ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை
பாசுரம் 41
எம்பெருமானார் “உம்முடைய தோஷத்தைப் பார்க்காமல் நாம் எப்படி ரக்ஷிப்பது” என்பதாகக் கொண்டு, “உலகம் எல்லாம் வாழப் பிறந்தவரான தேவரீர் அடியேனைக் கருணையோடே ரக்ஷிக்க வேண்டும்” என்கிறார்.
எனைப் போல் பிழை செய்வார் இவ்வுலகில் உண்டோ?
உனைப் போல் பொறுக்க வல்லார் உண்டோ? அனைத்துலகும்
வாழப் பிறந்த எதிராச மாமுனிவா!
ஏழைக்கு இரங்காய் இனி
யதிராஜரே! அடியேனைப் போலே தவறு செய்பவர்கள் இந்த உலகம் எங்கும் தேடினால் கிடைப்பார்களோ? தேவரீரைப்போலே மற்றவர் தவறுகளைப் பொறுத்துக்கொள்பவர் உபய விபூதியிலும் உண்டோ? எல்லா உலகங்களும் உஜ்ஜீவித்து வாழ்வதற்கு அவதரித்தருளின வணங்கத்தகுந்த மஹாமுனிவரே! சபலானாயிருக்கும் அடியேனுக்குக் கருணையைக் காட்ட வேண்டும்.
பாசுரம் 42
எம்பெருமானார் இவருடைய தன்மைகளைக் கண்டு இவருக்குப் பேற்றை அளிப்பதாக நினைத்து இவரை ஆசையோடே கடாக்ஷிக்க அதைக் கண்டு இவ்வுலகில் தான் படும் துன்பங்களை அறிவித்துத் தனக்கு விரைவில் பேறு வேண்டும் என்கிறார்.
ஐம்புலன்கள் மேல் இட்டு அடரும் பொழுது அடியேன்
உன் பதங்கள் தம்மை நினைந்து ஓலம் இட்டால் பின்பவைதாம்
என்னை அடராமல் இரங்காய் எதிராசா!
உன்னை அல்லால் எனக்கு உண்டோ?
யதிராஜரே! ஐம்புலன்கள் என்னை ஆக்ரமித்துத் துன்புறுத்தும்போது தேவரீரின் அடியவனான நான் தேவரீருடைய திருவடிகளை நினைத்து “ராமானுசரே!” என்று ஓலமிட்டால் அதற்குப் பிறகு அவை என்னைத் துன்புறுத்தாமல் க்ருபை செய்து அருள வேண்டும்! தேவரீரைத் தவிர அடியேனுக்கு வேறு ரக்ஷகர் உண்டொ?
பாசுரம் 43
எம்பெருமானார் கருணை காட்டவில்லை என்று நினைத்து என்ன பயன், பரமபதத்தில் ஆசையும் இவ்வுலகில் வெறுப்பும் இருந்தால் தானே அவர் அதைத் தந்தருள்வார். நமக்கு அவை இல்லாமையாலே கிடைக்கவில்லை போலும் என்று ஆசையைக் கைவிடுகிறார்.
இந்த உலகில் பொருந்தாமை ஏதும் இல்லை
அந்த உலகில் போக ஆசையில்லை இந்த நமக்கு
எப்படியே தான் தருவர் எந்தை எதிராசர்
ஒப்பில் திருநாடு உகந்து
இவ்வுலகில் பொருந்தாமல் இருப்பதற்கான வெறுப்பு கொஞ்சமும் இல்லை; அடைய வேண்டிய பரமபதத்தில் செல்ல ஆசையுமில்லை. இப்படிப்பட்ட நமக்குத் தந்தையான யதிராஜர் ஒப்பில்லாத வைபவத்தையுடைய பரமபதத்தை எப்படி மகிழ்ந்து அளிப்பார்?
பாசுரம் 44
தன்னிலையை யோஜித்த பிறகு, உலகத்தவர்களைப் பார்க்க, அவர்கள் மிகவும் தாழ்ந்தவர்களாக இருக்க, இவர்கள் பாபத்தினாலேயே இப்படி இருக்கிறார்கள் என்று நொந்துகொள்கிறார்.
மாகாந்த நாரணனார் வைகும் வகையறிந்தோர்க்கு
ஏகாந்தம் இல்லை இருள் இல்லை மோகாந்தர்
இவ்விடம் ஏகாந்தம் இருள் என்று பயம் அற்றிருந்து
செய்வார்கள் தாம் பாவத்திறம்
லக்ஷ்மீ வல்லபனான ஸர்வேச்வரன் ஸ்ரீமந் நாராயணன் எல்லா உலகங்களையும் வ்யாபித்திருக்கும் என்பதை அறிந்தோர்க்குத் தனிமையும் இல்லை இருட்டும் இல்லை; மோஹத்துக்கு வசப்பட்டிருப்பவர்கள் இவ்விடம் தனிமையாக உள்ளது, இவ்விடம் இருட்டாக இருக்கிறது என்று கொண்டு, அறிவிலிகளாக இருந்து கொண்டு, பயம் இல்லாமல் பாபக்கூட்டங்களைச் செய்வார்கள்.
பாசுரம் 45
தம் நெஞ்சைக் குறித்து “அஜ்ஞரான நாமும் ஆசார்ய ஸம்பந்தத்தினாலே அன்றோ நம் உஜ்ஜீவனத்தைப் பெற்றது; ஆகையால் எப்பொழுதும் அதையே சிந்தித்திரு” என்று அருளிச்செய்கிறார்.
நாராயணன் திருமால் நாரம் நாம் என்னும் உறவு
ஆராயில் நெஞ்சே! அநாதி அன்றோ? சீராரும்
ஆசாரியனாலே அன்றோ? நாம் உய்ந்தது என்று
கூசாமல் எப்பொழுதும் கூறு
நெஞ்சே! “ச்ரிய:பதியான நாராயணன் ஆத்மாக்களை உடையவன்; நாம் நார சப்தத்துக்குள் அடக்கம்” என்கிற இந்த ஸம்பந்தத்தை ஆராய்ந்து பார்த்தால் இது அநாதியன்றோ? (ஆரம்பம் அற்றது – எப்பொழுதும் இருப்பது). “இந்த ஸம்பந்தத்தை நமக்கு உணர்த்திய ஆசார்யனாலேயன்றோ நாம் உஜ்ஜீவனத்தைப் பெறுகிறோம்?” என்று எப்பொழுதும் வெட்கம், கர்வம் இவற்றை விட்டு நன்றாக நினைத்துக்கொண்டு இரு.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org