நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – ஆறாம் திருமொழி – வாரணமாயிரம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

நாச்சியார் திருமொழி

<< ஐந்தாம் திருமொழி – மன்னு பெரும்புகழ்

குயிலிடத்திலே தன்னை எம்பெருமானுடன் சேர்த்துவைக்குமாறு ப்ரார்த்தித்தாள். அது நடக்காததால் மிகவும் வருத்தமுற்றாள். எம்பெருமானோ இவளுக்கு இன்னமும் தன் மீதான ப்ரேமத்தை அதிகரிக்கவைத்து பின்பு வரலாம் என்று காத்திருந்தான். நம்மாழ்வாருக்கும் முதலிலே மயர்வற மதிநலம் அருளினாலும், பரபக்தி தொடக்கமாக பரமபக்தி நிலை ஈறாக வரவழைத்தே பரமபதத்தில் நித்ய கைங்கர்யத்தைக் கொடுத்தான். ஸீதாப் பிராட்டியும் எம்பெருமானைப் பிரிந்திருந்த நிலையில் “நான் ஒரு மாதம் வரை பெருமாளின் வரவுக்குக் காத்திருப்பேன்” என்று சொன்னாளே. ஆனால் பெருமாளோ “ஒரு க்ஷணமும் என்னால் பிராட்டியைப் பிரிந்திருக்கமுடியாது” என்றானே. அங்கே த்ரிஜடை போன்றவர்கள் நல்ல ஸ்வப்னம் கண்டு அதை ஸீதாப் பிராட்டிக்குச் சொல்ல அவள் தரித்திருந்தாள். ஆண்டாளோ தானே ஸ்வப்னம் கண்டால் மட்டுமே தரித்திருக்கக்கூடியவள். எம்பெருமான் சிலர் உறங்கும்போது தான் உறங்காமல் இருந்து அவர்களுக்கு ஸ்வப்னத்தில் ஆனந்தத்தைக் கொடுக்கும்படி இருக்கிறான் என்று சாஸ்த்ரம் சொல்லுகிறது. அப்படியே இவளுக்கும் தனக்கும் நடக்கும் திருக்கல்யாண வைபவத்தை எம்பெருமான் இவளுக்கு ஸ்வப்னத்தில் காட்டிக்கொடுக்க அதைத் தான் அனுபவைத்தபடியைத் தன் தோழிகளுக்குச் சொல்லித் தரித்துக்கொள்கிறாள்.

முதல் பாசுரம். அவன் வந்த பிறகு அனுபவித்துக் கொள்ளலாம் என்றில்லாமல் அவன் வரவு தொடக்கமாக அனுபவிக்க வேண்டும் என்று அவன் வரவைச் சிந்திக்கிறாள்.

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்

என் உயிர்த்தோழியே! எல்லா குணங்களிலும் பூர்ணனான ஸ்ரீமந்நாராயணன் ஆயிரம் யானைகள் சூழ்ந்து வர, ப்ரதக்ஷிணமாக வருகிறான் என்று எதிரே பொன்னாலான பூர்ண கும்பங்களை வைத்து நகரம் முழுவதும் தோரண ஸ்தம்பங்களை நாட்ட, இவற்றை எல்லாம் நான் என் கனவில் அனுபவித்தேன்.

இரண்டாம் பாசுரம். மணப்பந்தலில் கண்ணன் புகுந்ததைக் கண்டேன் என்கிறாள்.

நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தற் கீழ்
கோள் அரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ! நான்

தோழீ! நாளை விவாஹ மஹோத்ஸவம் என்ற முஹூர்த்தம் நிர்ணயித்து, பாளைகளோடு கூடிய பாக்கு மரங்களாகிற அலங்காரங்களை உடைய திருமணப் பந்தலின் கீழே நரஸிம்ஹன் என்றும் மாதவன் என்றும் கோவிந்தன் என்றும் திருநாமங்கள் கொண்ட ஒரு இளைஞன் ப்ரவேசிப்பதை நான் என் கனவில் கண்டு அனுபவித்தேன்.

மூன்றாம் பாசுரம். கூறைப் புடவை, மணமாலை ஆகியவைகளை அணிந்துகொள்ளும் அனுபவத்தைப் பகிர்கிறாள்.

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகள் பேசி மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி மண மாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்

தோழீ! இந்த்ரன் முதலான தேவர்கள் எல்லாரும், இங்கே வந்து இருந்து என்னை மணப்பெண்ணணாகப் பேசி, தேவையான ஏற்பாடுகளை ஆலோசித்து, துர்க்கை என்கிற என்னுடைய நாத்தனார் (கணவனின் ஸஹோதரி) கல்யாணப் புடவையை நான் உடுத்தும்படி செய்து, நறுமணம் மிகுந்த மாலைகளையும் சூட்டும்படி நான் கனாக் கண்டேன்.

நான்காம் பாசுரம். விவாஹ அனுஷ்டான க்ரமத்தின் ஆரம்பத்தில் செய்யப்படும் காப்புக் கட்டிக்கொள்ளும் அனுபவத்தைப் பகிர்கிறாள்.

நால் திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னை
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்

தோழீ!  பெரியோர்களான பல ப்ராஹ்மணர்கள் நான்கு திசைகளிலும் இருந்து புனித நீரைக் கொண்டு வந்து நன்றாகத் தெளித்து உயர்ந்த ஸ்வரத்தில் மங்களங்களைச் சொல்லிப் பூக்களால் கட்டப்பட்ட மாலையை அணிந்தவனான பரம பவித்ரனான கண்ணன் எம்பெருமானுடன் என்னைச் சேர்த்துக் காப்புக் கயிறைக் கட்டுவதை நான் கனாக் கண்டேன்.

ஐந்தாம் பாசுரம். தீபம், பூர்ண கும்பம் ஆகியவற்றுடன் மணப்பந்தலுக்குள் வரவேற்கப்பட்டு எம்பெருமான் எழுந்தருளும் அனுபவத்தைப் பகிர்கிறாள்.

கதிரொளி தீபம் கலசம் உடன் ஏந்தி
சதிர் இளமங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு எங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ! நான்

தோழீ! அழகிய இளம் பெண்கள் ஸூர்யனுடைய ஒளி போன்ற ப்ரகாசிக்கும் மங்கள தீபத்தையும் பொற்கலசங்களையும் (பூர்ணகும்பம்) கையில் ஏந்திக்கொண்டு, எதிர் கொண்டு அழைக்க, வடமதுரை மன்னனான கண்ணன் எம்பெருமான் பாதுகைகளை அணிந்துகொண்டு பூமி முழுவதும் அதிரும்படி எழுந்தருளியதை நான் கனாக் கண்டேன்.

ஆறாம் பாசுரம். மதுஸூதனன் எம்பெருமான் தன்னைப் பாணிக்ரஹணம் செய்து கொண்ட அனுபவத்தைப் பகிர்கிறாள்.

மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ! நான்

தோழீ! மத்தளங்கள் கொட்டவும், ரேகைகளை உடைய சங்குகள் நீண்ட நேரம் ஊதவும் என்னை மணம் புரியும் மைத்துனன் (அத்தை மகன்) முறையை உடைய குண பூர்த்தியை உடைய மதுஸூதனன் எம்பெருமான், முத்துக்களை உடைய மாலை அலங்காரங்கள் தொங்கும் பந்தலின் கீழே வந்து என்னைப் பாணிக்ரஹணம் செய்து கொண்டதை நான் கனாக் கண்டேன்.

ஏழாம் பாசுரம். எம்பெருமானுடன் சேர்ந்து அக்னியை வலம் வரும் அனுபவத்தைப் பகிர்கிறாள்.

வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து
காய்சினமா களிறு அன்னான் என் கைப் பற்றி
தீ வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ! நான்

தோழீ! நன்கு கற்றுத் தேர்ந்த வைதிகர்கள் சிறந்த வேத வாக்யங்களை உச்சரித்து தகுந்த மந்த்ரங்களைக் கொண்டு, பசுமையான இலைகளுடன் கூடிய நாணற்புல்லைப் பரப்பி வைத்து ஸமித்துக்களைக் (சுள்ளிகள்) கொண்டு, பெரும் கோபத்தையுடைய மத்தகஜம்போலே செருக்கை உடைய கண்ணன் எம்பெருமான் என் கையைப் பிடித்துக்கொண்டு அக்னியை வலம் வந்ததை நான் கனாக் கண்டேன்.

எட்டாம் பாசுரம். எம்பெருமான் முன்னிலையில் அம்மி மிதிக்கும் அனுபவத்தைப் பகிர்கிறாள்.

இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ! நான்

தோழீ! இப்பிறவிக்கும் மேலுள்ள எல்லா பிறவிகளுக்கும் புகலிடமாய் இருப்பவனாய், நமக்குத் தலைவனாய், எல்லாக் கல்யாண குணங்களிலும் பூர்ணனாய் நாராயணனான கண்ணன் எம்பெருமான் தனது (அடியார்கள் காலையும் பிடிக்கும்) சிறப்புவாய்ந்த திருக்கையால் எனது காலைப் பிடித்து அம்மியின் மேல் எடுத்துவைப்பதை நான் கனாக் கண்டேன்.

ஒன்பதாம் பாசுரம். சாஸ்த்ரத்திலே காட்டப்பட்ட “லாஜஹோமம்” (நெல்லைப் பொரிக்கும் ஹோமம்) செய்த அனுபவத்தைப் பகிர்கிறாள்.

வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரி முகன் அச்சுதன் கைம்மேல் என் கை வைத்து
பொரி முகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்

தோழீ! அழகிய வில்லைப்போன்ற புருவத்தையும் ஒளிபொருந்திய முகத்தையும் உடையவர்களான எனது அண்ணன்கள் வந்து அக்னியை நன்றாக வளர்த்து அங்கே அக்னியின் முன்பு என்னை நிறுத்தி சிங்கம்போன்ற திருமுகத்தைக்கொண்ட அச்சுதன் எம்பெருமானுடைய திருக்கையின்மேலே என்னுடைய கையை வைத்து பொரிகளை அள்ளிப் பரிமாறியதை நான் கனாக் கண்டேன்.

பத்தாம் பாசுரம். எம்பெருமானுடன் ஆனைமேலேறி வலம் வந்த, மற்றும் இருவரையும் மற்றவர்கள் வாஸனை ஊட்டப்பட்ட நீரினால் திருமஞ்சனம் செய்த அனுபவத்தைப் பகிர்கிறாள்.

குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம்மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல்
மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்

தோழீ! குங்குமத்தை உடம்பெல்லாம் பூசி குளிர்ந்த சந்தனத்தையும் நன்றாகத் தடவி, அங்குள்ள ஆனையின் மேலே எம்பெருமானுடன் சேர்ந்திருந்து அலங்கரிக்கப்பட்ட வீதிகளிலே ஊர்வலம் வந்து வாஸனை ஊட்டப்பட்ட நீரினால் எங்கள் இருவரையும் திருமஞ்சனம் பண்ணுவதை நான் கனாக் கண்டேன்.

பதினொன்றாம் பாசுரம். இந்தப் பதிகத்தைக் கற்றவர்களுக்குப் பலம் சொல்லி முடிக்கிறாள்.

ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயு நன்மக்களைப் பெற்று மகிழ்வரே

அந்தணர் குலத்தவரால் புகழப்பட்டவராய் (அதனால் நம்பத்தகுந்தவராய் இருக்கும்) ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வாருடைய திருமகளான ஆண்டாள் (நான்) தான் கண்ணன் எம்பெருமானைக் கைப்பிடித்ததைக் கனவில் கண்டபடி அருளிச்செய்த பரிசுத்தமான இந்தத் தமிழ் மாலையான பத்துப் பாசுரங்களையும் நன்றாகச் சொல்ல வல்லவர்கள் பெரியாழ்வாரைப்போலே பகவத் விஷயத்திலேயே ஈடுபட்டிருக்கும் நல்ல குணங்கள் அமைந்த உயர்ந்த பிள்ளைகளைப் பெற்று ஆனந்தத்தை அடைவார்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  https://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment