ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
<< எட்டாம் திருமொழி – விண்ணீல மேலாப்பு
கீழ்ப் பதிகத்தில் ஆண்டாள் நாச்சியார் மிகவும் துன்பமான நிலையில் இருந்தாள் – அதாவது இனியும் உயிர் தரிக்க முடியுமா என்ற ஸந்தேஹத்துடன் இருந்தாள். எம்பெருமானிடம் போய்த் தன் நிலையை அறிவிக்க அங்கே மேகங்களாவது இருந்தன – அவையும் எங்கும் போகாமல், மழையைப் பொழிந்து மறைந்தே போயின. அங்கே பெய்த மழையால் எல்லா மலர்களும் மலர்ந்தன. அவ்வாறு மலர்ந்த மலர்கள் எம்பெருமானுடைய திருமேனிக்கும் அழகிய அவயவங்களுக்கும் ஸ்மாரகமாக (ஞாபகப்படுத்தும் விதத்தில்) இருந்து கொண்டு, இவளை நலியத் தொடங்கின. அதாவது, தன் மணாளனுடன் கூடியிருக்கும் காலத்தில் இன்பத்தைக் கொடுக்கும் நிலா, தென்றல், புஷ்பம் போன்ற பொருள்கள், பிரிவிலே துன்பத்தைக் கொடுப்பதை உலகில் காண்கிறோமே. அப்படி எம்பெருமானின் பிரிவு இவளை மிகவும் வாட்டி இவளை ஜீவிக்க விடாமல் செய்யும் நிலையை இந்த திருமொழியிலும் இதற்கு அடுத்த திருமொழியிலும் வெளியிடுகிறாள். இந்த இரண்டு பதிகங்களிலும் நம்மாழ்வார் திருவாய்மொழியில் “இன்னுயிர்ச் சேவல்” பதிகத்தில் அனுபவித்த அதே நிலையை இவள் அனுபவிக்கிறாள். இத்திருமொழி திருமாலிருஞ்சோலை அழகர் எம்பெருமான் விஷயமான அனுபவம்.
முதல் பாசுரம். திருமலாலிருஞ்சோலை மலையை நாம் காண முடியாதபடி பட்டுப்பூச்சிகள் மறைத்துக் கொண்டுவிட்டன.அழகர் விரித்த வலையில் இருந்து நாம் தப்புவோமோ? என்கிறாள்.
சிந்துரச் செம்பொடிப் போல் திருமாலிருஞ்சோலை எங்கும்
இந்திரகோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்
மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத் தோள் உடையான் சுழலையில் நின்று உய்துங்கொலோ?
திருமாலிருஞ்சோலையில் எல்லா இடங்களிலும் பட்டுப்பூச்சிகள் சிவந்த சிந்துரப்பொடிபோலே (ஸிந்தூர்) மேலெழுந்து பரவிகிடக்கின்றன. ஐயோ! அமுதத்தை ப்ரார்த்தித்து தேவர்கள் சரணமடைந்த காலத்திலே மந்தரமலையைப் பாற்கடலில் மத்தாக நட்டு, கடலைக் கடைந்து, மிகவும் இனிமையான அமிர்த ரஸம் போன்ற பிராட்டியை எடுத்துக்கொண்ட ஸுந்தரத்தோளுடைய எம்பெருமானின் சூழ்வலையிலிருந்து பிழைப்போமோ?
இரண்டாம் பாசுரம். அழகர் எம்பெருமானின் தோளிலே சாற்றிய மாலையை நான் ஆசைப்பட்டு, அதனால் படும் பாட்டை யாரிடம் முறையிடுவது என்கிறாள்.
போர்க் களிறு பொரும் மாலிருஞ்சோலையம் பூம்புறவில்
தார்க்கொடி முல்லைகளும் தவள நகை காட்டுகின்ற
கார்க்கொள் படாக்கள்நின்று கழறிச் சிரிக்கத் தரியேன்
ஆர்க்கிடுகோ? தோழீ! அவன் தார் செய்த பூசலையே
போர் செய்வதையே தொழிலாகவுடைய யானைகள் ஒன்றுக்கொன்று சண்டை போட்டு விளையாடுமிடமான திருமாலிருஞ்சோலையின் மிகவும் அழகிய தாழ்வரைகளில் அரும்புகளையுடைய கொடி முல்லைகள் அழகருடைய வெளுத்த புன்னகையை நினைப்பூட்டுகின்றன. நன்றாகப் பூத்திருக்கும் படா என்னும் கொடிகள் நிலையாக நின்று “எமக்கு நீ தப்பிப் பிழைக்க முடியாது” என்று சிரிப்பது போலே மலர, அதைக் கண்டு நான் என்னைத் தரித்துக் கொள்ள முடியாமல் இருக்கிறேன். தோழீ! அவனுடைய தோள்மாலை உண்டு பண்ணின மனக்லேசத்தை நான் யாரிடத்தில் சொல்லுவது?
மூன்றாம் பாசுரம். எம்பெருமானின் திருநிறத்தை உடைய மலர்களைப் பார்த்து அவன் செய்த செயல் ந்யாயமா கூறுங்கள் என்கிறாள்.
கருவிளை ஒண் மலர்காள்! காயா மலர்காள்! திருமால்
உருவொளி காட்டுகின்றீர் எனக்கு உய்வழக்கொன்று உரையீர்
திருவிளையாடு திண் தோள் திருமாலிருஞ்சோலை நம்பி
வரி வளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே
அழகிய கருவிளை மலர்களே! காயாம்பூக்களே! நீங்கள் ஸ்ரீமந் நாராயணனுடைய திருமேனியின் நிறத்தை நினைவுட்டுகிறீர்கள். எனக்குப் பிழைக்கும் வழியைச் சொல்லுங்கள். பிராட்டி விளையாடும் இடமான திண்ணிய திருத்தோள்களை உடையவரான, குணபூர்த்தியை உடைய திருமாலிருஞ்சோலை அழகர் எனது வீட்டினுள் புகுந்து எனது அழகிய வளைகளை பலாத்காரமாகக் கொள்ளை கொண்டு போவது ந்யாயமோ?
நான்காம் பாசுரம். தன்னைத் துன்புறுத்தும் ஐந்து பெரும் பாதகர்களைக் கண்டிக்கிறாள்.
பைம்பொழில் வாழ் குயில்காள்! மயில்காள்! ஒண் கருவிளைகாள்!
வம்பக் களங்கனிகாள்! வண்ணப் பூவை நறுமலர்காள்!
ஐம்பெரும் பாதகர்காள்! அணி மாலிருஞ்சோலை நின்ற
எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே?
பரந்த சோலையில் வாழ்கின்ற குயில்களே! மயில்களே! அழகிய கருவிளைப் பூக்களே! புதிய களாப்பழங்களே! அழகிய நிறத்தையும் பரிமளத்தையுமுடைய காயாம்பூக்களே! ஆக, ஐந்து பெரும் பாதகர்களே! உங்களுக்கு அழகிய திருமாலிருஞ்சோலையில் இருக்கும் அழகருடைய திருமேனி நிறம் எதற்கு? [என்னை நலிவதற்காகவா?]
ஐந்தாம் பாசுரம். அங்கே இருக்கும் வண்டுகளையும், சுனைகளையும், தாமரைகளையும் தனக்கு ஒரு புகல் சொல்லும்படிக் கேட்கிறாள்.
துங்க மலர்ப் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற
செங்கட் கருமுகிலின் திரு உருப் போல் மலர் மேல்
தொங்கிய வண்டினங்காள்! தொகு பூஞ்சுனைகாள்! சுனையில்
தங்கு செந்தாமரைகாள்! எனக்கு ஓர் சரண் சாற்றுமினே
ஓங்கின மலர்களுடைய சோலைகள் சூழ்ந்த திருமாலிருஞ்சோலையில் நின்ற திருக்கோலத்தில் இருக்கும் தாமரை போன்ற சிவந்த கண்களையும் காளமேகம் போன்ற வடிவழகையுமுடைய அழகர் எம்பெருமானின் அழகிய வடிவம் போலே இருக்கும் மலர்மேல் தங்கியிருக்கும் வண்டுக் கூட்டங்களே! நெருங்கி இருக்கின்ற அழகிய சுனைகளே! அந்தச் சுனைகளில் உள்ள செந்தாமரை மலர்களே! எனக்கு ஓர் புகலிடம் சொல்லுங்கள்.
ஆறாம் பாசுரம். அழகர் எம்பெருமானுக்கு நூறு தடா வெண்ணெயும், நூறு தடா அக்கார அடிசிலும் ஸமர்ப்பிக்க ஆசைப் படுகிறாள். எம்பெருமானார் இவளின் ஆசையைப் பிற்காலத்தில் நிறைவேற்றி, இவளால் “நம் கோயில் அண்ணர்” என்று கொண்டாடப்பட்டார்.
நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திரு உடையான் இன்று வந்து இவை கொள்ளுங்கொலோ?
பரிமளம் மிகுந்த பொழில்கள் மணம் கழும் திருமாலிருஞ்சோலையில் நித்யவாஸம் செய்யும் குணபூர்த்தியை உடைய அழகர் எம்பெருமானுக்கு நான் நூறு தடாக்களில் வெண்ணெயை வாயாலே சொல்லி ஸமர்ப்பித்தேன். மேலும், நூறு தடாக்களில் நிறைந்த அக்கார அடிசிலும் வாயாலே சொல்லி ஸமர்ப்பித்தேன். இவை இரண்டையும் நாள் செல்லச்செல்ல அதிகமாகிவரும் செல்வத்தை உடைய அழகர் இன்று எழுந்தருளித் திருவுள்ளம் பற்றுவாரோ (ஏற்றுக்கொள்வாரோ)?
ஏழாம் பாசுரம். அழகர் எம்பெருமானுக்கு நான் ஸமர்ப்பித்தவற்றை அவன் ஏற்றுக்கொண்டானாகில், மேலும் அவனுக்குப் பன்மடங்கு கைங்கர்யங்கள் செய்வேன் என்கிறாள்.
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான்
ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்
தென்றல் மணம் கமழும் திருமாலிருஞ்சோலை தன்னுள்
நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர் படிலே
தென்றல் காற்றானது மணத்தைக் கொண்டு வீசுகின்ற திருமாலிருஞ்சோலை மலையிலே நித்யவாஸம் செய்கிற ஸ்வாமியான அழகர் இன்று இங்கே வந்து நான் ஸமர்ப்பித்த நூறு தடா வெண்ணெயையும், அக்கார அடிசிலையும் அமுது செய்தருளப்பெற்றால் அத்துடன் நிறுத்தாமல் அடியேனுடைய ஹ்ருதயத்திலேயே நித்யவாஸம் செய்தான் என்றால், அடியேன் ஒரு தடாவுக்கு பதில் நூறாயிரம் தடாக்களில் ஸமர்ப்பித்து அதற்கு மேலும் எல்லாவித கைங்கர்யங்களும் செய்வேன்.
எட்டாம் பாசுரம். குருவிக் கணங்கள் எம்பெருமான் வருவதை அறிவிக்குமது உண்மையாகுமா என்கிறாள்.
காலை எழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ?
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே
கரிய குருவிக் கூட்டங்கள் அதிகாலையிலே எழுந்து திருமாலிருஞ்சோலைக்குத் தலைவனாயும் ஸ்ரீத்வாரகைக்கு ராஜாவும் ஆலிலையில் வளர்ந்த எம்பெருமானுமான அந்த ஸர்வேச்வரனுடைய வார்த்தைகளை சொல்லுகின்றன. இப்படி எம்பெருமானின் வரவைச் சொல்லிக்கொண்டு மருள் என்கிற பண்ணைப் பாடுவது உண்மையில் நடக்குமா?
ஒன்பதாம் பாசுரம். இங்கே கொன்றை மரங்களைப்போலே வீணாகிக் கிடக்கின்ற நான் எப்பொழுது எம்பெருமானின் சங்கொலியையும் வில்லின் நாணொலியும் கேட்டு உயிர் தரிக்கப் போகிறேன்.
கோங்கலரும் பொழில் மாலிருஞ்சோலையில் கொன்றைகள் மேல்
தூங்கு பொன் மாலைகளோடு உடனாய் நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும்
சார்ங்கவில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ
கோங்கு மரங்கள் மலர்ந்திருக்கும் சோலைகளையுடைய திருமாலிருஞ்சோலை மலையில் கொன்றை மரங்களின் மேலே தொங்குகின்ற பொன் நிறமான பூமாலைகளோடு ஸமமாக உபயோகம் இல்லாமல் கிடக்கிறேன். அழகு பொருந்திய திருப்பவளத்திலே (உதட்டிலே) வைத்து ஊதப்படும் ஸ்ரீபாஞ்சஜந்யத்துடைய ஒலியும், சார்ங்கம் என்னும் வில்லின் நாணோசையும் என் அருகில் வருவது எப்போதோ?
பத்தாம் பாசுரம். இப்பத்துப் பாசுரங்களைச் சொல்லவல்லவர்கள் திருமாலடி சேர்வர்கள் என்று பலம் சொல்லி முடிக்கிறாள்.
சந்தொடு காரகிலும் சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்துரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமால் அடி சேர்வர்களே
சந்தனக் கட்டைகளையும் கரிய அகில் கட்டைகளையும் அடித்துக்கொண்டு கரைகளை அழித்துக்கொண்டு ஓடிவந்து பெருகுகின்ற நூபுர கங்கையை உடைத்தான திருமாலிருஞ்சோலை மலையில் நித்யவாஸம் செய்கிற அழகர் எம்பெருமானைக் குறித்து வண்டுகள் படிந்த கூந்தலை உடைய ஆண்டாள் அழகாக அருளிச்செய்த செந்தமிழினால் செய்யப்பட்ட இப்பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்கள், ஸ்ரீமந் நாராயணனுடைய திருவடிகளை அடையப் பெறுவர்கள்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org