பூர்வ திநசர்யை – 29 – ஆராத்ய

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>>

29-ஆம் பாசுரம்

आराध्य श्रीनिधिं पश्चादनुयागं विधाय
प्रसादपात्रं मां क्रुत्वा पश्यन्तं भावयामि तम् 29

ஆராத்ய ஸ்ரீநிதிம் பஸ்சாதநுயாகம் விதாய |
ப்ரஸாதபாத்ரம் மாம் க்ருத்வா பஸ்யந்தம் பாவயாமி தம் || 29

பதவுரை:- பஸ்சாத் – பின்பு (மாத்யாஹ்நிகாநுஷ்டாநம் நிறைவேற்றிய பின்பு), ஸ்ரீநிதிம் – திருவுக்கும் திருவான (தம்முடைய திருவாராதனப் பெருமாளாகிய) அரங்கநகரப்பனை, ஆராத்ய – மிக்க பக்தியுடன் ஆராதித்து, அநுயாகம் – பகவான அமுது செய்த ப்ரஸாதத்தை ஸ்வீகரித்தலாகிய அநுயாகத்தை, விதாய – செய்து, மாம் – இதற்கு முன்பு இந்த ப்ரஸாதத்தில் பராமுகமாக இருந்த அடியேனை, ப்ரஸாதபாத்ரம் க்ருத்வா – தாம் அமுது செய்த ப்ரஸாதத்துக்கு இலக்காகச் செய்து (தாம் அமுது செய்து மிச்சமான ப்ரஸாதத்தை அடியேனும் ஸ்வீகரிக்கும்படி செய்து) பஸ்யந்தம் – அடியேனைக் கடாக்ஷித்துக் கொண்டிருக்கிற தம் – அந்த மாமுனிகளை, பாவயாமி – ஸதா த்யாநம் செய்கிறேன்.

கருத்துரை:- ஆராத்ய – நன்றாக பூசித்து, த்ருப்தியடையும்படி செய்து என்றபடி, “இளவரசனையும் மதம்பிடித்த யானையையும் நம் அன்புக்கு விஷயமாய்ப் பிற தகுதிகளையும் பெற்ற விருந்தினனையும் எங்ஙனம் (அன்புடனும் அச்சத்துடனும்) பூசிக்கிறோமோ, அங்ஙனமே பகவானையும் பூசிக்கவேண்டும். பதிவிரதை தனது அன்பிற்குரிய கணவனையும், தாய் முலைப்பாலுண்ணும் தன் குழந்தையையும், ஸிஷ்யன் தன்னாசார்யனையும், மந்திரமறிந்தவன் தான் அறிந்த மந்த்ரத்தையும் எங்ஙனம் மிகவும் அன்புடன் ஆதரிப்பார்களோ அங்ஙனம் எம்பெருமானையும் ஆதரிக்கவேண்டும்” என்று சாண்டில்யஸ்ம்ருதியில் கூறியபடியே அரங்கநகரப்பனை மாமுனிகள் ஆராதித்தாரென்றபடி. அநுயாகமாவது – யாகமாகிற பகவதாரதனத்தை அநுஸரித்து (பகவதாராதனத்திற்குப் பின்பு) செய்யப்படுகிற பகவத் ப்ரஸாத ஸ்வீகாரமாகிய போஜனமாகும். ‘பரிசேஷனம் செய்து விட்டு ப்ராணன் அபாநன் வ்யாநன் உதாநன் ஸமானனென்னும் பெயர்களைக்கொண்ட எம்பெருமானை உத்தேஸித்து அந்நத்தை ஐந்து ஆஹூதிகளாக வாயில் உட்கொள்ள வேணும், பின்பு உண்ணவேணும்’ என்று பரத்வாஜர் கூறியது நினைக்கத்தக்கதிங்கு. சாண்டில்யரும் ‘நம்முடைய ஹ்ருதயத்தில் உள்ள எம்பெருமானை த்யாநம் செய்து, பெருமாள் தீர்த்தம் ஸ்வீகரித்து ப்ராணாய ஸ்வாஹா முதலிய மந்த்ரங்களை உச்சரித்துக் கொண்டே நமது வாயில் அந்நத்தை ஹோமம் செய்யவேண்டும். பின்பு எம்பெருமானை நினைத்துக்கொண்டே சிறிதும் விரைவின்றிக்கே, அந்நத்தை நிந்தியாமல் (உப்புக்குறைவு, புளிப்பதிகம் காரமேயில்லை என்றிவ்வாறாகக் குற்றங்கூறாமல்) உண்ண வேண்டும். ஸுத்தமானதும் நோயற்ற வாழ்வுக்கு உரியதும் அளவுபட்டதும் சுவையுடையதும் மனத்துக்குப் பிடித்ததும் நெய்ப்பசையுள்ளதும் காண்பதற்கு இனியதும் சிறிது உஷ்ணமானதுமான அந்நம் புத்திமான்களாலே உண்ணத்தக்கது’ என்று கூறியது கண்டு அநுபவிக்கத்தக்கது. ‘அநுயாகம் விதாய ச’ என்ற சகாரத்தினாலே (அநுயாகத்தையும் செய்து என்று உம்மையாலே) மணவாளமாமுனிகள் தாம் அமுது செய்வதற்கு முன்பு ஸ்ரீவைஷ்ணவர்களை அமுது செய்வித்தமை கொள்ளத்தக்கது. ‘பெருமாளுக்கு அமுது செய்வித்த பிறகு, பெருமாள் திருப்பவளத்தின் ஸம்பந்தத்தினால் சுவை பெற்றதும் நறுமணம் மிக்கதும் ஸுத்தமானதும் மெத்தென்றுள்ளதும் மனத்தூய்மையை உண்டாக்குமதும் பக்தியோடு பரிமாறப்பட்டதுமான பகவத் ப்ரஸாதத்தினாலே பாகவதர்களான ஸ்ரீவைஷ்ணவர்களை மிகவும் ஊக்கத்தோடு த்ருப்தியடையச் செய்தார். பிறகு தாம் அமுது செய்தார்’ என்று இவ்வெறும்பியப்பாவே தாம் அருளிய வரவரமுநி காவ்யத்தில் குறித்துள்ளமை இங்கு கருதத்தக்கதாகும். மாம் – அடியேனை. அதாவது இதற்கு முன்பு மாமுனிகள் தம்மை தமது மடத்தில் அமுது செய்யும்படி நியமித்தபோது, ‘யதியின் அந்நமும் யதி அமுது செய்த பாத்ரத்திலுள்ள அந்நமும் உண்ணக்கூடாது’ என்ற ஸாமாந்ய வசநத்தை நினைத்து துர்புத்தியாலே அமுது செய்ய மறுத்து, இப்போது நல்லபுத்தி உண்டாகப்பெற்ற அடியேனை என்றபடி. பஸ்யந்தம் பாவயாமி – பார்த்துக்கொண்டேயிருக்கிற மாமுனிகளை த்யானிக்கிறேன். முன்பு மறுத்துவிட்ட இவர் தமக்கு இப்போது ப்ரஸாதத்தை ஸ்வீகரிக்கும்படியான பெருமை ஏற்பட்டது எங்ஙனம் ? என்று ஆஸ்சர்யத்தோடு தம்மையே பார்த்துக்கொண்டிருக்கிற மாமுனிகளை, தம்மைத் திருத்தின பெருந்தன்மைக்காக எப்போதும் த்யாநிக்கிறேன் என்றபடி. ஆகையால் ‘யதியின் அந்நம் உண்ணத்தக்கதன்று’ என்று ஸாஸ்த்ரம் மறுத்தது – அவைஷ்ணவ யதியின் அந்நத்தைப் பற்றியது என்று எண்ணுதல் வேண்டும். (29)

archived in https://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – https://koyil.org
pramANam (scriptures) – http://granthams.koyil.org/
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment