17-ஆம் பாட்டு:
முன்னுரை:
ஆத்ம ஞானம் பிறந்தவன் அதாவது, ‘ஆத்மா பகவானுக்கு அடிமையாய் இருப்பதுவே, ஆத்மாவின் உண்மை நிலையாகும்’ என்பதை உணர்ந்தவன். தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் இயல்பைத் தம்முடைய ஒழுக்க நெறியைக் கூறுகின்ற முகத்தால் அருளிச் செய்யப்பட்டது கீழ். இதில் பெருஞ்செல்வம் சேர்வதும் அது அழிவதும் வாழ்நாள் நீள்வதும், அது குறைவதும், ஆன்மாவின் உண்மையை உணராதவர்களுக்குச் செருக்கையும் துன்பத்தையும் உண்டு பண்ணுவனவாகும். அவ்வாறின்றி ஆன்மாவின் உண்மை நிலையை அறிந்தவர்களுக்குச் செல்வம் வருவதும் போவதும் பற்றியோ வாழ்நாள் நீள்வது குறைவது பற்றியோ, செருக்கு, துன்பங்கள் உண்டாகமாட்டா என்னும் உயரிய கருத்தை இப்பாடல் உணர்த்துகிறது.
“ஒன்றிடுக விண்ணவர் கோன் செல்வ மொழிந்திடுக
என்றும் இறவாதிருந்திடுக – இன்றே
இறக்கக் களிப்பும் கவர்வுமிவற்றால்
பிறக்குமோ தற் றெளிந்த பின்”
பதவுரை:
விண்ணவர் கோன் | தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுடைய |
செல்வம் | மிக்க பெருஞ்செல்வம் |
ஒன்றிடுக | ஒருவர் வேண்டாது இருக்கும்போது தானே வந்து சேர்ந்திடுக |
ஒழிந்திடுக | அல்லது அதுவே தன்னைவிட்டு நீங்கிடுக |
என்றும் இறவாது இருந்திடுக | எக்காலத்திலும் மரணம் இல்லாமல் வாழ்ந்திடுக (அல்லது) |
இன்றே இறக்க | இப்பொழுதே மரணம் ஆயிடுக |
தன் தெளிந்த பின் | ஆத்மாவான தன்னுடைய உண்மை நிலையை நன்றாக அறிந்த பின்பு |
இவற்றால் | இந்த அறிவினால் |
களிப்பும் கவர்வும் | இன்பமும் துன்பமும் |
பிறக்குமோ | உண்டாகுமோ (ஆகாது) |
ஆன்மாவின் உண்மை நிலை அறிந்தவர்களுக்கு செல்வம் வருவதிலும் அது தன்னைவிட்டுப் போவதிலும் செருக்குத் துன்பங்கள் உண்டாக மாட்டா என்பது கருத்து.
விளக்கவுரை:
ஒன்றிடுக விண்ணவர் கோன் செல்வம் – தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுடைய மிக்க பெரிய செல்வம். அதாவது பூ உலகம், புவர் உலகம், சுவர் உலகம் என்று சொல்லப்படுகிற மூன்று உலகங்களையும் ஆள்கின்ற செல்வமானது விரும்பாது இருக்கும்போதே தானே வந்து சேரட்டும்.
ஒழிந்திடுக – அத்தகைய பெருஞ்செல்வம் இனி ஒரு நாளும் கை கூடாது என்னும் அளவுக்குத் தன்னோடு தொடர்பில்லாமல் மாய்ந்து போகட்டும்.
என்றும் இறவாது இரந்திடுக – எக்காலத்திலும் மரணம் இல்லாதவனாய் வாழட்டும்.
இன்றே இறக்க அவ்வாறு நீண்ட ஆயுள் இல்லாமல் இப்பொழுதே மரணம் வரக்கடவதாக.
களிப்பும் கவர்வும் இவற்றால் பிறக்குமோ தற்றெளிந்த பின் – செல்வத்தால் களிப்பும், அது அழிவதால் துன்பமும் வாழ்வதால் மகிழ்வும், சாவதால் துன்பமும் உலகத்தாருக்கு இவை இயல்பாக உண்டாகும். ஆனால் தன்னைத் தெளிவாக அறிந்தவர்க்கு இத்தகைய செருக்கும் துன்பமும் ஒரு போதும் உண்டாக மாட்டா என்பது இப்பாடலின் கருத்து.
தற்றெளிந்தபின் – தன்னைத் தெளிவாக அறிகை. அதாவது ஆன்மா இறைவனுக்கு அடிமை என்னும் உண்மை நிலையை அறிகை.