ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஆண்டாள் நாச்சியார் பெருமையை உபதேச ரத்தின மாலை 22ஆம் பாசுரத்தில் அழகாக வெளியிடுகிறார்.
இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் – குன்றாத
வாழ்வான வைகுந்த வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்
இன்றுதான் திருவாடிப்பூரமோ? இந்த தினத்திலேதான் ஸ்ரீ பூமிப்பிராட்டி ஸ்ரீவைகுந்தத்தில் இருக்கும் எல்லையில்லாத ஆனந்த அனுபவத்தை விட்டு, பெரியாழ்வாரின் திருமகளாரான ஆண்டாள் நாச்சியாராக, ஒரு தாய் தன் குழந்தை கிணற்றிலே விழுந்தால், எவ்வாறு தானே கிணற்றிலே குதித்துத் தன் குழந்தையை காப்பாற்றுவாளோ, அதைப் போல என்னுடைய உஜ்ஜீவனத்துக்காகவே இங்கே வந்து அவதரித்தாள். ஸ்ரீ வராகப் பெருமாள் பூமிப்பிராட்டியிடம் “என்னை வாயினால் பாடி, மனத்தினால் த்யானித்து, தூயமலர்களைக் கொண்டு அர்ச்சித்தால், ஜீவாத்மாக்கள் என்னை எளிதில் அடையலாம்” என்று சொன்னதை நமக்கு நடத்திக் காட்டவே இப்பூவுலகில் வந்து அவதரித்தாள். என்ன ஆச்சர்யம்! என்ன கருணை!
ஆண்டாள் நாச்சியார் தன்னை கோபிகையாகவும், ஸ்ரீவில்லிபுத்தூரை திருவாய்ப்பாடியாகவும், தன் தோழிகளை கோபிகைகளாகவும், வடபெருங்கோயிலுடையானை கண்ணனாகவும், அந்த எம்பெருமானின் ஸந்நிதியை நந்தகோபரின் திருமாளிகையாகவும் பாவித்துக்கொண்டு எம்பெருமானை அடைவதற்கு அவனே உபாயம், அடியார்கள் மூலமாகவும் நப்பின்னைப் பிராட்டி புருஷகாரத்துடனும், அவனை அடைந்து அவனுடைய ஆனந்தத்துக்காகவே கைங்கர்யம் செய்வது ஆத்மாவின் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்தது என்பதை எளிய தமிழ் பாசுரங்களின் மூலம் தன்னுடைய பெருங்கருணையாலே வெளியிட்டாள்.
திருப்பாவை வேதம் அனைத்துக்கும் வித்து என்று கொண்டாடப்படுகிறது. அதாவது, வேதத்தின் ஸாரமான விஷயங்களை நாம் திருப்பாவையிலே கண்டுவிடலாம். வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிவது, வேதத்தில் காட்டப்பட்டுள்ள முக்யமான விஷயம். அதேபோல அடியார்களுடன் கூடி இருந்து எம்பெருமானுக்குத் தொண்டு செய்வது, அதுவும் அவ்வாறு செய்யும்பொழுது எம்பெருமானுடைய ஆனந்தத்துக்காகவே அந்த கைங்கர்யத்தைச் செய்வது, ஆகிய விஷயங்கள் மிக முக்யமாகக் கருதப்படுகின்றன. இதை எல்லாம் நாம் திருப்பாவையில் நன்றாக அனுபவிக்கலாம். எம்பெருமானார் திருப்பாவையில் கொண்டிருந்த ஈடுபாட்டினால் திருப்பாவை ஜீயர் என்றே அழைக்கப்பட்டார். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவராலும் விரும்பி அனுஸந்திக்கப்படும் திருப்பாவையைப் போலே வேறு ப்ரபந்தம் இவ்வுலகில் இல்லை என்பது இதற்கு இருக்கும் தனிச்சிறப்பு.
பூர்வாசார்யர்களின் வ்யாக்யானங்களைத் துணையாகக் கொண்டு இந்த ப்ரபந்தத்தின் எளிய விளக்கவரை எழுதப்படுகிறது.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org
Adiyan