பூர்வ திநசர்யை – 18 – ததஸ்தத்ஸந்நிதி

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>>

 18-ஆம் பாசுரம்

ततस्तत्सन्निधिस्तम्भमूलभूतलभूषणम्
प्रान्ङ्मुखं सुखमासीनं प्रसादमधुरस्मितम्

ததஸ்தத்ஸந்நிதி ஸ்தம்பமூலபூதலபூஷணம் |
ப்ராங்முகம் ஸுகமாஸீநம் ப்ரஸாதமதுரஸ்மிதம் || (18)

பதவுரை:- தத: – அரங்கநகரப்பனுக்குத் திருவாராதனம் செய்தபின்பு, தத்ஸந்நிதி ஸ்தம்பமூலபூதலபூஷணம் – அப்பெருமானுடைய ஸந்நிதியிலுள்ள கம்பத்தின் கீழுள்ள இடத்திற்கு அணிசெய்யுமவராய், ப்ராங்முகம் – கிழக்கு முகமாக, ஸுகம் – ஸுகமாக (மனத்தின் ஒருமைப்பாட்டிற்கு அநுகூலமாக), ஆஸீநம் – உட்கார்ந்திருக்குமவரும், ப்ரஸாத மதுரஸ்மிதம் – மனத்திலுள்ள தெளிவினால் உண்டான இனிய புன்சிரிப்பையுடையவருமாய்…

கருத்துரை:- முன் ஸ்லோகத்தில் கூறப்பட்ட பகவதாராதனத்திற்குப் பிறகு செய்ய வேண்டிய த்வயமந்த்ர ஜபத்தையும் உபலக்ஷணவகையால் கொள்க; அதுவும் நித்யாநுஷ்டானத்தில் சேர்ந்ததாகையால். ‘முக்காலங்களிலும் பெருமாள் திருவாராதனம் செய்தபிறகு, சோம்பலில்லாதவனாய்க்கொண்டு, ஆயிரத்தெட்டுதடவைகள் அல்லது நூற்றெட்டுத் தடவைகள் அதுவும் இயலாவிடில் இருபத்தெட்டு தடவைகள் மந்த்ரரத்நமென்னும் த்வய மந்த்ரத்தை அர்த்தத்துடன், தன் ஜீவித காலமுள்ளவரையில் அநுஸந்திக்கவேண்டும் என்று பராசரர் பணித்தது காணத்தக்கது. இப்படி மந்த்ர ஜபம் செய்யும்போதும் மாமுனிகளின் மனம் ஆசார்யரான எம்பெருமானாருடைய திருவடிகளில் ஒன்றி நிற்குமென்பதையும் நினைவில் கொள்ளவேணும்; மாமுனிகள் ஆசார்ய பரதந்த்ரராகையால் என்க. மாமுனிகள் திருவுள்ளத்தில் கலக்கமேதுமின்றித் தெளிவுடையவராகையால், அவரது திருமுகத்தில் சிரிப்பும் அழகியதாயிருக்கிறதென்றபடி. அகத்தின் அழகு முகத்தில் தெரியுமிறே. நற்காரியங்களைச் செய்யும் போது கிழக்கு முகமாகவோ வடக்கு முகமாகவோ இருந்து செய்யவேணுமென்று சாஸ்த்ரம் சொல்லுவதனால், ‘ப்ராங்முகம் ஸுகமாஸீநம்’ எனப்பட்டது. (18)

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment