8-ஆம் பாட்டு:
முன்னுரை:
வேறு பயன் ஒன்றையும் விரும்பாமல் பகவத் அனுபவ கைங்கர்யத்தையே பெரும் பயனாகக் கொண்டு பகவானிடம் மிக்க அன்புடையவர்கள் அடிமை செய்யும் போது முறை தவறிச் செய்தாலும் அதைப் பகவான் மிகவும் களிப்புடன் தலையால் தாங்குவான் என்று சொல்லப்படுகிறது. கீதையில் தன் பக்தன் பக்தியோடு கொடுக்கும் இலை, பூ, பழம், நீர் ஆகிய அனைத்தையும் நான் அன்போடு அருந்துகிறேன் என்று கூறுகிறான். இதில் இலை, பூ சேர்க்கப்பட்டுள்ளன. பக்தன் அன்பினால் கொடுப்பதால் அது எதுவாயினும் அதை அருந்துவதாகச் சொல்வதால் கொடுக்கிற பொருளைப் பார்க்காமல் அவன் நெஞ்சில் அன்பையே பார்த்து ஏற்கிறான் என்பதை உணரலாம். இக்கருத்து இப்பாடலில் கூறப்படுகிறது.
“முற்றப் புவனம் எல்லாம் உண்ட முகில்வண்ணன்
கற்றைத் துழாய்சேர் கழலன்றி – மற்றொன்றை
இச்சியா அன்பர் தனக்கு எங்ஙனே செய்திடினும்
உச்சியால் ஏற்கும் உகந்து”
பதவுரை:
புவனமெல்லாம் | எல்லா உலகங்களையும் |
முற்ற உண்ட | ஒன்று விடாமல் அனைத்தையும் விழுங்கித் தன் வயிற்றில் வைத்துக்கொண்ட |
முகில் வண்ணன் | மேகம் போன்ற திருமேனியை உடைய இறைவனின் |
கற்றைத் துழாய்சேர் | தழைக்கின்ற திருத்துழாய் சேர்ந்துள்ள |
கழலன்றி | திருவடிகளைத் தவிர |
மற்றொன்றை | வேறு ஒரு பயனையும் |
இச்சியா அன்பர் | விரும்பாத பக்தர்கள் |
தனக்கு | இறைவனான தனக்கு |
எங்ஙனே செய்திடினும் | அடிமைகளை எப்படிச் செய்தாலும் |
உகந்து | மிகவும் மகிழ்ந்து |
உச்சியால் ஏற்கும் | தலையால் ஏற்றுக் கொள்வான் |
விளக்கவுரை:
“முற்றப் புவனம் எல்லாம் உண்ட முகில்வண்ணன்” – அழிவு காலத்தில் அழிபடாமல் அனைத்து உலகங்களையும் ஒன்று விடாமல் தனது வயிற்றிலே வைத்துக் காக்கிறவன் என்று கதை சொல்லப்படுகிறது. இவ்வாறு உலகங்களைக் காத்தது பிறர்க்குச் செய்ததாக இல்லாமல் தன் பயனாகச் செய்பவன் என்ற கருத்தை அவனது நீருண்ட காளமேகம் போன்ற வடிவின் நிறத்தைப் பார்த்தாலே தெரியும். மேகமும் பிறர்க்காகவேயிருப்பது. பகவானும் பக்தர்களுக்காகவே இருக்கிறவன் என்ற குறிப்புப் பொருள் இங்குப் புலனாகிறது. இப்போது இதைச் சொல்கிறது. ‘தாயிருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக் கொண்டான்’ என்ற பாசுரத்தில் சொன்னபடி ஆபத்து காலத்தில் உலகங்களையும் அவையறியாதிருக்க, தானறிந்த உறவையே காரணமாகக் கொண்டு தன் வயிற்றிலே வைத்து ரட்சித்தது தனக்கு லாபம் என்னும் கருத்தை தன் வடிவிலே தெரியும்படி இருந்தான் என்று விளக்கம் சொல்லப்படுகிறது. இதனால் வேறு பயன் ஒன்றையும் விரும்பாமல் தன்னிடம் மிக அன்புடையவர்கள் தன்னிடத்தில் செய்யும் தொண்டுகளை ஆதரவுடன் ஏற்றுக் கொள்வான் என்னும் கருத்து குறிப்பால் உணரப்படுகிறது.
கற்றைத் துழாய் சேர் கழலன்றி – இதில் பகவானுடைய திருவடிகளின் இனிமை சொல்லப்படுகிறது. ‘பூமியில் வளரும் திருத்துழாயைக் காட்டிலும் அவன் திருமேனியில் சாத்தப்பட்ட திருத்துழாய் திருமேனியின் தொடர்பினால் தழை விடுகிறது. அத்தகைய தழைத்திருந்துள்ள திருத்துழாயோடே சேர்ந்திருந்துள்ள திருவடிகளைத் தவிர என்பது பொருள். இக்கூற்றால் அவன் திருவடிகளில் உள்ள அலங்காரத்திற்கும் அழகுக்கும் சிறப்பு அறியப்படுகிறது
மற்றொன்றை இச்சியா அன்பர் – இப்படியான மிக இனிமை பொருந்திய அவன் திருவடிகளை யொழிய வேறு ஒரு பயனையும் விரும்பாத மிக்க அன்புடையவர்கள் என்பது இதன் பொருள். உலகில் பெரும்பாலும் பகவானை விரும்பாமல் அவனிடம் வேறு வேறு பயன்களைப் பெறுவதற்காக அவனுக்கு ஏதோ உபசாரம் செய்வது போல செய்வார்கள். இது உலக இயல்பு. இவ்வாறு இல்லாமல் ஸ்ரீஆண்டாள் அருளியபடி “உனக்கு உகந்த நூறு தடா அக்கார வடிசலும் நூறு தடாவில் வெண்ணையும் சமர்ப்பிக்கிறேன். இதை நீ ஏற்றுக் கொண்டால் நூறை ஆயிரமாகப் பெருக்கிக் கொடுப்பதோடு நானும் உனக்கு ஆட்செய்வேன்” என்றாள். இது அவன் ஏற்றுக் கொண்டதற்குப் பலனாக சொல்லப்பட்டது. அதுபோல பக்தர்கள் செய்யும் தொண்டினை அவன் ஏற்றுக் கொண்டால் மேலும் ஒன்றுக்கு மேல் பலவாகத் தொண்டுகளே செய்வது பகவத் பக்தர்களின் இயல்பு. இத்தகையவர்களுக்குப் பயன் கருதாமல் செய்யும் பண்புடையாளார் என்று பெயர்.
தனக்கு எங்ஙனே செய்திடினும் – மேற்கூறிய அடியார்கள் தனக்கு அடிமை செய்யும் போது அன்பில் வயப்பட்டு முறையாகவோ முறை தவறியோ தொண்டுகளை எப்படிச் செய்தாலும்.
உச்சியால் ஏற்கும் உகந்து – மிகவும் மகிழ்ச்சியுடன் தலையாலே ஏற்பான் என்பது பொருள். எங்ஙனே செய்திடினும் என்றது உச்சியால் ஏற்கும் என்பது பொருள். பக்தன் காலாலே தூக்கி எறிந்ததையும் அவன் தலையாலே ஏற்பான் என்பதாம். உதாரணம் பெரியாழ்வார். (கண்ணனுக்காக) பெருமாளுக்காகத் தொகுத்து வைத்த மாலையை ஸ்ரீஆண்டாள் தன் தலையில் சூட்டி அழகு பார்த்தாள். அம்மாலையில் ஸ்ரீஆண்டாள் தலையில் சிக்கிய கேசம் பின்னியிருப்பதைப் பார்த்த ஆழ்வார் வெளியில் தூக்கி எறிந்து வேறு மாலையைக் கட்டிக் கொண்டு சென்றார். பெருமாள், ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்து எறியப்பட்ட அம்மாலைதான் தனக்கு வேணும் என்று கேட்டு வாங்கிக் கொண்டான். இன்றும் ஸ்ரீஆண்டாள் சூடின மாலையைப் பெருமாள் தலையால் சுமப்பதைக் காணலாம். இவ்வாறான பல உதாரணங்கள் காணலாம்.