திருப்பாவை – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 6 – 15

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திருப்பாவை

<< பாசுரங்கள் 1 – 5

இனி, 6ஆம் பாசுரம் முதல் 15ஆம் பாசுரம் வரை, ஆண்டாள் நாச்சியார், பஞ்சலக்ஷம் குடும்பங்களைக் கொண்ட திருவாய்ப்பாடியில் இருக்கும் கோபிகைகளை எழுப்புவதைக் காட்டும் வகையில் பத்து கோபிகைகளை எழுப்புகிறாள். வேதம் வல்லார்களான அடியார்களை எழுப்பும் க்ரமத்தில் இந்தப் பத்து பாசுரங்கள் அமைந்துள்ளன.

ஆறாம் பாசுரம். இதில் க்ருஷ்ணானுபவத்துக்கு புதியவளான ஒரு கோபிகையை எழுப்புகிறாள். இவள் கண்ணனைத் தானே அனுபவிப்பதிலேயே த்ருப்தி அடைகிறாள் – இது ப்ரதம பர்வ நிஷ்டை – முதல் நிலை. பாகவதர்களுடன் கூடி இருப்பதை உணர்ந்தால், அது சரம பர்வ நிஷ்டைக்குக் (இறுதி நிலை) கொண்டு செல்லும்.

புள்ளும் சிலம்பின காண் புள் அரையன் கோயிலில்
      வெள்ளை விளி சங்கின் பேர் அரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சு உண்டு
      கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை
      உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம்
      உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்

பறவைகளும் கூவிக்கொண்டு செல்கின்றன பார்! பறவைகளுக்கு ராஜாவான கருடாழ்வாரின் தலைவனான எம்பெருமானின் கோயிலில், வெண்மையானதும் மற்றவர்களை அழைப்பதுமான சங்கத்தினுடைய பெரிய ஒலியைக் கேட்கவில்லையோ? சிறு பெண்ணே (புதியவளே)! எழுந்திரு! தாய் வடிவில் வந்த பூதனை என்னும் பேயின் முலையில் இருந்த விஷத்தையும் அவள் உயிரையும் உண்டு, வஞ்சனை பொருந்திய சகடாஸுரனை கட்டுக் குலையும்படி திருவடிகளை நீட்டி, திருப்பாற்கடலில் ஆதிசேஷனாகிய படுக்கையில் சயனித்தருளிய, இந்த உலகத்துக்கே காரணமான எம்பெருமானை, த்யானம் செய்யும் முனிவர்களும், கைங்கர்யம் செய்யும் யோகிகளும் ஹ்ருதயத்திலே அந்த எம்பெருமானை த்யானித்து, ஹ்ருதயத்தில் இருக்கும் எம்பெருமானுக்கு ச்ரமம் கொடுக்காமல் மெதுவாக எழுந்திருந்து, “ஹரி: ஹரி:” என்று எழுப்பும் பெரிய ஒலி எங்களுடைய நெஞ்சில் புகுந்து, எங்கள் நெஞ்சம் குளிர்ந்தது.

ஏழாம் பாசுரம். இதில் க்ருஷ்ணானுபவத்தில் தேர்ந்தவளான ஒரு கோபிகையை எழுப்புகிறாள். இவளோ ஆண்டாள் மற்றும் தோழிகளின் இனிய குரலைக் கேட்பதற்காக உள்ளே காத்திருக்கிறாள்.

கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
      பேசின பேச்சு அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
      வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
      நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
     தேசம் உடையாய் திற ஏலோர் எம்பாவாய்

(க்ருஷ்ண பக்தி இருந்தும் அதை உணராமல் இருக்கும்) அறிவிலியே! எல்லா திசைகளிலும் பரத்வாஜ பக்ஷியின் கீசு கீசு என்று கலந்து பேசிய பேச்சின் ஒலியைக் கேட்கவில்லையோ? வாசனை மிகுந்த அழகிய கூந்தலை உடைய இடைச்சிகளுடைய அச்சுத்தாலி முளைத்தாலி போன்ற ஆபரணங்கள் கல கல என்று ஓசை ஏற்படும்படி கைகளை அசைத்து மத்தினாலே ஓசை ஏற்படுத்திய தயிரின் ஓசையை நீ கேட்கவில்லையோ? கோபிகைகளுக்குத் தலைவியாய் இருப்பவளே! நாராயணனின் அவதாரமான கண்ணனை நாங்கள் பாடவும், இப்படியே நீ கிடக்கலாமோ? ஒளி படைத்தவளே! கதவைத் திற.

எட்டாம் பாசுரம். இதில் கண்ணனால் மிகவும் விரும்பப்படுவளும் அதனால்  மிகுந்த பெருமையை உடையவளுமான ஒரு கோபிகையை எழுப்புகிறாள்.

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
      மேய்வான் பரந்தன காண் மிக்கு உள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
      கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
      மா வாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
  ஆவா என்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்

க்ருஷ்ணனால் விரும்பப்படும் பெண்ணே! கிழக்குத் திக்கில் ஆகாசம் வெளுத்தது. எருமைகள் மேய்கைக்காக, சிறிதுநேரம் வெளியில் விடப்பட்டு, உலாவின. நீராடப் போவதையே ப்ரயோஜனமாகக் கொண்டு போகும் மற்ற பெண்கள் அனைவரையும் போகாமல் தடுத்து, உன்னை அழைப்பதற்காக, உன் இல்லத்து வாசலில் வந்து நின்றுள்ளோம். எழுந்திரு! குதிரை வடிவில் வந்து கேசி என்னும் அசுரனின் வாயைப் பிளந்தவனும், கம்ஸனின் வில் விழாவில் மல்லர்களைக் கொன்றவனும் நித்யஸூரிகளின் தலைவனுமான  கண்ணனை நாம் சென்று வணங்கினால், அவன் நம் குறைகளை ஆராய்ந்து, மிகவும் வேகமாக நமக்கு அருள் செய்வான்.

ஒன்பதாம் பாசுரம். இதில் எம்பெருமானே உபாயம் என்ற விச்வாஸத்துடன், எம்பெருமானுடன் சேர்ந்து பல ரஸங்களை அனுபவிக்கும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள். இவள் ஸீதாப் பிராட்டி ஹனுமானிடம் “ஸ்ரீராமனே வந்து என்னைக் காப்பார்” என்று உறுதியுடன் இருந்ததைப் போலே இருப்பவள்.

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கு எரியத்
      தூமம் கமழத் துயில் அணை மேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக் கதவம் தாள் திறவாய்
      மாமீர் அவளை எழுப்பீரோ? உன் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
      ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று
      நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய்

இயற்கையிலே தோஷம் இல்லாத ரத்னங்களால் இழைக்கப்பட்ட மாளிகையில், சுற்றிலும் மங்கள விளக்குகள் ஒளிவிட, வாஸனை மிக்க புகை மணம் வீச, ஸௌகரியமான படுக்கையின் மேல் துயில்பவளான மாமன் மகளே! மாணிக்கக் கதவுகளின் தாள்களைத் திறந்து விடு. மாமியே! நீங்கள் உங்கள் மகளைத் துயிலெழுப்புங்கள். உங்கள் மகள் வாய் பேசாத ஊமையா? அல்லது காது கேளாத செவிடியா? அல்லது களைப்பாக இருக்கிறாளா? காவலில் வைக்கப்பட்டாளா? நெடுநேரம் தூங்கும்படி மந்த்ரத்தால் கட்டப்பட்டாளா? நாங்கள் மாமாயன் (ஆச்சர்யமான செயல்கள உடையவன்), மாதவன் (லக்ஷ்மீபதி), வைகுந்தன் (ஸ்ரீவைகுண்டநாதன்) என்று எம்பெருமானின் திருநாமங்கள் பலவற்றைச் சொல்லிவிட்டோம். இருந்தும் அவள் எழவில்லையே!

பத்தாம் பாசுரம். இதில் கண்ணனுக்குப் பிரியமான ஒரு கோபிகையை எழுப்புகிறாள். இவள் எம்பெருமானே உபாயம் என்பதில் உறுதியுள்ள ஸித்த ஸாதன நிஷ்டை, இதனால் அவனால் மிகவும் விரும்பப்படுபவள்.

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
      மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
      போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும்
      தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
      தேற்றமாய் வந்து திற ஏலோர் எம்பாவாய்

நோன்பு நோற்று ஸ்வர்கத்தை இடைவிடாமல் அனுபவிக்கும் பெண்ணே! கதவைத்தான் திறக்கவில்லை, உள்ளிருந்து ஒரு பதில் வார்த்தையாவது பேச மாட்டார்களோ? நறுமணம் வீசும் திருத்துழாய் மாலையை தன் கிரீடத்திலே சூடியுள்ளவனும், நாராயணன் என்ற திருநாமத்தை உடையவனும், நம்மால் பல்லாண்டு பாடப்பட்டு நமக்குக் கைங்கர்யத்தைக் கொடுப்பவனுமான் எம்பெருமானாலே முற்காலத்தில் யமன் வாயில் விழுந்த (மரணம் அடைந்த) கும்பகர்ணனும் உன்னிடத்தில் தோற்று தன்னுடைய பெருந்தூக்கத்தை உனக்குக் கொடுத்தானோ? அழகிய உறக்கத்தை உடையவளே! கிடைத்தற்கரிய ஆபரணம் போன்றவளே! தெளிந்து வந்து கதவைத் திற.

பதினோறாம் பாசுரம். இதில் கண்ணனைப் போலே வ்ருந்தாவனத்திலேயே மிகவும் விரும்பப்படும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள். இப்பாசுரத்தில் வர்ணாச்ரம தர்மங்கள் முறையாகக் கடைபிடிக்கப்பட வேண்டிய அவச்யம் காட்டப்பட்டுள்ளது.

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
      செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே
      புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
      முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
      எற்றுக்கு உறங்கும் பொருள்? ஏலோர் எம்பாவாய்

இளமை மாறாத பசுக்களின் பல கூட்டங்களையும் கறப்பவர்களாய், எதிர்ப்பவர்களுடைய பலம் அழியும்படி அவர்களிடத்துக்கே போய் போர் புரிபவர்களாய் குற்றமற்றவர்களான இடையர்களுடைய குலத்தில் பிறந்த பொற்கொடியைப் போன்றவளே! புற்றில் இருக்கும் பாம்பின் படம்போலே விரிந்திருக்கும் இடை ப்ரதேசத்தை உடையவளாய், தன் நிலத்திலே இருக்கும் மயில் போன்றவளே! வெளியே புறப்பட்டு வா. உனக்கு உறவினர்களான தோழிகள் எல்லோரும் வந்து உன் மாளிகையின் முற்றத்திலே புகுந்து நீல மேக வண்ணனான கண்ணன் எம்பெருமானுடைய திருநாமங்களைப் பாடியும் எங்கள் அன்புக்குப் பாத்திரமான நீ அசையாமலும் பேசாமலும் உறங்குவது எதற்காகவவோ?

பன்னிரண்டாம் பாசுரம். இதில் கண்ணன் எம்பெருமானுக்கு நெருங்கிய தோழனும் வர்ணாச்ரம தர்மங்களை அனுஷ்டிக்காத ஒரு இடையனுமான ஒருவனின் தங்கையான ஒரு கோபிகையை எழுப்புகிறாள். ஒருவன் எம்பெருமானுக்கே எப்பொழுதும் அன்புடன் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தால் அவனுக்கு வர்ணாச்ரம தர்மங்கள் முக்யமன்று. ஆனால் எப்பொழுது கைங்கர்யத்தை முடித்துத் தன் செயல்களை ஆரம்பிக்கிறானோ அப்பொழுது அவனுக்கு மீண்டும் வர்ணாச்ரம தர்மங்கள் முக்யத்துவம் பெறும்.

கனைத்து இளங்கற்று எருமை கன்றுக்கு இரங்கி
      நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறு ஆக்கும் நற்செல்வன் தங்காய்
      பனித் தலை வீழ நின் வாசல் கடை பற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
      மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் ஈது என்ன பேர் உறக்கம்
  அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏலோர் எம்பாவாய்

இளங்கன்றுகளை உடைய எருமைகளானவை கதறிக்கொண்டு தம் கன்றுகளிடம் இரக்கம் கொண்டு அக்கன்றுகளை நினைத்து தம் முலைகளில் பாலைப் பெருக்க, அதனாலே வீடு முதுவதும் ஈரமாகி சேறாக்கும்படி இருக்கக்கூடிய, க்ருஷ்ண கைங்கர்யம் என்கிற உயர்ந்த செல்வத்தை உடையவனின் தங்கையே! எங்கள் தலையிலே பனி பெய்யும்படிக்கு உன்னுடைய் வீட்டின் வாசலைப் பிடித்துக்கொண்டு, அழகியதான இலங்கைக்குத் தலைவனான ராவணனை கோபத்தாலே கொன்றவனாய், மனதுக்கு இனிமையைக் கொடுப்பவனான ராமன் எம்பெருமானை நாங்கள் பாடியபோதும் நீ பேசவில்லை. இனியாவது எழுந்திரு. இது என்ன ஒரு பெரிய உறக்கம்? திருவாய்ப்பாடியில் உள்ள அனைத்து வீட்டில் இருப்பவரும் உன்னுடைய தூக்கத்தை அறிந்து கொண்டுவிட்டனர்.

பதிமூன்றாம் பாசுரம். இதில் தன் கண்களின் அழகைத் தானே ஏகாந்தத்தில் ரசித்துக்கொள்ளும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள். கண்கள் பொதுவாக ஞானத்தைக் குறிக்கும் என்பதால் இவள் எம்பெருமான் விஷயத்தில் பூர்ண ஞானம் உடையவள். இவள் கண்ணன் தானே இவளைத் தேடி வருவான் என்று நினைத்திருக்கிறாள். கண்ணன் அரவிந்தலோசனன் என்று சொல்லப்பட்டிருப்பதால் இவள் அவனுக்குத் தகுதியான கண்ணழகு படைத்தவள்.

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
     கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக்களம் புக்கார்
     வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போது அரிக் கண்ணினாய்
     குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய் நீ நன்னாளால்
     கள்ளம் தவிர்ந்து கலந்து ஏலோர் எம்பாவாய்

கொக்கு வடிவில் வந்த பகாஸுரனுடைய வாயைக் கிழித்துக் கொன்றவனும் தீமைகளுக்கு இருப்பிடமான ராவணனை விளையாட்டாக அழித்தவனுமான எம்பெருமானுடைய வீரச்செயல்களைப் பாடிக்கொண்டு சென்று, எல்லாப் பெண்களும் நோன்பு நோற்கக் குறித்த இடத்துக்குச் சென்று புகுந்தனர். சுக்ரன் மேலெழுந்து, குரு அஸ்தமித்தது. பறவைகளும் இரை தேடச் சிதறிச்செல்கின்றன. பூவையும் மானையும் ஒத்த கண்ணை உடையவளே! இயற்கையாகவே பெண்மையைப் பெற்றவளே! நீ இந்த நன்னாளில் கள்ளத்தை (எம்பெருமானைத் தனியே அனுபவிப்பது) விட்டு, எங்களோடு சேர்ந்து மிகவும் குளிர்ந்திருக்கும் நீரில் நன்றாக நீராடாமல், படுக்கையில் படுத்து உறங்குகின்றாயோ?

பதினான்காம் பாசுரம். இதில் தான் வந்து எல்லோரையும் எழுப்புவேன் என்று வாக்களித்து அதை மறந்து தன் வீட்டிலேயே படுத்திருக்கும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள்.

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
      செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற்பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்
      தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
      நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
      பங்கயக் கண்ணானைப் பாடு ஏலோர் எம்பாவாய்

எங்களை முன்னதாக வந்து எழுப்புவதாக வாயாலே சபதம் செய்த பரிபூர்ணையே! வெட்கமற்றவளே! நன்றாகப் பேசக் கூடியவளே! உங்கள் புழைக்கடையில் இருக்கும் தோட்டத்தில் இருக்கும் குளத்தினுள் செங்கழுநீர் புஷ்பங்கள் மலர்ந்து கருநெய்தல் புஷ்பங்கள் குவிந்துகொண்டன பார்! காவி உடையை அணிந்தவரும் வெளுத்த பற்களையும் உடைய தபோ வேஷத்தை உடைய ஸந்யாஸிகளும் தங்களுடைய தெய்வ ஸந்நிதிகளில், சங்கு ஊதுகைக்காகப் போகின்றனர். திருவாழியையும் திருச்சங்கையும் அழகாக தரிக்கும் பெரிய கைகளை உடையவனாய், அழகிய செந்தாமரைக் கண்களை உடையவனான ஸர்வேச்வரனை பாடுவதற்காக எழுந்திரு.

பதினைந்தாம் பாசுரம். இதில் ஆண்டாளும் அவள் தோழிகளும் தன் திருமாளிகைக்கு வருவதான அழகிய காட்சியைக் காண ஆவலுடன் காத்திருக்கும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள்.

எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
     சில் என்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
     வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை?
     எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
      வல்லானை மாயனைப் பாடு ஏலோர் எம்பாவாய்

வெளியே இருப்பவர்கள்: இளமை பொருந்திய கிளி போன்றிருப்பவளே! என்னே உன் பேச்சின் இனிமை! இங்கு எல்லோரும் வந்த பின்பும், நீ உறங்குகிறாயோ?

உள்ளே இருப்பவள்: பரிபூர்ணைகளான பெண்களே! இப்படிக் கோபத்துடன் அழைக்காதீர்கள். இப்பொழுதே புறப்பட்டு வருகின்றேன்.

வெளியே இருப்பவர்கள்: நீ பேச்சில் சிறந்தவள். உன்னுடைய கடும்வார்த்தைகளையும் உன்னுடைய வாயையும் நெடுங்காலமாகவே நாங்கள் அறிவோம்.

உள்ளே இருப்பவள்: நீங்களே பேச்சில் வல்லவர்கள்! நான் செய்வதே தவறாக இருக்கட்டும். நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்.

வெளியே இருப்பவர்கள்: நீ விரைவில் எழுந்திரு. உனக்கு மட்டும் என்ன வேறு ஒரு தனிப் பலனா?

உள்ளே இருப்பவள்: வரவேண்டியவர்கள் எல்லோரும் வந்தாயிற்றா?

வெளியே இருப்பவர்கள்: எல்லோரும் வந்தாயிற்று. நீயே வந்து எண்ணிப் பார்த்துக் கொள்.

உள்ளே இருப்பவள்: நான் வெளியில் வந்து என்ன செய்ய?

வெளியே இருப்பவர்கள்: வலிய ஆனையைக் கொன்றவனும், எதிரிகளை வலிமை அற்றவர்களாகச் செய்ய வல்லவனும் ஆச்சர்யமான செயல்களையும் உடையவனான கண்ணனை பாடுவதற்காக எழுந்திருந்து வெளியே வா.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  https://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment