ஞான ஸாரம் – தனியன்கள்

ஞான ஸாரம்

arulalaperumalemperumanar-svptr

தனியன்
கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ராச்ரயம் ஆச்ரயே!
ஞானப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முனிம்!!

பொழிப்புரை:- கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் (அவதரித்தவரும்) தோன்றியவரும், துறவிகளுக்குத் தலைவரான ஸ்ரீராமாநுஜரைத் தஞ்சம் புகுந்தவரும், தமது ஞானஸார, ப்ரமேயஸார நூல்களில் ஆசார்ய பெருமை பேசியவருமான அருளாள மாமுனியைப் பற்றுகின்றேன்.

ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம் !
சதுர்த்தாச்ரம ஸம்பன்னம் தேவராஜ முனிம் பஜே !!

ராமாநுஜாச்சார்யருக்கு நல்ல சீடரும் வேதம் முதலிய அனைத்து சாஸ்த்ரங்களில் வல்லுநரும், நான்காவது நிலையான துறவறத்தை மேற்கொண்டவருமான அருளாள மாமுனியை வணங்குகிறேன்.

குறிப்பு :- (ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம்) யக்ஞ மூர்த்தி என்னும் பூர்வாசார பெயருடன் முன்னைய நிலையில் எம்பெருமானாரோடு பதினெட்டு நாட்கள் நடத்திய வேதாந்த விசாரத்தில் தர்க்கம் செய்து எம்பெருமானாரைச் சோர்வுறச் செய்கையில், பேரருளாளரான அத்திகிரி வரதராஜப் பெருமாள் கனவில் தோன்றி, “எம்பெருமானாரே! நீர் சோர்வுற வேண்டா, உமக்குத் திறமையுடைய ஒரு நற்சீடனை உண்டாக்கிக் கொடுத்தோம். அவனை வெல்வீராக” என்று உரைத்த குருபரம்பரைத் தொடர்களை இங்கு நினைவு கூர்க.

(வேத சாஸ்திரார்த்த ஸம்பதம்) – உடையவரோடு பதினெட்டு நாட்கள் தர்க்கம் பண்ணின திறமையாலும் ஞானஸார ப்ரமேயஸார நூல்களில் வேதம் முதலிய சாஸ்திரங்களிலிருந்து சாரமான கருத்துக்களை அழகிய வெண்பாக்களினால் எடுத்துரைத்தமையாலும், இவரது சாஸ்திர புலமை நன்கு விளங்கும்.

(தேவராஜ முனிம்) – தேவராஜனான பேரருளாளனுடைய திருவருளால் எம்பெருமானாருக்கு சீடரான பெருமையும், ஞான, பக்தி, வைராக்யங்களில் ராமாநுஜ முனிக்கு நிகராக விளங்கிய சிறப்பும் பற்றி “அருளாளமுனி” என்று திருநாமம் பெற்றமையும் உணரப்படுகிறது.

தனியன்
சுருளார் கருங்குழல் தோகையர் வேல் விழியில் துவளும்
மருளாம் வினை கெடும் மார்க்கம் பெற்றேன் மறை நான்கும் – சொன்ன
பொருள் ஞான ஸாரத்தைப் புந்தியில் தந்தவன் பொங்கொளிசேர்
அருளாள மாமுனியம் பொற்கழல்கள் அடைந்த பின்னே.

பொழிப்புரை: நான்கு வேதங்களிலிருந்து உட்பொதிந்த ஆழ் பொருள்களையும், திருமந்திரத்தின் மெய்ப்பொருள்களையும் ஞானஸார ப்ரமேயஸாரம் என்னும் நூல்களைக் கொண்டு அறிவைப் புகட்டியவரும், ஞானச் சுடர் விளக்காய் விளங்குபவரும், அருளாளமாமுனி என்னும் திருநாமம் உடையவருமான ஆசார்யருடைய, அழகியதும், அனைவருக்கும் அடையத் தகுந்ததுமான அவரது திருவடிகளை அடைந்த பிறகு, ஊழ்வினைகள் அழிவதற்கான வழியை அறிந்து கொண்டேன். ஊழ்வினையால் அறிவில் மயக்கம் ஏற்படுகிறது. அவ்வறிவு மயக்கத்தால் பெண்வழிச் சேரலில் துவழ்ச்சி ஏற்படுகிறது. அத்துவழ்ச்சிக் காரணமாக அவர்களது சுருண்ட கருங்கூந்தலிலும் வேல் போன்ற பார்வையிலும் மனம் நெகிழ்கிறது. அருளாள மாமுனிகளின் திருவடிகளை அடைந்த பிறகு காமம் முதலிய இக்குற்றங்களிலிருந்து நீங்குவதற்கு வழி அறிந்து கொண்டேன் என்பது கருத்து.

அருளாளப்பெருமாள் எம்பெருமானாராகிற ஆசார்யருடைய திருவடிகளைப் பற்றின பிறகு அவர் அருளிச் செய்த ஞானஸார ப்ரமேயஸார ப்ரபந்தங்களால் அறிவுக்குத் தெளிவு பிறந்தது. அதனால் பெண்களின் அழகிய கூந்தலிலும் வேல் போன்ற விழியிலும் மனம் நெகிழும் தீய வினைகளை அழிக்கும் வழிகளை அறியப் பெற்றேன் என்று கருத்து.

பெண்ணாசையைச் சொன்ன இதில் மற்றும் உண்டான கோபம், உலோபம், மோகம், மதம், பொறாமை முதலிய குற்றங்களும் அடங்கும். “காமம், வெகுளி, மயக்கம் இம்மூன்றன் நாமம் கெடக் கெடும் நோய்” என்ற திருக்குறளின் சொல்படி மனிதப் பண்பாட்டை அழிக்கும் குற்றங்கள் ஆசார்ய கடாக்ஷத்தால் தீரும் என்பது பாடலின் அருங்கிய கருத்து. இதனால் இவ்வாசிரியருடைய பெருமை கூறப்பட்டது.

 

Leave a Comment