ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
<<முன் பாசுரம் அடுத்த பாசுரம்>>
20-ஆம் பாசுரம்
अनुकम्पापरीवाहैः अभिषेचनपूर्वकम् ।
दिव्यं पदद्व्यं दत्त्वा दीर्घं प्रणमतो मम ॥ 20
அனுகம்பா பரீவாஹை: அபிஷேசந பூர்வகம் |
திவ்யம் பதத்வயம் தத்வா தீர்க்கம் ப்ரணமதோ மம || 20
பதவுரை:- அனுகம்பா பரீவாஹை:- பிறர் துன்பங்கண்டு பொறுக்கமாட்டாமையாகிற தயையின் பெருவெள்ளத்தினால், அபிஷேசந பூர்வகம் – அடியேனை (துன்பமென்னும் தாபம் தீரும்படி) முதலில் முழுக்காட்டி அப்புறமாக, தீர்க்கம் – வெகுநேரம், ப்ரணமத: – பக்தியினால் தெண்டனிட்டு அப்படியே கிடக்கிற, மம – அடியேனுக்கு, திவ்யம் – மிகவும் உயர்ந்த, பதத்வயம் – திருவடியிணையை, தத்வா – தலையில் வைத்து.
கருத்துரை:- மாமுனிகள் – தம்முடைய தாபமெல்லாம் தீரும்படி குளிரக்கடாக்ஷித்து, ஒரு தடவை தண்டம் ஸமர்ப்பித்து பக்திப்பெருக்கினால் அப்படியே வெகுநேரம் கிடக்கிற தம்முடைய ஸிரஸ்ஸில் திருவடிகளை வைத்தருளினாரென்கிறார். ஒருவன் துன்பத்தால் நடுங்காநிற்க, அதுகண்டு தானும் துன்பமுற்று நடுங்குதலே அநுகம்பா என்பது. தயையென்பது இதன்பொருள். ‘க்ருபாதயா அநுகம்பா’ என்ற அமரகோஸம் காணத்தக்கது.
‘க்ருஷ்ணனுக்குச் செய்யப்பட்ட நமஸ்காரம் ஒன்றேயாக இருந்தாலும் அது பத்து அஸ்வமேதயாகங்கள் செய்து முடித்தாலொத்த பெருமையைப் பெறும். பத்துத் தடவைகள் அஸ்வமேதயாகம் செய்தவன் அதன் பயனாக ஸ்வர்க்கபோகத்தை அநுபவித்துவிட்டு மறுபடியும் இவ்வுலகத்திற்குத் திரும்புவது நிஸ்சயம். க்ருஷ்ண நமஸ்காரம் செய்தவனோ என்றால் பரமபதம் சென்று, மறுபடியும் இவ்வுலகில் பிறவியெடுக்க மாட்டான் (விஷ்ணுதர்மம் 4-36) என்பது இங்கு கருதத்தக்கது. பகவானுக்குச் செய்யும் ப்ரணாமமே இப்படியானால், ஆசார்யனைக்குறித்துப் பண்ணும் ப்ரணாமத்தைத் தனியே எடுத்துக் கூற வேண்டியதில்லை. திவ்யம் பதத்வயம் – பகவானுடைய திருவடியிணையை விட உயர்ந்தது ஆசார்யனுடைய திருவடியிணையென்றபடி. ஸம்ஸாரமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவான காரணமாகிய பகவத் ஸம்பந்தத்தைவிட, மோக்ஷத்திற்கே காரணமான ஆசார்யஸம்பந்தம் உயர்ந்ததென்று கூறும் ஸ்ரீவசநபூஷணம் (433 சூர்ணிகை) ஸேவிக்கத்தக்கது. (20)
archived in https://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – https://koyil.org
pramANam (scriptures) – http://granthams.koyil.org/
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org