திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 71 – 80

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை

<< பாசுரங்கள் 61 – 70

எழுபத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் குணங்களையும் உண்மை நிலையையும் ஸந்தேஹப்பட்டு, அந்த ஸந்தேஹங்கள் தீரப்பெற்ற ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

தேவன் உரை பதியில் சேரப் பெறாமையால்
மேவும் அடியார் வசனாம் மெய்ந்நிலையும் – யாவையும்
தானாம் நிலையும் சங்கித்து அவை தெளிந்த மாறன் பால்
மாநிலத்தீர்! நங்கள் மனம்

திருவாறன்விளையில் இருக்கும் எம்பெருமானுடன் கூடி அவனுக்குத் தொண்டு செய்ய முடியாததால், எம்பெருமான் அடியார்களிடத்தில் அடிபணிந்திருக்கும் தன்மையையும், சேதனாசேதனங்கள் தான் என்று சொல்லும்படி இருக்கையையும், தேவையில்லாமல் ஸந்தேஹப்பட்ட ஆழ்வார், அந்த ஸந்தேஹங்கள் நீங்கப் பெற்றார். இப்பரந்த உலகில் வாழ்பவர்களே! நம் நெஞ்சம் அவ்வாழ்வாரிடத்தில் லயித்து இருக்கும்.

எழுபத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், ஆத்மா மற்றும் ஆத்மாவின் உடைமைகளில் தனக்கு ஆசை இல்லாததை அறிவித்த ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

நங்கருத்தை நன்றாக நாடி நிற்கும் மால் அறிய
இங்கிவற்றில் ஆசை எமக்குளதென்? – சங்கையினால்
தன் உயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த மாறன் தான்
அந்நிலையை ஆய்ந்துரைத்தான் அங்கு

முற்றும் உணர்ந்த எம்பெருமான், ஆழ்வாரின் நெஞ்சை நன்றாக ஆராய, ஆழ்வாரும் தனக்கு இவ்வுலகில் ஈடுபாடு இருக்குமோ என்று தேவையில்லாமல் ஸந்தேஹப்பட்டு, தன்னைப்பற்றியும் தன் உடைமைகளைப்பற்றியும் நன்கு ஆராய்ந்து, தனக்கு அவற்றில் விருப்பம் இல்லை என்பதை உணர்ந்து, தான் உணர்ந்ததை அவனுக்கு அறிவித்து அருளிச்செய்தார்.

எழுபத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், ஆழ்வார் எம்பெருமானுக்குப் பரிவுகாட்ட யாரும் இல்லை என்று வருந்த, எம்பெருமான் தனக்குப் பரிவு காட்டுபவர்கள் உள்ளனர் என்பதைக் காட்ட அதைக் கண்டு பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

அங்கமரர் பேண அவர் நடுவே வாழ் திருமாற்கு
இங்கோர் பரிவரிலை என்றஞ்ச – எங்கும்
பரிவருளர் என்னப் பயம் தீர்ந்த மாறன்
வரிகழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார்

மங்களாசாஸனம் செய்யும் நித்யஸூரிகள் நடுவில் பரமபதத்தில் எழுந்தருளியிருக்கும் ச்ரிய:பதியான எம்பெருமானுக்கு இந்த ஸம்ஸாரத்தில் மங்களாசாஸனம் செய்பவர்கள் இல்லை என்று ஆழ்வார் பயந்தார். எம்பெருமான் “எனக்காகப் பரிவு காட்டுபவர்கள் எங்கும் உளர்” என்று சொல்ல, ஆழ்வாரின் பயம் நீங்கியது. வரிகள் பொருந்திய சதங்கைகளால் அலங்கரிக்கப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளை அடைபவர்கள் உஜ்ஜீவனத்தை அடைவர்.

எழுபத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானுடைய வீரம், சௌர்யம் முதலிய குணங்களையும் சாபம் மற்றும் அனுக்ரஹத்தைக் கொடுக்கக்கூடியவர்களுடன் சேர்ந்து இருக்கும் தன்மையையும் அவன் காட்டக் கண்டு, பயமற்றுப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வாராமல் அச்சம் இனி மால் தன் வலியினையும்
சீரார் பரிவருடன் சேர்த்தியையும் – பாரும் எனத்
தான் உகந்த மாறன் தாள் சார் நெஞ்சே! சாராயேல்
மானிடவரைச் சார்ந்தது மாய்

ஆழ்வாருக்கு இன்னமும் இருக்கும் பயத்தைப் போக்க ஸர்வேச்வரன் தன் வீரம் முதலிய குணங்களையும், தான் சிறந்த அடியார்களுடன் இருப்பதையும் “பாரும்” என்று சொல்லிக் காட்ட, அவற்றைக் கண்ட ஆழ்வார் மிகவும் மகிழ்ந்தார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளை அடைவாயாக; அடையவில்லை என்றால், ஸம்ஸாரிகளை அடைந்து, நசித்துப் போ.

எழுபத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானுடைய வடிவழகை அனுபவிக்கமுடியாமல் மிகவும் வருந்திப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மாயன் வடிவழகைக் காணாத வல்விடா
யாய் அதற விஞ்சி அழுது அலற்றும் – தூய புகழ்
உற்ற சடகோபனை நாம் ஒன்றி நிற்கும் போது பகல்
அற்ற பொழுதானது எல்லியாம்

ஸர்வேச்வரனின் திருமேனி அழகைக் கண்டு அனுபவிக்க முடியாததால் மிகுந்த துயரத்தை அடைந்த ஆழ்வார், அந்த வருத்தம் மிகவும் அதிகமாகி, அழுது, எம்பெருமானை ஒரு க்ரமமில்லாமல் கூப்பிட்டார். இப்படிப்பட்ட பரிசுத்தமான பெருமைகளை உடைய ஆழ்வாருடன் கூடி இருக்கும்பொழுது அது பகல், இந்த அனுபவத்திற்குத் தடை வந்தால் அது இருண்ட இரவு.

எழுபத்தாறாம் பாசுரம். மாமுனிகள், ஆழ்வாரின் துயரத்தைப் போக்க, எம்பெருமான் ஆழ்வாருக்கு மிக அருகில் வந்து ஆழ்வாருடன் கலந்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

எல்லி பகல் நடந்த இந்த விடாய் தீருகைக்கு
மெல்ல வந்து தான் கலக்க வேணும் என – நல்லவர்கள்
மன்னு கடித்தானத்தே மால் இருக்க மாறன் கண்டு
இந்நிலையைச் சொன்னான் இருந்து

ஸர்வேச்வரன் மெதுவே வந்து, பல இரவுகளும் பகல்களுமாக ஆழ்வாருக்கு இருந்த வருத்தத்தைப் போக்குவதற்காக, சிறந்த வைதிகர்கள் வாழும் திருக்கடித்தானத்தில் எழுந்தருளினான். அதைக் கண்ட ஆழ்வார் நிலைபெற்று, எம்பெருமானைப் பற்றி அருளிச்செய்தார்.

எழுபத்தேழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் ஆழ்வாரின் கருத்தைப் பின்பற்றி அவருடன் கலந்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

இருந்தவன் தான் வந்து இங்கு இவர் எண்ணம் எல்லாம்
திருந்த இவர் தம் திறத்தே செய்து – பொருந்தக்
கலந்து இனியனாய் இருக்கக் கண்ட சடகோபர்
கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு

திருக்கடித்தானத்தில் எழுந்தருளியிருக்கும் ஸர்வேச்வரன் ஆழ்வார் இருப்பிடம் வந்து, ஆழ்வாரின் ஆசைகளைப் பூர்த்தி செய்து, கருணையைப் பொழிந்து ஆழ்வாருடன் ஒரு நீராகக் கலந்தான். அதன்பின் எம்பெருமான் ஆனந்தமாக இருப்பதைக் கண்ட ஆழ்வார் அதைப்பற்றி அருளிச்செய்தார்.

எழுபத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் ஆழ்வாருக்கு ஆத்ம ஸ்வரூபத்தின் பெருமையைக் காட்ட அதைக் கண்டு பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கண் நிறைய வந்து கலந்த மால் இக்கலவி
திண்ணிலையா வேணும் எனச் சிந்தித்து – தண்ணிதெனும்
ஆருயிரின் ஏற்றம் அது காட்ட ஆய்ந்துரைத்தான்
காரிமாறன் தன் கருத்து

ஆழ்வாருடன் கலந்த எம்பெருமான், இந்தக் கலவி நிரந்தரமாக இருக்க ஆசைப்பட்டு, ஆழ்வாரின் கண்களை நிறைத்து இருந்து, அணு ஸ்வரூபத்தில் நுண்ணியதாய் இருக்கும் ஆத்மாவின் பெருமைகளைக் காட்டினான். அதை ஆராய்ந்த ஆழ்வார் தன் திருவுள்ளக் கருத்தை வெளியிட்டருளினார்.

எழுபத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், ஆத்மா எம்பெருமானைத் தவிர மற்றவர்களுக்கு அடிமைப்பட்டு இருப்பதை விலக்கிப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கருமால் திறத்தில் ஒரு கன்னிகையாம் மாறன்
ஒருமா கலவி உரைப்பால் – திரமாக
அன்னியருக்கு ஆகாது அவன் தனக்கே ஆகும் உயிர்
இந்நிலையை ஓர் நெடிதா

ஆழ்வார் கண்ணனிடத்தில் ஈடுபாடு கொண்ட ஒரு பெண்ணின் (பராங்குச நாயகி) நிலையை அடைந்து, அவளின் தோழியின் பாவனையில் பராங்குச நாயகியின் திருமேனியில் கலவியின் அடையாளங்களைச் சொன்னாள். இந்நிலையில், ஆத்மாவின் நிலையை நன்கு ஆராய்ந்து, ஆத்மா எம்பெருமானுக்கே அடிமைப்பட்டவன் என்றும் அந்த சேஷத்வம் (அடிமைத்தனம்) தகுந்த தலைவனான எம்பெருமானுக்கு மட்டுமே, வேறு யவருக்கும் இல்லை என்றும் உணர்ந்துகொள்.

எண்பதாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானுக்கே அடிமைப்பட்டிருப்பதன் உயர்ந்த நிலை பாகவதர்களுக்கு அடிமைப்பட்டு இருப்பது என்று சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

நெடுமால் அழகு தனில் நீள் குணத்தில் ஈடு
படுமா நிலை உடைய பத்தர்க்கு – அடிமை தனில்
எல்லை நிலம் தானாக எண்ணினான் மாறன் அது
கொல்லை நிலமான நிலை கொண்டு

ஆழ்வார் ஸர்வேச்வரனின் வடிவழகிலும் கருணை உள்ளம் ஆகிய சிறந்த குணத்திலும் ஈடுபட்டிருக்கும் பாகவதர்களிடம் அடிமை பூண்டிருந்தார். அது மட்டும் அன்று, எம்பெருமானுக்கு அடிமைப்பட்டிருப்பதின் உயர்ந்த நிலையாக அவன் அடியார்களுக்கு அடிமைப்பட்டிருப்பதைக் கருதினார். ஏனெனில் அதுவே உயர்ந்த குறிக்கோளாகையாலே.

ஆதாரம் – https://divyaprabandham.koyil.org/index.php/2020/10/thiruvaimozhi-nurrandhadhi-71-80-simple/

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

0 thoughts on “திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 71 – 80”

  1. திருவாய்மொழி நூற்றந்தாதி விளக்க உரை. பரமானந்தம். தாங்களின் தெய்வீகப் பணி தொடர அடியேன் ஆழ்வார் எம்பெருமானா ரை இறைஞ்சுகின்றேன் அடியேன் தாஸன் வெங்கட்ராமன் ஆழ்வார் திருநகரி.

    Reply

Leave a Comment