நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – பதினொன்றாம் திருமொழி – தாமுகக்கும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

நாச்சியார் திருமொழி

<< பத்தாம் திருமொழி – கார்க்கோடல் பூக்காள்

எம்பெருமான் வாக்கு மாறமாட்டான், நம்மை ரக்ஷிப்பான். அது தப்பினாலும் நாம் பெரியாழ்வார் திருமகள், அதற்காகவாவது நம்மைக் கைக்கொள்வான் என்று உறுதியாக இருந்தாள். அப்படியிருந்தும் அவன் வாராமல் போகவே, ஸ்ரீ பீஷ்மர் எப்படி அர்ஜுனனுடைய அம்பகளாலே வீழ்த்தப்பட்டு அம்புப் படுக்கையில் இருந்தாரோ, அதைப் போலே, எம்பெருமானை நினைவூட்டும் பொருள்களாலே துன்பப்பட்டு மிகவும் நலிந்த நிலையை அடைந்தாள். அதைக்கண்ட தாய்மார், தோழிமார் மற்றும் அனைவரும் அங்கே வந்து கூடி நின்றனர். அவர்களிடத்தில் இவள் “நான் அவன் வருவான் என்று உறுதியாக இருந்தேன். என்னுடைய நிலை இப்படி ஆகிவிட்டதே. இந்த நிலையிலும் அவன் வரவில்லையே. அவன் தன்மையைப் பார்த்தீர்களே” என்று மிகவும் வருந்தினாள். பிறகு “என்னைப் போன்ற சில பெண்களுக்கு (பிராட்டிமார்களுக்கு) அவன் முன்பு உதவியுள்ளான். என்னையும் வந்து கைக்கொள்வான்” என்று சொல்லி வருத்தத்துடன் தன்னை தரித்துக் கொள்கிறாள்.

முதல் பாசுரம். “இந்த துயரமிகு நிலையிலும் நீர் வந்து உதவாமல் இருப்பது ஏன்?” என்று கேட்டால் அதற்கு பதில் வைத்திருக்கிறாரோ என்று கேளுங்கோள் என்கிறாள். என்னிடத்திலும் குறையில்லை, அவரிடத்திலும் குறையில்லை, இப்படி இருந்தும் அவன் வரவில்லை. இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என்கிறாள்.

தாம் உகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ?
யாம் உகக்கும் எங்கையில் சங்கமும் ஏந்திழையீர்!
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
ஆ! முகத்தை நோக்காரால் அம்மனே! அம்மனே!

ஆபரணங்களை அணிந்துள்ள பெண்களே! நான் உகந்து அணிந்திருக்கும் என் கைவளைகள், தான் உகந்து வைத்திருக்கும் சங்குக்கு ஒப்பாகாதோ? (எனக்கு உதவாததால்) கொடிய முகங்களையுடைய திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேலே, சயனித்திருக்கிற திருவரங்கநாதர் என்னுடைய முகத்தை பார்க்கவில்லையே. ஐயோ! ஐயோ! ஐயோ!

இரண்டாம் பாசுரம். தன்னுடைய நிலையை மறைக்க வேண்டிய தாய்மார்களிடம் தன் நிலையை வெளியிடுகிறாள்.

எழில் உடைய அம்மனைமீர்! என்னரங்கத்து இன்னமுதர்
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழகர் எம்மானார் என்னுடைய
கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே

அழகிய தாய்மார்களே! திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கிற என்னுடைய இனிய அமுதம் போன்றவராய் அழகிய திருக்குழற்கற்றையை உடையவராய், அழகிய திருவதரத்தை உடையவராய், அழகிய திருக்கண்களை உடையவராய், திருநாபியில் உண்டான தாமரைப்பூவாலே அழகு பெற்றவராய், எனக்கு ஸ்வாமியான அழகிய மணவாளர் என்னுடைய கழலாத கைவளையை அவர்தாம் கழன்று விழுகின்ற வளையாக ஆக்கினார்.

மூன்றாம் பாசுரம். உன்னிடத்தில் விருப்பம் இருந்ததால்தானே உன் கைவளையை அவர் எடுத்துக்கொண்டார். தம்முடைய சொத்திலே ஒன்று குறைந்ததால், உன்னிடத்தில் இருந்து அதைப் பெற்றுக்கொண்டு பூர்த்தியடைந்தார் என்று சொல்ல, அதற்கு “இது இல்லாமல் துன்புற்று, இதைப் பெற்ற பின் இன்பம் அடைந்தாரோ? அதெல்லாம் இல்லை, என்னைத் துன்புறுத்துவதற்காகவே, இவ்வாறு செய்தார்” என்று வெறுக்கிறாள்.

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே?

அலை வீசுகிற கடலாலே சூழப்பட்ட இந்த பூலோகமும், பரமபதமும் அங்கு சிறிதும் குறைவுபடாதபடி ஆள்கின்ற எம் ஸ்வாமியாய், செங்கோல் செலுத்த வல்லவராய், கோயில் என்று அழைக்கப்படும் திருவரங்கத்திலே சயனித்திருக்கும் ஸ்ரீமான் என்னுடைய கைவளையாலே தம்முடைய குறை தீர்த்துக்கொள்வாரோ?

நான்காம் பாசுரம். “எம்பெருமான் உன் மீதுள்ள விருப்பத்தாலேயே வளையைக்கொண்டான். இதற்கு நீ ஸந்தோஷப்படத்தானே வேண்டும்?” என்று கேட்க, அதற்கு இவள் “என்னைப் பிரிந்து வாழ முடியாமல் என் வளையை எடுத்துக்கொண்டார் என்றால், நான் உயிர் வாழவேண்டும் என்பதற்காக ஒரு முறை நான் இருக்கும் தெருவில் போக வேண்டாமா?” என்கிறாள்.

மச்சணி மாட மதிள் அரங்கர் வாமனனார்
பச்சைப் பசுந்தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற
பிச்சைக் குறையாகி என்னுடைய பெய்வளை மேல்
இச்சை உடையரேல் இத்தெருவே போதாரே?

மேல் தளங்களாலே அலங்கரிக்கப்பட மாடங்களையும் மதிள்களையுமுடைய திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவராய் முன்பு வாமனாவதாரம் செய்தருளினவராய் பசுமை தங்கிய தேவரான பெரிய பெருமாள் தாம் முன்பு நீரை ஏந்திப்பெற்ற பிச்சையிலே குறை உண்டாகி, அக்குறையைத் தீர்ப்பதற்காக என்னுடைய கையில் இருக்கும் வளைமேல் விருப்பமுடையவராகில் இத்தெரு வழியாக எழுந்தருளமாட்டாரோ?

ஐந்தாம் பாசுரம். என் வளையை மட்டுமல்ல என் உடம்பையும் கொள்ளைகொள்வானைப்போலே இருந்தான் என்கிறாள்.

பொல்லாக் குறள் உருவாய்ப் பொற்கையில் நீர் ஏற்று
எல்லா உலகும் அளந்து கொண்ட எம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்துளனே

சிறந்த வாமனரூபியாய் அழகிய கையாலே நீரை ஏற்று பிக்ஷை பெற்று ஸகல லோகங்களையும் அளந்து தன் வசப்படுத்திக்கொண்ட ஸ்வாமியாய் நன்மையுடைய பெரியோர் வாழ்கிற குளிர்ந்த திருவரங்கத்தில் திருவனந்தாழ்வானைப் படுக்கையாக உடையரான பெரிய பெருமாள் ஒன்றுமில்லாதவளான என்னுடைய கைம்முதலான இந்த சரீரத்தையும் கொள்ளைகொள்வதைப்போலே இருக்கிறான்.

 

ஆறாம் பாசுரம். அவன் எண்ணியபடி என் சரீரத்தைக் கொள்ளைகொண்டான் என்கிறாள்.

கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரி நீர்
செய்ப்புரள ஓடும் திருவரங்கச் செல்வனார்
எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப்பொருளும் கொண்டாரே

காவிரியின் தீர்த்தமானது பயிர் நிலங்கள் வளமாக இருக்கும்படி ஓடும் திருவரங்கத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமானாயும் எத்தனையேனும் தாழ்ந்தவர்களுக்கும் எளியனாய் நின்று எத்தனையேனும் உயர்ந்தவர்க்கும் கைப்படாமல் இருப்பவனும், நான்கு வேதங்களிலுள்ள சொற்களுக்கும் அர்த்தமாய் நிற்பவருமான பெரிய பெருமாள் முன்பே கையிலுள்ள பொருள்களை எல்லாம் கொள்ளைகொண்டபின்பு இப்போது எனது சரீரத்தையும் கொள்ளைகொண்டார்.

ஏழாம் பாசுரம். சீதாப்பிராட்டியிடத்தில் காட்டிய பரிவை என்னிடத்தில் அவர் காட்டவில்லை என்கிறாள்.

உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து
பெண்ணாக்கை ஆப்புண்டு தாம் உற்ற பேதெல்லாம்
திண்ணார் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே தம்முடைய நன்மைகளே எண்ணுவரே

திண்மை பொருந்திய மதிள்களாலே சூழப்பட்ட கோயிலிலே சயனித்திருக்கும் ச்ரிய:பதியான எம்பெருமான் ஸ்ரீராமாவதாரத்தில் சீதை என்கிற பெண் விஷயத்தில் ஆசைகொண்டு உண்ணாமலும் உறங்காமலும் வருந்தி இருந்து, பெருத்தை ஓசையைச் செய்யும் கடலில் அணைகட்டி தாம் அடைந்த எளிமைகளை எல்லாம் மறந்துபோய் இப்போது தம்முடைய பெருமைகளையே எண்ணுகிறார்.

எட்டாம் பாசுரம். எம்பெருமானுடைய குணங்களை நினைத்து உன்னையே நீ தரித்துக்கொள்ளலாமே என்று சொல்ல இவள் “நான் எம்பெருமானை மறந்து தரிக்கலாம் என்று பார்க்கிறேன் ஆனால் என்னால் மறக்க முடியவில்லை” என்கிறாள்.

பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்கு பண்டொரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே

முன் காலத்தில் பாசி படர்ந்து கிடந்த ஸ்ரீ பூமிப்பிராட்டிக்காக அழுக்கேறின திருமேனியில் நீர் ஒழுகும்படி நிற்கும் வெட்கமில்லாத வராஹ வடிவு கொண்ட தேஜஸ்ஸையுடைய தெய்வமான திருவரங்கநாதன் முன்பு சொல்லியிருக்கும் பேச்சுக்கள் நெஞ்சில் நின்று அழிக்கப்பார்த்தாலும் அழியாமல் இருக்கின்றன.

ஒன்பதாம் பாசுரம். எம்பெருமான் ருக்மிணிப் பிராட்டிக்கு உதவியது தன்னை உள்பட எல்லாப் பெண்களுக்கும் உதவியதாக எண்ணித் தன்னை தரித்துக்கொள்கிறாள். கண்ணன் எம்பெருமான் அர்ஜுனன் ஒருவனுக்குச் சொன்ன வார்த்தை எல்லா சரணாகதர்களுக்கும் பொதுவாக இருப்பதைப் போலே இங்கும் கண்டு கொள்ளலாம்.

கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந்திருந்த சிசுபாலன் தேசழிந்து
அண்ணாந்திருக்கவே ஆங்கவளைக் கைப்பிடித்த
பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே

கல்யாண க்ரமங்களை எல்லாம் நன்றாகச் செய்து முடித்து மணப்பெண்ணான ருக்மிணிப்பிராட்டியை பாணிக்ரஹணம் செய்துகொள்ளப் போவதாக உறுதியாக நினைத்திருந்த சிசுபாலன் ஒளி அழிந்து ஆகாசத்தை நோக்கிக் கிடக்கும்படியாக நேர்ந்த அச்சமயத்திலே அந்த ருக்மிணிப்பிராட்டியை பாணிக்ரஹணம் செய்தருளினவனாய் பெண்களுக்கெல்லாம் துணைவன் என்று ப்ரஸித்தனான பெருமான் உகந்து சயனித்திருக்கும் திவ்யதேசத்தின் திருநாமம் திருவரங்கமாம்.

பத்தாம் பாசுரம். பெரியாழ்வார் திருமகளாக இருந்தும் தர்மம் அறிந்த நீர் என்னைக் கைக்கொள்ளவில்லை என்றால் நன் என்ன செய்யமுடியும் என்று வருந்துகிறாள்.

செம்மை உடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டுசித்தர் கேட்டு இருப்பர்
தம்மை உகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே?

நேர்மை என்கிற குணத்தை உடைய திருவரங்கநாதர் முன்பு தம் வாயாலே அருளிச்செய்த ஸத்யமானதும் பெருமதிப்புடையதுமான சரமச்லோகம் என்கிற வார்த்தையை எனதுஅ திருத்தகப்பனாரான பெரியாழ்வார் கேட்டு அதன்படி நிர்ப்பரராயிருப்பார். “தம்மை விரும்பினவர்களைத் தாமும் விரும்புவார்” என்ற பழமொழியானது தம்மிடத்திலேயே பொய்யாகி விட்டால் அதற்குமேல் வேறுயார் அவரை நியமிக்க முடியும்?

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  https://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment