ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
எழுபத்தொன்றாம் பாசுரம். இப்படி விண்ணப்பம் செய்தவாறே எம்பெருமானாரும் ஒக்கும் என்று இசைந்து தம்முடைய விசேஷ கடாக்ஷத்தாலே இவருடைய ஞானத்தை தன் விஷயத்திலே ஊன்றியிருக்குமாறு பெரிதாக்க, தமக்குக் கிடைத்த பேற்றை நினைத்துப் பார்த்து த்ருப்தி அடைகிறார்.
சார்ந்தது என் சிந்தை உன் தாள் இணைக்கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்தது அத்தாமரைத் தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே
தீர்ந்தது என் செய்கை முன் செய்வினை நீ செய்வினை அதனால்
பேர்ந்தது வண்மை இராமாநுச எம் பெருந்தகையே
வள்ளல் தன்மையையுடையராய் அதாலே என்னை எழுதிக்கொண்ட பெருமையையுடைய உடையவரே! என்னுடைய நிலையில்லாத நெஞ்சானது வகுத்த தலைவரான தேவரீருடைய ஒன்றுக்கொன்று ஒப்பான திருவடிகளின்கீழே பொருந்திவிட்டது, அந்த மிகவும் இனிமையான திருவடிகளுக்கு அன்புதான் எல்லையில்லாதபடிக்கு மிகுந்தது. என்னுடைய செயல்கள் தேவரீருடைய குணங்களுக்கே அற்றுத்தீர்ந்தது. முற்காலத்தில் செய்த வினைகள், அதைப் போக்கக்கூடிய தேவரீர் செய்த அந்தச்செயலாலே மலைபெயர்ந்தாப்போலே விட்டகன்றன.
எழுபத்திரண்டாம் பாசுரம். எம்பெருமானார் தம்முடைய வள்ளல் தன்மையாலே செய்த மற்றொரு பேருபகாரத்தை நினைத்து மிகவும் மகிழ்கிறார்.
கைத்தனன் தீய சமயக் கலகரை காசினிக்கே
உய்த்தனன் தூய மறைநெறி தன்னை என்று உன்னி உள்ளம்
நெய்த்த அன்போடு இருந்து ஏத்தும் நிறை புகழோருடனே
வைத்தனன் என்னை இராமாநுசன் மிக்க வண்மை செய்தே
எம்பெருமானார் மிகப்பெரிய வள்ளல் தன்மையைப் பண்ணி, தீயவைகளான ஸமயங்களைப் பற்றி நின்று கலஹம் செய்கிறவர்களை ஒழித்தருளினார். பரிசுத்தமான வேதமார்க்கத்தை இவ்வுலகிலே நடத்தியருளினார். இதை நினைத்துப் பார்த்து, நெஞ்சிலே ஒரு அன்பு பிறக்க, அந்த அன்புடனேயிருந்து ஸ்தோத்ரம் பண்ணும் பரிபூர்ணமான குணத்தையுடையவர்கள் கூட்டத்திலே இவனும் ஒருவன் என்று எண்ணும்படி என்னை வைத்தருளினார். இது என்ன ஆச்சர்யம்!
எழுபத்துமூன்றாம் பாசுரம். எம்பெருமானார் அருளிய ஞானம், ப்ரேமம் முதலியவை இருப்பதால் நீர் தரித்திருக்கலாமே என்று கேட்க, எம்பெருமானாரையே எப்பொழுதும் நினைத்துக்கொண்டிருப்பதைத்தவிர வேறு வழியால் என்னை தரித்துக்கொள்ள முடியாது என்கிறார்.
வண்மையினாலும் தன் மா தகவாலும் மதி புரையும்
தண்மையினாலும் இத் தாரணியோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை உன்னும்
திண்மை அல்லால் எனக்கு இல்லை மற்று ஓர் நிலை தேர்ந்திடிலே
உயர்ந்த அர்த்தம் என்று பார்க்காமல் எல்லோருக்கும் உபதேசிக்கும் வள்ளல் தன்மையாலும், மற்றவர்கள் துன்பம் கண்டு பொறுக்காத பெரிய க்ருபையாலும், துன்பத்தைப் போக்குபவனும் இன்பத்தைக் கொடுப்பவனுமான சந்த்ரனைப் போலேயிருக்கிற குளிர்ச்சியான அருளாலும், தங்களுக்கு அறிவில்லை என்பதை உணராத இவ்வுலகில் உள்ளவர்களுக்குத் தாமே ரக்ஷகராய்க்கொண்டு சிறந்ததாய், உயர்ந்ததாய் இருக்கும் ஞானத்தை உபதேசித்த எம்பெருமானாரை ரக்ஷகராக நினைத்திருக்கும் பலத்தைத்தவிர ஆராய்ந்துபார்க்கில் எனக்கு வேறொரு தரிப்பில்லை.
எழுபத்துநான்காம் பாசுரம். மற்ற மதத்தவர்களை ஜயித்த விஷயத்தில் எம்பெருமானைக் காட்டிலும் எம்பெருமானார் அதை எளிதாகச் செய்தருளின விதத்தை நினைத்துப் பார்த்து மிகவும் மகிழ்கிறார்.
தேரார் மறையின் திறம் என்று மாயவன் தீயவரைக்
கூர் ஆழி கொண்டு குறைப்பது கொண்டல் அனைய வண்மை
ஏர் ஆர் குணத்து எம் இராமாநுசன் அவ்வெழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது அப்போது ஒரு சிந்தைசெய்தே
நித்யத்வம், அபௌருஷேயத்வம் போன்ற பல சிறப்புகளைப் பெற்ற வேதத்தினுடைய நிலையைப் புரிந்துகொண்டு ஒத்துக்கொள்ளாதவர்களை என்று ஆச்சர்ய ஞானம் மற்றும் சக்திகளையுடையவனான எம்பெருமான் தன்னுடைய ஆணையை மீறுகிறவர்களாய் தீய நடத்தை உள்ளவர்களை அழிப்பது தன்னுடைய கூரிய திருவாழியாலே. எல்லோருக்கும் மழையைப் பொழியும் மேகத்தைப்போலே இருக்கும் வள்ளல் தன்மையையுடையவராய் மேலும் பல கல்யாண குணங்களையுடையராய் நமக்குத் தலைவராய் இருக்கும் எம்பெருமானார் அந்த உயர்ந்த வேதத்தில் நம்பிக்கை இல்லாததாலும் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதாலும் பொருந்தாமல் இருப்பவர்களை ஜயிப்பது அவ்வப்பொழுது ஏற்படும் யுக்திகளாலே (யோசனைகளாலே).
எழுபத்தைந்தாம் பாசுரம். இப்படி நீர் நம்முடைய குணங்களில் ஈடுபடுவது எம்பெருமானின் சிறப்பைப் பார்க்கும் வரையே என்று எம்பெருமானார் சொல்வதாகக் கொண்டு, எம்பெருமான் தன்னழகோடே நேரே வன்து உன்னைவிடேன் என்று சொன்னாலும், தேவரீருடைய குணங்களே என்னை மொய்த்து ஈடுபத்தும் என்கிறார்.
செய்த்தலைச் சங்கம் செழு முத்தம் ஈனும் திரு அரங்கர்
கைத்தலத்து ஆழியும் சங்கமும் ஏந்தி நம் கண்முகப்பே
மொய்த்து அலைத்து உன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே
மொய்த்து அலைக்கும் வந்து இராமாநுச என்னை முற்றும் நின்றே
வயல்வெளிகளில் சங்குகளானவை அழகிய முத்துக்களை ப்ரஸவிக்கும் கோயிலிலே (திருவரங்கம்) நித்யவாஸம் பண்ணும் பெரிய பெருமாள் அழகிய திருக்கைகளில் திருவாழியும் சங்கமும் ஏந்திக்கொண்டு என் முன்னே ஸாக்ஷாத்கரித்து தம்முடைய அழகு முதலியவைகளால் தேவரீரிடத்திலே இருக்கும் என் நிலையை கலங்கப் பண்ணி “உன்னை விடேன்” என்று ஆணையிட்டாலும், தேவரீருடைய கல்யாண குணங்களே வந்து என்னை எல்லாவிடத்திலும் மேல்விழுந்து சிறப்பைக் காட்டி இழுக்கும்.
எழுபத்தாறாம் பாசுரம். இப்படிச் சொல்லக் கேட்ட எம்பெர்ருமானார் மிகவும் உகந்தருளி இவர்க்கு எத்தைச் செய்வோம் என்று எழுந்தருளி இருக்கிறபடியைக் கண்டு தம்முடைய ஆசையை உறுதியாகச் சொல்லி வெளியிடுகிறார்.
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொன்
குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்
உன்தனக்கு எத்தனை இன்பம் தரும் உன் இணைமலர்த் தாள்
என்தனக்கும் அது இராமாநுச இவை ஈந்தருளே
ஒருபடிப்பட்டு நின்ற அழகிய கீர்த்தியும், ஒழுகிக் கொண்டிருக்கும் நீண்ட நீர்நிலைகளும் நிறைந்திருப்பதான திருவேங்கடம் என்னும் திருநாமத்தையுடைய விரும்பத்தக்க திருமலையும், ஸ்ரீவைகுண்டம் என்கிற திருநாடும், அடியார்களை ரக்ஷிப்பதற்காக வந்து சயனித்திருக்கும் திருப்பாற்கடல் என்று பேரறிஞர்கள் கொண்டாடும் இடமும், தேவரீருக்கு எவ்வளவு ஆனந்தத்தை விளைக்கும். அதுபோலே தேவரீருடைய சேர்த்தியழகையுடைத்தாய், இனிமையாய் இருக்கும் திருவடிகள் எனக்கும் அவ்வளவு ஆனந்தத்தை விளைக்கும் . ஆனபின்பு, உடையவரான தேவரீர் இத்திருவடிகளை எனக்குத் தந்தருள வேண்டும்.
எழுபத்தேழாம் பாசுரம். தான் விரும்பியபடியே எம்பெருமானார் தம் திருவடிகளைக் கொடுத்தருள, அதனால் மிகவும் த்ருப்தி அடைந்தவராய், அவர் செய்த உபகாரங்களை நினைத்து இனிமேலும் என்ன செய்தருளுவதாக இருக்கிறீர் என்று கேட்கிறார்.
ஈந்தனன் ஈயாத இன்னருள் எண் இல் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் அம்மறைப் பல் பொருளால் இப்படி அனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறியக்
காய்ந்தனன் வண்மை இராமாநுசற்கென் கருத்து இனியே
எம்பெருமானார் இதற்கு முன்பு ஒருவர்க்கும் கொடுத்திராத உயர்ந்ததான அருளை எனக்குக் கொடுத்தார். எண்ணிலடங்காத வேதத்தைத் தவறாக நடத்தும் குத்ருஷ்டி மதங்களை அந்த வேதத்திலே காட்டப்பட்ட பல அர்த்தங்களைக் கொண்டு தள்ளிவிட்டார். இவ்வுலகெல்லாம் தம்முடைய கீர்த்தியாலே பரவியிருந்தார். என்னுடைய கர்மங்களை வாஸனையோடு போகும்படி ஓட்டினார். பரம உதாரரான எம்பெருமானாருக்குத் திருவுள்ளத்தில் நம் விஷயமாகச் செய்யவேண்டி ஓடுகிறது எது?
எழுபத்தெட்டாம் பாசுரம். எம்பெருமானார் தன்னைத் திருத்துகைக்காகப் பட்ட வருத்தங்களைச் சொல்லி, இப்படி என்னை தேவரீர் திருத்தி பகவத் விஷயத்துக்கு என்று ஆக்கியபின்பு வேறு பொய்யர்த்தங்கள் என் நெஞ்சுக்கு ஏற்காது என்கிறார்.
கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி கருது அரிய
வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ இந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் என் நெஞ்சில்
பொருத்தப்படாது எம் இராமாநுச மற்று ஓர் பொய்ப்பொருளே
வெளியே இருந்து திருத்தமுடியாது என்றெண்ணி என் நெஞ்சில் வந்து புகுந்து உள்ளே இருக்கும் ஆத்மாபஹாரத்தைப் (ஆத்மாவை ஸ்வதந்த்ரன் என்று இருக்கும் இருப்பை) போக்கி வேறு சிலர்க்கு நினைக்கவும் அரிதாயிருக்கும் முயற்சியாலே நான் அறிந்தால் தடுத்துவிடுவேன் என்று எனக்குத் தெரியாதபடி மிகவும் மறைத்து தேவரீர் தரிசு நிலத்தை விளைநிலம் ஆக்குவதைப்போலே திருத்தி இவ்வுலகத்திலே தேவரீருக்கு விருப்பமான ச்ரிய:பதிக்குக் கைங்கர்யத்துக்கு ஆளாம்படி பண்ணின பின்பு என் நெஞ்சில் அதற்குப் புறம்பாயிருக்கும் ஒரு பொய்யர்த்தம் பொருந்தாது.
எழுபத்தொன்பதாம் பாசுரம். உஜ்ஜீவனத்தில் ருசியிருந்தும் கிடைத்தற்கரிய ஞானத்தை இழந்து இவ்விஷயத்துக்கு வெளியே இருக்கும் லௌகிகர்கள் நிலையை நினைத்து வருந்துகிறார்.
பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து இந்தப் பூதலத்தே
மெய்யைப் புரக்கும் இராமாநுசன் நிற்க வேறு நம்மை
உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கு யாது என்று உலர்ந்து அவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்ளோர் நல் அறிவு இழந்தே
ஆத்மாவைப்பற்றிய பொய்யான ஞானத்தை மேன்மேலும் வெளியிடும் பாஹ்ய குத்ருஷ்டி மதங்களின் கொள்கைகளை ஓட்டி இவ்வுலகிலே உண்மை விஷயங்களை நடத்தியருளும் எம்பெருமானார் யாராவது ஸத்விஷயத்தில் ஆசைகொண்டு வருவார்களா என்று நிற்க, தன்னை ஒத்தவராக நினைத்து அவரை விரும்பாமல், வேறே நம்மை உஜ்ஜீவிப்பிக்கவல்ல தேவதை இங்கே ஏது என்று தேடி மன வருத்ததாலே உடம்பும் உலர்ந்து நல்ல ஞானத்தை இழந்து, இவ்வுலகிலுள்ளோர் வீணே ஸந்தேஹத்துடன் நின்றார்கள். ஐயோ! இவர்கள் இப்படி இருப்பதே!
எண்பதாம் பாசுரம். மற்றவர்களை விடும், உம்முடைய நிஷ்டை என்ன என்று கேட்க, தேவரீர் விஷயத்தில் ஈடுபட்டிருப்பவர்களிடம் அன்புடையவர்களுக்கு நான் தொடர்ந்து அடிமை செய்வேன் என்கிறார்.
நல்லார் பரவும் இராமாநுசன் திருநாமம் நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள் எவர் அவர்க்கே
எல்லா இடத்திலும் என்றும் எப்போதிலும் எத்தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வு இன்றியே
நல்லோர்கள் எல்லாரும் இருந்த இடத்திலே இருந்து ப்ரேமபரவசராய்க் கொண்டாடும்படியான எம்பெருமானாருடைய திருநாமத்தைத் தங்களுக்குத் தஞ்சமாக நம்பவல்லார்கள் நிலையை எப்பொழுதும் நினைத்திருப்பவர்கள் யாவர் சிலர் உளரோ, அவர்களுக்கே எல்லா இடத்திலும், எல்லாக் காலத்திலும், எல்லா நிலைகளிலும் எல்லா விதமான கைங்கர்யங்களும் வாக்காலும் மனஸ்ஸாலும் உடம்பாலும் பிரியாமல் செய்வேன்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org