திருப்பாவை – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 1 – 5

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திருப்பாவை

<< தனியன்கள்

முதல் பாசுரம். ஆண்டாள் காலத்தையும், தன் க்ருஷ்ணானுபவத்தில் உதவும் கோப கோபிகைகளையும், உபாய (வழி) உபேயங்களான (லக்ஷ்யம்) எம்பெருமானையும் கொண்டாடி, க்ருஷ்ணானுபவதுக்காக மார்க்ழி நோன்பை நோற்பதாக ஸங்கல்பம் செய்து தொடங்குகிறாள்.

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
      நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
      கூர் வேற்கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
      கார் மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
     பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய்

செல்வம் நிறைந்துள்ள திருவாய்ப்பாடியில் இருக்கும் க்ருஷ்ண கைங்கர்யம் என்னும் செல்வத்தை உடைய இளம் பெண்களே! சிறந்த ஆபரணங்களை அணிந்துள்ளவர்களே! மார்கழி பௌர்ணமி தினத்தில் நல்ல நாள் அமைந்துள்ளது. கூர்மையான வேலை உடையவரும் கண்ணனுக்குத் தீங்குபுரியும் ஜந்துக்களை அழிக்கும் கொடுஞ்செயலை உடையவருமான நந்தகோபருக்கு அடங்கிய பிள்ளையும் அழகு பொருந்திய கண்களையுடைய யசோதைப் பிராட்டியின் சிங்கக்குட்டி போன்றவனும் கறுத்த மேகத்தைப் போன்ற திருமேனியையும் சிவந்த கண்களையும் ஸூர்யனையும் சந்த்ரனையும் போன்ற முகத்தையும் உடையவனுமான கண்ணனான நாராயணன் எம்பெருமானே அடியார்களான நமக்கே கைங்கர்யத்தைக் கொடுப்பவன். ஆகையால், இவ்வுலகோர் எல்லோரும் புகழும்படி க்ருஷ்ணானுபவத்தில் நன்கு நீராட விருப்பம் உள்ளவர்களே! வாருங்கள்.

இரண்டாம் பாசுரம். க்ருஷ்ணானுபவத்தில் ஈடுபடும்போது நோன்புக்கு அங்கமாக எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்பதை அறிவிக்கிறாள். “மேலையார் செய்வனகள்” என்று பெரியோர்களான பூர்வாசார்யர்களின் நடத்தையே ப்ரபன்னர்களான நமக்கு வழி என்கிறாள்.

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
       செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
       நெய் உண்ணோம் பால் உண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலர் இட்டு நாம் முடியோம்
       செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
       உய்யுமாறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய்

இவ்வுலகிலே வாழப்பிறந்தவர்களே! நாமும் உஜ்ஜீவனத்துக்கான வழியை உணர்ந்து நோன்புக்காக மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டிய செயல்களைக் கேளுங்கள். திருப்பாற்கடலில் பள்ளிகொள்கின்ற ஸர்வேச்வரனின் திருவடிகளைப் பாடுவோம். நெய்யும் பாலும் உண்ணமாட்டோம். அதிகாலையில் எழுந்து நீராடுவோம். ஆனால் கண்ணுக்கு மையும் தலையில் பூவும் அணிய மாட்டோம். நம் பெரியோர்கள் செய்யாதவைகளை நாமும் செய்ய மாட்டோம். மற்றவர்களைப் பற்றிக் கோள் சொல்ல மாட்டோம். தகுந்தவர்களுக்கு தானமும் தேவையுள்ளவர்களுக்கு பிக்ஷையும் அவர்கள் கொள்ளும் அளவுக்குக் கொடுப்போம்.

மூன்றாம் பாசுரம். வ்ருந்தாவனத்தில் இருப்பவர்கள் தன் க்ருஷ்ணானுபவத்துக்கு அனுமதி அளிப்பதால் அவர்கள் அனைவருக்கும் நன்மைகள் விளைய வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறாள். எல்லோருக்கும் க்ருஷ்ணானுபவம் கிடைக்க வேண்டும் என்பதே உள்ளர்த்தம்.

ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
      நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
      ஒங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
      தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
      நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய்

உயர வளர்ந்து திருவுலகளந்தருளின புருஷோத்தமனுடைய திருநாமங்களை நாங்கள் பாடி எங்கள் நோன்புக்காக என்ற காரணத்தைச்சொல்லி நீராடுவோம். அவ்வாறு செய்தால் தேசமெங்கும் ஒரு தீமையும் இல்லாமல் மாதந்தோறும் மூன்று முறை மழை பெய்திட, அதனாலே உயர்ந்து நன்றாக வளர்ந்திருக்கும் செந்நெற்பயிர்களின் நடுவே கயல் மீன்கள் துள்ள, அழகிய புள்ளிகளை உடைய வண்டுகள் அழகிய கருநெய்தல் பூக்களிலே உறங்க, அவ்வூரில் இருக்கும் வள்ளல் தன்மையை உடைய பெருத்திருக்கும் பசுக்களைத் தயங்காமல் சென்றடைந்து, நிலையாக இருந்து, அவற்றின் பருத்த முலைகளை அணைத்துக் கறக்க, குடங்கள் பாலாலே நிரம்பி வழியும். இப்படிப்பட்ட அழியாத செல்வம் நிறைந்து இருக்கும்.

நான்காம் பாசுரம். வ்ருந்தாவனத்தில் இருப்பவர்கள் செழிப்புடன் இருந்து க்ருஷ்ணானுபவம் செய்ய மழைக்கு தேவதையான பர்ஜந்யனை மாதம் மூன்று முறை (ப்ராஹ்மணர்களுக்காக, ராஜாவுக்காக, பத்தினிகளுக்காக) மழை பொழியுமாறு ஆணையிடுகிறாள்.

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
    ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து
    பாழியந்தோள் உடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
    தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
    மார்கழி நீர் ஆட மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்

கடல்போலே ஆழமான தன்மையை உடைய மழைக்குத் தலைவனான வருணனே! நீ சிறிதும் மறைக்கக்கூடாது. கடலில் புகுந்து அங்குள்ள நீரை எடுத்துக்கொண்டு இடி இடித்துக்கொண்டு, வானத்தில் ஏறி, காலம் முதலான எல்லாப் பதார்த்தங்களுக்கும் தலைவனான எம்பெருமானின் திருமேனிபோலே உடம்பு கறுத்து, பெருமையையும் அழகிய தோள்களையும் உடையவனும் திருநாபீகமலத்தை உடையவனுமான எம்பெருமானின் திருக்கையிலே இருக்கும் திருவாழியைப் போலே மின்னி, மற்றொரு கையில் இருக்கும் திருச்சங்கைப் போலே நிலைநின்று முழங்கி, கால தாமதம் செய்யாமல் ஸ்ரீ சார்ங்கம் என்னும் வில்லாலே ஏற்பட்ட அம்பு மழைபோல், இவ்வுலகில் உள்ளவர்கள் உஜ்ஜீவிக்கும்படியும், நோன்பை அனுஷ்டிக்கும் நாங்களும் ஸந்தோஷத்துடன் மார்கழி நீராடும்படியாகவும், மழையைப் பெய்வாயாக.

ஐந்தாம் பாசுரம். நாம ஸங்கீர்த்தனத்தில் தொடர்ந்து ஈடுபட்டால் கர்மங்கள் முழுமையாகத் தொலையும் என்று காண்பிக்கிறாள். முன் செய்த வினைகள் தீயினில் போட்ட பஞ்சு போலே அழியும், இனி வரும் வினைகள் தாமரையில் தண்ணீர் போலே ஒட்டாமல் விலகும். இங்கே முக்யமாகப் புரிந்து கொள்ள வேண்டியது – முன் செய்த வினைகளை எம்பெருமான் முழுமையாக விலக்குகிறான். ஆனால் வரும் காலத்தில் தெரியாமல் செய்யும் வினைகளை விலக்குகிறான், ஆனால் தெரிந்து செய்யும் வினைகளை அனுபவித்தே தீர்க்கும்படி செய்கிறான்.

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
    தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
    தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
    வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
    தீயினில் தூசு ஆகும் செப்பு ஏலோர் எம்பாவாய்

ஆச்சர்யமான செயல்களை உடையவனும், விளங்கிகொண்டிருக்கும் வட மதுரைக்கு மன்னனும், பரிசுத்தமானதும், ஆழம் மிக்கிருப்பதுமான நீரை உடைய யமுனைக்கரையிலே விளையாடுபவனும், இடையர் குலத்தில் அவதரித்த மங்கள தீபம் போன்றவனும், யசோதைப் பிராட்டியின் திருவயிற்றுக்குப் பெருமை சேர்த்தவனுமான தாமோதரனை, நாம் பரிசுத்தர்களாகக் கிட்டி, நல்ல மலர்களைத் தூவி வணங்கி, வாயாரப் பாடி, மனதாலே த்யானிக்க, முன் செய்த வினைகளும், பிற்காலத்தில் வரும் பாபங்களும் நெருப்பிலே பட்ட பஞ்சு போலே உருவழிந்து போகும். ஆகையால் அவனைப் பாடு.

ஆக, முதல் ஐந்து பாசுரங்களால், எம்பெருமானின் பர (நாராயணன்), வ்யூஹ (திருப்பாற்கடல் நாதன்), விபவ (த்ரிவிக்ரமன்), அந்தர்யாமி (வருணனுக்கு அந்தர்யாமி), அர்ச்சை (வட மதுரை எம்பெருமான்) ஆகிய நிலைகள் சொல்லப்பட்டன.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment