பூர்வ திநசர்யை – 9 -மந்த்ரரத்நாநுஸந்தாந

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>

 9-ஆம் பாசுரம்

मन्त्र रत्न अनुसन्धान सन्तत स्फ़ुरिताधरम् ।
तदर्थ तत्व निद्यान सन्नद्ध पुलकोद्गमम् ॥

மந்த்ரரத்நாநுஸந்தாந ஸந்ததஸ்புரிதாதரம், |
ததர்த்த தத்த்வநித்யாந, ஸந்நத்தபுலகோத்கமம் ||

பதவுரை:- மந்த்ரரத்ந அநுஸந்தாந ஸந்தத ஸ்புரித அதரம் – மந்த்ரங்களில் உயர்ந்த த்வயத்தை மெல்ல உச்சரிப்பதனால் எப்போதும் சிறிதே அசைகிற உதட்டையுடையவரும், ததர்த்த தத்த்வ நித்யாந, ஸந்நத்த புலக உத்கமம் – அந்த த்வய மந்த்ரத்தின் அர்த்தத்திலுள்ள உண்மை நிலையை நன்றாக த்யாநம் செய்வதனால் உண்டான மயிர்க்கூச்செறிதலையுடையவருமாகிய….

கருத்துரை:- இதனால் அதர ஸொபையை வருணிக்கிறார். அதரம்-உதடு. ‘ஸ்ரீமந்நாராயண சரணௌ ஸரணம் ப்ரபத்யே, ஸ்ரீமதே நாராயணாய நம:’ என்பது த்வயமந்த்ரம். இது திருமந்த்ரமாகிய ‘ஒம் நமோ நாராயணாய’ என்ற மூலமந்த்ரத்தைவிட உயர்ந்ததாகையால் மந்த்ரரத்நமெனப்படுகிறது. மூலமந்த்ரம் மந்த்ரராஜமென்றும், இது மந்த்ரரத்நம் என்றும் ப்ரஸித்தமாகியுள்ளது. மந்த்ர ரத்நமென்றால் மந்த்ரங்களுக்குள்ளே மிகவும் ஸ்ரேஷ்டமானது என்றபடியாம். ‘மந்த்ரங்களுக்குள்ளே பரமமான மந்த்ரம் இது. குஹ்ய(ரஹஸ்ய)ங்களுக்குள்ளே பரமமான குஹ்யம் இது. வெகு விரைவிலேயே ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவிப்பது இது. திருமந்த்ரத்தில் உண்டான எல்லா விதமான ஸந்தேஹங்களையும் தீர்ப்பது இது. எல்லாப் பாபங்களையும் போக்கவல்லதுமாகும் இது. இந்த ஸரணாகதி மந்த்ரம் எல்லாச் செல்வங்களையும், எல்லா நன்மைகளையும் உண்டாக்குமது’ என்று நாரதருக்கு பராஸர முனிவரால் கூறப்பட்டுள்ளது காணத்தக்கது. இப்படிப்பட்ட பெருமைகளைக் கருதியே இது மந்த்ரரத்நமெனப்பட்டது. அநுஸந்தானமாவது மெல்ல உச்சரித்தலாகும். த்வயத்தை உச்சரிப்பதனால் எப்போதும் உதடு அசைகிறதென்றபடி. ‘தேஹம் விழும் வரையில் த்வயத்தைத் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டும்’ என்பது பராஸரின் வசனம். அநுஸந்தானமென்று – மெல்ல உச்சரிக்கின்றமை கூறப்படுவதனால் ‘மந்த்ரத்தைப் பிறர் காதில் விழாதபடி உச்சரித்து ரக்ஷிக்கவேண்டும்’ என்ற ஸாஸ்த்ரார்த்தம் மாமுனிகளால் அநுஷ்டிக்கப்பட்டமை ஸூசிப்பிக்கப்பட்டது.

த்வயத்தை அர்த்தாநுஸந்தானமில்லாமல் மூலமாத்ரமாக உச்சரிப்பது உயர்ந்த அதிகாரிகளுக்கு தகாமையினால் மாமுனிகள் அதன் அர்த்தங்களையும் அநுஸந்திப்பதை இனிக்கூறுகிறார். த்வயத்தின் அர்த்தமாவது பிராட்டியும், எம்பெருமானும். பிராட்டியுடன் கூடிய எம்பெருமானைத் தஞ்சமாகப் பற்றுதலுமாம். அவற்றின் தத்துவமாவது – பிராட்டியின் புருஷகார பாவமும், அவளால் தலையெடுக்கப்பட்ட வாத்ஸல்யம் முதலிய குணங்களும், அக்குணங்களோடு கூடிய ஸித்தோபாயமான நாராயணனும், அவனுடைய திருமேனியும் அதைத் தெரிவிக்கிற திருவடிகளும் ஆகியவை. நித்யாநமாவது – நிதராம் த்யாநம் என்றபடி. அதாவது பாவநாப்ரகர்ஷம் என்று சொல்லப்படுகிற – இடைவிடாமல் நினைத்துக் கொண்டேயிருத்தல் ஆகும். முற்கூறிய அர்த்த தத்துவங்களை இடைவிடாமல் நினைத்தால் பகவத் பக்தர்களுக்கு ஆஸ்சர்யத்தினாலும் ஸந்தோஷத்தினாலும் மயிர்கூச்செரிதல் உண்டாவது இயற்கையாகையால், அது மாமுனிகளுக்கு உண்டாகின்றமை இதில் கூறப்பட்டது. த்வயத்தையும் அதன் அர்த்தங்களையும் நினைத்தலே ப்ரபத்தியாகையால், அப்ரபத்தியை ஒருதடவை மட்டுமே அநுஷ்டிக்க வேண்டியிருத்தலால், இடைவிடாமல் அநுஷ்டித்தமை சொல்லப்படுதல் பொருந்தாதே என்று கேட்கவேண்டா. மோக்ஷார்த்தமாகப் ப்ரபத்தியை அநுஷ்டித்தல் ஒருதடவையேயாகிலும், நற்போது போக்குவதற்காகவும், அநுபவித்து மகிழ்வதற்காகவும் இடைவிடாமல் அவ்வர்த்தத்தின் தத்துவங்களை நினைத்தல் கூடுமென்க.

முற்கூரியபடியேயன்றி ‘ததர்த்த தத்த்வ நித்யாநம்’ என்பதற்கு வேறுபடியாகவும் கருத்துக்கூறுவர். ‘விஷ்ணு: ஸேஷீ ததீய: ஸுபகுணநிலயோ விக்ரஹ: ஸ்ரீஸடாரி:, ஸ்ரீமாந் ராமாநுஜார்ய பதகமலயுகம் பாதி ரம்யம் ததீயம் | தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந்யத்ர தஸ்மாத், ஸேஷம் ஸ்ரீமத் குரூனாம் குல மிதமகிலம் தஸ்ய நாதஸ்ய ஸேஷ: || [விஷ்ணுவானவர் ஸேஷி (நாம் செய்யும் கைங்கர்யங்களை ஏற்றுக் கொண்டு உகக்கும் தலைவர்). நற்குணங்களுக்கு இருப்பிடமாகிய அப்பெருமானுடைய திருமேனியே ஸ்ரீஸடாரி என்னும் நம்மாழ்வார், அவருடைய திருவடித்தாமரையிணையாக ஸ்ரீமத் ராமாநுஜாசார்யராகிய எம்பெருமானார் விளங்குகிறார். குரு: என்ற பதம் அவ்விராமாநுசரிடத்தில் நிறைபொருளுடையதாய் விளங்குகிறது. வேறு யாரிடத்திலும் விளங்குவதில்லை. ஆகையால் அவ்விராமாநுசருக்கு முன்பும், பின்புமுள்ள மற்ற குருக்களுடைய ஸமூஹம் அனைத்தும் அவ்விராமாநுச முனிவருக்கு ஸேஷமானது.] என்று பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்தபடியே, பகவத் ராமாநுஜாச்சார்யரே த்வயத்தில் உள்ள ‘ஸ்ரீமந்நாராயண்சரணௌ’ என்ற சரண்ஸப்தார்த்தம். அதுவே ததர்த்த தத்த்வம். அதாவது ஸ்ரீமந்நாராயணனுடைய – நாம் காண்கிற திருவடி ஸ்ரீமந்நாராயணனுடைய சரணங்களல்ல; பின்னையோவெனில் பகவத் ராமாநுஜரே ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடிகள் என்பது த்வயமந்த்ரார்த்தத்தின் உண்மைநிலை என்றபடி. யதீந்த்ரப்ரவணரான (பகவத் ராமாநுஜ பக்தராகிய) மணவாள மாமுனிகளுக்கு ராமாநுஜரென்னும் ஸ்ரீமந் நாராயண சரணங்களை இடைவிடாமல் த்யானித்தலே முக்கியமாகையால் முற்கூறிய த்வயார்த்த தத்த்வத்தை விட இந்த த்வயார்த்த தத்த்வமே இங்கு எறும்பியப்பாவால் அருளிச்செய்யப்பட்டதென்கை யுக்தமாகும். த்வயார்த்த தத்த்வ த்யானத்தினால் மயிர்க்கூர்ச்செறியபெற்ற தேவரீரையே இடைவிடாமல் கண்ணாரக்காணக்கடவேன் (12ம் ஸ்லோகம்) என்கையால், ‘எம்பெருமானுடைய குணங்களாலே ஆவேஸிக்கப்பட்டு எம்பெருமான் குணங்களையே த்யானித்து அதனால் ஆனந்தக் கண்ணீருடனும் மயிர்க்கூச் செறியப்பெற்ற திருமேனியுடனும் விளங்கும் பக்தனானவன் உடலெடுத்த அனைவராலும் எப்போதும் காணத்தக்கவனாகிறான்’ என்று விஷ்ணு தத்த்வ க்ரந்தத்தில் கூறியபடியே மணவாளமாமுனிகளைக் கண்ணாரக்காண் எறும்பியப்பா ஆசைப்பட்டபடி இது. (9)

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – https://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org

srIvaishNava education/kids portal –
http://pillai.koyil.org

Leave a Comment