வாழிதிருநாமங்கள் – பெரிய பெருமாள் மற்றும் பெரிய பிராட்டியார் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை

<< ஓராண் வழி ஆசார்யர்கள் – அறிமுகம்

அப்பிள்ளை அருளிய வாழி திருநாமங்கள் வரிசையில் ஓராண்வழி ஆசார்யர்களின் வாழி திருநாமங்களின் விளக்கவுரையைக் காணலாம்.

பெரிய பெருமாள் வைபவம் 

பெரிய பெருமாள் நமது குரு பரம்பரையின் முதல் ஆசார்யராகக் கருதப்படுகிறார்.  “லக்ஷ்மீநாத ஸமாரம்பாம்” எனும் வகையில் குரு பரம்பரையானது மஹாலக்ஷ்மித் தாயாரின் நாதனான ஸ்ரீமந் நாராயணனில் இருந்து துவங்குகிறது.  ஸ்ரீமந் நாராயணன் என்பது “பெரிய பெருமாள்” என்று கூறப்படும் திருவரங்கத்தில் உறையும் ஸ்ரீரங்கநாதர் தான் என்பதை அறியலாம்.  ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் அர்ச்சாவதாரத்திற்குத் தனிச்சிறப்பு உண்டு.  ஏனென்றால் எம்பெருமானின் ஸெளலப்யம் எனப்படும் எளிமை குணம் வெளிப்படுவது அரச்சாவதாரத்தில்தான்.  ஆழ்வார்களின் பாசுரங்களில் அநுபவிக்கப் பெற்ற ஸ்தலங்கள் திவ்யதேசங்கள் என்பதை நாம் அறிவோம்.  அப்படிப்பட்ட 108 திவ்யதேசங்களில் முதன்மையான திவ்யதேசமாகக் கருதப்படுவது “பூலோக வைகுண்டம்” என்று அழைக்கப்படும் திருவரங்கம் ஆகும்.  பொதுவாக எம்பெருமானுக்கு “உபயவிபூதி நாதன்” என்ற பெருமை உண்டு.  நித்ய விபூதி மற்றும் லீலா விபூதிக்குத் தலைவராகக் கருதப்படுபவர் எம்பெருமான். திருவரங்கத்திற்கு ஏற்பட்ட தனிப்பெருமை என்னவெனில், இந்த ஸ்தலம் “திருதீயா விபூதி” என்று அழைக்கப்படுகிறது.  திருதீயா விபூதி என்பது பரமபதத்திலும் சேராமல் ஸம்ஸாரத்திலும் சேராமல் தனித்திருப்பதாகும்.  லீலா விபூதியில் இருந்தபோதும் பரமபத அளவிற்கு பெருமையுடையதாய் திருவரங்கம் உள்ளது.  எனவே எம்பெருமானுக்கான மூன்றாவது விபூதி என்று திருவரங்கம் அறியப்படுகிறது.

அவ்வாறு சிறப்புடைய திருவரங்கத்திற்கு அனைத்து ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.  “பதின்மர் பாடும் பெருமாள்” என்று ஸ்ரீரங்கநாதர் அழைக்கப்படுகிறார்.  அதேபோன்று குருபரம்பரையில் வந்த ஆசார்யர்கள் ஆளவந்தார் தொடக்கமாக மணவாள மாமுநிகள் இறுதியாக அனைத்து ஆசார்யர்களும் திருவரங்கத்திலேயே வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.  இவர்களில் நாதமுனிகள், உய்யக்கொண்டார் மற்றும் மணக்கால்நம்பி திருவரங்கத்தில் வசித்ததாகத் தெரியவில்லை.  மேலும் திருவாய்மொழிப்பிள்ளை எனப்படும் ஆசார்யர் நம்மாழ்வாரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு, நம்மாழ்வாரின் இருப்பிடமான ஆழ்வார் திருநகரியை புனர் நிர்மாணம் செய்து ஆழ்வார் திருநகரியிலேயே வாழ்ந்து வந்தார்.  எனவே திருவாய்மொழிப்பிள்ளை, நாதமுனிகள், உய்யக்கொண்டார் மற்றும் மணக்கால்நம்பி  தவிர ஏனைய ஆசார்யர்கள் திருவரங்கத்தில் வாழ்வதையே தமது வாழ்நாள் கொள்கையாகக் கடைப்பிடித்தனர் என்று அறிகிறோம்.    ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்கள் அல்லாமல் ஏனைய சம்பிரதாயத்து ஆசார்யர்களும் திருவரங்கத்து நம்பெருமாளிடம் ஈடுபாடு கொண்டு திருவரங்கத்திலேயே வாழ்ந்தனர் என்பதை நாம் அறியலாம்.  அத்தகைய சிறப்புடைய திருவரங்கத்தில் உறையும் நம்பெருமாள் (ஸ்ரீரங்கநாதர்) ஓராண்வழி ஆசார்யரில் முதன்மையான ஆசார்யனாகக் கொண்டாடப் படுகிறார்.

