உத்தர​ திநசர்யை – 11

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<< உத்தர திநசர்யை – 10

அபகதமதமாநை: அந்திமோபாய நிஷ்டை:
அதிகதபரமார்த்தை: அர்த்தகாமாநபேக்ஷை:|
நிகிலஜநஸுஹ்ருத்பி: நிர்ஜிதக்ரோதலோபை:
வரவரமுநிப்ருத்யை: அஸ்து மே நித்யயோக:|| 11

பதவுரை: மே – இத்தனை நாள்கள் தீயவரோடு எப்போதும் சேர்த்திருந்த அடியேனுக்கு, அபகதமதமாநை:- நாமே உயர்ந்தவர் என்ற கர்வமும், பெரியோர்களை அவமதிக்குமளவுக்கு வளர்ந்த அகங்காரமும் சிறிதும் இல்லாதவர்களும், அந்திம உபாய நிஷ்டை: – ஆசார்யாபிமானத்திற்கு இலக்காகையாகிற கடைசியான மோக்ஷோபாயத்தில் மிகவும் நிலைநின்றவர்களும், அதிகத பரம அர்த்தை: – பூரணமாக அடையப்பட்ட ஆச்சார்ய கைங்கர்யமாகிற பரமபுருஷார்த்தத்தை (எல்லையான பலனை) உடையவர்களும், அர்த்த காம அநபேக்ஷை: – மற்ற உபாயத்தையும் மற்ற பலனையும் விரும்பாதவர்களும், அல்லது செல்வத்தையும் காமபோகத்தையும் விரும்பாதவர்களும், நிகிலஜநஸுஹ்ருத்பி: வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் இவ்விருவருமில்லாத நடுவர்கள் ஆகிய எல்லா மனிதர்களிடமும் நன்மையைத்தேடும் நல்லமனமுடையவர்களும், நிர்ஜிதக்ரோதலோபை: – கோபத்தையும் உலபித்தனத்தையும் நன்றாக வென்றவர்களுமான, வரவரமுநிப்ருத்யை: மணவாளமாமுநிகளின் அந்தரங்க சிஷ்யர்களான கோயில் கந்தாடை அண்ணன், வானமாமலை ஜீயர் முதலியவர்களோடு, நித்யயோக: (திருவடிகளைத் தாங்கும் பஞ்சுமெத்தை, திருவடி இரேகை ஆகியவற்றிற்குப் போல்) நித்தியமான ஸம்பந்தமானது, அஸ்து – உண்டாகவேணும்.

கருத்துரை: இதுவரையில் மதம், மானம், பொன்னாசை, பெண்ணாசை, கோபம், உலோபம் முதலிய தீயகுணங்களே நிறையப்பெற்ற நீசஜநங்களோடு இடைவிடாமல் பழகிப்போந்த தமுக்கு, இக்குற்றங்களில் ஏதுமின்றியே, ஆசார்யகைங்கர்யம், அதற்கு உபாயமாக ஆசார்யனையே பற்றுதல், அனைவரிடத்திலும் நல்லெண்ணம் தொடக்கமான நற்குணங்களே மல்கியிருக்கபெற்ற மணவாளமாமுநிகளின் சிஷ்யர்களோடு நித்யசம்பந்தம் (நீங்காத தொடர்பு) உண்டாகவேணுமென்று இதனால் ப்ரார்த்தித்தாயிற்று.

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment