இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 11 – 20

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

இராமானுச நூற்றந்தாதி

<< பாசுரங்கள் 1 – 10

பதினொன்றாம் பாசுரம்.  திருப்பாணாழ்வார் திருவடிகளை சிரஸாவஹிக்கும் எம்பெருமானாரைத் தங்களுக்குப் புகலிடமாகப் பற்றியிருக்குமவர்களுடைய செயல்களின் பெருமையை இவ்வுலகத்தில் என்னால் சொல்லி முடிக்கமுடியாது என்கிறார்.

சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழால் அளித்த
பார் இயலும் புகழப் பாண் பெருமாள் சரணாம் பதுமத்
தார் இயல் சென்னி இராமாநுசன் தன்னைச் சார்ந்தவர் தம்
காரிய வண்மை என்னால் சொல்லொணாது இக் கடல் இடத்தே

பகவத் விஷயத்தை விளக்குவதால் வந்த பெருமையையுடைய நான்கு வேதங்களின் சிறந்த அர்த்தத்தை அழகிய தமிழ் மாலையாக அளித்தருளியவராய் பூமியில் விளங்கும் கீர்த்தியையுடைய திருப்பாணாழ்வாரின் திருவடிகளாகிற தாமரைப்பூவாலே அலங்ககரிக்கப்பட்ட திருமுடியையுடைய எம்பெருமானாரை நல்ல ஒரு புகலிடமாகப் பற்றியிருப்பவர்களுடைய சிறந்த அனுஷ்டானம் இந்த நிலவுலகிலே என்னாலே சொல்லி முடிக்க முடியாது.

பன்னிரண்டாம் பாசுரம். திருமழிசைப் பிரானுடைய திருவடிகளுக்கு இருப்பிடமான எம்பெருமானாரை அடிபணிபவர்களைத் தவிர மற்றவர்களிடத்திலா நான் அன்பு கொள்வேன் என்கிறார்.

இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது
அடங்கும் இதயத்து இராமாநுசன் அம் பொன் பாதம் என்றும்
கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல் செய்யாத்
திடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே

பூமியெங்கும் பரந்திருக்கும் குணத்தாலே வந்த பெருமையையுடைய திருமழிசைப் பிரானுடைய அழகிய இரண்டு திருவடிகளாகிற செவ்விப் பூக்கள் தன்னுள்ளே அடங்கும்படியான திருவுருவத்தைக் கொண்டிருப்பவரான எம்பெருமானாருடைய சிறந்ததாய் எல்லோராலும் வந்து சேரும்படியான திருவடிகளை எப்பொழுதும் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்தது என்று நினைத்து வணங்குகையாகிற செல்வத்தை உடையராய் எப்பொழுதும் அவற்றை த்யானித்துக்கொண்டிருப்பவரைத் தவிர அவற்றில் அன்பில்லாத கடின நெஞ்சைக்கொண்டவர்களுக்கோ அடியேன் அன்பு செய்வது?

பதிமூன்றாம் பாசுரம். தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளைத்தவிர வேறொன்றில் ஆசையற்றிருக்கும் எம்பெருமானார் திருவடிகளே நமக்கு ப்ராப்யம் (குறிக்கோள்) என்கிறார்.

செய்யும் பசுந் துளபத் தொழில் மாலையும் செந்தமிழில்
பெய்யும் மறைத் தமிழ் மாலையும் பேராத சீர் அரங்கத்து
ஐயன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா
மெய்யன் இராமாநுசன் சரணே கதி வேறு எனக்கே

 செவ்விமாறாததான திருத்துழாயாலே தம்மாலே நேர்த்தியாகக் கட்டப்பட்ட புஷ்ப மாலையையும், உள் அர்த்தத்தை நன்றாக வெளியிடும் தமிழிலே உண்டாக்கப்பட்டதொரு வேதம் என்று சொல்லலாம்படியான தமிழ் மாலையையும் நித்யமான கல்யாண குணங்களை உடைய திருவரங்கத்தில் சயனித்திருக்கும் பெரிய பெருமாளுடைய திருவடிகளுக்குச் சாத்துமவராய் அடிமைத்தனத்தின் எல்லையில் இருக்கும் தொண்டரடிப்பொடி ஆழ்வாருடைய திருவடிகளைத் தவிர வேறொன்றை விரும்பாத ஸத்யசீலரான எம்பெருமானாருடைய திருவடிகளே எனக்கு ப்ராப்யம்.

பதினான்காம் பாசுரம். குலசேகரப் பெருமாளுடைய பாசுரங்களைப் பாடுபவர்களைக் கொண்டாடும் எம்பெருமானார் என்னைப் பிரியாமல் இருப்பதால் வேறு ஸாதனங்களைக் கொண்டு உயர்ந்த பலனைப் பெறவேண்டிய ஸ்வபாவம் நீங்கப் பெற்றேன் என்கிறார்.

கதிக்குப் பதறி வெம் கானமும் கல்லும் கடலும் எல்லாம்
கொதிக்கத் தவம் செய்யும் கொள்கை அற்றேன் கொல்லி காவலன் சொல்
பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமாநுசன் என்னைச் சோர்விலனே

குலசேகரப் பெருமாள் ரத்னங்களைப் பதித்தாற்போலே சாஸ்த்ரச் சொற்களைப் பதித்த கவிகளை அன்புடன் பாடும் பெரியவர்களுடைய திருவடிகளைக் கொண்டாடுபவராய் உயர்ந்தவரான எம்பெருமானார் என்னைவிட்டுப் பிரிவதில்லை. ஆதலால், பெறவேண்டிய பலனுக்காகப் பதறி மிகவும் உஷ்ணமான காடு மலை கடல் போன்ற எல்லாவிடத்திலும் நின்று துன்பப்படும்படியாக தவங்களைப் பண்ணும் தன்மை நீங்கப் பெற்றேன்.

பதினைந்தாம் பாசுரம். பெரியாழ்வார் திருவடிகளில் தன் மனத்தை வைத்திருப்பவரான எம்பெருமானார் குணங்களில் ஈடுபாடில்லாதவர்களைச் சேரேன், இனி எனக்கென்ன தாழ்வு என்கிறார்.

சோராத காதல் பெருஞ்சுழிப்பால் தொல்லை மாலை ஒன்றும்
பாராது அவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள்
பேராத உள்ளத்து இராமாநுசன் தன் பிறங்கிய சீர்
சாரா மனிசரைச் சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே

அலைபாயாத பக்தியினுடைய பெருக்கில் பெரிய சுழியில் அகப்படுகையாலே நித்யனாய் எல்லோரையும் ரக்ஷிப்பவன் என்ற பெருமையை உடையவனை ஒன்றும் ஆராயாமல், அவனைக் குறித்து ஸாதாரண ஜனங்களைப் பார்த்துச் செய்வதுபோல் பல்லாண்டு பல்லாண்டு என்று காலத்தைப் பெருக்கி மங்களாசாஸனம் (ஆசீர்வாதம்) பண்ணுவதையே தனக்குத் தன்மையாகக் கொண்ட பெரியாழ்வார் திருவடிகளை விட்டு நீங்காத திருவுள்ளத்தையுடையவர் எம்பெருமானார். அவருடைய எல்லையில்லாத குணங்களைத் தங்களுக்கு நல்ல புகலிடமாகப் பற்றியிருக்காதவர்களைச் சேரேன். இந்நினைவு பிறந்த பின்பு எனக்கு என்ன குறை உண்டு? [குறை ஒன்றும் இல்லை].

பதினாறாம் பாசுரம். எம்பெருமானுக்கு ப்ரியமான ஆண்டாள் நாச்சியாரின் க்ருபைக்குப் பாத்ரமான எம்பெருமானார் இவ்வுலகத்துக்குச் செய்த உபகாரத்தை அருளிச்செய்கிறார்.

தாழ்வு ஒன்று இல்லா மறை தாழ்ந்து தலமுழுதும் கலியே
ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமாநுசன் என்னும் மா முனியே

பெரிய பெருமாளுடைய திருமுடியிலே (கிரீடத்திலே) சாத்துகிற திருமாலையைத் தன்னுடைய திருக்குழலிலே (கூந்தலிலே) சூடிக்கொடுத்த நாச்சியாரின் இயற்கையான அருளால் வாழ்பவராய் பரம உதாரராய் முனிவர்களில் தலைவரானவர் எம்பெருமானார். ஒரு விதமான குறையும் இல்லாத வேதமானது இதர மதத்தவர்களாலே இழிவுபட்டு பூமியெங்கும் கலியின் இருளானது ஆட்சிசெய்த காலத்திலே யாரும் கேட்காமலே இவர் வந்து அந்த வேதத்தை உயரத் தூக்கி இவ்வுலகத்தை ரக்ஷித்தருளினார் காணீர்!

பதினேழாம் பாசுரம். திருமங்கை ஆழ்வாரிடத்தில் அன்பு கொண்டவராய் எங்கள் நாதராயிருக்கிற எம்பெருமானாரை ஆச்ரயித்தவர்கள் துக்கங்கள் மேலிட்டாலும் கலங்கமாட்டார்கள் என்கிறார்.

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ணமங்கை நின்றானை கலை பரவும்
தனி ஆனையை தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமாநுசனை வந்து எய்தினரே

ஸகல சாஸ்த்ரங்களாலும் கொண்டாடப்படுபவனாய் தனித்துவம் வாய்ந்த யானையைப்போலே செருக்குக் கொண்டு திருக்கண்ணமங்கையிலே நின்றருளியவனை குளிர்ந்த தமிழ் பாசுரங்களால் மங்களாசாஸனம் செய்தருளின திருமங்கை ஆழ்வார்க்கு இவ்வுலகில் அன்பராய் இருப்பவர் எங்கள் நாதரான எம்பெருமானார். அவரை வந்து அடைந்தவர்கள் துக்கங்கள் மேல் விழுந்தாலும் அதற்காக வருந்த மாட்டார்கள். இன்பங்கள் வந்து திரண்டாலும்  நல்ல பழம் பழுத்து வந்தது என்று பெரிதாக ஆனந்தம் அடைய மாட்டார்கள்.

பதினெட்டாம் பாசுரம். நம்மாழ்வாரைத் திருவுள்ளத்திலே கொண்டிருக்கும் மதுரகவி ஆழ்வாரின் குணங்களை எல்லா ஆத்மாக்களும் உஜ்ஜீவனம் அடையும் வகையில் அருளும் எம்பெருமானார் எனக்குச் சிறந்த துணை என்கிறார்.

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தையுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமாநுசன் எம் உறுதுணையே

அடைவதற்கரிய வேதங்களை ஆயிரம் பாசுரங்களால் அதுவும் ஸ்த்ரீ பாலர்களுக்கும் கற்கும் படியான தமிழ் பாஷையாலே செய்தருளுகைக்கு இவ்வுலகத்திலே வந்து அவதரித்த, பாஹ்ய குத்ருஷ்டிகளுக்கு சத்ருவாக இருக்கும் சடகோபன் என்னும் நம்மாழ்வாரை தம் திருவுள்ளத்திலே வைப்பதற்குத் தகுதியாய் இருந்துள்ள பெருமையை உடைய ஸ்ரீ மதுரகவிகளுடைய ஞானம் முதலிய குணங்களை எல்லா ஆத்மாக்களும் உஜ்ஜீவனத்தை அடைவதற்காக உபகரித்தருளும் எம்பெருமானார் எனக்குச் சிறந்ததான துணை.

பத்தொன்பதாம் பாசுரம். திருவாய்மொழியே எல்லாம் என்று எழுந்தருளியிருந்த எம்பெருமானார் எனக்கு மிகவும் இனிமையானவர் என்கிறார்.

உறு பெருஞ்செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூமகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமாநுசன் எனக்கு ஆர் அமுதே

புருஷார்த்தங்களில் சிறந்ததுவும் எல்லையில்லாததுமான செல்வமும், தந்தையும் தாயும் ஸதாசார்யனும், பரிமளிதமான பூவில் பிறந்தவளான பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான ஸர்வேச்வரனும். இவை எல்லாம், பகவத் ப்ரஸாதத்தாலே ஆழ்வாருக்கு அவ்வெம்பெருமான் ப்ரகாசித்த க்ரமத்திலே உபகரித்தருளின த்ராவிட வேதமான திருவாய்மொழியே என்று இந்தப் பெரிய பூமியில் உள்ளார் அறியும்படி நின்ற எம்பெருமானார் எனக்கு மிகவும் இனிமையானவர்.

இருபதாம் பாசுரம். நாதமுனிகளைத் தம் திருவுள்ளத்திலே மிகவும் ஆசையுடன் அனுபவிக்கும் எம்பெருமானார் எனக்குப் பரம தனம் என்கிறார்.

ஆரப் பொழில் தென் குருகைப்பிரான் அமுதத் திருவாய்
ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம்கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமாநுசன் என் தன் மா நிதியே

சந்தனச் சோலைகளையுடைத்தாய் அழகிய திருநகரிக்கு நாதரான ஆழ்வாருடைய மிகவும் இனிமையான திருப்பவளத்தில் (உதட்டில்) பிறந்த ஈரப்பாட்டையுடைய திருவாய்மொழியின் இசையை அறிந்தவர்களிடத்தில் அன்பு காட்டுபவர்களுக்கு, குணங்களிலே செறிந்து தன் ஸத்தை பெறும்படியான தன்மையை உடையவரான நாதமுனிகளை தம் நெஞ்சால் மிகவும் ஆசையுடன் அனுபவிக்கும் எம்பெருமானார் எனக்குக் கிடைத்த மஹாநிதி.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  https://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment