ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
<<முன் பாசுரம் அடுத்த பாசுரம்>>
19-ஆம் பாசுரம்
भ्रुत्यैः प्रियहितैकाग्रैः प्रेमपूर्वमुपासितम् ।
तत्प्रार्थनानुसारेण संस्कारान् संविधाय मे ॥
ப்ருத்யை: ப்ரியஹிதைகாக்ரை: ப்ரேமபூர்வமுபாஸிதம் |
தத்ப்ரார்த்தநாநுஸாரேண ஸம்ஸ்காராந் ஸம்விதாய மே || (19)
பதவுரை:- ப்ரயஹித ஏகாக்ரை: – (பகவதாராதநத்திற்காக) ஆசார்யனுக்கு எப்பொருள்களில் ப்ரீதியுள்ளதோ, ஆசார்யனுக்கு வர்ண, ஆஸ்ரமங்களுக்குத் தக்கபடி எப்பொருள்கள் ஹிதமோ (நன்மை பயப்பனவோ) அப்பொருள்களை ஸம்பாதிப்பதில் ஒருமித்த மநஸ்ஸையுடைய, ப்ருத்யை: – கோயிலண்ணன் முதலான ஸிஷ்யர்களாலே, ப்ரேமபூர்வம் – அன்போடுகூட, உபாஸிதம் – முற்கூறியபடி ப்ரியமாயும், ஹிதமாயுமுள்ள பகவதாராதனத்திற்கு உரிய பொருள்களைக் கொண்டுவந்து ஸமர்ப்பித்துப் ப்ரிசர்யை (அடிமை) செய்யப் பெற்றவராய்க் கொண்டு, தத் ப்ரார்த்தநா அநுஸாரேண – அச்சிஷ்யர்களுடைய வேண்டுகோளை அநுஸரிக்க வேண்டியிருப்பதனால் (அவர்களுடைய புருஷகாரபலத்தினால்), மே – (முன் தினத்திலேயே தம் திருவடிகளில் ஆஸ்ரயித்த) அடியேனுக்கு, ஸம்ஸ்காராந் – தாபம், புண்ட்ரம், நாமம், மந்த்ரம், யாகம் என்ற ஐந்து ஸம்ஸ்காரங்களை, ஸம்விதாய – நன்றாக (ஸாஸ்த்ர முறைப்படியே) ஒருகாலே செய்து…
கருத்துரை:- முன்கூறியபடியே பெருமாள் ஸந்நிதியில் உள்ள கம்பத்தின் கீழ்ப்பகுதியில் மாமுனிகள் எழுந்தருளியிருக்கும் ஸமயத்தில், அந்தரங்க ஸிஷ்யர்கள் பெருமாள் திருவாராதனத்திற்கு வேண்டியதாய் ஸாஸ்த்ர விரோதமில்லாத அரிசி, பருப்பு, பழம், பால், தயிர், கறியமுது முதலிய வஸ்துக்களை பக்தியுடன் கொண்டுவந்து எதிரில் ஸமர்ப்பித்துப் பணிவிடை செய்ய அவற்றை அவர் அங்கீகரித்தருளினார். ‘மாடாபத்யம் யதி: குர்யாத் விஷ்ணுதர்மாபிவ்ருத்தயே’ [யதியானவர் வைஷ்ணவமான தர்மங்களை (பஞ்சஸம்ஸ்காரம், உபயவேதாந்த ரஹஸ்யக்ரந்த ப்ரவசநம், அவற்றில் கூறியபடி ஸிஷ்யர்களை அநுஷ்டிக்கச் செய்தல் தொடக்கமானவற்றை) மேன்மேலும் வளர்ப்பதற்காக, மடத்தின் அதிபதியாயிருத்தலை ஏற்றுக்கொள்ளக் கடவர்] என்று பராஸரஸம்ஹிதையிலுள்ளபடியே மாமுனிகள் மடாதிபதியாக அழகியமணவாளனாலே நியமிக்கப்பட்டாராகையாலே கோயில் கந்தாடையண்ணன் முதலிய பல மஹான்கள் அவருக்கு ஸிஷ்யர்களாகி, வைஷ்ணவ ததீயாராதனம் நடக்கும் அம்மடத்தில் பெருமாள் திருவாராதனத்திற்கு உதவும்படி வஸ்துக்களை ஸமர்ப்பிப்பதும் மாமுனிகள் அவற்றை அங்கீகரிப்பதும் யுக்தமேயாகுமென்க.
முற்கூறப்பட்ட ஸிஷ்யர் பெருமக்கள் மாமுனிகள் ஸந்நிதியில், புதிதாக வந்து முதல்நாள் சேர்ந்த தமக்கு (எறும்பியப்பாவான தமக்கு) பஞ்சஸம்ஸ்காரம் செய்தருளும்படி ப்ரார்த்தித்தார்களாம். அவர்கள் மிகவும் வேண்டியவர்களாகையால் அவர்கள் செய்த ப்ரார்த்தனையைத் தட்டாமல் மாமுனிகள் அப்படியே செய்தாராம். அதனைக் குறிப்பிடுகிறார். பின்னிரண்டடிகளில் ‘ஒரு வருஷகாலம் ஆசார்யனை உபாஸிக்கவேண்டுமென்றும், அப்படியுபாஸித்த ஸிஷ்யனுக்கே ஆசார்யன் பஞ்சஸம்ஸ்காரங்களைச் செய்யவேண்டுமென்றும் சாஸ்த்ரம் கட்டளையிடாநிற்கவும், மாமுனிகள் அப்பாவிற்கு வந்த மறுநாளே செய்தது குற்றத்தின் பாற்படாது; அந்தரங்கஸிஷ்யர்களின் ப்ரார்த்தனை – அந்த சாஸ்த்ரத்தைவிட பலமுடையதாகையாலென்க. பெருமாள் திருவாராதநம் முடிந்த பிறகு இப்பஞ்சஸம்ஸ்காரங்கள் நடைபெற்ற விஷயம் ‘ஆசார்யன் நன்னாளில் காலையில் நீராடி எம்பெருமானுக்கு முறைப்படி திருவாராதனம் செய்து, தீர்த்தமாடி அநுஷ்டாநம் முடித்து வந்த ஸிஷ்யனை அழைத்து, அவன் கையில் கங்கணம் கட்டி முறைப்படியே பஞ்சஸம்ஸ்காரங்களையும் செய்யக்கடவன்’ என்றுள்ள பராஸரவசநத்தோடு பொருந்தும். அடுத்த ஸ்லோகத்தில் அப்பா செய்யும் யாகமாக (தேவபூஜையாக) மாமுனிகளின் திருவடிகளைத் தலையில் தரித்தலும், அதற்கு அடுத்த ஸ்லோகத்தில் த்வய மந்த்ரோபதேஸமும், கூறப்படுகிறபடியால் இந்த ஸ்லோகத்தில் தாபமென்கிற சங்கு, சக்கரப் பொறிகளை இரண்டு தோள்களில் ஒற்றிக்கொள்ளுதலும், புண்ட்ரமென்னும் பன்னிரண்டு திருமண்காப்புக்களை அணிதலும், ராமாநுஜதாஸன் முதலிய நாமந்தரித்தலும் ஆகிய மூன்று ஸம்ஸ்காரங்களே கொள்ளத்தக்கன. ஸம்ஸ்காரமாவது – ஒருவனுக்கு ஸ்ரீவைஷ்ணவனாகும் தகுதிபெறுவதற்காக ஆசார்யன் செய்யும் நற்காரியம். ஸம்ஸ்காரம் – பண்படுத்தல் – சீர்படுத்தல். (19)
archived in https://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – https://koyil.org
pramANam (scriptures) – http://granthams.koyil.org/
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org