ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 36 – 40

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை

<< பாசுரம் 31 – 35

பாசுரம் 36

உலக விஷயங்களில் தனக்கிருக்கும் ஆசையானது தன் மனதை மூடுவதற்குக் காரணம் வாஸனையும் கர்மங்களும் என்கிறார்.

வாசனையில் ஊற்றமோ? மாளாத வல்வினையோ?*
ஏதென்று அறியேன் எதிராசா! தீதாகும்
ஐம்புலனில் ஆசை அடியேன் மனம் தன்னை
வன்புடனே தான் அடரும் வந்து

யதிராஜரே! இவ்வாத்மாவுக்குத் தீயதாக இருக்கும் ஐம்புலன்களுக்கு விஷயமான உலக இன்பங்களில் ஆசையானது பலாத்காரத்தோடே என் மனதின் மேலே வந்து விழுந்து மூடுகிறது. என்னை அந்த இன்பங்களில் தள்ளுகிறது. இதற்குக் காரணம் அநாதி பாப வாஸனையில் இருக்கும் உறுதியான பிடிப்போ அல்லது அனுபவித்தோ அல்லது  ப்ராயச்சித்தம் பண்ணியோ தீராத வலிமையான என்னுடைய பாபங்களோ அறியேன்.

பாசுரம் 37

எம்பெருமானார் “உம்முடைய கஷ்டம் எமக்குப் புரிகிறது; உம்முடைய பக்தியை வளர்த்து உமக்கு அதிகாரத்தை ஏற்படுத்தி உமக்கு பேற்றைக் கொடுக்கிறோம்” என்பதாகக் கொண்டு “இப்பொழுதில்லாத அதிகாரம் எப்பொழுது ஏற்படப் போகிறது. ஆகையால் அந்த அதிகாரம் ஏற்படுவதுற்குத் தடையானவற்றை அழித்து அடியேனுக்கு பேற்றைக் கொடுக்காமல் இருப்பது ஏன்?” என்கிறார்.

இன்றளவும் இல்லா அதிகாரம் மேலும் எனக்கு
என்று உளதாம்? சொல்லாய் எதிராசா! – குன்றா
வினைத் தொடரை வெட்டி விட்டு மேலை வைகுந்தத்து
எனைக் கடுக ஏற்றாதது என்?

யதிராஜரே! இதுவரை இல்லாத அதிகாரம் இனிமேல் அடியேனுக்கு எப்பொழுது உண்டாகும்? இதை தேவரீரே அருளிச்செய்ய வேண்டும். எத்தாலும் அழியாமல் இருக்கும் பாபக்கூட்டங்களின் தொடர்ச்சியை வெட்டிவிட்டு, மிக உயர்ந்ததான பரமபதத்தில் அடியேனை உடனே ஏற்றாமல் இருப்பதற்கு என்ன காரணமோ?

பாசுரம் 38

தர்க்க ரீதியாக தனக்கு அதிகாரம் ஏற்படாது என்பதைக் காரணத்தோடு உரைக்கிறார்.

அஞ்சில் அறியாதார் ஐம்பதிலும் தாம் அறியார்
என் சொல் எனக்கோ? எதிராசா! – நெஞ்சம்
உனதாள் ஒழிந்தவற்றையே உகக்க இன்றும்
அநுதாபம் அற்று இருக்கையால்

யதிராஜரே! தாழ்ந்த விஷயங்களில் மூழ்கியிருக்கும் அடியேனது மனதானது அடியேனுக்குத் தகுந்த தலைவரான தேவரீருடைய மிக இனிமையான திருவடித் தாமரைகளுக்கு வெளிப்பட்டிருக்கும் விஷயங்களையே மகிழ்ந்து அனுபவிக்க, அதற்கு மேலே “இப்பொழுதும் இப்படித் தகாத விஷயங்களை விரும்புகிறதே” என்கிற பச்சாதாபமும் இல்லாமல் இருப்பதினாலே, உலகில் சொல்லப்படும் “ஞானம் துளிர்க்கும் ஐந்து வயதில் அறியாதவர்கள் ஐம்பது வயதிலும் அறியமாட்டார்கள்” என்கிற வார்த்தை என் விஷயமாகவே சொல்லப்பட்டதோ?

பாசுரம் 39

அருகிலிருப்பவர்களுக்கு “நீர் எம்பெருமானார் திருவடிகளுக்கு வெளிப்பட்ட விஷயத்தையே விரும்பினீர் என்றால் அவர் எப்படி உம்மைக் கைக்கொள்வார்?” என்று கருத்தாக “அவரைத் தஞ்சம் என்று பற்றும்போது தோஷங்களோடு இருந்த அடியேனை விரும்பி ஏற்றுக்கொண்டவர் அடியேனைக் கைவிடமாட்டார்” என்று ஒரு உதாரணத்தைக் கொண்டு மணவாள மாமுனிகள் அருளுகிறார்.

வேம்பு கறியாக விரும்பினார் கைத்தது என்று
தாம் புகடாதே புசிக்கும் தன்மை போல் தீம்பன் இவன்
என்று நினைத்து என்னை இகழார் எதிராசர்
அன்று அறிந்து அங்கீகரிக்கையால்

வேப்பிலையைக் கறியமுதாக விரும்புமவர்கள் அது கசக்கிறது என்று தள்ளாமல் உண்கிற ஸ்வபாவம்போலே, எம்பெருமானார் அடியேனை ஏற்றுக்கொண்ட ஸமயத்தில் “இவன் துஷ்டன்” என்று ஆராய்ந்து அந்த தோஷத்தையே போக்யமாகக் கொண்டு அடியேனை ஏற்றுக்கொண்டார். ஆகையாலே அவர் அடியேனைக் கைவிடார்.

பாசுரம் 40

எம்பெருமானார் “உம்மை தோஷத்துடனே ஏற்றுக்கொண்ட நாம், தக்க காலத்தில் உமக்குப் பேற்றைச் செய்து கொடுக்கிறோம்” என்பதாகக் கொண்டு, “அக்காலம் வரை அடியேனுடைய பொழுதை வீணாகக் கழிப்பேன், ஆகையால் உடனே அடியேனைப் பரமபதத்தில் சேர்த்தருள வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.

அவத்தே பொழுதை அடியேன் கழித்து இப்
பவத்தே இருக்கும் அது பண்போ? திவத்தே யான்
சேரும் வகை அருளாய் சீரார் எதிராசா!
போரும் இனி இவ்வுடம்பைப் போக்கு

திருக்கல்யாண குணங்களால் நிறைந்த யதிராஜரே! தேவரீருக்கு அடியவனான நான் தேவரீர் அனுபவ கைங்கர்யங்களுக்கு ஏற்பட்ட பொழுதை வீணாகப் போக்கி இந்த ஸம்ஸாரத்தில் பொருந்தி இருப்பது தேவரீரின் கருணைத் தன்மைக்குப் பொருத்தமானதோ? அடியேன் பரமபதத்தை அடையும் வகை க்ருபை செய்தருள வேண்டும்! ஸம்ஸாரத்தில் கஷ்டப்பட்டது போதும். இனி, இவ்வுடம்பைப் போக்கியருள வேண்டும்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment