ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை
பாசுரம் 31
ஆசையின் மிகுதியாலே எம்பெருமானார் பண்ணிய உபகாரங்களுக்கு மீண்டும் மங்களாசாஸனம் செய்து அருளுகிறார்.
அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறுகலியைச் சிறிதும் அறத் தீர்த்து விட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மறையதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியே
மாறன் உரை செய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே
அறம் மிகு நற்பெரும் பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியே
பௌத்த, நையாயிக, வைசேஷிக, ஜைன, ஸாங்க்ய, யோக மதங்களாகிற ஆறு பாஹ்யமதங்களான செடிகளை அறுத்துத் தள்ளியவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும். கூட்டமாய் கூடி வருகிற வேதத்துக்குத் தவறான அர்த்தம் சொல்லும் குத்ருஷ்டி மதத்தவர்கள் முழுவதுமாகத் துறத்தியவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும். இவற்றுக்குக் காரணமாய், நிறைந்து வருகிற கலியைச் சிறிதும் இல்லாதபடி போக்கடித்தவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும். அழகு நிறைந்த திருவரங்கத்து எம்பெருமானுடைய செல்வம் முழுவதையும் திருத்தி வைத்தவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும். வேதத்தில் காட்டப்படும் எல்லா அர்த்தங்களையும் தன்னுடைய க்ரந்தங்களான ஸ்ரீபாஷ்யம் முதலியவை மூலமாக அருளிச்செய்தவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும். நம்மாழ்வார் அருளிச்செய்த தமிழ் வேதங்களை நன்கு வளர்த்தவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும். அந்தத் தமிழ் ப்ரபந்தங்களுடைய தாத்பர்யமான சரணாகதி தர்மம் இவ்வுலகில் நன்கு பரவ சிறந்ததான ஸ்ரீபெரும்பூதூரில் திருவவதரித்தவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும். அழகு முதலியவைகளால் பூர்த்தியையுடைய எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகள் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்.
பாசுரம் 32
எம்பெருமானாரின் திருநக்ஷத்ர தினமான திருவாதிரைத் திருநாளைக் கொண்டாடுகிறார்.
சங்கர பாற்கர யாதவ பாட்ட பிரபாகரர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடுநாள்
வெங்கலி இங்கு இனி வீறு நமக்கிலை என்று மிகத் தளர்நாள்
மேதினி நம் சுமையாறும் எனத் துயர் விட்டு விளங்கிய நாள்
மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடுநாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமான் இளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே
சங்கரனின் மதம் (அத்வைதம்), பாஸ்கரனின் மதம் (பேதாபேதம்), யாதவப்ரகாசனின் மதம் (பேதாபேதம்), குமாரில பட்டன் மற்றும் ப்ரபாகரனின் மதங்கள் (மீமாம்ஸா) நாசம் அடைவதால், வாதம் செய்யும் அவ்வவ மதஸ்தர்கள் ஐயமின்றி நாசம் அடைவார்கள் என்று நான்கு வேதங்களும் நன்றாக வளரும் நாள். க்ரூரமான கலியும் “இனி நம்மால் இங்கு ஆட்சி செய்ய முடியாது” என்று மிகவும் தளர்ந்து போகும் நாள். பூமியும் “நம் தலைச்சுமை கழியும்” என்று துக்கத்தை விட்டு நன்றாக ப்ரகாசிக்கும் நாள். திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் மற்றும் பூர்வாசார்யர்களுடைய் வாழ்வு நன்றாக முளைக்கும் நாள். பொருந்தி இருக்கும் அழகிய திருவரங்கம், திருமலை மற்றும் ஏனைய திவ்யதேசங்களும் ஆனந்தம் அடையும் நாள். இதெல்லாம் நடக்கும் நாள் எந்நாள் என்றால் சிவந்து அழகாய் இருக்கும் மீன்களையுடைய தடாகங்களால் சூழப்பட்டுள்ள சிறந்ததாய் இருக்கும் ஸ்ரீபெரும்பூதூரை திருவவதார ஸ்தலமாக உடைய கைங்கர்ய ஸ்ரீயை உடைய இளையாழ்வார் என்ற திருநாமத்தை உடைய எம்பெருமானார் வந்தருளிய நாளான திருவாதிரைத் திருநாளே.
பாசுரம் 33
எம்பெருமானாருக்குச் சில பாசுரங்களில் மங்களாசாஸனம் செய்த பிறகு மீண்டும் முன்பு சொன்ன விஷயத்தையே சொல்ல நினைத்து “அடியேனுடைய நிலையை நன்கறிந்திருந்தும் அடியேனைப் பரமபதத்தில் சேர்க்கத் திருவுள்ளம் பற்றியும், ஏன் கால தாமதம் செய்கிறீர்?” என்கிறார்.
இன்னம் எத்தனை காலம் இந்த உடம்புடன் யான் இருப்பேன்?
இன்ன பொழுது உடம்பு விடும் இன்ன படியதுதான்
இன்ன இடத்தே அதுவும் என்னும் இவையெல்லாம்
எதிராசா! நீயறிதி யான் இவை ஒன்று அறியேன்
என்னை இனி இவ்வுடம்பை விடுவித்து உன் அருளால்
ஏராரும் வைகுந்தத்து ஏற்ற நினைவுண்டேல்
பின்னை விரையாமல் மறந்து இருக்கிறதென்? பேசாய்
பேதைமை தீர்த்து எனை அடிமை கொண்ட பெருமானே!
யதிராஜரே! இன்னமும் எவ்வளவு காலம் கைவிட வேண்டிய இந்த தேஹத்தோடே இதில் பொருத்தமற்றிருக்கிற அடியேன் இருப்பேன்? எப்பொழுது இந்த தேஹம் கீழே விழும்? அதுதான் எந்த விதத்திலே எந்த இடத்திலே நடக்கும்? இவ்வாறு சொல்லப்படும் விஷயங்களையெல்லாம் தேவரீர் அறிவீர். அஜ்ஞனான அடியேன் இவை ஒன்றும் அறியேன். ஆன பின்பு, இப்படி அடியேனுடைய அஜ்ஞானத்தைப் போக்கி அடியேனை அடிமை கொண்ட பெருமானே! இனி, இவ்வுலகில் பொருத்தமற்றிருக்கிற அடியேனை தேவரீர் க்ருபையாலே இவ்வுடம்பிலிருந்து விடுவித்து அழகு மிகுந்த பரமபதத்திலே ஏற்றத் திருவுள்ளமாகில், பின் விரைந்து செய்யாமல் மறந்திருப்பதற்குக் காரணம் என்ன? அதை அருளிச்செய்ய வேண்டும்.
பாசுரம் 34
எம்பெருமானார் “நாம் உமக்கு உதவ நினைத்தாலும் உம்முடைய பாபங்கள் கிடக்க நாம் எப்படிச் செய்வது” என்று நினைப்பதாகக் கொண்டு, “எல்லாப் பாபங்களையும் போக்கக் கூடிய எம்பெருமானே தேவரீருக்கு அடங்கி இருப்பதால், தேவரீரையே எல்லாமாகக் கொண்டிருக்கும் அடியேனை முக்தனாக ஆக்க வேண்டும்” என்கிறார்.
முன்னை வினை பின்னை வினை ஆரத்தம் என்னும்
மூன்று வகையான வினைத் தொகை அனைத்தும் யானே
என்னை அடைந்தோர் தமக்குக் கழிப்பன் என்னும் அரங்கர்
எதிராசா! நீ இட்ட வழக்கன்றோ? சொல்லாய்
உன்னை அல்லது அறியாத யான் இந்த உடம்போடு
உழன்று வினைப் பயன் புசிக்க வேண்டுவது ஒன்று உண்டோ?
என்னுடைய இருவினையை இறைப் பொழுதில் மாற்றி
ஏராரும் வைகுந்தத்தேற்றிவிடாய் நீயே
யதிராஜரே! பூர்வாகம் (சரணாகதிக்கு முன்பு பண்ணிய கர்மங்கள்), உத்தராகம் (சரணாகதிக்குப் பின்பு பண்ணும் கர்மங்கள்), ப்ராரப்தம் (பலன் கொடுக்க ஆரம்பித்த கர்மங்கள்) என்று சொல்லப்படும் மூன்று வகையான கர்மங்களின் கூட்டங்கள் எல்லாவற்றையும் ஸர்வஜ்ஞத்வம், ஸர்வசக்தித்வம் போன்ற குணங்களை உடைய நானே வாத்ஸல்யம் போன்ற குணங்கள் நிறைந்த என்னையே தஞ்சம் என்று பற்றியவர்களுக்கு கழிப்பேன் என்று அருளிச்செய்த ஸ்ரீரங்கநாதனான பெரிய பெருமாள் தேவரீர் இட்ட வழக்கன்றோ? இப்படிப்பட்ட தேவரீரை அல்லது வேறொரு ரக்ஷகரை அறியாத அடியேன் இந்த உடம்போடு பொருந்தி இருந்து இவ்வுடம்பின் பலனான கர்ம பலன்களை அனுபவிக்க வேண்டும் என்று கட்டாயமோ? தேவரீரே அடியேனுடைய கர்மபலன்களை க்ஷண காலத்தில் போக்கி அழகு நிறைந்துள்ள வைகுந்தத்தில் ஏற்றிவிட்டு அருளவேண்டும்.
பாசுரம் 35
அடியேனை ரக்ஷிக்க முயலும் தேவரீர் அடியேனுக்கு நித்ய கைங்கர்யத்தைக் கொடுக்க நினைக்க, அதையும் மீறி அடியேன் செய்யும் பாபங்களைப் போக்கி தேவரீரையே நினைக்கும்படிப் பண்ணவேண்டும் என்கிறார்.
அருளாலே அடியேனை அபிமானித்தருளி
அநவரதம் அடிமை கொள்ள நினைத்து நீயிருக்க
மருளாலே புலன் போக வாஞ்சை செய்யும் என்றன்
வல்வினையை மாற்றி உன் பால் மனம் வைக்கப் பண்ணாய்
தெருளாரும் கூரத்தாழ்வானும் அவர் செல்வத்
திருமகனார் தாமும் அருளிச் செய்த தீமைத்
திரளான அத்தனையும் சேர உள்ள என்னைத்
திருத்தி உய்யக் கொள்ளும் வகை தேரும் எதிராசா!
யதிராஜரே! அருளாலே அடியேன் விஷயத்தில் கருணையைக் காட்டி, நிரந்தரமாக நித்ய கைங்கர்யம் கொண்டருளுவதாக தேவரீர் இருக்க, அதை அறிய விடாத அஜ்ஞானத்தாலே புலன்களுடைய விஷயமான இன்பங்களை ஆசைப்படுகிற அடியேனுடைய வலிமை பொருந்திய கர்மங்களை மாற்றி தேவரீர் விஷயத்தில் மனதை வைக்கும்படிப் பண்ணியருளவேண்டும். ஞானம் நிறைந்திருக்கும் ஸ்ரீ கூரத்தாழ்வானும், அவர் திருக்குமாரராக இருக்கும் செல்வத்தையுடைய பராசர பட்டரும் தங்கள் விஷயத்தில் தாழ்வுகளாகச் சொல்லிக்கொண்ட பாபக்கூட்டங்கள் எல்லாவற்றையும் ஒரு சேர உண்டான அடியேனை நன்றாகத் திருத்தி உஜ்ஜீவனம் அடைவிக்கும் வழியை தேவரீரே சிந்தித்தருளும்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org