எம்பெருமானின் திருநக்ஷத்திரம் ரோகிணி என்று கூறப்படுகிறது்.  பெரிய பெருமாள் கண்ணனாக அறியப்படுவதால் ரோகிணி நக்ஷத்திரம் என்று கொள்ளப்படுகிறது.  நம்பெருமாளின் திருநக்ஷத்திரம் ரேவதி என்றும் கூறுவார்கள். துவாபர யுகத்தில் கண்ணனாக அவதாரம் செய்து வாய்மலர்ந்தருளிய பகவத் கீதையும், மணவாள மாமுநிகளைக் கெளரவிக்கும் வகையில் அருளிய ஸ்ரீசைலேச தயாபாத்ரம் என்ற தனியனும் எம்பெருமான் அருளிச் செய்த க்ரந்தங்கள் (ஸ்ரீஸுக்திகள்) என்று அறியலாம்.    ஸ்ரீரங்கநாதர் என்று ப்ரசித்தமாக அறியப்படுபவர்.  பரம பதத்தில் இருந்து தனது விமானத்துடன் இறங்கி வந்து சத்ய லோகத்தில் பிரம்மாவால் ஆராதனை செய்யப்பட்ட பெருமாள்.  அதன் பின் இக்ஷ்வாகு குலத்தில் (சூர்ய குலம்) வந்த அரசன் பிரம்மாவைப் பிரார்த்தித்து இந்தப் பெருமானை ப்ரணவாகார விமானத்துடன் பூலோகத்தில் அயோத்திக்குக் கொண்டு வந்தான்.  ரகு குல வம்ஸத்தில் வந்த அனைத்து அரசர்களும் இந்தப் பெருமாளைப் பூஜித்து வந்தனர்.  இராமாவதாரத்தில் ஸ்ரீராமர் இந்தப் பெருமாளுக்கு ஆராதனை செய்திருக்கிறார்.  ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் பெருமாள் என்பது ஸ்ரீஇராமரைக் குறிக்கும்.  அவ்வாறு பெருமாளால் ஆராதனை செய்யப்பட்ட பெருமாள் என்பதைக் குறிக்கும் வகையில் இந்த எம்பெருமான் “பெரிய பெருமாள்” என்று அழைக்கப்படுகிறார்.  ஸ்ரீஇராமர் தனது பட்டாபிஷேகத்தின்போது விபீஷணனுக்கு பெரிய பெருமாளை ப்ரணவாகார விமானத்துடன் பரிசாக அளித்து ஆராதனை செய்து வருமாறு கூறினார்.  விபீஷணன் பெருமாளை எடுத்துக் கொண்டு அயோத்தியில் இருந்து தென்திசையில் உள்ள இலங்கை நோக்கிப் பயணிக்கும் காலத்தில், இரு புறமும் காவிரியால் சூழப்பட்டு ஒரு தீவு போன்று காட்சியளித்த திருவரங்கத்தில் தனது அநுஷ்டானங்களை முடிப்பதற்காக பெரிய பெருமாளை கீழே இறக்கி வைத்துவிட்டு அநுஷ்டாங்களைச் செய்யலானார்.  அப்பொழுது பெரிய பெருமாள் சோலைகளால் சூழப்பட்ட திருவரங்கத்தின் வனப்பைப் பார்த்து மகிழ்ந்தான்.    உடனே விபீஷணனிடம் பெரிய பெருமாள் “நீவீர் உம்முடைய நாடான இலங்கைக்குச் செல்லும்.  எனக்குத் திருவரங்கம் பிடித்திருப்பதால் நான் இங்கேயே வசித்தபடி உம்மைக் கடாக்ஷிக்கும் வகையில் எமது பார்வை தென் திசை நோக்கி இருக்கும்” என்று தெரிவித்தார்.   “வண்டினமுரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை கொண்டல் மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை அண்டர் கோன் அமரும் சோலை” என்று திருமாலையில் கூறியபடி அனைத்து உலகங்களுக்கும் தலைவனான எம்பெருமான் இங்கு வந்து எழுந்தருளினான் என்பதை அறிகிறோம்.

அத்தகைய சிறப்புடைய பெரிய பெருமாளின் வாழி திருநாமத்தில் எம்பெருமானின் பரம், வ்யூகம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி எனப்படும் ஐந்து நிலைகளும் காட்டப்பட்டுள்ளன.  பரமபதத்தில் பரவாசுதேவனாக உள்ள நிலை பரம் எனப்படும்.    வ்யூகம் நிலை எனப்படுவது திருப்பாற்கடலில் (க்ஷீராப்தி) பள்ளி கொண்ட நிலையாகும்.  அதாவது பரம பதத்தில் இருந்து எம்பெருமான் இறங்கி திருப்பாற்கடல் வந்து அங்கிருந்து அவதாரங்கள் எடுக்கிறான்.  அவ்வாறு அவதாரம் எடுக்கும் நிலை  விபவம் எனப்படுகிறது.  அதாவது க்ருஷ்ணாவதாரம், ராமாவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம் முதலான பல அவதாரங்களை இப்பூவுலகில் எம்பெருமான் எடுக்கிறான்.  அதன் பின் வாழ்ச்சி தொடர வேண்டும் என்பதற்காக அர்ச்சாவதாரம் எடுக்கிறான்.  பல கோயில்களிலும், மடங்களிலும் சிலை வடிவத்தில் எம்பெருமான் எழுந்தருளியிருப்பது அர்ச்சாவதாரம் எனப்படும்.  அதற்கு மேலும் அனைத்து வஸ்துக்களிலும் மறைந்து அந்தர்யாமியாக இருந்து அவைகளை தாங்கி நிற்கிறான்.  இந்த ஐந்து நிலைகளும் இந்த வாழி திருநாமத்தில் காட்டப்பட்டுள்ளது.

பெரிய பெருமாள் வாழி திருநாமம்

திருமகளும் மண்மகளும் சிறக்கவந்தோன் வாழியே
செய்யவிடைத்தாய்மகளார் சேவிப்போன் வாழியே
இருவிசும்பில்வீற்றிருக்கு மிமையவர்கோன் வாழியே
இடர்கடியப் பாற்கடலை யெய்தினான் வாழியே
அரியதயரதன் மகனாயவதரித்தான் வாழியே
அந்தரியாமித்துவமும் ஆயினான் வாழியே
பெருகிவரும் பொன்னிநடுப் பின்துயின்றான் வாழியே
பெரியபெருமாள் எங்கள் பிரான் அடிகள் வாழியே

