ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை
<< மணக்கால் நம்பி மற்றும் ஆளவந்தார்
பெரிய நம்பி வைபவம்
பெரிய நம்பிக்கு மஹா பூர்ணர் மற்றும் பராங்குச தாசர் என்றும் திருநாமம். இவர் திருவரங்கத்தில் வசித்து வந்தார். இவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த மார்கழி கேட்டை நக்ஷத்திரத்தில் அவதரித்தார். ஆளவந்தாரின் சிஷ்யர்கள் பெரிய நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, பெரிய திருமலை நம்பி, திருமாலை ஆண்டான், ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர், திருக்கச்சி நம்பி, மாறனேரி நம்பி ஆகியோர் ஆவர். இவர்களுள் பெரிய நம்பி மிகவும் முக்கியமான சிஷ்யர் ஆவார். இளையாழ்வாராக இருந்த ராமானுஜரை ஆளவந்தாரின் சிஷ்யராக உருவாக்க வேண்டும் என்ற அவாவுடன் ராமானுஜரை திருவரங்கம் அழைத்து வரும் சமயத்தில் ஆளவந்தார் திருநாடு எய்தி விட, இளையாழ்வார் மீண்டும் காஞ்சீபுரத்திற்கே சென்று விடுகிறார், ஆளவந்தார் திருநாடு எய்திய பிறகு திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீவைஷ்ணவர்களின் வேண்டுதலுக்கிணங்கி இவர் காஞ்சீபுரம் சென்று இளையாழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைக்கிறார். எனவே பெரிய நம்பி இளையாழ்வாரின் ஆசார்யராகக் கருதப்படுகிறார்.
இளையாழ்வார் காஞ்சீபுரத்திலிருந்து புறப்பட்டு வர பெரிய நம்பியும் திருவரங்கத்திலிருந்து புறப்பட்டு வர இருவரும் மதுராந்தகத்தில் சந்திக்கின்றனர். இளையாழ்வார் பெரிய நம்பியிடம் தேவப் பெருமாள் அருளிய படி தேவரீரே எமக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்விக்க வேண்டும் என்று ப்ரார்த்தித்தார். பெரிய நம்பியும் இசைந்து மதுராந்தகத்தில் பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்து, திருமந்த்ரம், த்வயம், சரம ஶ்லோகம் அனைத்தையும் உபதேசம் செய்கிறார். பிற்காலத்தில் திருமந்த்ரம், சரம ஶ்லோகம் போன்றவற்றிற்கு விரிவான விளக்கம் கேட்டுக்கொள்ளும்படி ராமானுஜரை பெரிய நம்பியே திருக்கோஷ்டியூர் நம்பியிடம் அனுப்பி வைக்கிறார். ராமானுஜர் மீது மிக்க மதிப்புக் கொண்டவர். ஒருமுறை திருவரங்கத்தில் ராமானுஜர் தமது கோஷ்டியுடன் வீதியில் வந்து கொண்டிருக்கும் போது பெரிய நம்பி உடனே தெண்டம் சமர்ப்பிக்கிறார். இவர் ஆசார்யன், ராமானுஜர் சிஷ்யன் ஸ்தானத்தில் இருந்த போதும் ராமானுஜரை ஆளவந்தாராகவே பார்த்தனால் பெரிய நம்பி ராமாநுஜரை விழுந்து சேவிக்கிறார். அந்த அளவிற்கு ராமாநுஜரின் மேல் பக்தி கொண்டிருந்தார். இவரது குமாரத்தி அத்துழாய். இவரும் ராமானுஜரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். இவர் திருப்பதிக் கோவை என்ற க்ரந்தத்தை அருளிச் செய்துள்ளார்.
பெரிய நம்பி வாழி திருநாமம்
அம்புவியில் பதின்மர்கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
ஆளவந்தார் தாளிணையை அடைந்துய்ந்தோன் வாழியே
உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியே
ஓங்கு தனுக் கேட்டைதனில் உதித்த பிரான் வாழியே
வம்பவிழ்தார் வரதருரை வாழி செய்தான் வாழியே
மாறனேர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே
எம்பெருமானார் முனிவர்க்கு இதமுரைத்தான் வாழியே
எழில் பெரிய நம்பி சரண் இனிதூழி வாழியே
அம்புவியில் பதின்மர்கலை ஆய்ந்துரைப்போன் வாழியே – அழகானதான இந்தப் பூவுலகில் பத்து ஆழ்வார்களின் ப்ரபந்தங்களை ஆராய்ந்து அதன் உட்கருத்துகளை எடுத்து உரைக்கும் வல்லமை பெற்றவர். ஆளவந்தாரிடம் நன்முறையில் ஆழ்வார்களின் ப்ரபந்தங்களைப் பற்றிக் கேட்டறிந்து அவற்றை இவ்வுலகத்தாருக்கு அறிவிக்கும் தன்மை படைத்த பெரிய நம்பி பல்லாண்டு வாழ வேண்டும்.
ஆளவந்தார் தாளிணையை அடைந்துய்ந்தோன் வாழியே – மணக்கால் நம்பி ஆளவந்தாரை திருவரங்கத்திற்கு அழைத்து வந்து பெரிய பெருமாளைக் காட்டிக் கொடுக்க, ராஜ்யத்தைத் துறந்து சந்நியாசம் ஏற்று சிறந்த ஆசார்யனாக இருந்தவர். அவருடைய இரு திருவடிகளையும் அடைந்து உஜ்ஜீவனம் அடைந்த பெரிய நம்பி வாழ்க.
உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியே – உம்பர் என்பவர்கள் மேலுலகத்தில் உள்ள நித்யஸுரிகள், முக்தர்கள் அனைவரும் தொழக்கூடிய திருவரங்கத்தில் உறையும் ஸ்ரீரங்கநாதருக்கு (பெரிய பெருமாள்) ஆனந்தத்தைக் கொடுக்கக் கூடியவராக பெரிய நம்பி இருந்திருக்கிறார். அக்காலத்தில் சில மாந்திரீகர்கள் பெரிய பெருமாளை அகற்ற முயற்சி செய்தனர். அப்போது ராமானுஜர் திகைத்து நிற்க, பெரிய நம்பி “நான் திருவரங்கத்தின் சப்த ப்ரஹாரத்தை ப்ரதக்ஷிணம் செய்து பெரிய பெருமாளுக்கு ஒரு ஆபத்தும் வாரா வண்ணம் ரக்ஷை அளிக்கிறேன். என்னுடன் அகங்கார, மமகாரங்கள் அற்ற ஒரு சிறந்த ஸ்ரீவைஷ்ணவரும் வேண்டும்” என்று கூற, ராமானுஜர் கூரத்தாழ்வாரை அனுப்பி வைத்தார். அவ்வாறு பெரிய பெருமாளுக்கு ஆபத்து காலங்களில் ரக்ஷையாக இருந்து அவருக்கு ஆனந்தத்தைக் கொடுத்தவர் பெரிய நம்பி. அவர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.
ஓங்கு தனுக் கேட்டைதனில் உதித்த பிரான் வாழியே – சிறப்புப் பெற்ற மார்கழி மாதத்தில் கேட்டை நக்ஷத்ரத்தில் அவதரித்த பிரான் (உபகாரகன்) பெரியநம்பி. அவர் நமக்குச் செய்த உபகாரமானது, மேன்மை மிகுந்த ராமானுஜரை ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு அளித்தவர். மேலும் கிருமிகண்ட சோழன் மூலம் ராமானுஜருக்கு ஆபத்து ஏற்பட்ட காலத்தில் கூரத்தாழ்வானும், பெரிய நம்பியும், அவரது குமாரத்தியுமான அத்துழாயும் சோழ ராஜாவின் அவைக்குச் சென்றனர். கூரத்தாழ்வான் ராமானுஜர் போன்று வேடம் பூண்டு வர, பெரிய நம்பி ஆசார்யன் ஸ்தானத்தில் அவருடன் சென்றார். கூரத்தாழ்வான் சோழ அரசவையில் ஸ்ரீமந்நாராயணனே பரதெய்வம் என்று பரத்தத்துவ நிர்ணயம் செய்ததனால் சோழ அரசருக்குக் கோபம் ஏற்பட்டு இருவருடைய கண்களையும் பிடுங்க ஆணையிட்டான். அவ்வாறு தன் கண்களை இழந்து, திருவரங்கம் திரும்பும் வழியில் வயோதிகம் காரணமாக திருநாடு எய்தி ஆளவந்தார் திருவடிகளை அடைந்தார் என்று அறிகிறோம். அவ்வாறு பெருந்தியாகங்கள் செய்த நமக்கு ஜகதாசார்யன் எனும் ராமானுஜரை அளித்த உபகாரகரான பெரிய நம்பி பல்லாண்டு வாழ்க.
வம்பவிழ்தார் வரதருரை வாழி செய்தான் வாழியே – தேன் வழிந்து கொண்டிருக்கக்கூடிய சிறந்த மாலைகளை அணிந்து கொண்டிருக்கும் காஞ்சீபுரம் வரதாராஜப் பெருமாள் ஆறு வார்த்தைகளை திருக்கச்சி நம்பிகளுக்கு அருளினார். அவற்றில் கடைசி வார்த்தையானது பூர்ணரை ஆசார்யனாகப் பற்று என்பதாகும். ராமநுஜருக்காக தேவப்பெருமாள் இந்த ஆறு வாரத்தைகளை அருளிச் செய்தார். தேவப்பெருமாள் கூற்றுப்படியே எம்பெருமானாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்து உபதேசங்கள் செய்து அவரை சிறந்த ஆசார்யராக உருவாக்கிய பெரிய நம்பி வாழ்க.
மாறனேர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே – மிகச்சிறந்த ஸ்ரீவைஷ்ணவரும், ஆளவந்தாரின் சிஷ்யருமான மாறனேர் நம்பி தாழ்ந்த குலத்தில் பிறந்தவர். ஆனால் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஈடுபாடு கொண்டு திருவரங்கத்தின் கோயில் மதிள்களில் வாழ்ந்து எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து வந்தவர். இவர் உயிர் பிரிந்த பின்பு தனது உடலுக்கு உறவினர்கள் அந்திம காரியம் செய்யக்கூடாது ஸ்ரீவைஷ்ணவர்களின் வழக்கப்படி சம்ஸ்காரம் நடக்க வேண்டும் என்று விரும்பினார். “தேவர்க்கு புரோடாசமானவற்றை நாய்க்கு இடுமா போலே” என்று கூறுவர். அதாவது தேவர்களுக்கு செய்து வைத்திருக்கும் அவிசு முதலானவற்றை நாய் வந்து உண்டு விட்டால் ஏற்றுக் கொள்ள இயலாது. அது போன்று இவ்வுடலானது எம்பெருமானுக்குச் சொந்தமானது அதை ஸ்ரீவைஷ்ணவர்கள் சம்பிரதாயப்படி சம்ஸ்காரம் செய்யவேண்டும் என்று விரும்பிய மாறனேர் நம்பி ஆளவந்தாரின் மற்றொரு சிஷ்யரான பெரிய நம்பியிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். பெரிய நம்பியும் அதற்கு இசைந்து மாறனேர் நம்பி திருநாடு எய்தியபின் பெரிய நம்பியே சரம கைங்கர்யங்களை மாறனேர் நம்பிக்கு செய்தார் என்பதை அறிகிறோம்.
இந்த விஷயம் திருவரங்கத்தில் இருப்பவர்களுக்குத் தெரியவந்து ப்ராஹ்மணரல்லாத மாறனேர் நம்பிக்கு பெரிய நம்பி சம்ஸ்காரம் செய்ததை ஒரு குற்றமாக ராமானுஜர் முன்பு வைத்தனர். அதைக் கேட்ட ராமானுஜர் இதில் தவறு ஒன்றுமில்லை என்றாலும் பெரிய நம்பியின் திருவாக்காலேயே இதற்கு பதில் வர வேண்டும் என்ற எண்ணத்தில் பெரிய நம்பியை விசாரிக்க பெரிய நம்பியும் “ராமபிரான் ஜடாயுவிற்கு சம்ஸ்காரம் செய்தார் தருமபுத்திரன் விதுரருக்கு சம்ஸ்காரம் செய்தார். அதைப்போன்று நானும் உயர்ந்த ஸ்ரீவைஷ்ணவரான மாறனேர் நம்பிக்குச் செய்தேன். ஆழ்வார்கள் வாக்குகள் கடலோசையாகக் கருத முடியாது. ஆழ்வார்கள் அடியார்களுக்கு ஆட்படுவதையே தமது பாசுரங்களில் வலியுறுத்தியுள்ளனர்” என்று கூறினார். அதைக் கேட்ட எம்பெருமானார் உகப்புடன் பெரிய நம்பியை வணங்கினார். அவ்வாறு மாறனேர் நம்பியின் விருப்பத்தை நிறைவேற்றி வாழ்வளித்த பெரிய நம்பி பல்லாண்டு வாழ வேண்டும்.
எம்பெருமானார் முனிவர்க்கு இதமுரைத்தான் வாழியே – இராமானுஜன் என்னும் முனிவர்க்கு சிறந்த உபதேசங்களை ஆசார்யன் ஸ்தானத்தில் இருந்து உரைத்த பெரிய நம்பி பல்லாண்டு வாழ்க,
எழில் பெரிய நம்பி சரண் இனிதூழி வாழியே – அழகு பொருந்திய பெரிய நம்பி திருவடிகள் இவ்வுலகு உள்ள வரையிலும் பல்லாண்டு வாழ வேண்டும் என்று பெரிய நம்பி வாழி திருநாமம் முற்றுப் பெறுகிறது.
எம்பெருமானார் வைபவம்
ஸ்ரீராமானுஜர் ஆதிசேஷனுடைய அவதாரம். ஜகதாசார்யன் என்று அறியப்படுகிறார். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு நடுநாயகமாக இருக்கக் கூடியவர். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் ஆல வ்ருக்ஷமாக வளரச் செய்தவர். நம்மாழ்வார் ப்ரபந்ந ஜந கூடஸ்தர் என்று அறிவோம். அவர் வளர்த்த சம்பிரதாயத்தை பெரிய அளவில் வளரச் செய்தவர். எம்பெருமானாருக்கு தனிச் சிறப்புகள் உண்டு. அவர் அவதாரம் செய்வதற்கு முன்பாகவே அவருடைய திருமேனி நம்மாழ்வாரால் காட்டிக் கொடுக்கப்பட்டது. எழுபத்து நான்கு சிம்ஹாசனாதிபதிகளைக் கொண்டு ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயமானது பரவ வேண்டும் என்று பாடுபட்டவர். “ஆசையுடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறுமென்று பேசி வரம்பறுத்தார் பின்” என்று மணவாள மாமுனிகள் உபதேச ரத்தினமாலையில் அருளிச் செய்த வண்ணம் எம்பெருமானை அடைய விரும்புபவர்கள் அனைவர்க்கும் இந்த உபதேசங்கள் சென்று சேர வேண்டும் என்று விரும்பினார். அனைத்தது ஆத்மாக்களும் எம்பெருமானை அடைவதற்கு உரிமை பெற்றது. அவைகளுடைய உரிமையை நாம் கொடுக்க வேண்டும் என்று கருணையுடன் “காரேய் கருணை இராமாநுசா” என்றபடி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் வளர்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டவர். அனைத்து திவ்ய தேசங்களையும் சீர் திருத்தி ஆங்காங்கே எம்பெருமானுக்கு அனைத்து கைங்கர்யங்களும் (திருவாதாரனம், தளிகை, பாசுரங்கள் சேவிப்பது, உத்ஸவங்கள் முதலியவை) சிறப்பாக நடக்கும்படிச் செய்தவர். இந்த உலகில் உள்ள அனைத்து திவ்யதேசங்களிலும் அனைத்து கைங்கர்யங்களும் குறைவற நடக்கும்படி ஏற்பாடு செய்தவர். இன்றளவும் எம்பெருமானர் வளர்த்த சம்பிரதாயம் பாரத தேசம் முழுவதும் பரந்து, விரிந்து, வளர்ந்து இருக்கிறது.
இவர் ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்தவர். சித்திரை மாதம் திருவாதிரை நக்ஷத்ரத்தில் அவதரித்தவர். நவரத்நங்களைப் போன்று ஒன்பது க்ரந்தங்களை அருளிச் செய்தள்ளார். அவையாவன ஸ்ரீபாஷ்யம், கீதாபாஷ்யம், வேதார்த்த சங்க்ரஹம், வேதாந்த தீபம், வேதாந்த சாரம், சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம் மற்றும் நித்ய க்ரந்தம் (திருவாராதன க்ரமம்) ஆகும். இவை அனைத்தும் சம்ஸ்க்ருத க்ரந்தங்களாகும். தமிழில் எம்பெருமானார் எந்த க்ரந்தமும் அருளிச் செய்யவில்லை. வேதாந்தத்தின் கருத்துக்களை ஸ்ரீபாஷ்யத்திலும், வேதார்த்த சங்க்ரஹத்திலும், வேதாந்த தீபம் மற்றும் வேதாந்த சாரத்திலும் எடுத்துரைத்துள்ளார். கீதா பாஷ்யத்தில் பகவத்கீதைக்கு சிறப்பான வ்யாக்யானம் அருளியுள்ளார். கத்யத்ரயம் மூலமாக சம்பிரதாயத்தின் மிக முக்கியக் கருத்தான சரணாகதியை நிலை நாட்டியுள்ளார். நித்ய க்ரந்தம் மூலமாக திருவாராதனம் செய்யும் முறையை எடுத்துக் காட்டியுள்ளார். திருவாய்மொழிக்கு வ்யாக்யானம் எழுதும் முறையை தொடங்கி வைத்தவர். இவ்வாறு பல சிறப்புகளைக் கொண்டவர்.
எம்பெருமானார் வாழி திருநாமம்
அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே
சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே
எம்பெருமானார் வாழி திருநாமம் விளக்கவுரை
அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே – இளையாழ்வாராக ஸ்ரீராமானுஜர் இருந்த காலத்திலேயே திருக்கச்சி நம்பிகளின் உபதேசங்களைக் கேட்டுக் கொண்டு தேவப் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து வந்தார். தேவப் பெருமாளின் முன்புதான் ஸ்ரீராமானுஜர் சந்நியாசம் மேற்கொண்டார். பேரருளாளப் பெருமாள் தான் எதிராசர் (எதிகளுக்குத் தலைவன்) என்ற பெயரையும் ஸ்ரீராமானுஜருக்குச் சூட்டியவர். அத்திகிரி (ஹஸ்திகிரி எனப்படும் காஞ்சீபுரம்) பேரருளாள எம்பெருமானின் திருவடிகளைப் பணிந்த எம்பெருமானார் வாழ்க.
அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே – ஸ்ரீராமானுஜருக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டன. திருக்கச்சி நம்பிகளிடம் தேவப் பெருமாளிடம் விடை பெற்று வருமாறு வேண்டினார். திருக்கச்சி நம்பிகள் அவை என்ன சந்தேகங்கள் என்று கேட்காமல் தேவப் பெருமாளிடம் சென்று இளையாழ்வாருக்கு ஆறு சந்தேகங்கள் உள்ளன என்று கூற தேவப்பெருமாளும் அவை என்ன சந்தேகங்கள் என்று கேட்காமல் ஆறு வார்த்தைகளை அருளிச் செய்கிறார். “அஹமேவ பரம் தத்துவம்”, நான் தான் உலகில் பரம்பொருள், நமக்கு மேலாகவோ சமமாகவோ வேறு தெய்வம் கிடையாது என்பதை முதல் வார்த்தையாகக் கூறினார். இரண்டவதாக பரமாத்மா வேறு, ஜீவாத்மா வேறு என்பதைக் குறிக்கும் வகையில் “பேதமே சம்பிரதாயம் “ என்று கூறினார். மூன்றாவதாக ப்ரபத்தி (சரணாகதி) தான் உபாயம் என்பதை ஜீவாத்மா பரமாத்மாவை அடையும் வழியாக அருளிச் செய்தார். நான்காவதாக சரணாகதி செய்தவனுக்கு சரீரம் கீழே விழும்போது முக்தி கிடைத்துவிடும் என்று கூறினார். ஐந்தாவதாக சரீரம் கீழே விழும்போது சரணாகதி செய்தவனால் என்னை நினைக்க முடியவில்லை என்றால் அதைப் பற்றி ஒன்றும் குறைவில்லை. நான் அவனை எப்போதும் நினைப்பதால் அவனைக் கைக் கொள்வேன் என்று ஐந்தாவது வார்த்தையாகக் கூறினார். ஆறாவது வார்த்தை எம்பெருமானாருக்கு நேராக ஒரு உபதேசமாக அமைந்தது. பூர்ணாசார்யர் எனப்படும் பெரிய நம்பியை அடைந்து ஆச்ரயிக்கவும் என்று ஆறாவது வார்த்தையாக தேவப்பெருமாள் இளையாழ்வாருக்குப் பணித்தார். இவ்வாறு தேவப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக ஸ்ரீஇராமானுஜருக்கு ஆறு வார்த்தைகளை அருளிச் செய்தார். திருக்கச்சி நம்பிகள் மூலமாக ஆறு வார்த்தைகளைப் பெற்ற இளையாழ்வார் பல்லாண்டு வாழ்க என்று இவ்வரியில் காட்டப்பெறுகிறது.
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே – பாடியம் என்பது ஸ்ரீபாஷ்யம் என்பதன் தமிழாக்கம். மிகுந்த பக்தியுடன் ஸ்ரீபாஷ்யத்தை இயற்றினார் ஸ்ரீராமானுஜர். இந்த க்ரந்தத்தை எழுதுவதற்காக கூரத்தாழ்வனை அழைத்துக் கொண்டு போதாயன வ்ருத்தி க்ரந்தத்தைப் பெறுவதற்காக காஷ்மீர தேசத்தில் உள்ள ஸ்ரீசாரதா பீடம் சென்றார். அந்தக் க்ரந்தத்தைப் பெற்று வரும் வழியில் அங்கு இருந்தவர்களால் க்ரந்தம் பறிக்கப் பெற்றது. ஆனால் கூரத்தாழ்வான் மனதில் அந்தக் க்ரந்தத்தை க்ரஹித்து வைத்திருந்தமையால். திருவரங்கம் அடைந்தவுடன் கூரத்தாழ்வானைக் கொண்டு ஸ்ரீபாஷ்யத்தை ராமானுஜர் அருளிச் செய்தார். வேதாந்தத்தில் எம்பெருமானை அடைவதற்கு முக்கியமான உபாயமாகக் கூறப்பட்ட பக்தி யோகமத்தை மையக் கருத்தாகக் கொண்டு ஸ்ரீபாஷ்யத்தை அருளிச் செய்தார். பிற்காலத்தில் சரணாகதி கத்யத்தில் எம்பெருமானை அடைவதற்கு எம்பெருமான் திருவடிகளில் சரணாகதி அடைவது தான் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் சிறந்த வழி என்று எடுத்துக் காட்டியுள்ளார். வேதாந்திகளுக்காக சொல்லும்போது பக்தியோகம் எம்பெருமானை அடையச் சிறந்த வழி என்று கூறியுள்ளார். அவ்வாறு மேன்மை பெற்ற எம்பெருமானார் வாழ்க.
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே – பத்து ஆழ்வார்களின் ப்ரபந்தங்களை பெரிய நம்பி மற்றும் திருக்கோஷ்டியூர் நம்பியும் பணித்தபடி திருவரங்கத்தில் திருமாலை ஆண்டானிடம் கற்றுத் தேர்ந்தார். அவ்வாறு ஆழ்வார் பாசுரங்களின் உட்கருத்துக்களையும் ஈடுபாட்டுடன் கற்றுத் தேர்ந்த எம்பெருமானார் வாழ்க.
சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே – மகிழ் மாறன் என்றால் நம்மாழ்வார். எம்பெருமானே உபாயம் மற்றும் உபேயம் என்று வேறு ஒன்றிலும் கருத்தைச் செலுத்தாமல் மனது சுத்தத்துடன் இருந்த நம்மாழ்வாரின் திருவடிகளைத் தொழுது உஜ்ஜீவனம் அடைந்த எம்பெருமானார் வாழ்க. “பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த பாமன்னு மாறன் அடிபணிந்து உய்ந்தவன்” என்ற இராமாநுச நூற்றந்தாதி பாசுரத்தின் படி மாறன் அடி பணிந்து உய்ந்த எம்பெருமானார் வாழ்க. அதனால்தான் இன்றளவும் ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் திருவடி நிலைகள் ஸ்ரீராமானுஜம் என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் ராமானுஜர் ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வாருக்கு மங்களாசாசனம் செய்வதற்குச் சென்ற போது நம்மாழ்வார் “வாரும் ராமானுஜரே, இனி எம் திருவடிகள் ஸ்ரீராமானுஜம் என்றே அழைக்கப் பெறும்” என்று உகப்புடன் அருளினார். ஏனைய இடங்களில் நம்மாழ்வார் திருவடிகளுக்கு மதுரகவிகள் என்று தான் கூறுவர்.
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே – மிகப் பழைமையான பெரிய நம்பியின் திருவடிகளில் ஆதரத்துடன் இருக்கக் கூடிய ராமானுஜர் பல்லாண்டு வாழ்க.
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே – சித்திரை மாதம் திருவாதிரை (ஆதிரை என்ற நக்ஷத்திரம் ராமானுஜர் அவதரித்தமையால் திருவாதிரை என்றே அறியப்படுகிறது) நாளுக்கு ஏற்றம் தரும் வண்ணம் அந்நாளில் அவதரித்த எம்பெருமானார் வாழ்க.
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே – சிறப்புப் பெற்ற ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்த ராமானுஜரின் திருவடிகள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று பகவத் ஸ்ரீராமாநுஜரின் வாழி திருநாமம் முடிவடைகிறது.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org
தேவரீர் திருவடிகளுக்கு தெண்டன் சமர்ப்பித்துக் கொள்கிறேன்.தேவரீருடைய பதிவுகளை எடுத்து அடியேன் வைஷ்ணவ குழுக்களில் பதிவிடலாமா ? அடியேன் தாடாளன் ராமானுஜதாசன் ♂️
sure – pls feel free to do so.
adiyen ramanuja dasan
அடியேன் வடகலை பிரிவைச் சேர்ந்தவன்….. வடகலையின் ஆசார்யரான ஸ்வாமி வேதாந்த தேசிகரின் வாழித் திருநாமத்தின் விளக்கவுரையினை அடியேனுக்கு அனுப்ப முடியுமா? அதனையும் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.