ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – ச்லோகங்கள் 11 – 20

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை

<< ச்லோகங்கள் 1 – 10

ஶ்லோகம் 11 – இதில், எம்பெருமானின் பரத்வ லக்ஷணம் (அடையாளம்) விளக்கப்படுகிறது.

ஸ்வாபாவிகாநவதிகாதிஶயேஶித்ருத்வம்
நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக: க: |
ப்ரஹ்மா ஶிவஶ் ஶதமக: பரம: ஸ்வராடிதி
ஏதே’பி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸ்தே ||

நாராயணனே! உன்னுடைய பெருமைக் கடலில் ஒரு திவலையைப் போன்றவர்களே (கர்மத்துக்கு வசப்பட்ட) ப்ரஹ்மா, சிவன், இந்திரன் ஆகியோரும், இந்த தேவதைகளைவிடச் சிறந்தவர்களான, கர்மத்துக்கு வசப்படாத முக்தாத்மாக்களும்; உன்னுடைய இயற்கையான மற்றும் எல்லையில்லாத பெருமையை உடைய ஐச்வர்யத்தை (ஆளுமையை) எந்த வைதிகன் பொறுக்கமாட்டான்?

ஶ்லோகம் 12 –இதில், ஆளவந்தார், ஸந்தேஹத்துக்கு இடமளிக்கும் பொதுப் பெயர்களைச் சொல்லாமல், தன்னடையே முழுமையான மற்றும் எம்பெருமானின் பரத்வத்தை நன்றாக வெளியிடும் திருநாமங்களை அருளிச்செய்கிறார்.

கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது? யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி, பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?

ஶ்லோகம் 13 – ஆளவந்தார் ப்ரஹ்மா, ருத்ரன் ஆகியோரின் க்ஷேத்ரஜ்ஞத்வத்தையும் (ஜீவாத்மாவாக இருக்கும் தன்மையையும்) பகவானின் பரத்வத்தையும், இதிஹாஸ மற்றும் புராணங்களில் உள்ள சரித்ரங்களைக் கொண்டு அருளிச்செய்கிறார்..

வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
ஆபத் விமோசந மஹிஷ்ட பல ப்ரதாநை: |
கோ’ந்ய: ப்ரஜா பஶுபதீ பரிபாதி கஸ்ய
பாதோதகேந ஸ ஶிவஸ் ஸ்வஶிரோத்ருதேந  ||

ப்ரஜாபதி என்று சொல்லப்படும் பிரமனையும், பசுபதி என்று சொல்லப்படும் ருத்ரனையும் மற்றும் இந்திரனையும் முறையே அவர்களுக்கு வந்த ஆபத்தான வேதம் திருடப்பட்டு அதை இழந்ததையும், தன்னுடைய தந்தையின் தலையைக் கிள்ளிய பாபத்தையும், அஸுரர்களால் ஏற்பட்ட துன்பத்தையும் போக்கியவன் யார்? யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கி, ருத்ரன் புனிதத்தன்மையை அடைந்தான்?

ஶ்லோகம் 14 – ஆளவந்தார் எம்பெருமானின் பரத்வத்தை சாஸ்த்ரத்துக்கு அனுகூலமான ந்யாயத்தின் மூலமாக நிரூபித்து, (இந்த ஐந்து பாசுரங்களின் தொடரை) முடிக்கிறார்.

கஸ்யோதரே ஹரவிரிஞ்சிமுக: ப்ரபஞ்ச:?
கோ ரக்ஷதீமம் அஜனிஷ்டச கஸ்ய நாபே:?|
க்ராந்த்வா நிகீர்ய புநருத்கிரதி த்வதந்ய:
க:? கேந வைஷ பரவாநிதி ஶக்யஶங்க: ||

யாருடைய வயிற்றில் ருத்ரன், ப்ரஹ்மா முதலியவர்களும் இவ்வுலகமும் அடங்கியது? யார் இந்த உலகத்தைக் காப்பவன்? யாருடைய திருநாபியிலிருந்து இவ்வுலகம் படைக்கப்பட்டது? உன்னைத் தவிர வேறு யாரால் இவ்வுலகம் அளக்கப்பட்டு, விழுங்கப்பட்டு மீண்டும் வெளியே உமிழப்பட்டது? இவ்வுலகத்தின் தலைவன் யார் என்பதில் ஸந்தேஹம் இருக்க முடியுமா?

ஶ்லோகம் 15 – இதில், சாஸ்த்ரத்தின் மூலம் நன்றாக நிரூபிக்கப்பட்டாலும், ஸ்ரீ பகவத் கீதை 16.20இல் “ஆஸுரீம் யோனிமாபன்னா:” (அஸுரப் பிறவியில் பிறந்து) என்று சொன்னபடி, “ஐயோ! இப்படிப்பட்ட அஸுர குணம் உடையவர்கள் எம்பெருமானை இழக்கிறார்களே” என்று அவர்கள் இழவுக்கு ஆளவந்தார் வருந்துகிறார். அல்லது – ஆளவந்தார், இப்படிப்பட்ட பெருமையையுடைய எம்பெருமானை அஸுரத்தன்மையுடையவர்கள் பார்க்கக்கூடாது என்று திருவாய்மொழி 1.3.4இல் “யாருமோர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்” (அவனிடத்தில் விரோதம் பாராட்டுபவர்களால் “இவன் இன்ன தன்மையை உடையவன்” என்று புரிந்து கொள்ள முடியாதவன்) ஆழ்வார் அருளிச்செய்த க்ரமத்தில் அருளிச்செய்கிறார்.

த்வாம் ஶீல ரூப சரிதை: பரம ப்ரக்ருஷ்ட
ஸத்வேந ஸாத்த்விகதயா ப்ரபலைஶ்ச  ஶாஸ்த்ரை: |
ப்ரக்யாததைவ பரமார்த்த  விதாம் மதைஶ்ச
நைவாஸுர ப்ரக்ருதய: ப்ரபவந்தி போத்தும் ||

[ஐயோ!] எல்லோரையும் விட உயர்ந்தவனான உன்னை அஸுரர்கள் அறிந்து கொள்ள முடியாது. உன்னை அறிந்து கொள்ளும் வகைகள்:

  • உன்னுடைய சீல (எளிமை) குணம், வேதத்தில் கொண்டாடப்பட்ட ரூபங்கள் மற்றும் திவ்யமான லீலைகள்
  • சுத்த ஸத்வத்தால் நிறைந்திருக்கும் உன்னுடைய பரமபதம்
  • தன்னிடம் இருக்கும் நன்மையினால் திடமாக இருக்கும் சாஸ்த்ரம்
  • உன்னைப் பற்றிய உண்மையை அறிந்தவர்களின் அபிப்ராயத்தின் மூலம்

ஶ்லோகம் 16 –எம்பெருமானின் எளிமையினால் அவனை அடையும் உயர்ந்த ஆத்மாக்களைப் பற்றி எண்ணிய ஆளவந்தார், அவர்களுக்குக் கிடைத்த பேறு தனக்குக் கிடைத்ததாக நினைக்கிறார்.

உல்லங்கித த்ரிவித ஸீமஸமாதிஶாயி
ஸம்பாவநம் தவ பரிப்ரடிம ஸ்வபாவம் |
மாயாபலேந பவதா’பி நிகூஹ்யமாநம்
பஶ்யந்தி கேசிதநிஶம் த்வதநந்ய பாவா: ||

உன்னுடைய ஸ்வாமித்வத்தை நீ உன்னுடைய ஆச்சர்ய சக்தியினால் மறைத்துக் கொண்டாலும், உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும், மிகவும் உயர்ந்த ஆத்மாக்கள் கால, தேச, வஸ்துக்களுக்கு அப்பாற்பட்ட உன்னுடைய ஸ்வாமித்வத்தை உணர்ந்து, “எம்பெருமானுக்கு ஸமமாகவோ அவனைவிட உயர்ந்தவராகவோ எவரேனும் உண்டோ?” என்று ஸந்தேஹம் கொள்ளாமல் இருப்பார்கள்.

ஶ்லோகம் 17 – இதில் ஆளவந்தார் பகவானாலே நிர்வஹிக்கப்படும், முன்பு விளக்கப்பட்ட அவனுடைய ஸர்வேச்வரத்வத்துக்கு உட்பட்ட பலவிதமான வஸ்துக்களை அருளிச்செய்கிறார்.

யதண்டம் அண்டாந்தர கோசரம் ச யத்
தஶோத்தராண்யாவரணாநி  யாநி  ச |
குணா: ப்ரதாநம் புருஷ: பரம் பதம்
பராத்பரம் ப்ரஹ்ம ச தே விபூதய: ||

1) ப்ரஹ்மாவின் ஆளுகைக்குட்பட்ட, 14 லோகங்கள் கொண்ட ப்ரஹ்மாண்டம், 2) அந்த அண்டத்துக்குள் இருக்கும் வஸ்துக்கள், 3) ஒவ்வொரு அண்டத்தை மூடிக்கொண்டிருக்கும், முந்தைய ஆவரணத்தைப்போலே பத்து மடங்கு அளவுள்ள, ஸப்த ஆவரணங்கள், 4) ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்கள் 5) மூல ப்ரக்ருதி 6) இவ்வுலகில் இருக்கும் பத்தாத்மாக்கள் (கட்டுப்பட்ட ஆத்மாக்கள்), 7) ஸ்ரீவைகுண்டம் 8) (தேவதைகளைவிட உயர்ந்தவர்களான) முக்தாத்மாக்களைவிட உயர்ந்தவர்களான நித்யஸூரிகள் 9) உன்னுடைய திய்வ மங்கள விக்ரஹங்கள் ஆகிய எல்லாம் உனக்கு சரீரங்களே.

ஶ்லோகம் 18 – ஆளவந்தார் முன்பு ஶரண்யனான (புகல்) எம்பெருமானின் பெருமைகளைப் பேசினார். இதில் “இப்படிப்பட்ட உபய விபூதி நாதனை நாம் எப்படி அணுகுவது?” என்ற தயக்கத்தைப் போக்க, அவனுடைய அடியார்கள் ஈடுபடும் பன்னிரண்டு குணங்களை அருளிச்செய்கிறார். முன்பு பகவானின் ஸர்வேஶ்வரத்வத்தை அருளிய ஆளவந்தார், இப்பொழுது அவனுடைய பேசத்தகுந்த குணங்களை அருளிச்செய்கிறார்.

வஶீ வதாந்யோ குணவாந் ருஜுஶ்  ஶுசிர்
ம்ருதுர் தயாளுர் மதுரஸ் ஸ்திரஸ் ஸம: |
க்ருதீ க்ருதஜ்ஞஸ்த்வமஸி ஸ்வபாவதஸ்
ஸமஸ்த கல்யாண குணாம்ருதோததி:||

நீ இயற்கையாகவே அமுதக் கடல் போன்ற இனிமையான குணங்களை உடையவன். உன் குணங்களாவன 1) உன் அடியார்களுக்கு வசப்பட்டவன் 2) உன்னுடைய அடியார்களுக்கு உன்னையே தரும் குணத்தை உடையவன் 3) எல்லோரிடமும் கலந்து பழகும் ஸௌஶீல்யத்தை உடையவன் 4) உள்ளம் உரை செயல்களில் நேர்மை உடையவன் 5) நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணும் பரிசுத்தியை உடையவன் 6) அடியார்களின் பிரிவைத் தாங்க முடியாதவன் 7) அடியார்களின் துயரைத் தாங்க முடியாத கருணை உள்ளம் கொண்டவன் 8) இனிமையானவன் 9) அடியார்களைக் காப்பதில் உறுதியாக இருப்பவன் 10) உன்னிடம் சரணடைந்தவர்களிடத்தில் ஸமமாக இருப்பவன் 11) உன் அடியார்களின் செயல்களை உன் செயல்களாக நினைத்துச் செய்பவன் 12) அடியார்களின் சிறு உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்பவன்.

ஶ்லோகம் 19 – இதில், எப்படி பகவானின் திருக்கல்யாண குணங்களுக்கு எல்லை இல்லையோ அதேபோல ஒவ்வொரு குணத்துக்கும் எல்லை இல்லை என்கிறார் ஆளவந்தார் .

உபர்யுபர்யப்ஜ புவோ’பி பூருஷாந்
ப்ரகல்ப்ய தே யே ஶதமித்யநுக்ரமாத் |
கிரஸ் த்வதேகைக குணாவதீப்ஸயா
ஸதா ஸ்திதா நோத்யமதோ’திஶேரதே ||

வேத வாக்யங்கள் “தேயே சதம்” (இது போன்ற நூறு) என்று மீண்டும் மீண்டும் புதிய ப்ரஹ்மாக்களை கற்பனை செய்து, உன்னுடைய ஒரு (ஆனந்தம் என்னும்) குணத்தின் எல்லையைக் காண முயன்று, சிறிதளவும் முன்னேறாமல், ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன,

ஶ்லோகம் 20 – ஆளவந்தார் முன்பு அருளிச்செய்த பகவத் குணங்களை அனுபவிக்கும் அடியார்களின் பெருமையை அருளிச்செய்கிறார். அல்லது – ப்ரஹ்ம ஸூத்ரம் 1.1.20இல் “அஸ்மிந்நஸ்ய ச தத்யோகம் ஶாஸ்தி” (வேதம் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஆனந்தமாகக் கூடியிருக்கும் ஆனந்தத்தை விளக்குகிறது) என்று சொன்னபடி பகவானிடத்திலிருந்து அடைந்த பெருமையை உடைய அடியார்களின் பெருமையே மிகப் பெரியது என்றால், அந்த பகவானின் பெருமை அளவிடமுடியாதது என்பது தெளிவு என்கிறார்.

த்வதாஶ்ரிதாநாம் ஜகதுத்பவ ஸ்திதி
ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாதய: |
பவந்தி லீலா விதயஶ்ச  வைதிகா:
த்வதீய கம்பீர மநோநுஸாரிண: ||

ப்ரஹ்மா முதலான உன் அடியார்களுக்கு இவ்வுலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது மற்றும் இந்த ஸம்ஸாரத்தை கடக்க உதவுவது ஆகியவை எளிய விளையாட்டாக இருக்கும்; வேதத்தின் விதிகளும்கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.

ஆதாரம் – http://divyaprabandham.koyil.org/index.php/2020/10/sthothra-rathnam-slokams-11-to-20-simple/

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment