ப்ரமேய ஸாரம் – 1 – அவ்வானவர்க்கு

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ப்ரமேய ஸாரம்

<< நூன் முகவுரை

முதற் பாட்டு

acharya-sishya-instruction

முகவுரை

திருமந்திரத்தின் சுருக்கம் “ஓம்” என்பது. அதற்குப் பிரணவம் என்று பெயர். அதில் சொல்லப்படும் கருத்து திரட்டிக் கூறப்படுகிறது.

அவ்வானவர்க்கு மவ்வானவரெல்லம்
உவ்வானவரடிமை யென்றுரைத்தார்- இவ்வாறு
கேட்டிருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சியில்லா
நாட்டிருப்பார் என்றிருப்பன் நான்

பதவுரை:

அவ்வானவர்க்கு     : “அ” என்ற எழுத்துக்குப் பொருளான இறைவனுக்கு

மவ்வானவரெல்லாம்  : ‘ம” என்னும் எழுத்துக்குப் பொருளான உயிர்கள் எல்லாம்

அடிமை                     : அடிமைப் பட்டவர் என்று

உவ்வானவர்           :ஆசார்யர்கள்

உரைத்தர்                    : கூறினார்கள்

இவ்வாறு                   : அவர்கள் கூறிய இம்முறைகளை

கேட்டு                       : தெரிந்து கொண்டு

இருப்பார்க்கு          : தெரிந்தபடி நிலை நிற்பார்க்கு

ஆள் என்று                 : அடிமை என்று

கண்டிருப்பர்           : தங்களை அறிந்துகொண்டவர்

மீட்சியில்லா           : மீண்டும் பிறவாத

நாடு                           : திருநாட்டில் போய்

இருப்பார் என்று      : நித்யர், முக்தர் முதலிய அடியார்களுடன் சேர்ந்திருப்பாரென்று

நான்                           : எம்பெருமானாருடய அடியனான நான்

இருப்பன்                    : நம்பி இருப்பவன்

விளக்கவுரை

அவ்வானவர்க்கு :- ”அ’ காரம் என்ற சொல்லுக்குப் பொருளாய் விளங்குபவன் இறைவன் .அவனுக்கு வேதத்தில் ‘அ’என்று பெர்யர் சொல்லியிருக்கிறது. இங்கு ‘அ’ என்னும் எழுத்தையே கடவுளாகப் பேசியிருப்பது சொல்லுக்கும் பொருளுக்கும் உண்டான இணைப்பு பற்றி சொல்லும் பொருளும் பிரித்து நில்லாது இயைந்தே இருப்பதால் அவ்வாறு கூறப்பட்டது. மகாகவி காளிதாசன் இறைவனும் இறைவியும் இணைந்திருக்கும் நிலையைச் “சொல்லும் பொருளும் போல” என்று ரகுவம்ச காவியக் கடவுள் வாழ்த்தில் கூறினான்.உப்பு’ என்னும் குணத்தை வைத்து உப்பு என்னும் பொருளைச் சொல்வது போன்றது இது. ஆகவே எழுத்துக்களுல் நான் ‘அ’ கரமாயிருககிறேன் என்று பகவான் கண்ணன் கீதையில் கூறினான். இது பற்றியே திருவள்ளுவரும் ‘அகர முத்த எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்றார்.

இறைவன் இயங்குதினைக் கண்ணும், நிலத்தினைக் கண்ணும், பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தார்போல் அகரமும், உயிர்க்கன்னும் தனி மெய்க் கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்கும் என்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது. ‘அகர முதல’ என்றால் அகரமாகிய எச்ஹுத்தைக் காரணமாக உடைய மற்றைய எழுத்துக்கள் எல்லாம் என்று பொருள். அதுபோல இறைவனாகிய காரணத்தை உடைய உலகமென வள்ளுவனார் உவமை கூறியவாற்றானும், எழுத்துக்களில் நான் ‘அ’ கரமகின்றேன்’ என்று கீதையில் கண்ணன் கூறியவாற்றானும் பிற நூல்களாலும் உணர்க. இதனால் உண்மைத் தன்மையுஞ் சிறிது கூரினாராயிற்று. என்று தொல்காப்பிய வ்ழுத்ததிகார ‘மெய்யின்இயக்கம்’ என்ற சூத்திர உரையில் நச்சினார்க்கினியர் கூறியவாற்றால் அகரத்தைப் பற்றிய விளக்கங்களைக் காணலாம். ‘பூ மகள் பொருளும்’ எனக் கம்பர் பால காண்டக் கடிமணப் படலத்துள் கூறினான். தனால் ஒன்றர்கொன்று இயைந்த பொருள்களில் ஒன்றைச் சொன்னால் அதனோடு இயைந்த மற்றொன்று தன்னடையே கூறினதாக ஆகும். இதனால் அ என்ற எழுத்தைச் சொன்னபோதே அதன் பொருளான கடவுள் சொல்லாமலேயே உணரப்படும். ஆக அவ்வானவர்க்கு என்றால் இறைவனுக்கு என்று பொருள்.

மவ்வானவரெல்லாம்:- மவ்வானவர் என்று ‘ம’ காரத்தின் பொருளான உயிர்களைச் சொல்லுகிறது. ‘ம’காரம் உயிரைச் கொள்ளும் சொல்லாகும் என்பது சாஸ்திரம். இது ஒருமையாக இருந்தாலும் ‘இது ஒரு நெல்’ என்பது போல. சாதி ஒருமையாய் உயிர் சமுதாயமான எல்லாவித உயிரையும் குறிக்கும். எல்லாவிதமான உயிர் என்றது மூன்று வகைப்பட்டிருக்கும் உயிர்களை. வினை வயத்தால் மாறி மாறிப் பிறந்து வரும் உயிர்களும் இறைவன் அருளாலேயே தான் செய்யும் தவம் முதலிய முயற்சியாலேயோ,வினையிலிருந்து விடுபட்ட உயிர்களும், என்றைக்கும் வினைவயப்படாமல் இறைவனுக்கு ஒப்பாக இறைவனோடு கூடவே வீட்டுலுகத்தில் உறையும் உயிர்களும் ஆகிய மூவகைப் பட்ட உயிர்களையும் குறிக்கும். இதனை, பக்தர், முக்தர் நித்யர் என்று சாஸ்திரம் கூறும். ஆக இம்மூவகையான ஆன்மாக்களையும் ஒருமைப்படுத்தி ‘மவ்வானவர் எல்லாம்’ என்று கூறப்பட்டது.

உவ்வானவர்:- ‘உ’ காரத்திற்குப் போருலாயிருப்பவர் என்று பெயர். உகாரம் ஆச்சர்யனை உணர்த்தும் சொல்லாகும். எவாறு என்றால் உகாரத்திற்கு நேர் பொருளாக இருப்பவர் பெரிய பிராட்டியாரான லட்சுமி தேவியாவாள். இது சாஸ்திர முடிவு. பிராட்டி இறைவனுக்கும் உயிர்களுக்கும் நடுவிலிருந்து உயிர்கலைஇரைவனிடம் சேர்த்து வைக்கும் தன்மையுடையவள். அதுபோல ஆசார்யனும் இறைவனுக்கும் உயிர்களுக்கும் நடுவிலிருந்து உயிர்களை இறைவனிடம் சேர்த்து வைக்கும் தன்மையுடையவர். லட்சுமி தேவிக்கும் அசார்யனுக்கும் தொழில் ஒப்புமையிருப்பதால் உகாரம் அசார்யனைச் சொல்லுகிறது. மேலும் ஆசார்யன் பிரட்டி திருவடிகளில் பக்தி செய்து அவளது அன்பைப் பெற்று அவ்வன்பு காரணமாகத் தன்னை நாடி வரும் சீடர்களைப் பிராட்டியிடம் ஈடுபடுத்தி அவர்களுக்கு அருள் கிடைக்கச் செய்பவர். இவ்வாறு ஆசார்யனைப் பற்றி வரும் உயிர்களுக்கு இறைவன் கருணை காட்டும்படி சிபாரிசு செய்வதால் இருவருடைய செயல்களும் ஒற்றுமைப்படுகிறது. ஆகையால் இறைவனிடம் சிபாரிசு செய்யும் செயல் ஒற்றுமையாலும் அவளிடம் அன்பு பூண்டொழுகும் உறவினாலும் ஆசார்யனை உகாரத்திற்குப் பொருளாகச் சொல்லுகிறது.

இதைப்பற்றி முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்று இதற்கு எடுத்துக்காட்டாக இங்கு கூறப்படுகிறது. எம்பெருமானார் ஒருநாள் மகிழ்ச்சியாக இருக்கும்பொழுது அருகிலேயே இருக்கும் சீடரான முதளியாண்டானுக்கு உகாரத்தின் பொருளைக் கூறியுள்ளார். அதனை அவருடைய குமாரரான கந்தாடை ஆண்டானுக்கு கூற அவரும் பட்டருக்குச் சொல்லியுள்ளார். அக்கருத்துக்களை எல்லாம் தொகுத்து பிரணவ ஸங்க்ரகம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. அதில், ஆசார்யனை உகாரத்தின் பொருளாகச் சொல்லியிருப்பதை இங்கு மேற்கோளாகக் கூறப்பட்டுள்ளது. அருளாளப்பெருமாள் எம்பெருமானாரும் எம்பருமானார் (உடையவர்) திருவடிகளில் நீண்ட காலம் சேவை செய்து அவருடைய அருளுக்கு இலக்கானவர் .ஆதலால் இவருக்கும் அப்பொருளை உணர்த்தி இருக்கலாம் அன்றோ!. ஆகவே ஐவரும் எம்பெருமானார் சொல்லக் கேட்டு உகாரத்தின் பொருள் ஆசார்யன் என்று அறிந்து அப்பொருளை இந்நூலில் கூறுவாராயிற்று .அகவே உகாரம் அசார்யனைக் குறிக்கும் என்றவாறு.

அடிமை என்றுரைத்தார்:- உயிர்கள் ஆகாரத்திற்கு அடிமைப் பட்டவை என்று சொன்னார்கள். இறைவனுக்கும் உரிகளுக்கும் உண்டான உறவு முறையைக் காட்டிக் கொடுப்பவ நடுவரான ஆசார்யராவார். இறைவன் உயிர்களுக்குத் தலைவனாகவும் உயிர்கள் இறைவனுக்கு அடிமையாகவும் இருவருக்கும் ஆண்டான் அடிமை என்னும் உறவென்றும் உபதேசத்தாலே சீடனுக்கு ஆசார்யன் உனர்த்தினபோது சீடனுக்கு அவ்வுறவு தெரிவதாகும். ஆகையால் ‘அ’ காரத்தின் பொருளான இறைவனுக்கு ‘ம’ காரத்தின் பொருளான உயிர்கள் அடிமையானவர் என்று உகாரத்தின் பொருளான ஆச்சார்யர்கள் சொல்லி வைத்தார்கள். இக்கருத்து ‘அவ்வானவர்க்கு மவ்வானவரெல்லாம் அடிமை என்று உவ்வானவர் உரைத்தார் ‘ என்று கூறப்பட்டது. இறைவனுக்கும் உயிர்களுக்கும் உண்டான உறவு முறையை உணர்த்துவதற்கு ஒரு சிறு கதை திருவாய்மொழி ஈட்டுரையில் சொல்லப்படுவதுண்டு.

வாணியன் ஒருவன் கடல் தாண்டி வாணிபத்திற்கு செல்லும்பொழுது அவன் மனைவி கருவுற்றிருந்தாள். மனைவியிடம் தான் மீண்டு வரும் வரை பிறக்கும் குழந்தையை வாணிபத் துறையிலேயே வளர்க்க வேண்டும் என்று சொல்லி விட்டுச் சென்றான். அவ்வாரே ஆண் குழந்தையும் பிறந்து தக்க பருவத்தை அடைந்து தந்தையைப் போல கடல் தாண்டி வாணிபம் செய்யச் சென்றான். சென்ற இடம் தந்தை சென்ற இடமாகவே இருந்தது. ஒருநாள் சரக்குகள் வைப்பது காரணமாக தந்தைக்கும் மகனுக்கும் பெரும் கலாய் (சண்டை) விளைந்தது. கூட்டமும் திரண்டு விட்டது. அக்கூட்டத்திலிருந்த ஒருவர் அவ்விருவரையும் நன்கு அறிந்தவராயிருந்தார்.அவ்விருவரையும் பார்த்து “நீர் தந்தை, இவன் மகன்” தந்தையும் மகனுமான நீங்கள் இப்படி சண்டை செய்து கொள்கிறீர்களே! என்று இருவருக்குமுள்ள உறவு முறையை உணர்த்தி இருவரையும் ஒன்று சேர்த்து வைத்தார். இவ்வாறு நடுவர் ஒருவரால் ஒன்று சேர்ந்த தகப்பனும் மகனும் பெரு மகிழ்ச்சி எய்தினர்.புதல்வனை அடைந்ததால் தந்தைக்கு மகிழ்வும், தந்தையை அடைந்ததால் மகனுக்கு மகிழ்வும் சொல்லும் அளவையில்லாமல் அளவு கடந்ததாயிற்று.

இவ்வாறே   நடுவர் நிலையில் நின்று ஆசார்யன் உயிர்களுக்கும் இறைவனுக்கும் உரிய ஆண்டான் அடிமை என்னும் உறவை உணர்த்துகிறான். தாயாய்த், தந்தையாய், மக்களாய், மற்றுமாய் எல்லா உறவாயும் இருப்பவன் என்பதையும் உணர்த்தி, அதே சமயம் இறைவனிடம் இறைவனிடம் ‘உன்னை விட்டுப் பிரிக்க முடியாத உறவாய் இருக்கும் இவ்வுயிர்களை, குற்றங்களைப் பொறுத்து ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் இறைவனுக்கும் உணர்த்தி இறைவனுடைய அருள் உயிர்களுக்குக் கிடைக்கச் செய்தும் உயிர்களை அவிரையருளால் உயாவும் செய்கிறான். இது ஆசார்யனது செயல் என்று இங்கு சிறப்பாகக் குறிக்கப்பட்டது.

ஆள் என்று கண்டிருப்பார்:- மேற்கூறியவாறு குரு உபதேசத்தால் இறைவனுக்கு அடியார்களாகி அச்சீரியஒழுக்கத்தில் நிலை நிற்பவருக்குச் சிலர் அடியார்களாகி அடியார்க்கு அடியாராகும் தன்மையைப் பெறுகிறார்கள். இறைவனுக்கு அடிமையாயிருப்பது முதல் நிலை என்றும், அவ்வடியார்க்கு அடியராயிருக்கும் தன்மை கடைசி நிலை என்றும் சொல்லப்படுவதால் ‘கேட்டிருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் ‘ என்று அடியார்க்கு அடியாராம் தன்மை இங்குச் சொல்லப்பட்டது.

திருமந்திரத்தில் உயிரக்ளுக்குரிய மூன்று இலக்கணங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவை, ‘இவ்வுயிர்கள் இறைவனைத் தவிர வேறு யார்க்கும் அடிமை இல்லை. உயிர்களுக்கு இறைவனைத் தவிர வேறு வழியில்லை. உயிர்களுக்கு இறைவனைத் தவிர இன்பமில்லை’ என்பன. இம்மூன்றையும்   அடியார் வரையிலும் பெருக்கிப் பார்க்கையில் அடியார் தவிர வேறு யார்க்கும் அடிமை இல்லை’என்றும், அடியார் தவிர வேறு வழி இல்லை என்றும், அடியார் தவிர வேறு இன்பம் இல்லையென்றும் என்றும் பெருக்கிக் கொண்டு அடியார்கள் வரை பொருள் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அம்மூன்றை இங்குக் கூறிக் கொள்ளவேணும். இதனால் இறைவனுக்கு அடியராய் இருப்பார்க்கு அடியராய் இருக்கும் எல்லை நிலை கூறப்பட்டது. ஆக, இங்கு கூறியவற்றால் ‘தங்களை அடியார்க்கு அடியராய் அறிந்து அந்நிலையில் இருப்பவர்கள் ‘ என்று பொருள்.

மீட்சியில்லா நாட்டிருபார் என்று இருப்பன் நான்:- மேற் கூறிய ‘அடியார்க்கு அடியராய்’ இருப்பார் மீண்டு பிறப்பில்லாத திருநாட்டிலே போய் அங்கு நித்ய முக்தர்களான அடியார் குழாங்களுடன் கூடி இருப்பார்கள். என்று நம்பி இருப்பவன் நான் என்பதாம். ‘நான்’ என்று கூறுவதால் தம்முடைய நம்பிக்கையை வெளிப்படுத்த்துகிறார் ஆசிரியர்.

மேலும் எம்பெருமானார் திருவடிகளிலே பணிந்து அனைத்துசாஸ்திரங்களின் உட்பொருட்களைஎல்லாம் தெரிந்து கொண்டு அதனால் மதிப்பு மிக்கவராய் மிக்க நம்பிக்கை உடையவராயிருப்பவர் அருளாளப் பெருமாள் எம்பெருமானார். வேத தாத்பர்யங்களில் தம்முடைய முடிவே இறுதி முடிவு என்பதை உலகம் ஏற்கும்படியான மதிப்பு மிக்கவராதலால் அன்றோ’ என்றிருப்பவன் நான் என்று துணிந்து கூறுவாராயிற்று.

வலைத்தளம் –  https://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

0 thoughts on “ப்ரமேய ஸாரம் – 1 – அவ்வானவர்க்கு”

Leave a Comment