ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
சீரார் வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுது
ஏரார் தமிழ் வேதத்து ஈடு தனை – தாரும் என
வாங்கி முன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்
தாம் கொடுத்தார் பின் அதனைத் தான்
நாற்பத்தெட்டாம் பாசுரம். இப்படி வ்யாக்யானங்களைக் காட்டி அருளிய பின்பு, இரண்டு பாசுரங்களில் நம்பிள்ளையின் உயர்ந்த ஸ்ரீஸூக்திகளான ஈடு வ்யாக்யானத்தின் சரித்ரத்தை அருளிச்செய்கிறார்.
ஆசார்யன் க்ருபையாலே கிடைத்த ஞான பூர்த்தியாகிய பெருமையைப் பெற்றிருந்த வடக்குத் திருவீதிப் பிள்ளை ஏடுபடுத்திய தமிழ் வேதமான திருவாய்மொழியின் பொருளை விரிவாக விளக்கக்கூடிய பெருமையைப் பெற்றதான ஈடு வ்யாக்யானத்தை இவரிடமிருந்து நம்பிள்ளை “இதை இப்பொழுது வெளியிடுவதற்குச் சரியான காலமில்லை. இது பிற்காலத்திலே ஒரு மஹநீயர் மூலமாக நன்றாக ப்ரசாரம் ஆகி புகழின் உச்சியை அடையும். ஆகையால் இப்பொழுது இதை என்னிடம் தாரும்” என்று சொல்லி முற்காலத்திலே வாங்கி, பின்பு தம்முடைய அன்புக்கு இலக்கான ப்ரிய சிஷ்யரான ஈயுண்ணி மாதவப் பெருமாளிடத்திலே கொடுத்தருளினார். ஈடு வ்யாக்யானத்தை ஓராண் வழி க்ரமத்திலே அந்தரங்கமாக உபதேசித்து வருமாறு அவர்க்கு ஆணையிட்டார்.
பிற்காலத்திலே மணவாள மாமுனிகள் ஈடு வ்யாக்யானத்தைத் தன் ஆசார்யரான திருவாய்மொழிப் பிள்ளையிடம் கற்றறிந்து அதை உலகறியும்படிச் செய்து, திருவரங்கம் பெரிய கோயிலிலே நம்பெருமாளின் திருவாணைக்கு இணங்கி நம்பெருமாள் தானும் தன் பரிவாரங்களுடன் ஒரு வருட காலம் காலக்ஷேபமாக மாமுனிகள் திருவாயிலிருந்து இதை காலக்ஷேபமாகக் கேட்டு அனுபவிக்கும்படி, அங்கே உபந்யஸித்தார். நம்பெருமாளும் தானே மாமுனிகளை ஆசார்யனாக ஏற்று, மாமுனிகளுக்கு “ஸ்ரீசைலேச தயாபாத்ரம்” தனியனையும் ஸமர்ப்பித்து இத்தனியனை திவ்யப்ரபந்த ஸேவாகால க்ரமத்தில் முதலிலும் முடிவிலும் ஸேவிக்க நியமித்தான் என்பதும் ஜகத்ப்ரஸித்தமான சரித்ரம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org