ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
பரமபதத்தை மானஸீகமாக அனுபவித்த ஆழ்வார், தன்னுடைய திருக்கண்களை விழித்துப் பார்த்துத் தான் இன்னும் ஸம்ஸாரத்தில் இருப்பதைப் பார்த்து, மிகவும் வருத்தப்பட்டார். இனியும் தன்னால் தரிக்க முடியாது என்றுணர்ந்து எம்பெருமானைக் கதறி அழைத்தும், பிராட்டியின் மீது ஆணையிட்டும் எம்பெருமானிடத்தில் தன்னைப் பரமபதத்தில் சேர்த்துக்கொள்ளும்படி ப்ரார்த்திக்க, எம்பெருமானும் இவர் பிரிவால் இவரை விடவும் வருந்தி, உடனே பரமபதத்தில் இருந்து பிராட்டியுடன் தன்னுடைய கருட வாஹனத்தில் புறப்பட்டு ஆழ்வார் இருந்த இடத்துக்கு வந்து, ஆழ்வாரைத் தானே பரமபதத்துக்கு அழைத்துச் சென்றான். ஆழ்வாரும் ஆனந்தமாக “அவாவற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன்” என்று தானே ஆனந்தத்துடன் சொல்லி இந்த ப்ரபந்தத்தைத் தலைக்கட்டுகிறார்.
முதல் பாசுரம். ஸ்ருஷ்டி முதலிய கார்யங்களாலே முதலிலிருந்து உபகாரகனாய் இருந்து, வடிவழகைக் காட்டி ருசியை உண்டாக்கி, உன்னை விட்டு வாழ முடியாதபடி எனக்கு அனுபவத்தைக் கொடுப்பதாக ஆசையுடன் வந்த நீ, இனியும் குணங்களை மட்டும் காட்டி வஞ்சித்து அகன்று போக விட மாட்டேன் என்கிறார்.
முனியே நான்முகனே! முக்கண்ணப்பா! என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே! என் கள்வா!
தனியேன் ஆருயிரே! என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகலொட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே
ஸ்ருஷ்டி செய்யும் விதத்தை நினைப்பவனே! ஸ்ருஷ்டியைச் செய்வதற்காக ப்ரஹ்மாவைச் சரீரமாக உடையவனே! ஸ்ருஷ்டித்த உலகத்தை பின்பொரு நாள் அழிப்பதற்காக முக்கண்ணனாய் உபகாரகனான ருத்ரனைச் சரீரமாக உடையவனே! எனக்கு பழுத்த பழம் போலே மிக இனிமையாக இருக்கும் திருவதரத்தையும் தாமரைப்பூப்போலே இருக்கும் திருக்கண்களையும் துளைக்கப்படாத, கறுத்த மாணிக்கம் போன்ற திருமேனியையும் உடையவனே! என்னையும் அவ்வழகாலே வஞ்சித்துக் கொண்டவனே! ஸம்ஸாரத்தில் தனிமைப்பட்ட எனக்கு உயிரானவனே! என் தலைக்கு மேலே வந்து இருந்து உன்னிடத்தில் எனக்கு ஆர்த்தியையும் உண்டாக்கின பின்பு நான் உன்னை முன்புபோலே அகன்று போக அனுமதிக்கமாட்டேன். என்னை நீ சிறிதும் வஞ்சிக்காமல் இருக்கவேண்டும்.
இரண்டாம் பாசுரம். தம்முடைய கார்யத்தை எம்பெருமான் செய்கைக்காக அவனுக்கும் விரும்பத்தக்கவளான பிராட்டியுடைய திருவாணை என்கிறார்.
மாயஞ்செய்யேல் என்னை உன் திருவார்வத்து மாலை நங்கை
வாசஞ்செய் பூங்குழலாள் திருவாணை நின்னாணை கண்டாய்
நேசஞ்செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசஞ்செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்தந்தோ
என்னை இனி வஞ்சிக்காமல் இருக்க வேண்டும். உன் செல்வத்தின் அடையாளமாய், திருமார்புக்கு பரபாகமாய் (எதிர் நிறம்) ஒரு தங்க மாலை போன்றவளாய் குண பூர்த்தியை உடையவளாய் சிறந்த கூந்தலையுடைய லக்ஷ்மியின் ஆணையானது உனக்கு ஆணையாக இருக்கும். அன்பு செய்து உன்னோடு என்னை ஆத்மபேதம் இல்லாதவாறு ஒன்றாக நினைக்கும்படிக்கு என்னைக் கூசாமல் அங்கீகரித்து அருளினாய். என்னை வந்து “ஆழ்வீர் வாரும்” என்று அழைத்துக்கொண்டருள வேண்டும். ஐயோ! உன் ஆசையை நிறைவேற்ற நான் ஆணையிட வேண்டியிருக்கிறதே என்று கருத்து.
மூன்றாம் பாசுரம். ப்ரஹ்மா முதலிய ஸகல ஆத்மாக்களுக்கும் பிறப்பிடமான திருநாபீகலத்துக்கு மூலஸ்தானமான நீ வந்து என்னை ஏற்றுக்கொளண்டருள வேண்டும் என்கிறார்.
கூவிக் கொள்ளாய் வந்தந்தோ! என் பொல்லாக் கருமாணிக்கமே!
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் நான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்திரனாதிக்கெல்லாம்
நாவிக் கமல முதற்கிழங்கே உம்பரந்ததுவே
எனக்கு மிகவும் இனியவனாய் துளைக்கப்படாத கறுத்த மாணிக்கம் போன்ற திருமேனியை உடையவனாய், அடைந்து வணங்கக்கூடிய ப்ரஹ்மா ருத்ரன் இந்த்ரன் முதலானவர்களுக்கு முதலான திருநாபீகமலத்துக்கு இருப்பிடமாய், நித்யஸூரிகளுக்கும் இருப்பு செயல்கள் முதலியவைகளுக்கு நிர்வாஹகன் ஆனவனே! என் ஆத்மாவுக்கு ஓர் பற்றுக்கொம்பு உன்னைத்தவிர நான் அறிகின்றிலேன். நீயே வந்து அழைத்து என்னைக் கொண்டருளவேண்டும். ஐயோ! உன் கார்யத்தை நான் சொல்ல வேண்டியுள்ளதே.
நான்காம் பாசுரம். எல்லாவற்றையும் சரீரமாகக் கொண்ட நீ, உன் சரீரமான என்னை ஆள்வதாக ஏறிட்டுக்கொண்டு வைத்து, என்னை இந்த ஸம்ஸாரத்தில் தவிக்க விட்டாயே என்று வருத்தத்துடன் கூப்பிடுகிறார்.
உம்பர் அந்தண் பாழேயோ! அதனுள் மிசை நீயேயோ!
அம்பர நற்சோதி! அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரஞ்சாதிக்கலுற்று என்னைப் போரவிட்டிட்டாயே
மேலானதாய், உனக்கு விளையாட்டுப்பொருளாக இருப்பதாலே சிறந்ததாய், குளிர்ந்திருப்பதாய், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷத்தை விளைத்துக்கொள்ளும் இடமாய் இருக்கும் மூலப்ரக்ருதிக்குள் இருப்பவனே! ஆகாசம், சிறந்ததான தேஜஸ்ஸு முதலிய பொருள்களைப் படைத்து அதற்குள்ளும் அந்தர்யாமியாய் இருந்து, அண்டத்துக்குள்ளே ப்ரஹ்மா ருத்ரன் ஆகியோரைப் படைத்து அவர்களுக்கும் அந்தர்யாமியாய் இருப்பவன் நீ. தேவர்களையும், மனுஷ்யர் முதலிய அறிவுடையவர்களையும், சிந்தித்துப் படைத்தவன் நீ. என்னுடைய சரீரத்தை ஆள்வதாக ஏறிட்டுக்கொண்டு என்னை இங்கேயே விட்டு வைத்தாயே.
ஐந்தாம் பாசுரம். எனக்கு மிகவும் இனியவனாக இருந்தும் என்னை நீ விலக்கினால் எனக்கு ஒரு உஜ்ஜீவனம் உண்டோ என்கிறார்.
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனதென்பதென்? யானென்பதென்?
தீர இரும்புண்ட நீரது போல என் ஆருயிரை
ஆரப் பருக எனக்கு ஆராவமுதானாயே
தன் காய்ச்சல் தீரும்படி இரும்பு உறிஞ்சின நீரைப்போலே என் ஆத்மாவின் வருத்தம் தீரும்படி முழுவதுமாகப் பருகுகைக்கு எனக்கு ஆராத அமுதமானாயே. நீ விலக்கி விட்டு அநாதரித்து என்னை மற்ற விஷயங்களிலே போக்க நினைத்தால், பின்பு நான் மற்று ஆரைக்கொண்டு எந்தப் பலனைப் பெறுவேன்? ஐயோ! என்னது என்று சொல்வதற்கு எந்த உபகரணமும் இல்லை. நான் என்பதற்கு ஸ்வதந்த்ரன் இல்லை.
ஆறாம் பாசுரம். பிராட்டியிடத்தில் கொண்டாற்போலே என்னிடத்திலும் மிகவும் ஆசைகொண்ட நீ உன் இனிமையான தன்மையைக் காட்டி அனுபவத்தைக் கொடுத்தாய். இனி முழுக்க என்னை ஆளவேண்டும் என்கிறார்.
எனக்கு ஆராவமுதாய் எனதாவியை இன்னுயிரை
மனக்காராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டொழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கேற்கும் கோலமலர்ப் பாவைக்கன்பா! என் அன்பேயோ
தன்னிலத்தில் அலர்ந்த காயாம்பூப்போன்ற நிறத்தை உடையவனாய் தாமரை போன்ற திருக்கண்களையும் சிவந்த திருவதரத்தையும் உடைய உனக்குத் தகுதியான திருமேனியை உடையவளாய் பூவில் பிறப்பாலே மிகவும் இனியவளாய் பெண்களுக்குரிய ஆத்மகுணங்களை உடைய லக்ஷ்மிக்கு அன்பை உடையவனே! என்னிடத்தில் அன்பே வடிவொத்தவனாக இருப்பவனே! எனக்கு மிகவும் இனியவனாய் என்னுடைய உடம்பையும் சிறந்ததான ஆத்மாவையும் ஹ்ருதயத்துக்கு த்ருப்தி பிறவாதபடி விரும்பி நிரந்தரமாக அனுபவித்தாய். இனி, குறையும் (மீதம் உள்ளவற்றையும்) அனுபவித்தே விடவேண்டும்.
ஏழாம் பாசுரம். அடியார்களின் ரக்ஷகனான உன்னைப் பெற்றும், இனி விடுவேனோ என்கிறார்.
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்ததொப்ப
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்!
நீலக் கடல் கடைந்தாய்! உன்னைப் பெற்று இனிப் போக்குவனோ
வடிவழகையும் இனிமையையும் உடையவளான பிராட்டிக்கு உகப்பான அத்தாலே என்னிடத்திலும் மிகவும் ஆசையுடன் இருப்பவனே! நீல ரத்னகிரியானது இரண்டு பிறையைக்கவ்வி எழுந்திருந்தாற்போலே சிறந்த வடிவழகை உடைய தனித்துவம் வாய்ந்த மஹாவராஹமாய் பூமியை ப்ரளயத்திலிருந்து முழுகி எடுத்துத் தன் திரு எயிற்றிலே வைத்த செயலாலே எனக்கு ஸ்வாமியானவனே! உன் வடிவின் நிழல்பட்டு நீலமான கடலைக் கடைந்து அடியார்களை ரக்ஷித்தவனே! உன்னைப் பெற்றுவைத்து இனி நழுவவிடுவேனோ?
எட்டாம் பாசுரம். கிடைத்தற்கரியவனாய் எல்லாருக்கும் அந்தர்யாமியாய் எனக்குத் தாரகனான உன்னைப் பெற்றுவைத்துக் கைவிடுவேனோ என்கிறார்.
பெற்றினிப் போக்குவனோ? உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராய்ப் பயனாய் அவையாய்
முற்ற இம்மூவுலகும் பெருந்தூறாய்த் தூற்றில் புக்கு
முற்றக் கரந்தொளித்தாய் என் முதல் தனி வித்தேயோ!
இரண்டு வகைப்பட்ட கர்மங்கள் அதாவது புண்யம் மற்றும் பாபங்களுக்கு நிர்வாஹகனாய், ஆத்மாவை நடத்துபவனாய், அந்தக் கர்மங்களால் உண்டான பலன்களைக் கொடுப்பவனாய். இந்த மூன்று லோகங்கள் மற்றும் எல்லாமாகிற பெரிய புதரிலே புகுந்து ஒன்றும் தெரிந்து கொள்ளமுடியாதபடி மறைந்து நிற்பவனாய் எனக்கு முதல் ஸுக்ருதமான (நற்செயல் – நற்பயன்) தனித்துவம் வாய்ந்த காரணனே! உன்னைக் கைபுகும்படிப் பெற்றுவைத்து, உன்னைப் பிரிந்து வாழமுடியாத இந்த நிலையில், விட வழியுண்டோ?
ஒன்பதாம் பாசுரம். காரணம் மற்றும் கார்ய நிலையில் இருக்கும் எல்லா அறிவுள்ள மற்று அறிவற்ற பொருள்களுக்கு அந்தர்யாமியாய் இருப்பது முதலான நிலைகளாலே ப்ரதானனாய், அவற்றிலிருந்து வேறுபட்ட சிறந்த ஸ்வரூப ரூப குணம் முதலியவைகளை உடைய உன்னை என்று வந்து அடைவேன் என்கிறார்.
முதல் தனி வித்தேயோ! முழு மூவுலகாதிக்கெல்லாம்
முதல் தனி உன்னை உன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்றுறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவிலீயோ!
மூன்று லோகங்கள் முதலான எல்லாப் பொருள்களுக்கும் நிமித்த மற்றும் உபாதான காரணமாய் அண்டத்துக்கு உள்ளும் புறமும் இருக்கும் எல்லாப் பொருள்களையும் வ்யாபித்து தனித்துவம் வாய்ந்த காரணமாய் வாழ்ச்சிக்கு விளை நிலமான மூல ப்ரக்ருதியை நடத்துபவனாய், முதல்வனாய், ஒப்பற்றவனாய், எங்கும் பரவி, பத்துத் திக்கிலும் உண்டாய், நித்யமான ஆத்மாக்களுக்கு நியந்தாவனவனே! இப்படி முதல்வனாய் ஒப்பற்றவனான உன்னை நான் எந்நாள் வந்து கூடுவேன்?
பத்தாம் பாசுரம். மூன்று தத்வங்களையும்விடப் பெரியதான தன் ஆசை தீரும்படி எல்லாவிதத்திலும் பரிபூர்ணனாய்க்கொண்டு கூடினாய் என்று தனக்கு ஸாயுஜ்ய மோக்ஷத்தை அளித்து எல்லை இல்லாத ஆனந்தத்தை அளித்தபடியை அருளிச்செய்கிறார்.
சூழ்ந்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ
சூழ்ந்ததனில் பெரிய பர நன்மலர்ச் சோதீயோ
சூழ்ந்ததனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்ததனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே
கார்ய நிலையில் இருக்கும் எல்லாப் பொருள்களையும் சூழ்ந்து வ்யாபித்து கீழும் மேலும் இருப்பதால் பத்துத்திக்கிலும் இருக்கும் நித்யமான பெரிய மூல ப்ரக்ருதியைச் சரீரமாக உடையவனாய், தன்னுடைய ஞானத்தாலே வ்யாபித்து அந்த ப்ரக்ருதியைவிடப் பெருத்து மேலானதாய் சிறப்பை உடைய மலர்ந்திருக்கும் ஞானத்தையுடைய ஆத்மாவைச் சரீரமாக உடையவனாய், இந்த ப்ரக்ருதி மற்றும் ஆத்மாக்களை வ்யாபித்து அதற்கும் மேலே கல்யாண குணங்களால் ஞானம் ஆனந்தம் முதலிய குணங்களை உடைய நியந்தா ஆனவனே! வளைத்துக்கொண்டு இவற்றை விடப் பெரிதாய் இருக்கும் என் ஆசையானது தீரும்படி நான் உனக்கு உள்ளே அடங்கும்படி ஸாயுஜ்ய மோக்ஷத்தைக் கொடுத்தாயே!
பதினொன்றாம் பாசுரம். தனக்குப் பலன் கிடைத்த விதத்தை வெளியிட்டு இத்திருவாய்மொழிக்குப் பலமாக, இதில் ஞானம் உடையவர்களுடைய பிறவியின் உயர்த்தியை அருளிச்செய்கிறார்.
அவாவறச்சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவாவற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவாவில் அந்தாதி இப்பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே
அடியார்களுடைய ஆசை தீரும்படி எல்லையில்லாத ஸம்ச்லேஷத்தைப் பண்ணுகையாலே துக்கத்தைப் போக்கும் அரியாய், ப்ரஹ்மாவுக்கு அந்தராத்மாவாய், அப்படியே ருத்ரனுக்கும் அந்தராத்மாவான பரமப்ராப்யபூதனைக் கூப்பிட்டு தன் ஆசை தீரப்பெற்று மோக்ஷத்தைப் பெற்ற திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்த சிறந்த அந்தாதிப் பாசுரங்களாக அமைந்த இவையாயிரமும் பரபக்திரூபமாக முடிந்த ஆசையிலே அந்தாதிகளான இப்பத்தையும் அனுஸந்தித்தவர்கள் இவ்வுலகில் பிறந்தே மேன்மையை அடைந்தவர்கள் ஆவார்கள்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org