ஞான ஸாரம் 34 – பற்று குருவை

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                     34-ஆம் பாட்டு

முன்னுரை:

மிகவும் எளியனாய்த் தனக்குக் கிடைத்திருக்கிற ஆசார்யனை மானிடத் தோற்றத்தாலே புறக்கணித்து மிக அரியனாய் யோகங்கள்முதலிய அநேக முயற்சிகள் செய்து காண வேண்டிய இறைவனை வேண்டிய சமயத்தில் நமக்கு உதவுவான் என்று நினைத்து அவனைப் பின்தொடர்தல் அறியாமை ஆகும் என்னும் கருத்தை மேலும் ஒரு உதாரனத்தாலே இதி சொல்லப்படுகிறது.

        “பற்று குருவைப் பரன் அன்று என்று இகழ்ந்து
          மற்றொர் பரனை வழிப்படுதல் – என்றே தன்
          கைப்பொருள் விட்டாரேனும் காசினியில் தாம் புதைத்த                
          அப்பொருள் தேடித் திரிவான் அற்று.”

பதவுரை:

பற்று குருவை தன்னாலே பற்றப்படுகிற  ஆசார்யனை
பரன் அன்று என்று இவன் இறைவன் இல்லை என்று
மற்றோர் பரனை வேறு ஒரு கடவுளை
வழிப்படுதல் தனக்குத் தஞ்சமாகக் கொள்ளுதல் எது போன்றது எனில்
தன் கைப்பொருள் தன் கையில் இருக்கும் பணத்தை
விட்டு அல்பம் என்ற நினைவால்
ஆரேனும் எவராயினும்
தாம் தாங்கள்
காசினியில் பூமிக்குள்ளே
புதைத்த புதைத்து வைத்த
அப்பொருள் அந்தப் புதைப் பொருளை
தேடித்திரிவான் தேடித்திரிபவன் செயல் போன்றதாகும்
எற்றே எனா மடமையோ?

விளக்கவுரை:

பற்று குருவை:   தன்னாலே பற்றப் பட்டிருக்கிற ஆசார்யனை. அதாவது மிக எளியனாய்த் தனக்கு வேண்டும் போது தன்னைக் காக்கும் துணையாகவும் பழகுவதற்கு இனியனாகவும் தன்னால் குருவாகப் பற்றப்பட்டிருக்கும் ஆசார்யனை என்று பொருள்.

பரன் அன்று என இகழ்ந்து:  ஆசார்யனை பகவானுடைய தோற்றமாகச் சொல்லி இருக்க, அதில்  நம்பிக்கை கொள்ளாமல் மானிடவன் என்று கருதும் தீய எண்ணத்தினால் ‘இவன் பகவானுடைய தோற்றமில்லை மனிதனே ‘ என்று சிறுமை செய்து அவனைப் புறக்கணித்து.

மற்றோர் பரனை வழிப்படுதல்: வேறு ஒரு இறைவனை வழிபடுகை.அதாவது ‘மிகவும் அரியனாய்த் தன் கட்புலனுக்குத் தோன்றாமல் யோகம் முதலிய அரிய முயற்சிகள் செய்து மிக வருந்திக் காணத்தகும் இறைவனைத் தனக்குக் காவல் துணையாகவும் பழக இனியனாகவும் நினைத்து அப்பரனை அடைவதற்காக அவனைப் பின் தொடர்க’ என்பதாகும்.

எற்றே: என்னே! இரக்கப் பொருளில் வந்தது. இவன் புறக்கணித்த ஆசார்யனுக்கும் பற்றிக்கொண்ட இறைவனுக்கும் உள்ள வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு மனவேதனையுடன் என்னே! என்று மனம் நொந்து கூறும் கருத்தைக் காட்டுகிறது. எற்றே– என்னே என்று இளி வரவில் வந்த இடைச் சொல். இது எது போன்றது எனில்.

தன் கைப்பொருள் விட்டு: தன் கைப் பொருளை உதறி எறிந்து விட்டு, வேண்டினபோது பயன் படுத்திக்கொள்ளும்படி தன் முந்தானையில் கட்டி வைத்திருக்கும் பணத்தை அல்பம் என்று எண்ணி உதறி விட்டு

 ஆரேனும் காசினியில் தாம் புதைத்த: யாராவது பூமிக்குள் புதைத்து வைத்த அதாவது முன்பின் தெரியாத யாராவது பூமிக்கு மேல் இல்லாமல் பூமிக்கு உள்ளே அவர்கள் புதைத்து வைத்த

அப்பொருள் தேடித் திரிவான் அற்று: அவன் புதைத்த பணத்தை தான் அடைவதற்காகப் பூமியைத் தோண்டித் தோண்டித் திரிபவன் செயல் போல என்று பொருள் (திரிபவன் போல என்பதற்குத் திரிபவன் செயல் போல என்று பொருள் சொல்லப்பட்டது)மற்றோர் பரனை வழிபடுதல் என்னும் செயலுக்கு உதாரணமாகச் சொல்லுவதால் தேடித் திரிபவன் செயல் போல என்று கூறப்பட்டது. இதுவும் தொழிலுவமம் ஆகும்.

ஆகவே அருகிலுருக்கும் குருவைப் புறக்கணித்துவிட்டுக் காண முடியாது நெடுந்தொலைவிலிருக்கும் கடவுள் பின் செல்லுதல் தன கையிலுள்ள பொருளை அற்பம் என்று எண்ணி உதறிவிட்டு யாரேனும் பூமியில் பணத்தைப் புதைத்து வைத்திருக்க மாட்டார்களா என்று பேராசையுடன் பூமியைத் தோண்டித் தோண்டித் திரிகின்ற அறிவிலியின் செயல் போன்றது என்று மன நோவுடன் ஐயோ என்று இரங்கிக் கூறுவதாக அமைந்துள்ளது இப்பாடல்.

இப்பாடல் கருத்தை ஸ்ரீவசனபூஷணத்தில் ‘ கைப்பட்ட பொருளைக் கைவிட்டுப் புதைத்த பொருளை கணிசிக்கக் கடவனல்லன்’    என்று கூறியுள்ளது காண்க.

Leave a Comment