ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
<<முன் பாசுரம் அடுத்த பாசுரம்>>
7-ஆம் பாசுரம்
अम्भोज बीज मालाभिः अभिजात भुजान्तरम् ।
ऊर्ध्व पुण्ड्रैः उपश्लिष्टम् उचित स्थान लक्षणैः ॥
அம்போஜபீஜமாலாபி: அபிஜாதபுஜாந்தரம்|
ஊர்த்வபுண்ட்ரைருபஸ்லிஷ்டம் உசிதஸ்தாநலக்ஷணை:||
பதவுரை :- அம்போஜபீஜமாலாபி: – தாமரை மணிகளால் செய்யப்பட்ட மாலைகளினால், அபிஜாத புஜ அந்தரம் – அலங்கரிக்கப்பட்டு அழகிய புஜங்களையும் திருமார்பையும் உடையவரும், உசித ஸ்தாந லக்ஷணை: – சாஸ்திரம் விதித்ததற்கு ஏற்ற – வயிறு முதலிய இடங்களென்ன, இடைவெளியோடு கூடியுள்ளமை முதலிய லக்ஷணங்களென்ன இவற்றையுடைய, ஊர்த்வபுண்ட்ரை: – ஊர்த்வபுண்ட்ரங்களுடன் (கீழிருந்து மேல் நோக்கி இடப்படும் திருமண்காப்புகளுடன்) உபஸ்லிஷ்டம் – பொருந்தப் பெற்றவருமாகிய…
கருத்துரை:- திருமார்பு அதற்கு இருவருகுமுள்ள புஜங்கள் பூணூல் நாபியாகியவற்றை வருணித்தபின்பு, திருமார்பு முதலியவற்றோடு தொடர்பு கொண்ட தாமரைமணிமாலையையும் திருமண்காப்புகளையும் வருணிக்கிறார் இதனால். “ஸுத்தமான தாமரை மணிமாலையையும், தோள்களில் ஒற்றிக்கொள்ளப்பட்டு அலங்காரமான சங்கு சக்கரப்பொறிகளையும், விஷ்ணுவின் பெயர்களிலாவது விஷ்ணு பக்தர்களின் பெயர்களிலாவது ஏதோ ஒன்றையும் தரிக்க வேண்டும்’ என்று பரத்வாஜரும், “பூணூலையும், குடுமியையும், திருமண்காப்புகளையும், தாமரை மணிமாலையையும், பட்டு வஸ்த்ரத்தையும், அந்தணன் தரிக்க வேண்டும்’ என்ற பராசரரும் பணித்தருளியவற்றை இங்கு அனுஸந்தித்தல் தகும். ‘மாலாபி:’ என்ற பஹுவசநத்தினால் தாமரைமணி மாலையோடு, துளஸீ மணிமாலையையும் பட்டினால் செய்யப்பட்ட பலநிறமுள்ள பவித்ரமாலைகளையும் கொள்க. ‘கருந்துளஸிக் கட்டையினால் செய்த மணிமாலையையும், பட்டுப்பவித்ரங்களையும், தாமரை மணிமாலையையும் எம்பெருமானுக்கு அணிவித்து, அவன் ப்ரஸாதமாகிய இம்மூன்றையும் தரிக்கவேண்டும்’ என்றுள்ள ப்ராஹ்ம புராண வசநம் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.
திருமண்காப்பைப் பற்றி, ஸ்ரீபாஞ்சராத்ர – பராஸர ஸம்ஹிதையில் ‘மூக்கின் அடிப்பகுதியில் (புருவ நடுவின் கீழுள்ள மூக்குப்பகுதியில்) ஒரு விரலகலமுள்ள பாதமும், நெற்றியின் நடுவில் ஒன்றரை விரல் அகலமுள்ள இடைவெளிப்பகுதியும் இருபக்கங்களிலுமுள்ள கோடுகள் ஒருவிரல் அகலமுடையதுமாக – ஊர்த்வபுண்ட்ரத்தை (கீழிலிருந்து மேலுக்குச் செல்லும் நெற்றிக்குறியை) அந்தணன் தரிக்கவேண்டும்’ என்றுள்ளது. பாத்மபுராணத்தில் ‘மூக்கின் அடிப்பகுதியிலிருந்து தொடங்கி நெற்றியின் முடிவளவாக ஊர்த்வபுண்ட்ரமிட வேண்டும். புருவத்தின் நடுப்பகுதி தொடங்கி நெற்றியின் இறுதிவரையில் இடப்படும் இரண்டு கோடுகளின் நடுவில் இடைவெளியை அமைக்க வேண்டும். அவ்விடைவெளி இரண்டு விரலகலமுடையதாகவும், இருகோடுகள் ஒரு விரலகமுடையதாகவும் இருக்கவேண்டும்’ என்று காண்கிறது. ‘விஷ்ணுக்ஷேத்ரத்திலிருந்து வெண்மைநிறமுள்ள ஸுத்தமான மண்ணைக் கொண்டுவந்து, அதைத் திருவஷ்டாக்ஷரமஹாமந்த்ரத்தினால் அபிமந்த்ரித்து, அம்மண்ணினால் நெற்றி முதலிய அவயங்களில் கேஸவாதி நாமங்களுக்குத் தக்கபடி (பன்னிரண்டு) ஊர்த்வபுண்ட்ரங்களை தரிக்கவேண்டும்’ என்ற பராஸர ஸ்ம்ருதியில் குறிக்கப்பட்டுள்ளது. ஊர்த்வ புண்ட்ரங்களை எறும்பியப்பா இங்குக் கூறியது ஸ்ரீசூர்ணத்திற்கும் உபலக்ஷணம்; ‘ஊர்த்வபுண்ட்ரத்தின் இடைவெளியில் ஸ்ரீதேவிக்கு அபிமதமான (இஷ்டமான) மஞ்சளால் செய்யப்பட்ட ஸ்ரீசூர்ணத்தைத் தரிக்கவேண்டும்’ என்று பராஸரர் பணித்தமையால் என்க. (7)
archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – https://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org