இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 81 – 90

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

இராமானுச நூற்றந்தாதி

<< பாசுரங்கள் 71 – 80

எண்பத்தொன்றாம் பாசுரம். எம்பெருமானார் க்ருபையினாலேயே தாம் திருந்தியதை எம்பெருமானாரிடமே விண்ணப்பம் செய்து, தேவரீர் க்ருபைக்கு ஒப்பில்லை என்கிறார்.

சோர்வு இன்றி உன்தன் துணை அடிக்கீழ்த் தொண்டுபட்டவர்பால்
சார்வு இன்றி நின்ற எனக்கு அரங்கன் செய்ய தாள் இணைகள்
பேர்வு இன்றி இன்று பெறுத்தும் இராமாநுச இனி உன்
சீர் ஒன்றிய கருணைக்கு இல்லை மாறு தெரிவுறிலே

வேறு விஷயத்தில் மனது போகாமல் தேவரீருடைய சேர்த்தியழகையுடைய திருவடிகளின்கீழே அடிமையாயிருப்பவர்கள் விஷயத்தில் பொருந்தாமல் இருந்த எனக்குப் பெரியபெருமாளுடைய திருமேனி நிறத்துக்கு எதிர்நிறமான சிவப்பையும் சேர்த்தியழகையுமுடைய திருவடிகளை எப்பொழுதும் விட்டு நீங்காதபடி இன்று பெற்றுக்கொடுத்த உடையவரே! இப்படியானபின்பு, ஆராய்ந்து பார்த்தால், தேவரீருடைய கௌரவத்துடன் இருக்கும் க்ருபைக்கு ஓரொப்பில்லை.

எண்பத்திரண்டாம் பாசுரம். பெரியபெருமாள் திருவடிகளிலே நான் பொருந்தியிருக்கும்படி உபதேசம் செய்த எம்பெருமானார் எத்தனை பெரிய தார்மிகர் என்று மகிழ்ந்து சொல்கிறார்.

தெரிவு உற்ற ஞானம் செறியப் பெறாது வெம் தீவினையால்
உரு அற்ற ஞானத்து உழல்கின்ற என்னை ஒரு பொழுதில்
பொரு அற்ற கேள்வியன் ஆக்கி நின்றான் என்ன புண்ணியனோ
தெரிவு உற்ற கீர்த்தி இராமாநுசன் என்னும் சீர் முகிலே

ஸத் மற்று அஸத் விஷயங்களில் ஊற்றத்தைக் கொண்டிருக்கும் ஞானத்தைச் சேரப்பெறாமல், மிகவும் க்ரூரமான கர்மத்தாலே ஒரு பொருளாக உருவாகாத ஞானத்தைப் பற்றி, ஒன்றிலும் நிலையற்றுத் திரிகிற என்னை, ஒரு க்ஷணப் பொழுதில் ஒப்பில்லாத கேள்வி ஞானத்தையுடையனாகும்படிப் பண்ணி, பூமியிலே வந்து அவதரித்தருளினார். ப்ரகாசமாய் இருக்கும் குணத்தாலே வந்த புகழையுடையவராய் பரம உதாரரான எம்பெருமானார் என்ன தார்மிகரோ?

எண்பத்துமூன்றாம் பாசுரம். எல்லாருக்கும் சரணாகதி பொதுதானே என்று எம்பெருமானார் கேட்க, நான் ப்ரபத்தி பண்ணி பரமபதம் பெறுவார் கூட்டத்தில் இல்லை. தேவரீர் திருவடிகளாகிற மோக்ஷத்தை தேவரீர் வள்ளல் தன்மையாலே பெறுபவன் நான் என்கிறார்.

சீர் கொண்டு பேர் அறம் செய்து நல் வீடு செறிதும் என்னும்
பார் கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லேன் உன் பத யுகமாம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார் கொண்ட வண்மை இராமாநுச இது கண்டு கொள்ளே

சமம், தமம் முதலியவை ஆகிஞ்சந்யம், அநந்யகதித்வம் ஆகிய தன்மைகளை உடையவராய் பரம தர்மமாகிற ப்ரபத்தியைப் பண்ணி, பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷத்தை அடையவேண்டும் என்னும் பூமியெங்கும் பரவியிருக்கும் பெருமையையுடைய பகவத் ப்ரபன்னருடைய கூட்டத்தில் நான் இல்லை. உடையவரே! தேவரீருடைய திருவடிகளிரண்டுமாகிற எல்லா விதத்திலும் உயர்ந்த மோக்ஷத்தை எளிதாக அடைவேன். அதுக்கு மேகத்தைப்போன்ற தேவரீருடைய வள்ளல் தன்மையே காரணம். இதை தேவரீரே பார்த்துக்கொள்ளலாமே!

எண்பத்துநான்காம் பாசுரம். மேலே பெறவேண்டியது இன்னும் இருக்க, இதுவரை பெற்ற பேற்றுக்கு எல்லை உண்டோ என்கிறார்.

கண்டுகொண்டேன் எம் இராமாநுசன் தன்னை காண்டலுமே
தொண்டுகொண்டேன் அவன் தொண்டர் பொன் தாளில் என் தொல்லை வெம் நோய்
விண்டுகொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய்மடுத்து இன்று
உண்டுகொண்டேன் இன்னம் உற்றன ஓதில் உலப்பு இல்லையே

என்னைக் காப்பாற்ற வந்த, என்னுடைய ஸ்வாமியான எம்பெருமானாரை உள்ளபடி கண்டுகொண்டேன். இப்படிப் பார்த்த அளவிலே அவருக்காகவே வாழ்பவர்களுடைய அழகிய திருவடிகளில் அடிமைப்பட்டேன். என்னுடைய அநாதியான, மிகவும் க்ரூரமான கர்மங்களை நீக்கிக் கொண்டேன். அவருடைய குணங்களாலே நிறைந்த கடலை பெரிய ஆசையுடன் இன்று அனுபவித்தேன். இன்னமும் நான் பெற்ற விஷயங்களைச் சொல்லப் பார்த்தால் அதற்கு ஒரு முடிவில்லை.

எண்பத்தைந்தாம் பாசுரம். எம்பெருமானாரைக் கண்டு கொண்டேன் என்றீர், அவன் தொண்டர் பொற்றாளில் தொண்டு கொண்டேன் என்றீர், இவற்றில் உமக்கு எதில் அதிக ஈடுபாடு என்று கேட்க எம்பெருமானாருக்காகவே வாழ்கின்ற அடியார்கள் திருவடிகளைத் தவிர என் ஆத்மாவுக்கு வேறொரு பற்றில்லை என்கிறார்.

ஓதிய வேதத்தின் உட்பொருளாய் அதன் உச்சி மிக்க
சோதியை நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர்
பேதைமை தீர்த்த இராமாநுசனைத் தொழும் பெரியோர்
பாதம் அல்லால் என் தன் ஆர் உயிர்க்கு யாதொன்றும் பற்று இல்லையே

தாங்கள் கற்றுக்கொண்டிருக்கிற வேதத்தினுடைய உட்பொருளாய் அந்த வேதசிரஸ்ஸான வேதாந்தத்திலே எல்லையில்லாமல் ப்ரகாசிப்பவனை நமக்கு நாதன் என்று அறியாதே, வேறு விஷயங்களில் தொண்டுபட்டு உழன்று திரிபவர்களுடைய அறியாமையைப் போக்கியருளின எம்பெருமானாரைத் தொழுகையே அடையாளமான பெருமையையுடையவர்களுடைய திருவடிகளைத் தவிர என் ஆத்மாவுக்கு வேறு எதும் பற்றில்லை.

எண்பத்தாறாம் பாசுரம். முன்பு உலக விஷயங்களில் ஈடுபட்டிருந்தவர்களிடம் அன்புகொண்டிருந்ததை நினைத்து, இனி அது செய்யேன், எம்பெருமானாரைச் சிந்திக்கும் மனஸ்ஸுடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் என்னை ஆளவுரியவர்கள் என்கிறார்.

பற்றா மனிசரைப் பற்றி அப்பற்று விடாதவரே
உற்றார் என உழன்று ஓடி நையேன் இனி ஒள்ளிய நூல்
கற்றார் பரவும் இராமாநுசனைக் கருதும் உள்ளம்
பெற்றார் எவர் அவர் எம்மை நின்று ஆளும் பெரியவரே

ஒன்றுக்கும் மதிப்பில்லாத தாழ்ந்த மனிதர்களை அடைந்து, அந்தப் பற்று விடாமல் நிற்கிறவர்களையே உறவினர்கள் என்று நினைத்து அவர்பின்னே திரிந்துழன்று அவர்கள் முகத்திலே எப்பொழுது விழிப்போம் என்று ஓடி, அவர்கள் விஷயத்தில் மனமுடைந்து இருந்தேன். தத்வம், ஹிதம், புருஷார்த்தம் ஆகியவைகளை மிகத் தெளிவாகக் காட்டும் சாஸ்த்ரங்களை கற்றிருப்பவர்கள் தங்கள் கல்விக்கு ப்ரயோஜனம் இது என்று அன்புடன் கொண்டாடும் எம்பெருமானாரை நினைப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கும் மனதை நிதிபோலே பெற்றிருப்பவர்கள் யாவர் சிலர் உளரோ அவர்கள் குலம் கோத்ரம் ஆகியவை எதுவாக இருந்தாலும் அவர்கள் நம்மை ஆத்மா உள்ளவரை ஆளக்கூடிய மஹானுபாவர்கள்.

எண்பத்தேழாம் பாசுரம். இந்தக் கலிகாலம் உம்முடைய உறுதியைக் குலைத்து விடுமே என்று சொல்ல அது ஆக்ரமிப்பது எம்பெருமானாரால் கொடுக்கப்பட்ட ஞானத்திலே ஈடுபடாதவர்களை என்கிறார்.

பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன் குணங்கட்கு
உரியசொல் என்றும் உடையவன் என்று என்று உணர்வில் மிக்கோர்
தெரியும் வண் கீர்த்தி இராமாநுசன் மறை தேர்ந்து உலகில்
புரியும் நல் ஞானம் பொருந்தாதவரை பொரும் கலியே

பேசுகைக்கீடான பெரிய ஞானம் சக்தி ஆகியவைகளையுடைய பெரியவர் சொல்லிலும் (இவர்களும் பேசி முடித்து விட முடியாது), அஜ்ஞானம் அசக்தி ஆகியவற்றுக்கு எல்லைநிலமாக இருக்கும் அறிவிலிகள் சொல்லிலும் (இவர்களும் பின்வாங்கவேண்டாம்), இப்படித் தங்கள் குணங்களுக்கீடாகப் பேசும்படியிருக்கிற தம்முடைய ஸ்வரூப, ரூப, குணங்கள் ஆகியவற்றுக்கு வாசகமான வார்த்தைகளை எல்லாக் காலத்திலும் பெற்றவராயிருப்பவர் என்று உயர்ந்த ஞானத்தைப் பெற்றவர்கள் எப்பொழுதும் நினைக்கும் திவ்ய கீர்த்தையையுடையவரானவர் எம்பெருமானார். அவர் வேதத்தை ஆராய்ந்து லோகத்திலே கொடுத்தருளின உயர்ந்த ஞானத்தில் சேராதவர்களை கலி மேல்விழுந்து துன்புறுத்தும்.

எண்பத்தெட்டாம் பாசுரம். எம்பெருமானாராகிய ஸிம்ஹம் குத்ருஷ்டிகளாகிற புலிகளை அழிப்பதற்காக இவ்வுலகில் வந்து அவதரித்த விதத்தைச் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணுவேன் என்கிறார்.

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
ஒலி மிக்க பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து அதனால்
வலி மிக்க சீயம் இராமாநுசன் மறைவாதியராம்
புலி மிக்கது என்று இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே

உழவு வேலைகளின் ஆரவாரத்தால் மிகுந்த செந்நெற்கள் விளையும் வயல்களுடைய திருக்குறையலூருக்குத் தலைவராய் சாஸ்த்ர ரூபமான ப்ரபந்தங்களை அருளிச்செய்த வைபவத்தையுடையவரான திருமங்கை ஆழ்வாருடைய ஒலியையுடைய திருமொழியை நன்றாக உண்டு அனுபவித்து தம்முடைய திருவுள்ளம் பூரித்து அதனால் மிகவும் பலம்மிக்க ஸிம்ஹம்போலேயிருக்கிற எம்பெருமானார் வேதத்தை ஒத்துக்கொண்டு அதற்குத் தவறான வாதங்களைப் பண்ணி லோகத்தை அழிக்கும் குத்ருஷ்டிகளாகிற புலிகள் மிகுந்தன என்று உயர்ந்த மதத்தை தூஷிக்கும் குத்ருஷ்டிகள் வாழும் இந்த பூமியிலே அவர்கள் மதத்தை தூஷிப்பவராய் வந்து அவதரித்த விதத்தைப் போற்றுவேன்.

எண்பத்தொன்பதாம் பாசுரம். “போற்றுவன்” என்று தொடங்கியவர் அது விஷயமாகத் தனக்கு ஏற்பட்ட அச்சத்தை எம்பெருமானாரிடத்தில் விண்ணப்பம் செய்கிறார்.

போற்று அரும் சீலத்து இராமாநுச நின் புகழ் தெரிந்து
சாற்றுவனேல் அது தாழ்வு அது தீரில் உன் சீர் தனக்கு ஓர்
ஏற்றம் என்றே கொண்டு இருக்கிலும் என் மனம் ஏத்தி அன்றி
ஆற்றகில்லாது இதற்கு என் நினைவாய் என்றிட்டு அஞ்சுவனே

போற்றி முடிப்பதற்கு அரிதான, சீல குணத்தையுடைய எம்பெருமானாரே! தேவரீருடைய கல்யாணகுணங்களைப் புரிந்துகொண்டு லோக ப்ரஸித்தமாகப் பேசுவேனாகில் அது இழிவாகத்தான் இருக்கும். நான் அப்படிப் பேசுவதை விட்டால் தேவரீர் குணங்களுக்கு அது பெருமையாகவே இருக்கும் என்று நான் இருந்தாலும் என் மனமானது தேவரீர் குணங்களை ஸ்தோத்ரம் செய்யாமல் தரிக்க மாட்டேன் என்கிறது. இப்படி இருக்கும் என் நிலைக்கு தேவரீர் என்ன திருவுள்ளம் பற்றுகிறீர் என்று அஞ்சி நின்றேன்.

தொண்ணூறாம் பாசுரம். இவர் அச்சம்போகும்படி எம்பெருமானார் குளிரக் கடாக்ஷிக்க அத்தாலே பயம் நீங்கியவராய் முக்கரணத்தில் ஏதேனுமொன்றிலும் எம்பெருமானார் விஷயத்திலே ஒரு நன்மையைச்செய்து பிழைத்துப் போகாமல், அறிவுள்ள ஆத்மாக்கள் இப்படி பிறவித்துன்பத்தை அனுபவிக்கிறார்களே என்று வருந்துகிறார்.

நினையார் பிறவியை நீக்கும் பிரானை இந்நீள் நிலத்தே
எனை ஆள வந்த இராமாநுசனை இருங்கவிகள்
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே

தம்மை நினைத்தவர்களுடைய பிறவியைப் போக்கும் உதவியைச் செய்யக்கூடிய இவரை நினைப்பவர்களில்லை. இந்த பூமிப்பரப்பெல்லாம் இருக்க, நான் கிடந்த இடம் தேடிவந்த எம்பெருமானாரை அந்த குணங்களை வெளியிடும் பெரிய கவிகளைத் தொடுப்பவர்கள் இல்லை. தாங்கள் தொடுக்காவிட்டாலும், அப்படி அவர் விஷயமாகக் கவிகளைத் தொடுக்கும் பெரிய பெருமையையுடையவர்கள் திருவடிகளில் பூமாலைகளையும் ஸமர்ப்பிக்க்கிறார்கள் இல்லை. இத்தனைக்கும் தகுதியுடைய மனுஷ்ய ஜன்மத்தைப் பெற்றிருப்பவர்கள் அறிவுகேடு மிகுந்து பிறப்பிலே மூழ்கித் துன்புறுகிறார்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  https://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment