பூர்வ திநசர்யை – 28 – தத: ஸ்வசரணாம்போஜ

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<<முன் பாசுரம்                                                                                                         அடுத்த பாசுரம்>>

28-ஆம் பாசுரம்

ततः स्वचरणाम्भोजस्पर्शसम्पन्नसौरभैः
पावनैरर्थिनस्तीर्थैः भावयन्तं भजामि तम् 28

தத: ஸ்வசரணாம்போஜ ஸ்பர்ஸ ஸம்பந்ந ஸௌரபை: |
பாவநைரர்த்திநஸ்தீர்த்தை: பாவயந்தம் பஜாமி தம் || 28

பதவுரை:- தத: – திவ்யப்ரபந்தங்களின் ஸாரப்பொருளை உபதேஸித்த பின்பு, ஸ்வ சரண அம்போஜ ஸ்பர்ஸ ஸம்பந்ந ஸௌரபை: – தமது திருவடித்தாமரைகளின் ஸம்பந்தத்தினால் மிக்க நறுமணத்தையுடையதும், பாவநை: – மிகவும் பரிஸுத்தமானதுமாகிய, தீர்த்தை: – ஸ்ரீபாததீர்த்தத்தினால் – ஸ்ரீபாததீர்த்தத்தை உட்கொள்ளும்படி கொடுப்பதனால், அர்த்திந: – ஸ்ரீபாததீர்த்தத்தைக் கொடுக்கும்படி ப்ரார்த்திக்கிற ஸிஷ்யர்களை, பாவயந்தம் – உய்யும்படி செய்யாநின்ற, தம் – அந்த மணவாளமாமுனிகளை, பஜாமி – ஸேவிக்கிறேன்.

கருத்துரை:- திவ்யப்ரபந்த ஸாரார்த்தங்களை உபதேஸித்தபிறகு, உபதேஸம் பெற்ற ஸிஷ்யர்கள் ப்ரார்த்தித்தார்களாகையால் தம்முடைய ஸ்ரீபாததீர்த்தத்தை அவர்களுக்குத் தந்து உட்கொள்ளச்செய்து அவர்களுக்கு ஸத்தையை உண்டாக்கினார் மாமுனிகள் – என்கிறார் இதனால். எம்பெருமானார் இப்போது எழுந்தருளியிராமையால், அவர் தமக்குக் கருவியாகத் தம்மை நினைத்து தமது ஸ்ரீபாததீர்த்தத்தை ஸிஷ்யர்களுக்குக் கொடுத்தருளியதனால், இது மாமுனிகளுக்குக் குற்றமாகாது. ஸிஷ்யர்கள் மிகவும் நிர்பந்தமாக வேண்டிக்கொண்டது இதற்கு முக்கிய காரணமாகும். மாமுனிகளின் திருவடிகள் தாமரை போன்றவையாகையால் அதன் ஸம்பந்தத்தினால் தீர்த்தத்திற்கு நறுமணமும், தூய்மையும் மிக்கதாயிற்றென்க. ‘தீர்த்தை’ (தீர்த்தங்களாலே) என்ற பஹுவசநத்தினால் ஸ்ரீபாததீர்த்தம் மூன்று தடவைகள் கொடுத்தாரென்பது ஸ்வரஸமாகத் தோன்றுகிறது. ஸ்ரீபாததீர்த்தம் உட்கொள்ளும் ப்ரகரணத்தில் ‘த்ரி பிபேத்’ (மூன்று தடவைகள் ஸ்ரீபாததீர்த்தம் பருகக்கடவன்) என்ற ஸ்ம்ருதி வசநம் இங்கு நினைக்கத்தக்கது. சிலர் ஸ்ரீபாததீர்த்தத்தை இரண்டு தடவைகள் கொடுக்கிறார்கள். ‘எல்லார்க்கும் தூய்மையளிக்குமதான பாகவத ஸ்ரீபாததீர்த்தபாநம் (பருகுதல்) ஸோமபாந ஸமமாகச் சொல்லப்பட்டுள்ளது’ என்று உசந ஸ்ம்ருதியில், ஸ்ரீபாததீர்த்தபாநத்தை – யாகத்தில் ஸோமலதா-ரஸபாந ஸமாநமாக இரண்டு தடவை பருகத்தக்கதாகக் கூறப்பட்டிருப்பது இதற்கு ப்ரமாணமாகும். ஆக, இரண்டு வகையான முறைகளும் ஸாஸ்த்ர ஸம்மதமாகையால் அவரவர்களின் ஸம்ப்ரதாயப்படி அனுஷ்டிக்கக் குறையில்லை. பாரத்வாஜ ஸம்ஹிதையில் ஸிஷ்யன் ஆசார்யனிடம் உபதேஸம் பெறுதற்கு, ஆசார்ய ஸ்ரீபாததீர்த்தத்தை ஸ்வீகரிப்பதை அங்கமாகக் கூறியுள்ளதனால், முன் ஸ்லோகத்தில் திவ்யப்ரபந்தஸாரார்தோபதேஸத்தை ப்ரஸ்தாவித்த பின்பு இதில் ஸ்ரீபாததீர்த்தபாநத்தை கூறினாராயிற்று. முன்பு உபதேஸம் செய்தருளியதற்காக அதில் ஈடுபட்டு ‘நமாமி’ என்றவர், இப்போது ஸ்ரீபாத தீர்த்தம் ஸாதித்ததில் மனங்கனிந்து ‘பஜாமி’ என்கிறார்; வேறொன்றும் செய்ய இயலாமையாலும், மாமுனிகளும் வேறொன்றை எதிர்பாராத விரக்தராகையாலும் என்க. (28)

archived in https://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – https://koyil.org
pramANam (scriptures) – http://granthams.koyil.org/
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment