ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
<< ஒன்பதாம் திருமொழி – சிந்துரச் செம்பொடி
முதலில் தன்னுடைய ஜீவனத்தில் ஆசையால் காமன், பக்ஷிகள், மேகங்கள் ஆகியவற்றின் காலில் விழுந்தாள். அது ப்ரயோஜனப்படவில்லை. அவன் வரவில்லை என்றாலும் அவனைப்போன்ற பதார்த்தங்களைக் கண்டு தன்னை தரித்துக் கொள்ளலாம் என்று நினைத்தாள். பூப்பூக்கும் காலத்தில் பூக்கள் நன்றாகப் பூத்து, எல்லாமாகச் சேர்ந்து அவனுடைய திருமேனி, அழகிய அவயவங்கள் ஆகியவற்றை நினைவுபடுத்தி இவளைத் துன்புறுத்தின. இந்நிலையில் நமக்குப் புகலாயிருக்கும் எம்பெருமானின் வார்த்தைகளும் பெரியாழ்வார் குடியில் பிறப்புமே நமக்கு ஜீவித்திருக்க ஒரே வழி என்று நினைத்தாள். அவன் முன்பு எல்லோரையும் ரக்ஷிப்பதாக வாக்குக் கொடுத்திருந்தாலும், ஸ்வதந்த்ரன் ஆகையாலே அவன் ரக்ஷிக்கவில்லை என்றாலும் கேள்வி கேட்க முடியாதே. ஆகையால் பெரியாழ்வார் திருமகளாக இருக்கும் இது ஒன்றே நமக்கு வழி என்று நினைத்து, அதிலும் தேவை இல்லாமல் ஸந்தேஹப்பட்டு – அதாவது, இப்படி இருந்தும் எம்பெருமான் கைவிட்டால் என்ன செய்வது என்று எண்ணி, பிறகு “எது போனாலும் போகும், பெரியாழ்வாருடன் நமக்கு இருக்கும் ஸம்பந்தம் கண்டிப்பாக வீணாகாது, அவன் ஸ்வாதந்த்ர்யத்தை மாற்றி அவன் திருவடிகளில் நம்மைக் கண்டிப்பாகச் சேர்க்கும்” என்று உறுதி பூண்டு அது கொண்டு தன்னை தரித்துக் கொள்கிறாள். அவன் “நான் கைவிட மாட்டேன்” என்று சொன்னாலும், அதை நடத்திக் கொடுப்பதற்கு ஒருவர் (ஆசார்யர், புருஷகாரம்) வேண்டுமே. பராசர பட்டர் வாணவதரையன் என்ற ராஜாவைக் காண எழுந்தருளி ஸ்ரீதேவி மங்கலம் என்னும் ஊரிலே இருக்க, அந்த ராஜா பட்டரைப் பார்த்து “எம்பெருமான் இருக்க இவர்கள் தேவரீரிடம் இவ்வளுவு பக்தியுடன் இருப்பதற்கு என்ன காரணம்” என்று கேட்க, அதற்கு பட்டர் “எம்பெருமானை அடைவதற்கு அவனடியார்கள் கடகராக (சேர்த்து வைப்பவராக) இருக்கிறார்கள். ஆழ்வானின் பிள்ளையாக அடியேன் இருப்பதால் இவர்கள் என்னிடத்தில் இவ்வளவு ப்ரீதியைக் காட்டுகிறார்கள்” என்று அருளிச்செய்தார்.
முதல் பாசுரம். புஷ்பங்களிடம் சென்று தன்னுடைய துயரமிகு நிலையைச் சொல்கிறாள்.
கார்க்கோடல் பூக்காள்! கார்க்கடல் வண்ணன் என் மேல் உம்மைப்
போர்க்கோலம் செய்து போர விடுத்தவன் எங்குற்றான்?
ஆர்க்கோ இனி நாம் பூசல் இடுவது? அணி துழாய்த்
தார்க்கோடும் நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ!
கறுத்த காந்தள் பூக்களே! உங்களை போருக்கு ஏற்றாப்போலே அலங்கரித்து என் மேலே பாயும்படி அனுப்பினவனான கறுத்த கடல்போன்ற வடிவை உடையவனான கண்ணன் எம்பெருமான் எங்கே இருக்கிறான்? நான் இனிமேல் யாரிடத்தில்போய் முறையிடுவது என்று தெரியவில்லை. அழகிய திருத்துழாய் மாலையை ஆசைப்பட்டு அதற்காக ஓடும் நெஞ்சை உடையவளாகிவிட்டேனே! ஐயோ!
இரண்டாம் பாசுரம். என்னை இந்தத் துன்பத்தில் இருந்து விரைவில் விடுவி என்று காந்தள் பூக்களிடம் கேட்கிறாள்.
மேல் தோன்றிப் பூக்காள்! மேல் உலகங்களின் மீது போய்
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலங்கையில்
மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றிரே
உயரப் பூத்திருக்கும் காந்தள் பூக்களே! நமக்கு மேலே இருக்கும் உலகங்களுக்கும் மேலே இருக்கும் “தன்னுடைச் சோதி” என்று சொல்லப்படும் பரமபதத்தில் இருக்கிற, வேதத்தில் காட்டப்பட்டுள்ள பரமபுருஷனுடைய வலது திருக்கையில் காணப்படும் திருவாழியாழ்வானுடைய வெவ்விய தேஜஸ்ஸைப்போல் எரிக்காமல் என்னைக் கைவல்ய நிஷ்டரின் கூட்டத்தில் கொண்டு சேர்ப்பாயா? (எம்பெருமானைப் பிரிந்து துன்பப்படுவதைக் காட்டிலும் தனியே நம்மையே அனுபவிப்பது மேல் என்று கூறுகிறாள்)
மூன்றாம் பாசுரம். மேலிருந்து தன் கண்ணை எடுத்து அருகில் இருந்த செடியிலே படர்ந்திருந்த கோவைப்பழத்தைப் பார்த்து வார்த்தை சொல்லுகிறாள். முன்பு பார்த்த புஷ்பங்கள் எம்பெருமானின் நிறத்தை நினைவூட்டி நலிந்தன. கோவைப்பழம் அவன் அதரத்தை நினைவூட்டி நலிகிறது.
கோவை மணாட்டி! நீ உன் கொழுங்கனி கொண்டு எம்மை
ஆவி தொலைவியேல் வாயழகர் தம்மை அஞ்சுதும்
பாவியேன் தோன்றிப் பாம்பணையார்க்கும் தம் பாம்பு போல்
நாவும் இரண்டுள ஆயிற்று நாணிலியேனுக்கே
அம்மா! கோவைக் கொடியே! நீ உன்னுடைய அழகிய பழங்களாலே என்னுடைய உயிரைப் போக்கலாகாது. அழகிய வாய் படைத்த எம்பெருமான் விஷயத்திலே நான் பயப்படுகின்றேன். பாவியான நான் பிறந்தபின்பு வெட்கமில்லாதவளான என் விஷயத்திலே சேஷசாயியான பெருமானுக்கும் தமது படுக்கையான திருவநந்தாழ்வானுக்கு இருப்பதுபோலே இரண்டு நாக்குகள் உண்டாயின.
நான்காம் பாசுரம். கோவைப்பழம் எம்பெருமானின் திருவதரத்தை நினைவூட்ட தன் கண்ணை வேறு பக்கம் திருப்பினாள். அங்கே முல்லையானது நன்றாகப் பூத்துக்கிடந்து எம்பெருமானின் அழகிய முத்துப் பல்வரிசையை நினைவூட்டி நலியும்படியைச் சொல்லுகிறாள்.
முல்லைப் பிராட்டி! நீ உன் முறுவல்கள் கொண்டு எம்மை
அல்லல் விளைவியேல் ஆழிநங்காய்! உன் அடைக்கலம்
கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார்
சொல்லும் பொய் ஆனால் நானும் பிறந்தமை பொய் அன்றே
அம்மா! முல்லைக் கொடியே! ஆழமான தன்மையை உடையவளே! நீ உன்னுடைய மலர்த்தியாலே எம்பெருமான் முத்துப்பல் வரிசையை நினைவூட்டி எனக்குத் துன்பத்தைக் கொடுக்காதே. உன்னைச் சரணம் அடைகிறேன். வரம்பு மீறியவளான சூர்ப்பணகையை மூக்கறுத்துத் துரத்தின சக்ரவர்த்தித் திருமகனாருடைய வார்த்தையே பொய்யாகிவிட்டால் நான் பெரியாழ்வாருக்குப் பெண்ணாகப் பிறந்ததும் பொய்யாகிவிடுமே (ப்ரயோஜனம் இல்லாமல் போய்விடுமே).
ஐந்தாம் பாசுரம். முல்லைப்பூ கண்ணுக்கு நேரே நின்று நலிய, கண்ணை மூடிக் கொண்டாள். ஆனால் செவியை மூடிக்கொள்ள வழி தெரியாமல் அகப்பட்டாள்.
பாடும் குயில்காள்! ஈதென்ன பாடல்? நல் வேங்கட
நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடி உடையார் வந்து அருள் செய்து
கூடுவர் ஆயிடில் கூவி நும் பாட்டுகள் கேட்டுமே
பாடுகின்ற குயில்களே! இக்கூச்சல் என்ன பாட்டு? உயர்ந்ததான திருவேங்கடமலையை இருப்பிடமாக உடைய எம்பெருமான் என் விஷயத்திலே ஒரு வாழ்ச்சியைப் பண்ணிக் கொடுப்பானாகில் அப்பொழுது இங்கே வந்து பாடுங்கள். ஆடுகின்ற பெரிய திருவடியைக் (கருடாழ்வாரை) கொடியாக உடைய எம்பெருமான் க்ருபை பண்ணி இங்கே வந்து என்னுடன் கூடுவானாகில் அப்பொழுது உங்களை இங்கே அழைத்து உங்கள் பாட்டுக்களை நாம் கேட்போம்.
ஆறாம் பாசுரம். மயில்களின் காலில் விழுந்து “எம்பெருமான் என்னை ரக்ஷிக்கும் அழகைப் பாருங்கள்” என்கிறாள்.
கணமா மயில்காள்! கண்ண பிரான் திருக்கோலம் போன்று
அணிமா நடம் பயின்று ஆடுகின்றீர்க்கு அடி வீழ்கின்றேன்
பணமாடரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள்
மணவாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே
கூட்டமாயிருக்கிற சிறந்த மயில்களே! கண்ணபிரானுடைய அழகிய வடிவைப் போன்ற வடிவை உடையவர்களான, அழகிய சிறந்த நாட்டியம் பழகி ஆடுகின்ற உங்களுடைய திருவடிகளிலே விழுந்து வணங்குகிறேன். இந்த ஆட்டத்தை நிறுத்துங்கள். படமெடுத்து ஆடுகிற திருவனந்தாழ்வான் என்கிற படுக்கையிலே காலமுள்ளவரை பள்ளிகொண்டருளுகிற அழகிய மணவாளன் எனக்கு உண்டாக்கித் தந்த பெருமை இது தான் – அதாவது, உங்கள் காலிலே விழ வைத்ததே.
ஏழாம் பாசுரம். நடனமாடும் மயில்களைப் பார்த்து “இப்படி என் முன்னே நடனமாடுவது சரியா?” என்கிறாள்.
நடமாடித் தோகை விரிக்கின்ற மாமயில்காள்! உம்மை
நடமாட்டம் காணப் பாவியேன் நான் ஓர் முதலிலேன்
குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை
உடைமாடு கொண்டான் உங்களுக்கு இனி ஒன்று போதுமே?
நடனம் ஆடிக்கொண்டு தோகைகளை விரிக்கின்ற சிறந்த மயில்களே! உங்களுடைய நடனத்தைப் பார்க்கப் பாவியான நான் ஒரு கைம்முதலான கண்ணை உடையேனல்லேன். குடக்கூத்து ஆடினவனான கோவிந்தன் எம்பெருமான் ஸ்வதந்த்ரர் செய்வதுபோல் துன்புறுத்தி, என்னை முழுதும் கவர்ந்து கொண்டான். இப்படியிருக்க, இப்படி என் முன்னே கூத்தாடும் கார்யம் உங்களுக்குத் தகுமோ?
எட்டாம் பாசுரம். எல்லாப் பதார்த்தங்களும் இவளை நலிய, அதற்கு மேலே மேகங்களும் மழையைப் பொழிந்து இவளைத் துன்புறுத்துகிறது. பெரிய திருமலை நம்பி, இந்தப் பாசுரத்திலும் இதற்கு அடுத்த பாசுரத்திலும் மிகவும் ஈட்பட்டு இருப்பார். இந்த காரணத்தாலே நம் ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் இந்த இரண்டு பாசுரங்களில் மிகவும் ஈடுபட்டு இருப்பார்கள். நம்பி இந்தப் பாசுரத்தையும் இதற்கு அடுத்த பாசுரத்தையும் எப்பொழுது நினைத்தாலும் கண்ணும் கண்ணீருமாய் வார்த்தை சொல்ல முடியாமல் இருப்பாராம்.
மழையே! மழையே! மண்புறம் பூசி உள்ளாய் நின்று
மெழுகு ஊற்றினாற் போல் ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற
அழகப் பிரானார் தம்மை என் நெஞ்சத்து அகப்படத்
தழுவ நின்று என்னைத் ததர்த்திக் கொண்டு ஊற்றவும் வல்லையே?
மேகமே! மேற்புறத்தில் மண்ணைப் பூசிவிட்டு உள்ளே இருக்கும் மெழுகை உருக்கி வெளியில் தள்ளுவதுபோலே என்னை அணைத்து உள்ளே உள்ள உயிரை உருக்கி அழிப்பவராய், உயர்ந்ததான திருவேங்கடமலையில் நித்யவாஸம் செய்யும் அழகிய எம்பெருமான் என் நெஞ்சிலே எப்படி சேவை ஸாதிக்கிறானோ அதேபோல வெளியிலேயும் நான் அவனை அணைக்கும்படிபண்ணி, என்னை அவனோடு சேர்த்து வைத்து, அதற்குப் பிறகு மழையைப் பொழிவாயா?
ஒன்பதாம் பாசுரம். பிறகு கடலானது அலைகளுடன் கிளர்ந்து எழ, அதைப் பார்த்து வார்த்தை சொல்லுகிறாள்.
கடலே! கடலே! உன்னைக் கடைந்து கலக்குறுத்து
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு என்
நடலைகள் எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே
கடலே! உன்னைக் கடைந்து, கலக்கி, உன்னுள்ளே புகுந்து இருந்து, அங்கே ஸாரமான அமுதத்தை அபஹரித்தவனாய், அதேபோல என் உடலிலும் புகுந்திருந்து என் உயிரை அறுக்குமவனான மாயப்பிரானிடத்தில், என்னுடைய துன்பங்களையெல்லாம் அவர் படுக்கையான திருவனந்தாழ்வானிடத்தில் நீ போய்ச் சொல்லுவாயா?
பத்தாம் பாசுரம். இவளை விடவும் கலக்கத்தை அடைந்த தோழிக்கு ஆறுதல் சொல்லி இப்பதிகத்தை முடிக்கிறாள்.
நல்ல என் தோழி! நாகணை மிசை நம் பரர்
செல்வர் பெரியர் சிறுமானிடவர் நாம் செய்வதென்?
வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே
எனது உயிர்த் தோழீ! திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே சயனித்திருக்கும் நம் பெருமாள் திருமகள் கேள்வனாகையாலே பெரிய செல்வத்தைப் படைத்தவர். எல்லோரையும் விடப் பெரியவர். நாமோ தாழ்ந்த மனுஷ்யர்கள். இப்படியிருக்க, நாம் என்ன செய்யலாம்? ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வார் தமக்கு அடி பணிந்திருக்கும் அந்த எம்பெருமானை தம்மால் கூடிய வழிகளாலே அழைப்பராகில் அப்பொழுது நாம் அந்த எம்பெருமானை ஸேவிக்கப் பெறுவோம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org