ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் – ஸ்ரீவில்லிபுத்தூர்
நீங்காமல் என்றும் நினைத்துத் தொழுமின்கள் நீள்நிலத்தில்
பாங்காக நல்ல பிரமேயசாரம் பரிந்தளிக்கும்
பூங்காவனம் பொழில் சூழ் புடை வாழும் புதுபுளிமண்
ஆங்காரம் அற்ற அருளாள மாமுனி யம்பதமே
பதவுரை
நீள்நிலத்தீர் – மிகப் பெரிய உலகத்தில் வாழ்கின்ற மக்களே
பாங்காக – பயனுடயதாக
நல்ல – ஆன்ம நலத்தைத் தரவல்ல
பிரமேசாரம் – திருமந்திரத்தின் சுருக்கத்தை
பரிந்து – அருள் கூர்ந்து
அளிக்கும் – அருளிச்செய்யும்
பூங்கா – அழகான பூஞ்சோலைகளும்
வளம் பொழில் – செழிப்பான தோப்புக்களும்
சூழ் புடை – நாற்புறமும் சூழ்ந்துள்ள
புதுப் புளி – புதுப் புளி என்னும் இடத்தில்
மன் – புலவர் (தலைவராக)
வாழும் – வாழ்ந்தவரும்
ஆங்காரமற்ற – செருக்குச் சிறிதும் இல்லாதவருமான
அருளாளமாமுனி – அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்னும் திருநாமமுடைய ஆசார்யரின்
அம்பதமே – அழகிய திருவடிகளையே
என்றும் – எப்பொழுதும்
நீங்காமல் – பிரியாமல்
நினைத்து – எண்ணிக்கொண்டு
தொழுமின்கள் – வணங்குவீராக
விளக்கம்
நீள்நிலத்தீர்! அருளாளமாமுனி அம்பதமே என்றும் தொழுமின்கள்! என்று கொண்டு கூட்டுக. “என்றும்” என்ற சொல்லை “நீங்காமல்” என்றும் “நினைத்து” என்றும் இரண்டு இடங்களிலும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க. அதாவது “என்றும் நீங்காமல்” என்றும் என்றும் நினைத்து” என்றும் கூட்டுக. பொருளை அறிவதற்கு அளவு கோலாயிருப்பது பிரமாணம் அதனால் அறியப்படும் பொருளுக்குப் பிரமேயம் என்று பெயர். அதனுடைய சுருக்கு சாரம். அது பிரமேய சாரம் எனப்படும்.
பிரமாணம் – அளக்கும் கருவி
பிரமேயம் – அளக்கப்பட்ட பொருள்
ஸாரம் – சுருக்கம்
மானம், மேயம் – சாரம் என்பர்
அதாவது பிரமாணம் திரும்ந்திரம். அதனுடைய பொருள் பிரமேயம். அப்பொருளின் சுருக்கம் பிரமேயசாரம் என்பதாம். நல்லமறை என்பது போல நல்ல பிரமேயசாரம் அதாவது குறை சொல்ல முடியாத நூல் என்பதாம்.
பாங்காக: கற்போர் மனம் கொள்ளும்படியாக அதாவது எளிமையாக என்று பொருள். ஆகவே இந்நூலில் பத்துப் பாடல்களால் திருமந்திரப் பொருளைச் சுருக்கமாகச் சொல்லப்படுகிறது. அதனால் இதற்கு பிரமேயசாரம் என்று பெயர்.
பரிந்தளிக்கும்: அனைத்து உயிர்களும் சேமத்தை அடைய வேண்டும் என்ற கருணையினால் அதனை நூலாக்கிக் கொடுக்கும் ஓராண் வழியாக உபதேசித்து வந்ததை பாருலகில் ஆசையுடயோர்கெல்லாம் தெரியும் வண்ணம் நூலாக்கிக் கொடுக்கும் என்பதாம்.
அருளாள மாமுனி: என்பதால் அனைத்து உயிகளிடத்தைலும் அருளே கொண்டவர் என்றும், அது முனிவர்களுக்கு அல்லாது ஏனையோர்க்கு அமையாது.ஆதலால் “மாமுனி” என்றும் அம்முனிவருக்குரிய உயரிய பண்பு. யான் எனது என்னும் செருக்கு அறுதலே என்பது “ஆங்காரம் அற்ற” என்ற அடைமொழியுடன் சிறப்பிக்கப்பட்டது. அத்தகைய ஆசார்யருடைய திருவடிகளையே தொழுமின்கள்.வணங்குவீராக.வணங்கும்பொழுது அத்திருவடியை மனதில் நினைத்துக் கொன்டே தொழுவீர்களாக. அத்துடன் நிழலும் உருவும் போல் பிரியாமல் பணிவீர். (அம்பதம்) என்ற இடத்தில் இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கு நின்றது. ஐயும் கண்ணும் அல்லா பொருள் வையின் மெய் உருபு தொகா -இறுதியான என்ற தொல்காப்பிய சொல் இலக்கணம் காண்க.
அம்பதத்தை: “அம்” என்றால் அழகு. பதத்திற்கு அழகாவது தன்னடியில் பணியும் சீடர்களைக் கைவிடாதது. “ஏ” பிரிநிலை”ஏ”காரம் அவரது திருவடியையே தொழுமின் என்றதால் அதுவே போதும். மற்ற இறைவன் திருவடி தொழ வேண்டா என்பதாம். இறைவனும் முனியும் ஒன்றானதால்.
புதுப்புளி: என்பது அவர் வாழ்ந்த தலம் இடம்.
மன்: வேத சாஸ்திர விற்பன்னர்கள் பலருக்குத் தலைமையாய் இருந்தவர் என்பது பொருள். புதுப் புளி என்ற அத்தலம் பூஞ்சோலைகளாலும் பல மரங்களும் அடர்ந்த தோப்புக்களாலும் சூழப்பட்ட செழிப்பான இடம் என்றவாறு.இதனால் அறிவு வளர்ச்சி ஒழுக்கநெறி முதலியவற்றிற்கு ஏற்புடயதான இடம் என்பது புலனாகிறது.
புடை: பக்கம். நாற்புறமும் என்று பொருள்.
பெரிய இவ்வுலகத்தில் வாழும் மக்களே! உயர் வீடு பேறு அடையத்தக்க திருமந்திரப் பொருளை மிக்க கருணையோடு எளிய தமிழில் “பிரமேய சாரம்” என்னும் இந்நூலில் சுருங்ககூறியவரும் பூஞ்சோலைகளும் தோப்புக்களும் நாற்புறமும் சூழ்ந்து அழகாயுள்ள புதுப் புளி என்னும் இடத்தில் வாழும் அறிஞர்களுக்குத் தலைவரும் செருக்குமில்லாதவருமான அருளாளப்பெருமாள் எம்பெருமானார் திருவடியையே எப்பொழுதும் நெஞ்சில் நினைந்து வணங்குவீராக. என்ற கருத்து.
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org
Thank u very much for your Tamil description.
dhanyos
It is a great bhagyam to read and enjoy any of our sampradhaya noolgal in tamil
rukmani
Sir i need your contact number
Please contact us at +91-8220151966.
A beautiful place pudhupuliman where is it located in varanasi