பெரிய பெருமாள் வாழி திருநாமம் விளக்கவுரை

திருமகளும் மண்மகளும் சிறக்கவந்தோன் வாழியே – முதலில் எம்பெருமானின் ஶ்ரிய பதித்துவத்தைக் கொண்டே வாழி திருநாமம் துவங்குகிறது.  திருமகள் எனப்படும் பெரிய பிராட்டியார் மற்றும் மண்மகள் எனப்படும் பூமிப்பிராட்டியார் சிறக்கும்படி இருப்பவன் இந்த எம்பெருமான்.  எம்பெருமானாலே பிராட்டிமார்களுக்குப் பெருமை, பிராட்டிமார்களாலே எம்பெருமானுக்குப் பெருமை என்பது இந்த வரியில் காட்டப்படுகிறது.  எம்பெருமானுக்கு பல பத்தினிமார்கள் இருந்தபோதும், ஸ்ரீதேவி, பூமி தேவி மற்றும் நீளா தேவி ஆகிய மூவரும் மிகப் பிரதானமானவர்களாகக் கருதப் படுகிறார்கள்.  இந்த முதல்வரியில் ஸ்ரீதேவி மற்றும் பூமிதேவியின் சிறப்பு காட்டப்பட்டுள்ளது.

செய்ய விடைத்தாய் மகளார் சேவிப்போன் வாழியே – (செய்ய இடைத்து ஆய் மகளார்) செய்ய என்றால் சிறந்த என்பது பொருளாகும்.  இடைக்குலத்தில் பிறந்த நப்பின்னை பிராட்டி எம்பெருமானைத் தொழுது கொண்டிருக்கிறாள். க்ருஷ்ணவதாரத்தில் நீளா தேவியின் அவதாரம் நப்பின்னை பிராட்டி என்றும், ஸ்ரீதேவியின் அவதாரம் ருக்மிணி என்றும்  பூமிப்பிராட்டியின் அவதாரம் சத்யபாமா என்றும் காட்டப்படுகிறது.  அவ்வாறு நப்பின்னை பிராட்டி வணங்கும் எம்பெருமான் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று இவ்வரியில் சொல்லப்பட்டுள்ளது.

இருவிசும்பில் வீற்றிருக்கும் இமையவர்கோன் வாழியே – இரு என்பதற்கு இரண்டு என்பது மட்டும் பொருளல்ல இவ்விடத்தில் பரந்த என்று பொருள் காட்டப்படுகிறது.  விசும்பு என்பது ஆகாசம்.  பரந்த ஆகாசமான பரமபதத்தில் வீற்றிருக்கக் கூடிய, நித்யஸுரிகளுக்குத் (கண்களை இமைக்காத தன்மையினால் இமையவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்) தலைவனான ஸ்ரீமந் நாராயணன் பல்லாண்டு வாழ்க.  இவ்விடம் பரமபதத்தில் இருக்கக் கூடிய “பரம்” நிலை காட்டப்பட்டுள்ளது.

இடர்கடியப் பாற்கடலை யெய்தினான் வாழியே – நம்முடைய துன்பமெல்லாம் தீர்வதற்காகப் பாற்கடலில் வந்து துயின்றான் எம்பெருமான்.  விபவ அவதாரங்கள் எடுப்பதற்கு முன்பாக பரமபதத்தில் இருந்து பாற்கடலுக்கு வந்து அங்கு தங்கி இருந்து “உறங்குவான் போல் யோகு செய்த பெருமான்” என்ற ஆழ்வாரின் கூற்றிற்கு ஏற்ப சேதநர்களுக்கு, அதாவது ஆத்மாக்களுக்கு எவ்வாறு நன்மை செய்வது என்பதைச் சிந்தித்துக் கொண்டு இருக்கக் கூடிய நிலை.  இது “வ்யூஹ நிலை” என்று அறியப்படுகிறது.  ஆத்மாக்களின் துன்பம் தீரும் வகையில் பாற்கடலில் துயின்றவன் என்று ஒரு அர்த்தம் காட்டப்படுகிறது.  மற்றொன்று எம்பெருமான் தன் துயர் தீர அதாவது சேதநர்கள் படும் துன்பம் கண்டு தானே துன்பப்பட்டான்.  அந்த துன்பம் தீர்வதற்காகப் பாற்கடலில் துயின்றான் என்றும் கொள்ளலாம.  அப்படிப்பட்ட எம்பெருமான் வாழ்க.

அரியதயரதன் மகனாயவதரித்தான் வாழியே – மிகச் சிறந்தவனான, பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் சிறந்த குணங்களை உடைய தசரதனுடைய மகனாக, ஸ்ரீராமபிரானாக அவதரித்த எம்பெருமான் வாழ்க.   இவ்விடம் எம்பெருமானின் விபவ  நிலை காட்டப்பட்டுள்ளது.  இராமாவதாரத்தை விபவத்திற்கு உதாரணமாகக் காட்டினால் அனைத்து அவதாரங்களையும் காட்டியதற்குச் சமமாகும்.  ஸ்ரீராமபிரானாக அவதரித்த காலத்தில் எம்பெருமான் தசரதன் மகனாக, தசராதாத்மஜனாக, சக்ரவரத்தித் திருமகனாக இருப்பதையே விரும்பினான் என்று அறிகிறோம்.

அந்தரியாமித்துவமும் ஆயினான் வாழியே – எம்பெருமான் அனைத்து வஸ்துக்களிலும் அந்தர்யாமியாக இருந்து வழி நடத்துகிறான். அனைத்து ஆத்மாக்களிலும், சேதந, அசேதந பொருட்களிலும் நிறைந்திருக்கிறான் என்பதை இவ்வரியில் காட்டியதன் மூலம் எம்பெருமானின் “அந்தர்யாமி” என்ற நான்காவது நிலை உணர்த்தப்படுகிறது.  அப்படிப்பட்ட எம்பெருமான் வாழ்க.

பெருகிவரும் பொன்னிநடுப் பின்துயின்றான் வாழியே – வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடும் பொன்னி என்று அழைக்கப்படும் காவிரி நதியின் நடுவில் வந்து திருவரங்கத்தில் சயனித்துக் கொண்டிருக்கிறான்.  அப்படிப்பட்ட எம்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று இவ்வரியில் காட்டப்படுகிறது.

பெரியபெருமாள் எங்கள் பிரான் அடிகள் வாழியே – பெரிய பெருமாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கநாதர், எங்களுக்கு உபகாரனாக (நன்மை செய்பவனாக) இருக்கக்கூடிய எம்பெருமான் வாழ்க என்று பெரிய பெருமாளின் வாழி திருநாமம் முற்றுப் பெறுகிறது.  அர்ச்சாவதாரத்தில் முதன்மையான திவ்ய தேசமான திருவரங்கத்தில் வீற்றிருக்கும் பெரிய பெருமாளின் வாழி திருநாமம் மூலம் ஸ்ரீரங்கநாதரே குருபரம்பரையின் முதல் ஆசார்யர் என்பதை அறிகிறோம்.

அடுத்து பெரிய பிராட்டியின் வாழிதிருநாமத்தின் அர்த்தத்தைப் பார்க்கலாம்.  பெரிய பெருமாளை அனுபவிக்கும்போது பெரிய பிராட்டியையும் சேர்த்துத்தான் அனுபவிக்க வேண்டும். ஏனென்றால் பெருமாளும் பிராட்டியும் இணைபிரியாதவர்கள்.

பெரியபிராட்டி வைபவம்

பெரிய பிராட்டி என்றால் ஸ்ரீரங்கநாயகித் தாயார்.  ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அம்சம்.  எம்பெருமானுக்கு அடுத்ததாக ஓராண் வழி ஆசார்யர்கள் வரிசையில் இருப்பவர் பெரிய பிராட்டியார்.  எம்பெருமான் தான் ஆசார்யனாக இருந்து த்வய மந்திரத்தை பெரிய பிராட்டிக்கு உபதேசம் செய்கிறான்.  ஆசார்யர் என்பவர் நம்மை வழி நடத்துபவர்; எம்பெருமானிடம் கொண்டு சேர்ப்பவர்.  பெரிய பெருமாள் ஸ்வதந்த்ரன்.  தன் விருப்பத்திற்கு ஏற்ப இருக்கக் கூடியவன்.  ஆனால் பெரிய பிராட்டியோ பரதந்த்ரை, எம்பெருமானை அண்டியிருப்பவள்.  அவள் எம்பெருமானுக்கு பத்தினியாக அடிபணிந்தவள்.  ஆனால் மற்றையவர்களுக்கு தலைவியாக இருக்கக் கூடியவள். அத்தகைய சிறப்புப் பெற்றவள் பெரிய பிராட்டி. பெரிய பிராட்டி எம்பெருமானின் பத்தினிமார்களில் முதன்மையானவர்.  பட்டமகிஷி என்று சொல்லும் சிறப்புப் பெற்றவள். எம்பெருமானை அடைவதற்கு புருஷகார பூதையாகவும் நம்முடைய பூர்வாசார்யர்களால் கொண்டாடப்படுபவள்.    புருஷகார பூதை என்பவள் நம்முடைய குற்றங்களை மறைத்து எம்பெருமானை அடைவதற்கு வழி காட்டுபவள்.  மேலும் அப்படி சரணாகதி செய்தவர்களை எம்பெருமானை ஏற்றுக் கொள்ளும்படி செய்பவள் என்று அறியலாம்.  ஆத்மாக்களுக்கு எம்பெருமானை அடைய வழி காட்டுபவளாகவும், ஈஶ்வரனை ஆத்மாக்களை ரக்ஷிக்கும்படியும் செய்பவள்.

பெரிய பிராட்டி வாழி திருநாமம்

பங்கயப் பூவிற்பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்தர நாள் பாருதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலகமென வந்த செல்வி வாழியே
மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே
எங்களெழில் சேனைமன்னர்க்கு இதமுரைத்தாள் வாழியே
இருபத்தஞ்சு உட்பொருள் மால் இயம்புமவள் வாழியே
செங்கமலச் செய்யரங்கம் செழிக்கவந்தாள் வாழியே
சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே

பெரிய பிராட்டி வாழி திருநாமம் விளக்கவுரை

பங்கயப் பூவிற்பிறந்த பாவை நல்லாள் வாழியே – பங்கயம் என்றால்  தாமரை.  பிராட்டியின் பிறப்பிடம் தாமரை புஷ்பம் என்று கூறுவர்.  இவளுக்கு மலர்மகள் என்றும் திருநாமம்.   பாவை என்றால் நல்லவள்.  நல்லவர்கள் என்பது எம்பெருமானிடம் ஈடுபாடு கொண்டவர்கள்; இதர விஷயங்களில் வைராக்யம் உடையவர்கள் என்று பொருள்படும்.  பிராட்டியை முன்னிட்டுத்தான் நாம் எம்பெருமானிடம் எவ்வாறு பக்தி கொள்ள முடியும் என்பதை அறிகிறோம்.  அதனால் பிராட்டி இவ்விடத்தில் நல்லாள் என்று காட்டப்பட்டுள்ளாள். அவ்வாறு தாமரை மலரில் பிறந்த சிறந்த திருமேனியை உடைய நல்லவளான பிராட்டி வாழ்க.

பங்குனியில் உத்தர நாள் பாருதித்தாள் வாழியே – பங்குனி மாதம் உத்தர நக்ஷத்திரத்தில் அவதரித்தவள் பெரிய பிராட்டி.  பங்குனி உத்தர நாளன்று வருடாவருடம் திருவரங்கத்தில் தாயார் சன்னதி அருகில் உள்ள கத்யத்ரய மண்டபத்தில், கத்யத்ரயம் ஸேவிக்கப்பட்டு, பெரிய பெருமாளும், பெரிய பிராட்டியும் “சேர்த்தி உற்சவம்” கண்டருளுவர்.   இந்த உற்சவம் திருவரங்கத்தில் வருடத்தில் ஒரு நாள் தான் நடக்கும்.  எம்பெருமானார் ஒரு பங்குனி உத்தர நாளன்று சேர்த்தி உற்சவத்தில் கத்யத்ரயம் (சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம்) ஸேவித்து அனைவருக்கும் நற்கதி வேண்டி பிரார்த்தித்தார்.   இந்த பங்குனி உற்சவம் சிறந்த முறையில் திருவரங்கத்தில் பத்து நாட்கள் உற்சவமாகக் இன்றளவும் கொண்டாடப்படுகிறது.  அவ்வாறு பங்குனி உத்தர நாளன்று இப்பூவுலகில் அவதரித்த பிராட்டி வாழ்க.

மங்கையர்கள் திலகமென வந்த செல்வி வாழியே – பெரிய பிராட்டி எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்து சிறந்த பத்தினியாக மங்கையர்களுக்கு மிகச் சிறந்த உதாரணமாக விளங்குகிறாள்.  மங்கையர்களுக்குத்  தலைவியாக சிறந்த செல்வத்தை உடையவளான பிராட்டி வாழ்க என்பது இந்த வரியில் காட்டப்படுகிறது.

மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே –  மால் என்றால் திருமால்.  திருமாலின் மாணிக்கம் பொருந்திய மார்பில் உறைபவள்.  “அகலகில்லேன் இறையுமென்று” என்று பிராட்டியின் வார்த்தைகளாக நம்மாழ்வார்  திருவாய்மொழியில் அருளிச் செய்துள்ளார்.  எம்பெருமானின் திருமார்பை விட்டு அகலாதவளாக எம்பெருமானின் திருமார்பில் பொருந்தியிருப்பவளான பிராட்டி பல்லாண்டு வாழ்க.

எங்களெழில் சேனைமன்னர்க்கு இதமுரைத்தாள் வாழியே –  சேனை மன்னர் என்றால் சேனை முதலியார் என்று அழைக்கப்படும் விஷ்வக்சேனர்.  விஷ்வக்சேனர் பிராட்டிக்கு அடுத்த ஆசார்யராக ஓராண் வழி ஆசார்யர் பரம்பரையில் இருப்பவர்.  அப்படி என்றால் பிராட்டிதான் விஷ்வக்சேனருக்கு ஆசார்யனாக இருந்து இதமான நல்ல உபதேசங்களை உரைத்தவள்.  அத்தகைய பெரிய பிராட்டி வாழ்க.

இருபத்தஞ்சு உட்பொருள் மால் இயம்புமவள் வாழியே – முந்தைய வரியில் விஷ்வக்சேநருக்கு பிராட்டி உபதேசம் செய்தாள் என்று சொல்லப்பட்டது.  என்ன உபதேசம் செய்தாள் என்று நோக்கும்போது, இருபத்தைந்து எழுத்துக்களைக் கொண்ட த்வய மஹா மந்திரத்தை திருமாலான எம்பெருமானிடம் சிஷ்யனாக இருந்து பிராட்டி கற்றுக் கொண்டு விஷ்வக்சேனருக்கு த்வய மஹா மந்திரத்தின் உட்பொருளை உபதேசித்தாள் என்று ஒரு பொருள் காட்டப்படுகிறது.    இருபத்து நான்கு அசேதந தத்துவங்கள், கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள், பஞ்ச பூதங்கள், பஞ்ச தன்மாத்திரைகள், மனது, மஹான், அஹங்காரம்,  மூலப்ரக்ருதி ஆகும்.  இருபத்து ஐந்தாவது தத்துவம் ஜீவாத்மா என்ற தத்துவம்.  இந்த இருபத்து ஐந்து தத்துவங்களையும், இருபத்து ஆறாவது தத்துவமான மால் எனப்படும் எம்பெருமானின் பெருமையையும் சேனை முதலியாருக்கு உபதேசம் செய்தவள் என்றும் பொருள் கொள்ளலாம்.  அத்தகைய சிறந்த ஆசார்யையான பிராட்டி வாழ்க.

செங்கமலச் செய்யரங்கம் செழிக்கவந்தாள் வாழியே –  சிவந்த தாமரை மலர்கள் மலர்ந்திருக்கக் கூடியதான சிறந்த திருவரங்கம் செழிப்படைவதற்காக வந்த பிராட்டி வாழ்க.

சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே – ஸ்ரீரங்க நாயகியான பெரிய பிராட்டியார் திருவடிகள் பல்லாண்டு காலம் வாழ்க என்று பெரிய பிராட்டியின் வாழி திருநாமம் முடிவுறுகிறது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment