இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

இயற்பா

ஸ்ரீ மணவாள மாமுனிகள் எம்பெருமானாரின் தனிப்பெருமையை உபதேச ரத்தின மாலை 38ஆம் பாசுரத்தில் அழகாக வெளியிடுகிறார்.

எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு
நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார் அம்புவியோர்
இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த
அந்தச் செயல் அறிகைக்கா

நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்துக்கு “எம்பெருமானார் தரிசனம்” என்று நம்பெருமாள் நன்றாக ஸ்தாபித்து வைத்தார். இது எதற்காக என்றால், எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யம் முதலான க்ரந்தங்களை அருளிச்செய்வதன் மூலமும், பல ஆசார்யர்களைக் கொண்டு நம் ஸம்ப்ரதாய அர்த்தங்களை எல்லோரும் அறிந்து கொள்ளும்படிச் செய்தும், திவ்யதேசங்களில் சீர்திருத்தம் செய்தும் இந்த ப்ரபத்தி மார்க்கத்தை நன்றாக எடுத்துரைத்து வளர்த்தார். இப்படி இவர் செய்த பேருபகாரங்களை உலகத்தில் உள்ளோர் எல்லோரும் அறியும்படி நம்பெருமாளே இதை ஸ்தாபித்தார். இவரின் பெரும் கருணையைக் கண்ட திருக்கோஷ்டியூர் நம்பி இவருக்குத் எம்பெருமானார் என்று திருநாமம் சார்த்தி அருளியதை மனதில் கொண்டு நம்பெருமாள் தாமே நம்பி மூலமாக இந்தப் பெருமையை இவருக்கு ஏற்படுத்தினார் என்றும் சொல்லலாம்.

பிள்ளை அமுதனார் என்னும் ஆசார்யர் திருவரங்கத்திலே எம்பெருமானார் வாழ்ந்த காலத்திலே கைங்கர்யம் செய்து வந்தவர். இவர் முதலில் எம்பெருமானாரிடத்தில் கௌரவ புத்தி கொள்ளாமல் இருந்தார். ஆனால் எம்பெருமானாரின் முக்யமான சிஷ்யர்களுள் ஒருவரான கூரத்தாழ்வானால் எம்பெருமானாரின் ஆணையின் பேரில் இவர் திருத்திப் பணிகொள்ளப்பட்டார். ஆழ்வானின் பெரும் கருணையாலே எம்பெருமானாரின் பெருமைகளை நன்றாக உணர்ந்து அந்த எம்பெருமானார் விஷயமாக இராமானுச நூற்றந்தாதி என்கிற அற்புதமான ப்ரபந்தத்தை அருளிச்செய்தார்.

மாமுனிகள் இதற்கு ஒரு சுருக்கமான உரை அருளியுள்ளார். இந்த உரையின் முன்னுரையில், இதன் பெருமைகளை மிக அழகாகக் காட்டியுள்ளார். அங்கே உள்ள விஷயங்களை இங்கே சுருக்கமாக அனுபவிப்போம்.

எப்படி முன்பு மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வார் விஷயமான தன்னுடைய நிலையைப் பேசுவதாகவும், பிறர்க்கு உபதேசமாகவும் நம் உஜ்ஜீவனத்துக்கு வழியைக் காட்டும் கண்ணிநுண் சிறுத்தாம்பை அருளினாரோ, அதே போல அமுதனாரும் இங்கே எம்பெருமானார் விஷயமாக இதை அருளினார். ஆனால் அவரைப்போலே சுருக்கமாக அருளிச்செய்யாமல், இவர் மிக விரிவாக அருளிச்செய்துள்ளார். எப்படி காயத்ரி மந்த்ரம் ப்ரஹ்மோபதேசம் பெற்றவர்களால் தினமும் அனுஸந்திக்கப்படுகிறதோ, அதேபோல, ஒரு ஆசார்ய ஸம்பந்தம் பெற்று எம்பெருமானார் திருவடிகளில் ஆசையுடையவர்களுக்கு இது தினமும் அனுஸந்தானத்துக்கு விஷயமாகும்படி ஒவ்வொரு பாசுரத்திலும் ராமானுஜரின் திருநாமத்துடன் அருளிச்செய்யப்பட்டது. ஆகையாலே நம் பெரியோர்கள் இதை “ப்ரபந்ந ஸாவித்ரி” என்று கொண்டாடுவார்கள்.

மாமுனிகளின் ரத்தினச் சுருக்கமான உரையைத் துணையாகக் கொண்டு இந்த எளிய விளக்கவுரை எழுதப்படுகிறது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  https://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment