யதிராஜ விம்சதி – ச்லோகம் – 9

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம் 8                                                                                                                         ச்லோகம் 10

ச்லோகம் 9

नित्यम् त्वहं परिभवामि गुरुं च मन्त्रं तद्देवतामपि न किन्चिदहो बिभेमि ।
इत्थं शठोSप्यशठवद्भवदीयसङ्घे ह्रुष्टश्चरामि यतिराज! ततोSस्मि मूर्खः ॥ (9)

நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச மந்த்ரம்
தத் தேவதாமபி ந கிஞ்சிதஹோ பிபேமி|
இத்தம் ஸடோSப்யஸடவத் பவதீயஸங்கே
ஹ்ருஷ்டஸ்சராமி யதிராஜ! ததோSஸ்மி மூர்க்க:|| (9)

பதவுரை:- ஹே யதிராஜ – வாரீர் யதிராஜரே, அஹம் – அடியேன், குரும் – அறியாதவற்றை அறிவித்து அகவிருளைப்போக்கும் ஆசார்யனையும், மந்த்ரம் – (அவ்வாச்சார்யனாலே உபதேஸிக்கப்பட்ட) திருமந்த்ரமாகிய அஷ்டாக்ஷர மந்த்ரத்தையும், தத் தேவதாம் அபி – அம்மந்திரத்துக்கு உள்ளீடான ஸ்ரீமந்நாராயணனையும், நித்யம் து – எப்போதுமே, பரிபவாமி – அவமதிக்கிறேன். கிஞ்சித் அபி – சிறிதும், பிபேமி – இம்மூன்றை அவமதிப்பதனால் நமக்கு வருங்காலத்தில் என்ன கேடுவிளையுமோ என்று அஞ்சுகிறேனில்லை. அஹோ – இது என்ன ஆஸ்சர்யம். இத்தம் – இவ்விதமாக, ஸட:அபி – யாரும் அறியாமல் தீமை செய்யுமவனாயிருந்து வைத்தும், அல்லது ஸாஸ்த்ரத்தில் நம்பிக்கையில்லாதவனாயிருந்து வைத்தும், அஸடவத் – உள்ளும் புறமும் ஒக்க நன்மையே செய்யுமவன் போலவும், அல்லது முன்கூறிய மூன்றிலும் மதிப்பு வைக்கவேண்டுமென்று கூறும் ஸாஸ்த்ரத்தில் நம்பிக்கைமிக்க ஆஸ்திகன் போலவும், பவதீயஸங்கே – தேவரீர் திருவடிகளில் பக்தி பூண்ட அடியார்களின்-பரமாஸ்திகர்களின் கோஷ்டியில், ஹ்ருஷ்ட:ஸந் – நாம் செய்யும் தீமைகள் இவர்களுக்குத் தெரியாமலிருக்கிறதே என்று மகிழ்ச்சியடைந்தவனாய்க் கொண்டு, சராமி – ஸஞ்சரிக்கிறேன். தத: – அதனால் அஹம் மூர்க்க:அஸ்மி – அடியேன் மூர்க்கனாகிறேன். தத்வாரய – கீழ்க் கூறிய இத்தகைய மூர்க்கத்தனத்தைப் போக்கியருளவேணும்.

கருத்துரை:- கீழ் நான்காம் ஸ்லோகத்தில் ‘அடியேனுடைய வாக்கு தேவரீருடைய குணங்களைச் சொல்லிப் புகழ்வதில் ஊற்றமுடையதாக இருக்கட்டும்’ என்று அருளிச் செய்தவர் அதற்கு நேர்மாறாக குருமந்த்ரதேவதைகளை வாயார வைது பரிபவித்தலாகிற கெட்டகாரியங்களில் வாக்கு ஊன்றியிருப்பதையறிந்து, இத்தகைய பரிபவிக்கும் தீய செயலையும் அதற்குக் காரணமான மூர்க்கத்தனத்தையும் போக்கியருள வேணுமென்று ப்ரார்த்திக்கிறார்.

குருவை அவமதிப்பதாவது – அவர் உபதேஸித்தபடி விடவேண்டியவற்றை விடாமலிருத்தல், பற்ற வேண்டியவற்றைப் பற்றாமலிருத்தல். தனக்கொரு ப்ரஸித்திக்காகவோ கௌரவத்திற்காகவோ தநலாபத்திற்காகவோ, மந்திரம் கேட்கத் தகுதியற்றவர்கட்கு மந்திரத்தை உபதேஸித்தல் ஆகிய இவையே ஆம். மந்த்ரத்தை அவமதிப்பதாவது – மந்த்ரத்திலுள்ள உண்மைப்பொருளை மறைத்தலும் விபரீதப் பொருளுரைத்தலும் ஆம். மந்த்ரத்தால் கூறப்பட்ட தேவதையை அவமதிப்பதாவது – ஸ்ரீமந்நாராயணனால் ஸ்ருஷ்டிகாலத்தில் தரப்பட்ட மனமொழி மெய்களை அவன் விஷயத்தில் உபயோகப்படுத்தாமல், பிற நீச விஷயத்தில் உபயோகப் படுத்துதல் ஆகும். இவற்றின் விரிவு ஸ்ரீவசநபூஷணாதிகளில்  காண்க. அஹோ – ஆஸ்சர்யம். உலகத்தில் எங்கும் அடியேன் போன்ற பாவியும், பாவத்திற்கு அஞ்சாமலிருப்பவனும் தென்படாமையால் அடியேனுக்கே இது ஆஸ்சர்யத்தைத் தருகின்றதென்கிறார் ‘அஹோ’ என்பதனால்.

 

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment