ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்துதித்த
சீராரும் சித்திரையில் சித்திரை நாள் – பாருலகில்
மற்றுள்ள ஆழ்வார்கள் வந்துதித்த நாள்களிலும்
உற்றதெமக்கென்று நெஞ்சே ஓர்
இருபத்து ஐந்தாம் பாசுரம். இப்பொழுது இரண்டு பாசுரங்களில் மதுரகவி ஆழ்வார் வைபவத்தை அருளிச்செய்கிறார். இதில், ஆழ்வார் அவதரித்த சித்திரையில் சித்திரை நாள் மற்றைய ஆழ்வார்கள் அவதரித்த நாள்களைக் காட்டிலும் பெருமை பெற்றது என்று தன் திருவுள்ளத்தை ஆராய்ந்து பார்க்கச் சொல்லுகிறார்.
நெஞ்சே! பெருமை பொருந்திய மதுரகவி ஆழ்வார் இந்த உலகில் வந்து அவதரித்த சீர்மை பொருந்திய சித்திரை மாதத்தில் சித்திரை நாள், இந்த பூமியிலே வந்து அவதரித்த மற்றைய ஆழ்வார்களின் திருவவதார நாள்களைக் காட்டிலும் நம்முடைய ஸ்வரூபத்துக்குச் சேர்ந்தது என்பதை ஆராய்ந்து பார்.
மதுரகவி ஆழ்வாருக்கு இருக்கும் தனிப் பெருமையை பிள்ளை லோகாசார்யர் ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தில் அழகாக விளக்கியுள்ளார். மற்றைய ஆழ்வார்கள் எம்பெருமானை அடைந்து அனுபவிப்பது எப்போது என்று ஏங்கும் ஸமயத்தில் துன்பத்துடனும், அவனை மானஸீகமாக அனுபவிக்கும் பாக்யம் கிடைத்த ஸமயத்தில் இன்பத்துடனும் பேசி உள்ளார்கள். ஆனால் மதுரகவி ஆழ்வாரோ, தன் ஆசார்யனான நம்மாழ்வாரே எல்லாம் என்று இருந்து, ஆசார்ய கைங்கர்யத்திலேயே திளைத்து இருந்ததால், எப்பொழுதும் இவ்வுலகிலேயே இன்பத்துடன் இருந்து, அதையே பேசி அனுபவித்து, மற்றவர்களுக்கும் உபதேசித்தார். இப்பெருமை வேறு எவருக்கும் இல்லை. “சீராரும் சித்திரையில் சித்திரை நாள்” என்பதில் உள்ள “சீர்மை” சித்திரை மாதத்துக்கும் பொருந்தும், சித்திரை நக்ஷத்ரத்துக்கும் பொருந்தும். நம்முடைய ஸ்வரூபம் என்னவென்றால் ஆசார்யனின் க்ருபையை எதிர்நோக்கி இருப்பது. இதற்குச் சேர்ந்தது இவ்வாழ்வாரின் நிலையே.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org