இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 61 – 70

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

இராமானுச நூற்றந்தாதி

<< பாசுரங்கள் 51 – 60

அறுபத்தொன்றாம் பாசுரம். எம்பெருமானாரின் குணங்களின் வைபவம் எப்படி இருக்கும் என்று கேட்க அதை விவரித்தருளுகிறார்.

கொழுந்துவிட்டு ஓடிப் படரும் வெம் கோள் வினையால் நிரயத்து
அழுந்தியிட்டேனை வந்து ஆட்கொண்ட பின்னும் அரு முனிவர்
தொழும் தவத்தோன் எம் இராமாநுசன் தொல் புகழ் சுடர் மிக்கு
எழுந்தது அத்தால் நல் அதிசயம் கண்டது இருநிலமே

எம்பெருமானுக்கும் பெறுதற்கரியவர்களாய் எப்பொழுதும் அவனையே நினைத்துக்கொண்டிருக்கும் முனிவர்கள் தம் திருவடிகளிலே வந்து வணங்கும்படி இருப்பவராய் ப்ரபத்தி என்னும் பெரிய தவத்தையுடையவரான நமக்கு ஸ்வாமியான எம்பெருமானாரின் கல்யாண குணங்கள் மேன்மேலும் கிளர்ந்து, விரைந்தோடிப் பரவுவதாய் இருக்கும். அந்த குணங்கள், க்ரூரமாய் ப்ரபலமாயிருக்கும் கர்மங்களாலே எல்லையில்லாத துன்பம் நிறைந்த ஸம்ஸாரம் என்னும் நரகத்திலே மூழ்கியிருக்கும் என்னை அடிமையாக்கிக்கொண்ட பின்னும், அத்தோடே நின்றுவிடாமல் இன்னமும் இப்படி யாராவது வருவார்களா என்று தேடிக்கொண்டு எழுந்தன,

அறுபத்திரண்டாம் பாசுரம். தம்முடைய கர்ம ஸம்பந்தம் நீங்கப்பெற்றதால் வந்த த்ருப்தியை அருளிச்செய்கிறார்.

இருந்தேன் இரு வினைப் பாசம் கழற்றி இன்று யான் இறையும்
வருந்தேன் இனி எம் இராமாநுசன் மன்னு மா மலர்த் தாள்
பொருந்தா நிலை உடைப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப்
பெருந் தேவரைப்பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே

நமக்கு நாதரான எம்பெருமானாருடைய ஒன்றுக்கொன்று ஒப்பாய், பரம பூஜ்யமாய், மிகவும் இனிமையாய் இருக்கும் திருவடிகளில் சேராத தன்மையையுடையரான துர்மானிகளுக்கு [தாழ்ச்சியை உடையவர்களுக்கு] சிறிதளவும் அனுகூலமான செயல்களைச் செய்யாத, நித்யஸூரிகளுக்கு ஸமமானவர்களான ஸ்ரீவைஷ்ணவர்களை வாயால் கொண்டாடும் பெரிய பெருமையை உடையவர்களுடைய திருவடிகளைப்பற்றி இன்று புண்யம் மாற்றும் பாபம் என்று இரண்டு விதமாய் இருக்கும் கர்மம் என்னும் கட்டிலிருந்து விடுபட்டவனாய் த்ருப்தியுடன் ஒரு கவலையும் இல்லாமல் இருந்தேன். இனி, சிறிதளவும் துக்கம் இல்லாமல் இருப்பேன்.

அறுபத்துமூன்றாம் பாசுரம். தேவையற்றது விலகிய பிறகு நாம் விரும்பும் கைங்கர்யத்துக்குக் காரணமான தேவரீர் திருவடிகளில் மிகுந்த ஆசையையும் தேவரீரே தந்தருள வேண்டும் என்கிறார்.

பிடியைத் தொடரும் களிறு என்ன யான் உன் பிறங்கிய சீர்
அடியைத் தொடரும்படி நல்க வேண்டும் அறு சமயச்
செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்து ஓட வந்து இப்
படியைத் தொடரும் இராமாநுச மிக்க பண்டிதனே

தூறு மண்டிக் கிடக்கிற ஆறு விதமான பாஹ்ய (வேதத்தை ஒத்துக்கொள்ளாத) ஸமயங்களின் வழி நடப்பதற்குக் காரணமான அறிவுகேட்டையுடையவர்கள் வீழ்த்தப்பட்டவர்களாய் அஞ்சி ஓடும்படியாக வந்து இந்த உலகில் உள்ளவர்களை ஏற்றுக்கொள்வதற்காக ஒரு வாய்ப்புக் கிடைக்குமா என்று பார்த்துத் தொடருபவராய், எல்லையில்லாத ஞானத்தையுடையவரான உடையவரே! பெண்யானை விஷயத்தில் கொண்டிருந்த பேரன்பாலே அதையே பின்பற்றித் திரியும் ஆண்யானையைப்போலே நானும் தேவரீருடைய அழகு, நறுமணம், மென்மை போன்ற குணங்களெல்லாம் ப்ரகாசிக்கும் திருவடிகளைப் பின்தொடரும் தன்மையை தேவரீரே தந்தருள வேண்டும்.

அறுபத்துநான்காம் பாசுரம். பாஹ்ய குத்ருஷ்டிகளாகிற மதத்தில் இருந்து வாதம்செய்ய வருபவர்களைப் பார்த்து ராமானுச முனியாகிற யானை உங்களை நாடிக்கொண்டு பூமியிலே வந்து எதிர்த்தது. இனி உங்கள் வாழ்வு முடிந்தது என்கிறார்.

பண் தரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமாநுசமுனி வேழம் மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழுந்தண்டம் ஏந்தி குவலயத்தே
மண்டி வந்து ஏன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வு அற்றதே

எங்களுக்கு விதேயமாய் (சொல்படி) இருக்கும் இராமானுச முனியாகிற யானை, நம்மாழ்வார் பண்ணாலே (இசை, ராகம்) உபகரித்தருளின செவ்வித்தமிழான திருவாய்மொழியால் விளைந்த ஆனந்தமானது ஒழுகும் மதமாய்க்கொண்டு, விரிவாக, உள்ளதை உள்ளபடி சொல்லும் உயர்ந்ததான வேதமாகிற அழகிய தண்டையும் ஏந்திக்கொண்டு நீங்கள் ராஜ்யம் செய்யும் பூமியிலே ஒருவராலும் தடுக்க முடியாதபடி தள்ளிக்கொண்டு வந்து உங்களை எதிர்த்தது. வாதம் செய்பவர்களே! சிஷ்யர்கள் ப்ரசிஷ்யர்கள் என்று வளர்ந்திருக்கும் உங்களுடைய வாழ்வு முடிந்தது.

அறுபத்தைந்தாம் பாசுரம். இப்படி எழுந்தருளின எம்பெருமானார் பாஹ்ய குத்ருஷ்டிகளை ஜயிப்பதற்காக உபகரித்தருளின ஞானத்தால் பெற்ற பலன்களை நினைத்துப் பார்த்து மகிழ்கிறார்.

வாழ்வு அற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம்
தாழ்வு அற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல்
கூழ் அற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தினர்க்கு அந்
நாழ் அற்றது நம் இராமாநுசன் தந்த ஞானத்திலே

நம்முடைய நாதரான எம்பெருமானார் உகபரித்தருளின ஞானத்தால் பழையதாய் இருக்கும் வாதங்களை உடைய பாஹ்ய குத்ருஷ்டிகளுக்கு வாழ்வு போனது. எல்லாக் காலத்திலும் வைதிகர்களுடைய குறை போனது. பூமி பாக்யத்தைப் பெற்றது. தத்வங்களைக் காட்டும் சாஸ்த்ரங்களில் இருந்த ஸந்தேஹங்கள் எல்லாம் தீர்ந்தன. எல்லா தோஷங்களுடனும் கூடிய தன்மையையுடையவர்களுக்கு அந்தக் குற்றம் எல்லாம் தீர்ந்தன. என்ன ஒரு வைபவமான ஞானம்!

அறுபத்தாறாம் பாசுரம். எம்பெருமானார் மோக்ஷத்தைக் கொடுப்பவராக இருப்பதை அனுபவிக்கிறார்.

ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள்தொறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த இராமாநுசன் தன்னை எய்தினர்க்கு அத்
தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே

ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் மோக்ஷம் கொடுப்பது ஞானத்தின் முதிர்ந்த நிலையான பக்தியையுடையவராய் எப்படி எம்பெருமானை அனுபவிப்போம், அவனுக்குத் தொண்டு செய்வோம் என்று நாள்தோறும் சிதிலமடைபவர்களுக்கு. மஹாபாபியான என்னுடைய மனஸ்ஸில் தோஷத்தைப் போக்கியருளின எம்பெருமானார் தம்மை அடைந்தவர்களுக்கு அந்த மோக்ஷ ஸ்தானத்தைக் கொடுப்பது தம்முடைய க்ருபை என்னும் ஸாதனத்தை அவர்களுக்குக் கைம்முதலாகக் கொடுத்து. இது என்ன ஒரு ஆச்சர்யமான வைபவம்!

அறுபத்தேழாம் பாசுரம். நான் பகவத் விஷயத்துக்காக இருக்கும் கரணங்களை வேறு விஷயத்தில் உபயோகப்படுத்தாமல் இருக்கும்படி எம்பெருமானார் தன் உபதேசத்தாலே என்னை ரக்ஷித்திராவிடில் நமக்கு வேறு ரக்ஷகர் ஆர் என்று தன் விஷயத்தை நினைத்து மிகவும் மகிழ்கிறார்.

சரணம் அடைந்த தருமனுக்காப் பண்டு நூற்றுவரை
மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரணம் இவை உமக்கு அன்று என்று இராமாநுசன் உயிர்கட்கு
அரண் அங்கு அமைத்திலனேல் அரண் ஆர் மற்று இவ்வாருயிர்க்கே

தான் கொடுத்த கரணங்களைக் கொண்டு திருவடிகளை ஆச்ரயித்த தர்மபுத்ரனுக்காக முற்காலத்தில் தன்னை வணங்காதவர்களான துர்யோதனன் முதலான நூற்றுவரையும் மரணத்தை அடையும்படி செய்த ஆச்சர்ய சக்தியையுடையனான ஸர்வேச்வரன் தன்னைச் சரணடைவதற்காக வைத்த கரணங்கள் இவை. உங்களுடைய அனுபவத்துக்கென்று இல்லை. இவ்வாறு நேராகவும் எதிர்மறையாகவும் இந்த அர்த்தத்தை வெளியிட்டு, அவ்வாறு கரணங்களை வேறு விஷயத்தில் ஈடுபடுத்திய ஸமயத்தில் எம்பெருமானார் ஆத்மாக்களுக்கு ரக்ஷயையை அமைக்கவில்லை என்றால் இந்த ஆத்மாவுக்கு வேறு ஆர் ரக்ஷையிடுவது.

அறுபத்தெட்டாம் பாசுரம். இந்த ஸம்ஸாரத்திலே இருந்து கொண்டு என்னுடைய மனஸ்ஸும் ஆத்மாவும் எம்பெருமானாரின் அடியவர்கள் குணங்களிலே ஈடுபட்டது; ஆனபின்பு எனக்கு ஒப்பாக ஆருமில்லை என்கிறார்.

ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரிய
பாரினில் சொன்ன இராமாநுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என் ஆவியும் சிந்தையுமே

ஸாரதியாய் இருந்து தான் அடியார்களுக்கு அடிபணிந்தவன் என்று உலக ப்ரஸித்தமாக்கின ஆச்சர்யபூதன், அர்ஜுனன் வில்லைக் கீழே போட்டு “யுத்தம் செய்ய மாட்டேன்” என்று சொன்ன அன்று பாண்டவர்களுடையதாய் தன்னுடைய திருவடி ஸம்பந்தத்தினாலே திவ்யமான திருத்தேர்த்தட்டிலே நின்று அருளிச்செய்த ஸ்ரீகீதையின் இயற்கையான மற்றும் இனிமையான அர்த்தத்தை பூமியில் எல்லோரும் நன்றாகத் தெரிந்துகொள்ளும்படி அருளிச்செய்த எம்பெருமானாரை அடைந்திருக்கும் உயர்ந்தவர்களின் கல்யாண குணங்களிலே சென்று என் ஆத்மாவும் மனஸ்ஸும் மிகவும் ஈடுபட்டது. சொல்லப்பார்த்தால் யார்தான் எனக்கு இன்று ஒப்பானவர்?

அறுபத்தொன்பதாம் பாசுரம். எம்பெருமானைக் காட்டிலும் எம்பெருமானார் தனக்குச் செய்த நன்மையை நினைத்து மிகவும் மகிழ்கிறார்.

சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள்
அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு அவை என்தனக்கு அன்று அருளால்
தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தான் அது தந்து
எந்தை இராமாநுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே

ஸ்ருஷ்டிக்கு முன்காலத்தில் முக்யமான கரணமான மனஸ்ஸோடு மற்ற எல்லா கரணங்களும் அழிந்து நாசத்தை அடைந்து அசித்திலிருந்து வேறுபடுத்தமுடியாதபடி தறைப்பட்டிருந்ததைக் (செயலிழந்து கிடந்ததை) கண்டு அக்கரணங்களை அசித்தைப் போல இருந்த எனக்கு, அக்காலத்திலே தன்னுடைய தன்னிச்சையான க்ருபையினால் மட்டுமே தந்தருளின பெரிய பெருமாளும் தம்முடைய திருவடிகளைத் தந்தருளவில்லை. எம்பெருமானார் எனக்குத் தந்தையாய் இருந்து, தாமே வந்து, தாம் அந்தத் திருவடிகளைத் தந்து ஸம்ஸாரத்தில் இருந்த என்னை எடுத்தருளினார்.

எழுபதாம் பாசுரம். இப்படி பேருபகாரத்தைச் செய்த எம்பெருமானாரைப் பார்த்து செய்த அம்சத்தைவிட இன்னும் செய்யவேண்டியது என்ன என்பதை விண்ணப்பம் செய்கிறார்.

என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து எண் இல் பல் குணத்த
உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி என்பால்
பின்னையும் பார்க்கில் நலம் உளதே? உன் பெருங்கருணை
தன்னை என் பார்ப்பர் இராமாநுச உன்னைச் சார்ந்தவரே

அநாதிகாலம் ஸம்ஸாரத்தில் இருந்து, தேவரீர் என்னை ஏற்றுக்கொண்ட பின்னும் மற்ற விஷயங்களில் ஈடுபட்டிருக்கும் என்னையும் பார்த்தருளி என்னுடைய தாழ்ந்த செயல்களையும் பார்த்தருளி தோஷத்தையே காரணமாகக்கொண்டு ஏற்றுக்கொள்ளும் எண்ணிலடங்காத பல குணங்களையுடைய தேவரீர் தம்மையும் பார்த்தருளில் தேவரீர் நிர்ஹேதுகமாக க்ருபைபண்ணியருளுவதே நல்லது. இதைத் தவிர மீண்டும் ஆராய்ந்தால் என்னிடத்தில் ஒரு நன்மை உண்டோ? அப்படி நன்மை இருந்தால் மட்டுமே கார்யம் செய்வீர் என்றால் தேவரீர் திருவடிகளை அடைந்திருப்பவர்கள் தேவரீருடைய எல்லையில்லாத க்ருபையை எப்படிப் பார்ப்பார்கள்? குறையாகப் பார்க்க மாட்டார்களா என்று கருத்து.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  https://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment