெய்தாற் போல் புறம் நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே

தாய்மார்களே! கண்ணன் என்கிற கறுத்த மற்றும் உயர்ந்த தெய்வத்தின் காட்சியிலே பழகிக்கிடக்கிற என்னைக் குறித்து விலகி நின்றுகொண்டு புண்ணில் புளியின் ரஸத்தைச் சொரிந்தாற்போல் (எரிச்சலூட்டுவதாக) நன்மை சொல்வதைத் தவிர்ந்து பெண்களின் வருத்தத்தை அறியாதவனான கண்ணபிரானுடைய திருவரையில் சாத்திய பீதாம்பரத்தைக் கொண்டு வந்து என்னுடைய விரஹதாபம் தீரும்படி என் மேல் வீசுங்கள்.

இரண்டாம் பாசுரம். அவன் சூடிக்களைந்த திருத்துழாய் மாலையைக் கொண்டு வந்து என்னுடைய கூந்தலில் சூட்டுங்கள் என்கிறாள்.

பால் ஆலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டிருந்தேனை
வேலால் துன்னம் பெய்தாற் போல் வேண்டிற்றெல்லாம் பேசாதே
கோலால் நிரை மேய்த்து ஆயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி
நீலார் தண்ணந்துழாய் கொண்டு என் நெறிமென் குழல் மேல் சூட்டீரே

பால் பாயும் பருவத்தை உடைய ஆலம் தளிரிலே சயனித்தருளின பரதெய்வத்தின் வலையிலே அகப்பட்டிருக்கிற என்னைக் குறித்து வேலாயுதத்தை இட்டுத் துளைத்தாற்போல் உங்களுக்கு வேண்டியதை எல்லாம் சொல்வதைத் தவிர்த்து, இடையனாய் மாடுமேய்ப்பதற்கு உதவும் கோலைக் கையில் கொண்டு பசுக்கூட்டங்களை மேய்த்தவனாய் திருக்குடந்தையில் சயனித்திருப்பவனாய் குடக்கூத்து ஆடினவனுமான கண்ணபிரானின் பசுமை பொருந்திக் குளிர்ந்து அழகிய திருத்துழாயைக் கொண்டுவந்து என்னுடைய அடர்ந்த ம்ருதுவான கூந்தலிலே சூட்டுங்கள்.

மூன்றாம் பாசுரம். அவன் கடைக்கண் என்னும் அம்பு பட்டு வெந்துகிடக்கும் என் நெஞ்சானது குளிரும்படி அவன் திருமார்பில் இருக்கும் வனமாலையை எடுத்து வந்து என் மார்பில் இட்டுப் புரட்டுங்கள் என்கிறாள்.

கஞ்சைக் காய்ந்த கருவில்லி கடைக்கண் என்னும் சிறைக் கோலால்
நெஞ்சு ஊடுருவ ஏவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வணிந்த வனமாலை
வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே

கம்ஸனைத் தொலைத்தவனாயும் பெரிய வில் போன்ற புருவங்களை உடையவனுமான கண்ணபிரானின் கடைக்கண் என்னும் சிறகையுடைய அம்பால் நெஞ்சு முழுவதும் நிலைகுலைந்து வருந்துகின்ற என்னை நோக்கி “பயப்படாதே” என்று ஒரு வார்த்தையும் சொல்லாதவனாய் நம்மைக்காட்டிலும் மிக உயர்ந்தவனான அந்த எம்பெருமான் தன் திருமார்பில் சூட்டிக்கொண்டிருக்கும் வனமாலையை ஏமாற்றாமல் கொடுத்தருள்வானாகில் அம்மாலையைக் கொண்டுவந்து என்னுடைய மார்பில் இட்டுப் புரட்டுங்கள்.

நான்காம் பாசுரம். ச்ரிய:பதியான எம்பெருமானின் திருவாயமுதத்தை என்னைப் பருகச்செய்து என் இளைப்பை நீக்குங்கள் என்கிறாள்.

ஆரே உலகத்து ஆற்றுவார்? ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
காரேறுழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயில் ஊறிய
நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கிரே

திருவாய்ப்பாடி முழுவதையும் கொள்ளைகொண்டு அனுபவிக்கிற ஒரு கறுத்த காளை போன்ற கண்ணன் துன்புறுத்த அதனால் துன்பப்பட்டு மிகவும் தளர்ந்து நொந்துகிடக்கிற என்னை இவ்வுலகத்திலே ஆறுதல் சொல்லித் தேற்றுபவர் ஆருள்ளார்? (தாய்மார்கள் “நாங்கள் உள்ளோமே! உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்க) எவ்வளவு அனுபவித்தாலும் த்ருப்தி பிறவாத அம்ருதம் போலிருக்கும் அவனுடைய திருவாயில் ஊறி இருக்கும் ரஸத்தையாவது கொண்டுவந்து எனது உடல் உலர்ந்துபோகாதபடி அதை நான் பருகும்படி செய்து, எனது இளைப்பை நீக்கப் பாருங்கள்.

ஐந்தாம் பாசுரம். எனக்கென்றிருக்கும் திருவாயமுதம் கிடைக்கவில்லை என்றால் அவன் குழலூதும்போது தெறித்துக் கீழே விழும் துளிகளையாவது கொண்டுவந்து என் முகத்தில் தடவுங்கள் என்கிறாள்.

அழிலும் தொழிலும் உருக்காட்டான் அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்
தழுவி முழுவிப் புகுந்து என்னைச் சுற்றிச் சுழன்று போகானால்
தழையின் பொழில்வாய் நிரைப் பின்னே நெடுமால் ஊதி வருகின்ற
குழலின் தொளை வாய் நீர் கொண்டு குளிர முகத்துத் தடவீரே

அழுதாலும் தொழுதாலும் தன் திருமேனியைக் காட்டாதவனாயும் “பயப்படாதே” என்றும் சொல்லாதவனாயும் உள்ள பெரியோனான கண்ணன் இங்கே வந்து என்னை நெருக்கி அணைத்து முன்னும் பின்னும் சூழ்ந்து கொண்டிருந்து போகாமலிருக்கிறான். ஐயோ! மயில்பீலிக் குடைகளாகிற சோலையின் கீழே பசுக்கூட்டங்களின் பின்புறத்திலே இருந்துகொண்டு பெரும் காதலுடைய கண்ணன் ஊதிக்கொண்டு வரப்பெற்ற புல்லாங்குழலின் த்வாரத்திலுண்டாகிற நீரைக்கொண்டு வந்து என்னுடைய முகத்திலே குளிர்த்தியாகத் தடவுங்கள்.

ஆறாம் பாசுரம். வெட்கமில்லாதவனான அக்கண்ணன் திருவடிப்பொடிகளையாவது கொண்டுவந்து நான் உயிர்தரிக்கும்படி என் உடம்பில் பூசுங்கள் என்கிறாள்.

நடை ஒன்றில்லா உலகத்து நந்தகோபன் மகன் என்னும்
கொடிய கடிய திருமாலால் குளப்புக் கூறு கொளப்பட்டு
புடையும் பெயரகில்லேன் நான் போட்கன் மிதித்த அடிப்பாட்டில்
பொடித் தான் கொணர்ந்து பூசீர்கள் போகா உயிர் என் உடம்பையே

வரம்புகளெல்லாம் குலைந்துகிடக்கிற இவ்வுலகத்தில் ஸ்ரீநந்தகோபர் மகன் என்று ப்ரஸித்தனாய் இரக்கமற்றவனாய் சுயநலக்காரனான ச்ரிய:பதியாலே அபலையான நான் மிகவும் துன்புறுத்தப்பட்டு சிறிதும் அசைவதற்கும் சக்தியற்றவளாய் இருந்தேன். வெட்கமில்லாதவனான அக்கண்ணன் திருவடி பட்டு மிதித்த இடத்திலுண்டான ஸ்ரீபாததூளியையாவது கொண்டுவந்து விட்டுப் பிரியாத உயிரை உடைய என் உடம்பிலே பூசுங்கள்.

ஏழாம் பாசுரம். தானாக என்னிடத்தில் அவன் வரவில்லை என்றாலும் நீங்கள் என்னை அவனிடத்திலே கொண்டு சேர்த்தாலும் அது ஏற்கும், அதைச் செய்யுங்கள் என்கிறாள்.

வெற்றிக் கருளக் கொடியான் தன் மீமீதாடா உலகத்து
வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பேயாக வளர்த்தாளே
குற்றமற்ற முலை தன்னைக் குமரன் கோலப் பணைத் தோளோடு
அற்ற குற்றம் அவை தீர அணைய அமுக்கிக் கட்டீரே

பெரிய திருவடியை (கருடாழ்வார்) வெற்றிக்கொடியாக உடைய எம்பெருமானுடைய ஆணையை மீற முடியாத இவ்வுலகத்தில் அவனைப் பெற்ற தாயாகிய யசோதையானவள், தன் பிள்ளையை ஒருவருக்கும் பயனின்றியே வேப்பங்காய்போல் கசக்கும்படியாகவே வளர்த்துள்ளாள். அவனைத் தவிர வேறொருவனை விரும்புகை என்கிற குற்றம் இல்லாத, என்னுடைய ஸ்தனங்களை இளைஞனான எம்பெருமானுடைய அழகிய கற்பகக் கிளை போன்ற திருத்தோள்களோடு, என்னைக் கைவிட்டு அந்த எம்பெருமானின் தோள்களுக்காகவே இருக்கும் குற்றம் தீரும்படி அமுக்கி அணைத்துக் கட்டி விடுங்கள்.

எட்டாம் பாசுரம். என்னைப் புறக்கணித்திருக்கும் அவனைக்கண்டால் பயனற்ற என் ஸ்தனங்களைப் பிடுங்கி அவன் மார்பில் எறிந்து என் துன்பத்தைப் போக்கிக் கொள்வேன் என்கிறாள்.

உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும் பயன் ஒன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து என் அழலை தீர்வேனே

உள்ளுக்குள் உருகி நைந்திருக்கிற என்னைப்பற்றி “இருக்கிறாளா? போனாளா?” என்றும் கேளாதவனாய் என்னுடைய எல்லா உடைமைகளையும் எடுத்துகொண்டவனாய் பொல்லாங்கு செய்யுமவனான கண்ணபிரானை நான் கண்டால் உபயோகமற்றதான என்னுடைய இந்த முலைகளை வேரோடு பறித்துப் பிடுங்கி அவன் மார்பில் எறிந்துவிட்டு என் துக்கத்தை போக்கிக்கொள்வேன்.

ஒன்பதாம் பாசுரம். அந்தர்யாமியான எம்பெருமானை அனுபவிக்கப் பார்க்கலாமே என்று அருகில் உள்ளவர்கள் சொல்ல “இந்த உடம்போடே கண்ணனை அனுபவிக்க வேண்டும். வேறு வழிகளைக் கொண்டு வேறு விதமாக அவனை அனுபவிப்பதை நான் விரும்பவில்லை” என்கிறாள்.

கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கு ஓர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யும் தவம் தான் என்?
செம்மை உடைய திருமார்வில் சேர்த்தானேலும் ஒரு ஞான்று
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே

என்னுடைய கிளர்ந்து பருத்த முலைகளுடைய துன்பம் தீரும்படி கண்ணனுக்கு ஓர் அந்தரங்க கைங்கர்யத்தை இந்தப் பிறவியிலேயே செய்யப்பெறாமல் வேறொரு இடத்தில் போய் செய்யக்கூடியதான தவம் எதற்கு? அன்பர்களை அணைப்பதற்கே இருக்கும் அன்பை உடைய திருமார்பிலே அவன் என்னைச் சேர்த்துக்கொண்டானாகில் நல்லது. ஒரு நாள் என் முகத்தைப் பார்த்து உண்மையே சொல்லி “நீ எனக்கு வேண்டாம்” என்று விலக்கும் வகையில் விடை தந்தானாகில் அது மிகவும் நல்லது.

பத்தாம் பாசுரம். இப்பதிகம் கற்றவர்கள் தன்னைப்போலே துன்பப்படாமல் இன்பமே பெறுவார்கள் என்று சொல்லி முடிக்கிறாள்.

அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணிவிளக்கை
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை உற்று மிக விரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே

வில்லைத் தோற்கடித்த புருவங்களை உடையவளாய் ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வாருடைய திருமகளாய் ஆச்சர்யமான குணங்களையுடைய ஆண்டாள் (நான்) திருவாய்ப்பாடி முழுவதும் தீம்பு செய்து அதனால் பெருமை பெற்றவனும் அந்தத் திருவாய்ப்பாடிக்கு மங்கள தீபம் போன்றவனுமான கண்ணனை ஆசைப்பட்டு ஆராத காதலுடன் அருளிச்செய்த இப்பாசுரங்களை புகழ்ந்து பாடவல்லவர்கள் ஸம்ஸாரக் கடலில் துவண்டு துன்பப்படமாட்டார்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment