யதிராஜ விம்சதி – ச்லோகம் – 10

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம் 9                                                                                                                       ச்லோகம் 11

ச்லோகம் 10

हा हन्त हन्त मनसा क्रियया च वाचा योहं चरामि सततं त्रिविधापचारान् ।
सोहं तवाप्रियकरः प्रियक्रुद्वदेव कालं नयामि यतिराज! ततोस्मि मूर्खः ॥ (10)

ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா
யோSஹம் சராமி ஸததம் த்ரிவிதாபசாராந் |
ஸோSஹம் தவாப்ரியகர: ப்ரியக்ருத்வதேவ
காலம் நயாமி யதிராஜ! ததோSஸ்மி மூர்க்க: || (10)

பதவுரை:- யதிராஜ – வாரீர் யதிராஜரே, ய: அஹம் – எத்தகைய அடியேன், மநஸா வாசா க்ரியயா ச – மனமொழி மெய்களால், த்ரிவித அபசாராந் – பகவதபசார பாகவதாபசார அஸஹ்யாபசாரங்களாகிற மூவகைப்பட்ட பாபங்களையும், ஸததம் சராமி – இடைவிடாமல் எப்போதும் செய்து வருகிறேனோ, ஸ:அஹம் – அத்தகைய அடியேன், தவ – அடியேனிடம் பரமதயாளுவாய்ப்பேரன்பு பூண்ட தேவரீருக்கு, அப்ரியகர: ஸந் – இஷ்டமல்லாதவற்றையே செய்பவனாய்க்கொண்டு, ப்ரியக்ருத்வத் ஏவ – இஷ்டமானவற்றையே செய்பவன் போலே, காலம் நயாமி – காலத்தைக் கழித்து வருகிறேன். ஹா ஹந்த ஹந்த – ஐயோ ஐயோ ஐயோ தத: அஹம் மூர்க்க: அஸ்மி – அதனால் அடியேன் மூர்க்கனாகிறேன், தத்வாரய – அந்த மூர்க்கத்தனத்தைப் போக்கியருளவேணும்.

கருத்துரை:- மனத்தின் தீய செயல்களையும் (தீய சிந்தனையையும்) அதற்குக் காரணமான மூர்க்கத்தனத்தையும் போக்கியருளவேணும் என்கிறார். ‘நித்யம் யதீந்த்ர’ (4) என்னும் ஸ்லோகத்தில் மனமொழி மெய்களைக் குறிப்பிட்டபடியால், வ்ருத்த்யா பஸு: (7), துக்காவஹோSஹம் (8), நித்யந்த்வஹம் (9), ஹா ஹந்த ஹந்த (10) என்கிற இந்த நான்கு ஸ்லோகங்களிலும் மனமொழி மெய்களைக் குறிப்பிட்டிருந்த போதிலும், ஏழு எட்டாம் ஸ்லோகங்களில் வ்ருத்த்யா என்றும் துஷ்டசேஷ்ட: என்றும் முதலில் குறிப்பிட்டதையொட்டி மெய்யின் செயலையும், ஒன்பதாம் ஸ்லோகத்தில் ‘குரும் பரிபவாமி’ என்று முதலில் குறிப்பிட்டதனால் வாக்கின் செயலையும், பத்தாம் ஸ்லோகமான இதில் ‘மநஸா’ – என்று முதலில் கூறியதனால் மனத்தின் செயலையும் ப்ரதாநமாக நினைக்க வேண்டுமென்று தோன்றுகிறது என்கிறார் உரையாசிரியரான அண்ணாவப்பங்கார்ஸ்வாமி. பகவதபசாரமாவது – ஸ்ரீமந்நாராயணனை ப்ரஹ்மருத்ராதிகளோடு ஸமாநமாக நினைக்கையும், ராமாத்யவதாரங்களை வெறும் மநுஷ்யராக நினைக்கையும், அர்ச்சாவதாரங்களைக் கல்லாகவும் செம்பாகவும் நினைக்கையும் பிறவும் ஆம். பாகவதாபசாரமாவது – தனது தநலாபத்திற்காகவும், சந்தனம் புஷ்பம் பெண்கள் ஆகியவற்றிற்காகவும் ஸ்ரீவைஷ்ணவர்க்குப்பண்ணும் விரோதம் ஆகும். அஸஹ்யாபசாரமாவது – ஒரு காரணமுமின்றியேயிருக்க, பகவான் என்றாலும், பாகவதர்களென்றாலும், பொறாமலிருக்கையும், ஆசார்யாபசாரமும் தொடக்கமானவையாகும். இதன் விரிவு ஸ்ரீவசநபூஷணத்தில் காணத்தக்கது. மூன்றபசாரங்களைத் தாம் செய்வது தமக்கு வருத்தம் தருவதென்பதை ஹா, ஹந்த, ஹந்த என்று மூன்றிடைச் சொற்களால் குறித்தருளினர் என்க. ஆறாவது ஸ்லோகத்திலுள்ள ‘தத்வாரய’ என்பதனை இப்பத்தாம் ஸ்லோகம் வரையில் கூட்டிப்பொருள் உரைக்கப்பட்டது. தொண்டரடிப் பொடிகள் திருமாலை முப்பத்திரண்டாம் பாசுரத்தில் ‘மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே’ என்று மூன்று தடவைகள் தம்மைப் பற்றிக் குறிப்பிட்ட மூர்க்க ஸப்தத்தை, இதில் மாமுனிகள் எட்டு ஒன்பது பத்தாம் ஸ்லோகங்களில் தம்மைப்பற்றிக் குறிப்பிட்டருளினார் என்பர் இதன் உரையாசிரியர்.

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment