இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 1 – 10

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

இராமானுச நூற்றந்தாதி

<< தனியன்கள்

முதல் பாசுரம். தம் திருவுள்ளத்தைக் குறித்து “எம்பெருமானார் திருவடிகளை நாம் பொருந்தி வாழும்படி அவர் திருநாமங்களை எப்பொழுதும் சொல்லுவோம் வா” என்கிறார்.

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் பல் கலையோர்
தாம் மன்ன வந்த இராமாநுசன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே

நெஞ்சே! தாமரைப்பூவை இருப்பிடமாகவுடைய பெரிய பிராட்டியார் எம்பெருமானின் திருமார்பின் இனிமையைக் கண்ட பின்பு அந்தத் தாமரையைக் கைவிட்டு அந்தத் திருமார்பிலேயே நித்யவாஸம் செய்யும்படியானவனுடைய திருக்கல்யாண குணங்களால் நிறைந்திருக்கும் திருவாய்மொழியில் ஈடுபட்டிருப்பவரான நம்மாழ்வாருடைய திருவடிகளை அடைந்து அதனால் உஜ்ஜீவனத்தை அடைந்தவர் ராமானுஜர். பலவிதமான சாஸ்த்ரங்களைக் கற்றிருந்தும் அதின் உட்பொருளை அறியாமல் இருந்தவர்கள், பின்பு அவற்றினுடைய உட்பொருளை நன்றாக உணர்ந்து நிலைத்துநிற்கும்படி வந்து அவதரித்த எம்பெருமானாருடைய திருவடித்தாமரைகளை, இதுவே நமக்குக் குறிக்கோள் என்று அறிந்த நாம், பொருந்தி வாழும்படியாக அவருடைய திருநாமங்களைப் பேசுவோம்.

இரண்டாம் பாசுரம். கீழ்ப் பாசுரத்தில் தன்னுடைய நெஞ்சைப் பார்த்து எம்பெருமானுடைய திருநாமங்களைச் சொல்லலாம் என்று சொல்ல அந்த நெஞ்சம் எம்பெருமானார் திருவடிகளை நன்றாக அனுபவித்துக்கொண்டு மற்ற விஷயங்களை விரும்பாமல் இருந்ததைப் பார்த்து, இதென்ன ஆச்சர்யம் என்கிறார்.

கள் ஆர் பொழில் தென் அரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கி குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமாநுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே

தேன் மிகுந்த பொழிலையுடைத்தாய் அழகியதாய் இருந்துள்ள கோயிலிலே (திருவரங்கத்தில்) சயனித்திருப்பதாலே அதுவே அடையாளமாக இருக்கக்கூடிய பெரிய பெருமாள். என்னுடைய நெஞ்சானது அந்தப் பெரிய  பெருமாளின் தாமரை போன்ற திருவடிகளை தங்கள் மனதிலே எப்பொழுதும் வைக்காத சாஸ்த்ரத்தைக் கற்றுக் கொள்ளும் மனிதப் பிறவியில் பிறந்தும் அதற்கு பாக்யம் இல்லாமல் இருப்பவர்களை விட்டகன்றது. என் நெஞ்சானது அதற்குப் பிறகு திருக்குறையலூரில் அவதரித்த திவ்யப்ரபந்தங்களைத் தருவதாகிய பெரிய நன்மையைச் செய்தவரான திருமங்கை ஆழ்வாருடைய திருவடிகளின் கீழே விட்டு நீங்காத அன்பை உடையவரான எம்பெருமானாருடைய நிரவதிகமான சீல குணத்தைத் தவிர வேறொன்றையும் சிந்திக்கிறதில்லை. இது எனக்கு எப்படி ஏற்பட்டது என்பது எனக்கு ஒன்றும் தெரியவில்லை.

மூன்றாம் பாசுரம். தன் நெஞ்சைப் பார்த்து “உலக விஷயங்களில் ஈடுபாடு உள்ளவர்களின் ஸம்பந்தத்தை விலக்கி எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தமுடையவர்கள் திருவடிகளில் என்னைச்சேர்த்த உபகாரத்துக்கு உன்னை வணங்குகிறேன்” என்கிறார்.

பேர் இயல் நெஞ்சே அடி பணிந்தேன் உன்னை பேய்ப் பிறவிப்
பூரியரோடு உள்ள சுற்றம் புலர்த்தி பொருவு அரும் சீர்
ஆரியன் செம்மை இராமாநுசமுனிக்கு அன்பு செய்யும்
சீரிய பேறு உடையார் அடிக்கீழ் என்னைச் சேர்த்ததற்கே

உயர்ந்த குணத்தை உடைய நெஞ்சே! தாழ்ந்த பிறவிகளாய் அஹங்காரம் முதலிய தோஷங்களை உடையவர்களுடன் இருக்கும் தொடர்பை நீக்கி, நல்ல சாஸ்த்ர ஞானம் உடையவர்களாய், அடியார்கள் தன்மைக்கேற்பத் தன்னை அமைத்துக்கொள்ளும் நேர்மையை உடையவரான எம்பெருமானார் விஷயத்திலே பக்தி கொண்டிருக்கும் பெரிய பேற்றைப் பெற்றவர்களுடைய திருவடிகளில் என்னைச் சேர்த்தாய். இந்தப் பேருதவிக்கு நான் உன்னை வணங்கினேன்.

நான்காம் பாசுரம். எம்பெருமானாருடைய நிர்ஹேதுக க்ருபையினால் இனித் தான் பழைய தாழ்ந்த நிலையை அடைவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தனக்கு இனி ஒரு குறையும் இல்லை என்று சொல்லுகிறார்.

என்னைப் புவியில் ஒரு பொருள் ஆக்கி மருள் சுரந்த
முன்னைப் பழவினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமாநுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதைவு இல்லையே

எல்லாப் பொருள்களுக்கும் காரணபூதனான ஸர்வேச்வரனையே எல்லோரும் தெரிந்துகொண்டு அனுஸந்தானம் செய்யும்படி ஸ்ரீபாஷ்யத்தின் மூலமாக அருளிச்செய்த, எல்லோரையும் விட உயரந்தவரானவர் எம்பெருமானார். அவர் பொருளல்லாத என்னை இந்த லோகத்திலே ஒரு பொருளாகும்படிப் பண்ணி, அஜ்ஞானத்தை வளர்க்கக்கூடியதான அநாதி காலமாகத் தொடர்ந்து வரும் என்னுடைய கர்மங்களை வேரோடு அறுத்துத் தம்முடைய திருவடிகளையும் என்னுடைய தலையிலே வைத்தருளினார். ஆனபின்பு, எனக்கு ஒரு குறையும் இல்லை.

ஐந்தாம் பாசுரம். எம்பெருமானாருடைய திருநாமங்களைச் சொல்லுவோம் என்று முதலிலே சொன்னவர் இப்பொழுது அதைத் தொடங்க, அப்பொழுது தவறான பார்வை கொண்ட குத்ருஷ்டிகள் [வேதத்தின் பொருளை மாற்றி உரைப்பவர்கள்] நம்மை நிந்திக்கலாம் என்று சொல்லி, அதிலிருந்து பின்வாங்கி, அதற்குப் பிறகு தானே தன்னை ஸமாதானம் செய்து கொண்டு, எடுத்த கார்யத்தில் ஈடுபடுகிறார்.

எனக்கு உற்ற செல்வம் இராமாநுசன் என்று இசையகில்லா
மனக் குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர்
தனக்கு உற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என் பா
இனக் குற்றம் காணகில்லார் பத்தி ஏய்ந்த இயல்வு இது என்றே

நம் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த செல்வம் எம்பெருமானாரே என்று இசையாத மனோதோஷத்தை உடைய மனுஷ்யர்கள் என் முயற்சியைப் பார்த்து நிந்தித்தார்களாகில் அதுவே எனக்குக் கொண்டாட்டமாகும். எம்பெருமானாருடைய பொருந்தியிருக்கும் திருக்கல்யாண குணங்களுக்குத் தகுதியான ப்ரேமத்தை உடையவர்கள், பக்தியோடே கூடிய செயல்களையுடையதென்று அவருடைய திருநாமங்களைச் சொல்லக்கூடிய என்னுடைய பாசுரங்களில் குற்றத்தைக் காணமாட்டார்கள்.

ஆறாம் பாசுரம். கீழ்ப் பாசுரத்தில் தான் செய்யக்கூடிய பாசுரங்கள், பக்தியின் வெளிப்பாடு என்றார். ஆனால் அந்த எம்பெருமானாரின் பெருமைக்குத் தகுந்த பக்தி தன்னிடத்தில் இல்லை என்று தன்னைத் தானே நிந்தித்துக்கொள்கிறார்.

இயலும் பொருளும் இசையத் தொடுத்து ஈன் கவிகள் அன்பால்
மயல் கொண்டு வாழ்த்தும் இராமாநுசனை மதி இன்மையால்
பயிலும் கவிகளில் பத்தி இல்லாத என் பாவி நெஞ்சால்
முயல்கின்றனன் அவன் தன் பெருங் கீர்த்தி மொழிந்திடவே

வார்த்தைகளும் அர்த்தங்களும் பொருந்தத் தொடுத்து, உயர்ந்த கவிஞர்கள் மிகுந்த ப்ரேமத்தாலே அறிவழிந்து எம்பெருமானாரை கொண்டாடுவார்கள். அப்படிப்பட்ட எம்பெருமானாரை பக்தியில்லாத என்னுடைய பாபிஷ்டமான மனதாலே, சொல்லப்பட்ட விஷயத்தில் நிறைந்திருக்கிற கவிகளிலே, அவருடைய எல்லையில்லாத பெருமையைப் பேசுவதாக என்னுடைய அறிவுகேட்டாலே முயல்கின்றேன்.

ஏழாம் பாசுரம். தன்னுடைய தாழ்ச்சியைப் பார்த்துப் பின்வாங்கியவர் தனக்குக் கூரத்தாழ்வான் திருவடி ஸம்பந்தம் இருப்பதை நினைத்துப் பார்த்து இது தனக்குக் கடினமல்ல என்று நிர்ணயித்து இதைத் தொடங்குகிறார்.

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்
பழியைக் கடத்தும் இராமாநுசன் புகழ் பாடி அல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனியாதும் வருத்தம் அன்றே

பேச்சுக்கு நிலமல்லாத பெரிய புகழையுடையவராய், மிகவும் பலம் வாய்ந்த தீமையை நடத்துவதான பிறவி, ஞானம், அனுஷ்டானம் ஆகியவற்றாலே வரும் செருக்கு என்னும் படுகுழியைக் கடந்திருப்பவராய், நமக்குத் தலைவரான கூரத்தாழ்வானுடைய திருவடிகளைச் சென்றடைந்தேன். ஆனபின்பு, பாபங்களில் இருந்து நம்மைக் கரைசேர்க்கும் எம்பெருமானாருடைய திருக்கல்யாண குணங்களை ப்ரீதியாலே தூண்டப்பட்டுப் பாடி, நம் ஸ்வரூபத்துக்குச் சேராத வழிகளைத் தப்புகை எனக்கு இனி ஒன்றும் கடினமில்லை.

எட்டாம் பாசுரம். பொய்கையாழ்வார் அருளிச்செய்த திவ்யப்ரபந்தத்தைத் தம்முடைய திருவுள்ளத்திலே வைத்துக்கொண்டிருக்கும் பெருமையையுடைய எம்பெருமானார் எங்களுக்கு நாதன் என்கிறார்.

வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்து அன்று எரித்த திருவிளக்கைத் தன் திருவுள்ளத்தே
இருத்தும் பரமன் இராமாநுசன் எம் இறையவனே

சேதனரை வருந்தப்பண்ணும், கண்ணுக்குப் புலப்படும் வெளிவிஷயங்களில் ஈடுபடுத்தும் அறியாமை என்னும் இருளைப் போக்கும்படியாக எங்கள் ப்ரபன்ன குலத்துக்கு விரும்பத்தக்கவராய் இருப்பவர் பரம உதாரரான பொய்கையாழ்வார். அவர் வேதாந்தத்தினுடைய அர்த்தத்தையும் அழகிய தமிழ் வார்த்தைகளையும் கூட்டி நன்றாகச் சேரும்படி செய்து அன்று திருவிடைகழியிலே ஆயன் எம்பெருமான் வந்து நெருக்கினபோது “வையம் தகளியா” என்று தொடங்கி அருளிய முதல் திருவந்தாதி என்கிற திருவிளக்கைத் தம் திருவுள்ளத்திலே வைத்துக்கொண்டிருக்கும் அதிகமான பெருமையைக் கொண்ட எம்பெருமானார் எங்களுக்கு நாதர்.

ஒன்பதாம் பாசுரம். பூதத்தாழ்வார் திருவடிகளைத் தம் திருவுள்ளத்திலே வைத்து அனுபவிக்கும் எம்பெருமானாரின் திருக்கல்யாண குணங்களைச் சொல்லுமவர்கள் வேதத்தை ரக்ஷித்து லோகத்திலே ஸ்தாபிப்பவர்கள் என்கிறார்.

இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும்
நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து
உறைய வைத்து ஆளும் இராமாநுசன் புகழ் ஓதும் நல்லோர்
மறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே

நமக்குத் தகுந்த தலைவனானவனை காண்பதற்கு உறுப்பான ஹ்ருதயத்தைப் பற்றிக்கிடக்கிற அறியாமை என்னும் இருளானது நசிக்கும்படியாக இரண்டாம் திருவந்தாதியில் “அன்பே தகளியா” என்று தொடங்கி பரஜ்ஞானமாகிற பரிபூர்ண தீபத்தை ஏற்றியவர் ஸ்ரீபூதத்தாழ்வாராகிற ஸ்வாமிகள். அவருடைய திருவடிகளைத் திருவுள்ளத்திலே நிரந்தரவாஸம் பண்ணும்படி வைத்து அனுபவிக்கும் எம்பெருமானாருடைய திருக்கல்யாண குணங்களை எப்பொழுதும் சொல்லும் நல்லவர்கள், பாஹ்ய [வேதத்தை நம்பாதவர்கள்] குத்ருஷ்டிகளால் அழிக்க முடியாதபடி வேதத்தை ரக்ஷித்து இந்த லோகத்திலே நன்றாக ஸ்தாபிப்பவர்கள்.

பத்தாம் பாசுரம். பேயாழ்வார் திருவடிகளை எப்பொழுதும் கொண்டாடும் தன்மையை உடைய எம்பெருமானார் விஷயத்தில் அன்புடையார்கள் திருவடிகளைத் தங்கள் தலையிலே தாங்குபவர்கள் எல்லாக் காலத்திலும் உயர்ந்தவர் என்கிறார்.

மன்னிய பேர் இருள் மாண்டபின் கோவலுள் மா மலராள்
தன்னொடும் ஆயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பொன் அடி போற்றும் இராமாநுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் திருவுடையார் என்றும் சீரியரே

பேர்க்கப் போகாதபடி நின்ற அறியாமை என்னும் பேரிருள் முதல் இரண்டு ஆழ்வார்கள் ஏற்றிய விளக்காலே முழுவதும் அழிந்தபின்பு திருக்கோவலூரிலே திருமாமகளுடன் க்ருஷ்ணாவதாரத்தில் தன் அடியார்களிடத்தில் பவ்யமாக இருந்த ஸர்வேச்வரனைத் தான் கண்ட விதத்தை நமக்குக் காட்டிக்கொடுத்தவர், தமிழுக்குத் தலைவரான பேயாழ்வார். அவருடைய விரும்பத்தக்க திருவடிகளை புகழும் எம்பெருமானார் விஷயத்தில் அன்பைத் தங்களுக்கு ஆபரணமாக அணிந்திருப்பவர்களுடைய திருவடிகளை தங்கள் தலையிலே தரிக்கும் செல்வத்தை உடையவர்கள் எல்லாக் காலத்திலும் உயர்ந்தவர்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  https://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment