ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
நீளா துங்க ஸ்தனகிரி தடீ ஸுப்தம் உத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சத சிரஸ் சித்தம் அத்யாபயந்தீ |
ஸ்வோசிஷ்டாயாம் ச்ரஜிநிகளிதம் யாபலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய: ||
ஸ்ரீ நீளா தேவியின் அவதாரமான ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டியின் திருமுலைத்தடங்களாகிற மலைச்சாரலிலே சயனித்துக் கொண்டிருப்பவனும், தான் சூடிக்களைந்த மாலையாலே விலங்கிடப்பட்டுள்ளவனுமான கண்ணன் எம்பெருமானைத் திருப்பள்ளியுணர்த்தி வேதங்களின் இறுதிப்பகுதியான வேதாந்தங்களிலே தெளிவாகக் காட்டப்பட்டுள்ள தன்னுடையதான பாரதந்த்ரியத்தை (எம்பெருமானுக்கே ஆட்பட்டு இருக்கும் தன்மையை) அறிவிப்பவளாய், நிர்பந்தமாகச் சென்று அவனை அனுபவிப்பவளான ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கு இந்த நமஸ்காரமானது காலம் உள்ளவரை ஆகவேண்டும்.
அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம் – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
அன்னங்கள் உலாவும் வயல்களையுடைய ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள் நாச்சியார் திருப்பாவை என்னும் ப்ரபந்தத்தை அருளிச்செய்து, அதை இனிய இசையுடன் பாடி ஸ்ரீரங்கநாதனுக்கு அழகிய பாமாலையாக ஸமர்ப்பித்தாள். பூக்களால் ஆன மாலையையும் தான் முதலில் சூடி பின்பு அந்த எம்பெருமானுக்கு அதை ஸமர்ப்பித்தாள். அப்படிப்பட்ட பெருமையை உடைய ஆண்டாள் நாச்சியாரைப் பாடு.
சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே! தொல்பாவை
பாடியருள வல்ல பல்வளையாய் – நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதியென்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு
பூக்களால் ஆன மாலையைத் தான் சூடிப் பின்பு எம்பெருமானுக்கு ஸமர்ப்பித்த ஒளி விடும் கொடியைப் போன்றவளே! பலகாலமாக அனுஷ்டிக்கப்படும் பாவை நோன்பைத் திருப்பாவை மூலமாக அருளிச்செய்த, திருக்கைகளில் வளையல்களை அணிந்திருப்பவளே! நீ மன்மதனைக் குறித்து “என்னைத் திருவேங்கடமுடையானுக்கு ஆட்படுத்த வேண்டும்” என்று கூறியதை, நாங்கள் அவனிடத்திலே கூற வேண்டாதபடி நீயே எங்களுக்கு அருள்புரிவாயாக.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org