ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
நித்யானுஷ்டானத்தை குறிக்கும் திநசர்யா சப்தம், இலக்கணையினால் ஆராதிக்கப்படுகின்ற எம்பெருமானிடத்திலும், ஆராதிக்கின்ற மணவாளமாமுனிகளிடத்திலும், ஆராதனரூபமான இவ்வனுஷ்டானங்கள் விஷயத்திலும் அளவிறந்த பக்தியோடு கூடியவனாய் இந்த க்ரந்தத்தை எப்போதும் அனுசந்திக்க வேண்டுமென்றபடி பரமபதம் – உயர்ந்த ஸ்தானமாகிய நித்யவிபூதி. ‘அண்டங்களுக்கும் அவற்றுக்கும் மேலுள்ள மஹதாதிகளுக்கும் மேலே உள்ள தம்மில் மிக்கதில்லையான மிகஉயர்ந்த லோகங்கள்’ என்று குலாவப்பட்ட ஸ்ரீவைகுண்டலோகமென்றபடி, ப்ரோப்நோதி – ப்ரகர்ஷேண ஆப்நோதி நன்றாக அடைகிறான். அதாவது – பகவான், நித்யஸூரிகள், முக்தர்கள் என்கிற மூவர்களும் கைங்கர்யம் செய்கையாகிற மூவகைப்பயன்களும் ஸித்திப்பதற்குத் தடையற்ற ஸ்தானத்தை ஆசார்ய பர்யந்த கைங்கர்யமாகிற பிரகர்ஷத்தோடு பெருமையோடு அடைகிறான் என்பது தேர்ந்த கருத்து.
‘இவ்வைந்து காலங்களில் செய்யத்தக்க பகவதாராதனரூபமான கர்மத்துக்கு மோக்ஷத்தைக் குறித்து நேரே உபாயமாகை – ஒன்றன்பின் ஒன்றாய் இடையறாது வருகின்ற அனுஷ்டான காலங்களையறிந்து, அவ்வைந்து வகைப்பட்ட அனுஷ்டானங்களைச் செய்ய வல்லமை படைத்த அறிவில் மிக்கவர்கள் தமது நூறாவது பிராயம் முடிவு பெற்றவுடனே விரைவாக பரமபதம் அடைகிறார்கள்’ என்று லக்ஷ்மீ தந்த்ரத்திலும், ‘எல்லா மோக்ஷோபயங்களையும் அடியோடு விட்டு விட்டு, இவ்வைந்து அனுஷ்டானங்களையும் ஒழுங்காகச் செய்யுமவர்கள் ஒன்றோடொன்று சேர்ந்தேயிருக்கிற கர்மஜ்ஞாநபக்திகளாகிற உபாயத்தினின்றும் விடுபட்டவர்களாய்க்கொண்டு எம்பெருமானைப் பரமபதம் சென்று அடைகிறார்கள்’ என்று சாண்டில்ய ஸ்ம்ருதியிலும் கூறப்பட்டுள்ளமை உண்மைதான். அனாலும் பரத்வாஜர் முதலிய பெரியோர்கள் எம்பெருமானாகிற ஸித்தோபாயத்தில் ஊன்றியவர்கள் பலரூபமாகவே (பகவத்கைங்கர்யரூபமாகவே) செய்ய வேண்டுமென்று கூறியுள்ளபடியாலே இதுவே ஏற்கத்தக்கதாகும். ப்ரபந்நன் செய்யத்தக்க தர்மங்களைச் சொல்லிக் கொண்டு வந்து, ‘முதலில் அபிகமநம் செய்து, பகவதாராதனத்துக்கு வேண்டிய வஸ்துக்களை சேகரித்தலாகிற உபாதாநம் செய்து, பின்பு பகவானை ஆராதித்தலாகிற இஜ்யையை அனுஷ்டித்து, நல்ல க்ரந்தங்களைப் படித்தலாகிய ஸ்வாத்யாயத்தைச் செய்து, கடைசியில் பகவானைத் த்யானம் செய்தலாகிய யோகத்தைச் செய்பவனாய்க் கொண்டு இங்ஙனம் இவ்வைந்து காலங்களையும் மகிழ்ச்சியுடன் கழிக்கக் கடவன்’ என்றதனால் மகிழ்ச்சியுள்ளது பலாநுபவ வேளையாகையாலே, இவ்வைந்தினையும் உபாயமாகவல்லாமல் பலரூபமாகவே செய்யவேணுமென்பது கருதபட்டதென்று திடமாகக்கொள்ளலாம். ‘கர்மஜ்ஞாநபக்தி பிரபதத்திகளாகிற இந்நான்கினையும் மோக்ஷோபாயமாக அனுஷ்டியாமல் விட்டு விட்டு, பலத்திலும் இந்நான்கினிலும் என்னுடையவை என்ற பற்று அற்றவனாய்க்கொண்டு இப்பாஞ்சகாலிகமான அனுஷ்டானங்கள் பரமாத்மாவின் சந்தோஷமே பிரயோஜனமாகக் கொண்ட கைங்கர்யரூபமாகச் செய்யவேண்டும்’ என்று பராஸர முனிவர் பணித்ததும் இங்கு நினைக்கதகும்.
ஸ்ரீதேவராஜகுரு என்னும் எறும்பியப்பா அருளிச்செய்த ஸ்ரீ வரவரமுநி திநசர்யையும், அதற்கு வாதூலவீரராகவகுரு என்னும் திருமழிசை அண்ணவப்பய்யங்கார்ஸ்வாமி பணித்தருளிய சம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவி தி.அ .கிருஷ்ணமாசார்ய தாசன் எழுதிய தமிழுரையும் முற்றுப்பெற்றன.
முடிவுரை
ஸ்ரீவரவரமுநி திநசர்யை என்னும் இந்நூல் பூர்வதிநசர்யை, மணவாளமாமுனிகள் அருளிச்செய்த யதிராஜ விம்சதி , உத்தர திநசர்யை என்ற மூன்று பகுதிகளைக் கொண்டதென்று முன்னுரையிலேயே விண்ணப்பிக்கப்பட்டது. இரண்டு திநசர்யைகளுக்கும் அண்ணாவப்பய்யங்கார்ஸ்வாமி அருளிய ஸம்ஸ்க்ருத வ்யாக்யானம் மட்டுமே அச்சில் உள்ளது. யதிராஜ விம்சதிக்கோவெனில் அண்ணாவப்பய்யங்கார்ஸ்வாமியின் ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தோடு ஸுத்தஸத்த்வம் தொட்டையசார்ய ஸ்வாமியும், பிள்ளைலோகச்சர்ய ஜீயர் ஸ்வாமியும் பணித்த மணிப்ரவாள வ்யாக்யாநங்களும் ஒருஸம்புடமாக அச்ச்சடிக்கபட்டுள்ளன. பெரும்பாலும் மணிப்ரவாள வ்யாக்யானங்களிரண்டிலுமுள்ள விஷயங்கள் எல்லாராலும் அறியத்தக்கவைகளாக இருக்கையாலே அவற்றைவிடுத்து, அண்ணாவப்பய்யங்கார் ஸ்வாமி அருளிய, இம்மூன்றின் ஸம்ஸ்க்ருத வ்யாக்யானங்களிலுள்ள விஷயங்களையே தழுவி இவ்வுரையை இயன்றவரையில் ஊக்கமாகவே எழுதியிருக்கிறேன். இதன்கண் ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்திலுள்ள மிக விரிவான விஷயங்களில் சிலவற்றை விட்டுவிட்டேன். நூல் விரியுமென்ற அச்சத்தினால், அடியேனுடைய அறியாமை, அஜாக்ரதை, திருபுணர்ச்சி முதலிய காரணங்களால் இவ்வுரையில் நேர்ந்துள்ள பிழைகளை, கற்றறிந்த பெருமக்கள் பொறுத்தருளுமாறு அவர்கள் திருவடிகளில் பணிந்து வேண்டுகிறேன்.
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org