ஞான ஸாரம் 35 – என்றும் அனைத்து உயிர்க்கும்

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                     35-ஆம் பாட்டு

முன்னுரை:

அருகில் இருப்பவனாய் எளியவனுமான ஆசார்யனைப் புறக்கணித்துவிட்டு மிகத் தொலைவில் இருப்பவனுமாய்க் கிட்டுதற்கு அரியவனுமான இறைவனை ஆசைப்படுவார் அறிவிலிகளாவர் என்று இரண்டு உதாரணங்களால் (எட்டவிருந்த, பற்றுகுருவை) என்ற 33, 34 பாடல்களால் காட்டப்பட்டது. ‘இவ்வாறு குருவினிடத்தில் அன்பு இல்லாதவனுக்குப் பகவான் ஒரு நாளும் அருள் பண்ண மாட்டான். தண்டித்தே தீருவான் என்பதை உதாரணத்துடன் உணர்த்துகிறது இப்பாடல்.

lord-vishnu-wallpapers

                   “என்றும் அனைத்து உயிர்க்கும் ஈரஞ்செய் நாரணனும்
                     அன்றும் தன்னாரியன்பால் அன்பு ஒழியில்- நின்ற
                     புனல் பிரிந்த பங்கயத்தைப் பொங்கு சுடர் வெய்யோன் 
                     அனல் உமிழ்ந்து தான் உலர்த்தியற்று.”

பதவுரை:

நின்ற புனல் தனக்கு ஆதாரமாய் இருக்கின்ற தண்ணீரை
பிரிந்த விட்டு அகன்ற
பங்கயத்தை தாமரைப் பூவை
பொங்கு சுடர் கிளர்ந்து எழுகின்ற ஒளியுடைய
வெய்யோன் உஷ்ண கிரணத்தை உடைய சூரியன்
தான் முன்பு மலரப் பண்ணின அவன் தானே
அனலுமிழ்ந்து பின் நெருப்பைக் கக்கி
உலர்த்தியற்று உலர்த்துவது போன்றதாகும்.
என்றும் எப்பொழுதும்
அனைத்துயிர்க்கும் எல்லா உயர்களுக்கும்
 ஈரஞ்செய் கருணை காட்டும்
நாரணனும் நாராயணனும்
தன்னாரியன்பால் தனக்கு ஆதரமான குருவினிடத்தில்
அன்பு ஒழியில் பக்தி அகன்று போனால்
அன்றும் சீற்றத்தால் எரிப்பான்.

விளக்கவுரை:

என்றும்: எக்காலத்திலும், அதாவது கழிவு, நிகழ்வு, எதிர்வு ஆகிய முக்காலங்களிலும் என்று பொருள்.

அனைத்துயிர்க்கும்: எல்லா ஆன்மாக்களுக்கும்

ஈரம்செய் நாரணனும்: அருளே பண்ணிக் கொண்டிருக்கும் நாராயணனும். இங்கு நாராயணன் என்று கூறியது உயிர்க்கும் இறைவனுக்கும் பிரிக்க முடியாத உறவைக் காட்டுகிறது. அதாவது ‘நாரம் ‘ என்றால் அனைத்து உயிர்கள் ‘அயனம்’ என்றால் உயிர்களுக்கும் உயிராய் உள் நின்று அவற்றைத் தாங்கி நின்று இயக்குகின்றதோ அது போன்று அனைத்து உயிர்களுக்கும் உயிராய் நின்று அனைத்தையும் நடத்துபவன் என்ற பொருளை நாரம்+ அயனம் என்ற இரண்டு சொற்களும் கூடி நின்று நாராயணன் என்ற ஒரு சொல்லாகி மேற் சொன்ன கருத்தைக் காட்டுகிறது. இக்கருத்தை ‘உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது’ என்ற ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவையில் காண்க. ‘”நான் உன்னையன்றிலேன் நாரணனே நீ என்னை அன்றி இலை'” என்று திருமழிசை ஆழ்வாரும் கூறினார். இதனால் அறிவுடைய ஆன்மாவாகிற பொருளும் அறிவில்லாத ஜடப் பொருளுமாகிய நாரங்கள் அனைத்துக்கும் உயிராய் உள் நின்று பொருள் அனைத்தையும் இயக்குபவன், நாராயணன் என்று நாராயண பதத்தினுடைய கருத்தைக் கூறியவாறாம். இதனால் அனைத்து உயிர்கள் செய்யும் குற்றங்களையும் குணமாகக் கொள்ளுபவன். வத்சலன் என்ற பகவானுடைய சிறப்புக் குணம் இங்கு தெளியப்படுகிறது. இவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் அருளே செய்யும் இயல்புடயவனும்

அன்றும்: சீறுவான் ‘அன்றுதல்’ சீறுதல் தண்டனை செய்வான் என்று பொருள். ‘அன்றிய வாணன்’ (பெரிய திருமொழி -1275) என்றவிடத்தில் அன்றிய என்ற சொல் கோபித்த என்ற பொருளில் வழங்கியது போல இங்கும் அப்பொருளில் வந்தது. எப்பொழுது இவ்வாறு அக்கருனைக் கடலான இறைவன் சீறி எழுவான் என்றால் அதைக் கூறுகிறது மேல் தொடர்.

தன்னாரியன்பால் அன்பு ஒழியில்: தன குருவினிடம் பக்தியில்லையானால் (சீறுவான்) அதாவது கீழே எட்டயிருந்த குருவை‘ பற்று குருவை’ என்ற இரண்டு பாடல்களிலும் குருவின் மனிதத் தோற்றத்தைப் பார்த்து இவன் இறை அன்று என்றும், ‘பரன் அன்று என்றும்’ நினைத்து விட்டு விடுதல் கூறப்பட்டது. அவ்வாறு குருவினிடம் அன்பு அகன்றால் என்று பொருள். இதற்குத் தக்க உதாரணம் மேல் தொடரால் சொல்லப்படுகிறது.

நீன்ற புனல் பிரிந்த பங்கயத்தை: மிக்க ஒளியுடையவனும் உஷ்ண கிரணங்களை உடையவனுமான சூரியன். அதாவது ‘செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கு  அல்லால்’ என்று குலசேகராழ்வார் சொன்னதற்கிணங்க அதாவது தாமரை சூரிய ஒளிக்கல்லாமல் வேறு ஒளிக்கு மலராது என்பது இயல்பு. நீரைப் பிரியாமல் இருக்கும் பொழுது எக்காலத்திலும் தன்னுடைய கிரணங்களால் அலற்த்திக் கொண்டு வரும் சூரியன்.

அனல் உமிழ்ந்து தான் உலர்தியற்று: நெருப்பைக் கக்கி தானே அத்தாமரையை உலர்த்துவது போன்றது ஆகும். இதனால் நீரைப் பிரியாமல் இருக்கும்போது தாமரையை அலர்த்தி வந்த சூரியன் நீரைப் பிரிந்த போது தனது உஷ்ண கிரணத்தைக் கக்கி அத்தாமரையை உலர்த்திவிடுவது போல. ஆசார்யனிடம் அன்பு குறையாமல் தொடர்பு கொண்ட காலத்தில் எப்பொழுதும் இவனுக்கு அருள் செய்து வந்த பகவான், குருவினிடம் அன்பு குலைந்து அவனை விட்டுப் பிரிந்த போது அப்பகவானே இவனைக் கோபித்து அழித்து விடுவான் என்பதாம். இங்கு அருள் செய்வது என்றால் சீடனுடைய அறிவை விளங்க வைப்பன் என்றும் கோபித்து அழித்து என்றால் இவனுடைய அறிவை மங்க வைத்து விடுவான் என்றும் அறியவேணும்

தனக்கு மந்திரோபதேசம் செய்த ஆசார்யனிடம் அன்பு அகன்றால் எல்லா உயிர்களுக்கும் கருணை காட்டும் நாராயணனும் கூடச் சீறிவிடுவான் இது எது போன்றது எனில் தண்ணீரை ஆதாரமாகக் கொண்டு நின்ற தாமரையை அத்தண்ணீரைப் பிரித்துக் கரையில் சேர்த்தால் அத்தாமரை உஷ்ண கிரணங்களையுடைய சூரியன் அனலைக் கக்கி உலர்த்துவது போன்றதாம். அதாவது சீடனுடைய உயிர் தத்துவத்தை விளங்க வைக்கும் இறைவனே குருபக்தி குலைந்ததும் தண்டித்துவிடுவான். சீடனின் நல்லறிவை மறைத்து அறிவிலியாக்கி விடுவான். சீடன் அறிவுடையவனாக இருந்து அது இல்லாதவனாகிவிடுவான் என்ற கருத்து ‘ உளரெனினும் இல்லாரோடொப்பர்.’ என்று வள்ளுவர் கூறியது போல் குருபக்தி குலையக் கூடாது என்பதாம். இப்பாடலில் கூறிய கருத்தை ஸ்ரீவசனபூஷணத்தில் “தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரித்தால் அத்தை உலர்த்துமாப் போலே ஸ்வரூப விகாசத்தைப் பண்ணும் ஈஸ்வரன் தானே ஆசார்ய சம்பந்தங்குலைத்து வாடப் பண்ணும்” என்று கூறியுள்ளது காண்க.

Leave a Comment