ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 26 – 30

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை

<< பாசுரம் 21 – 25

பாசுரம் 26

தம்மை ஒழிய வேறு யாரும் இவரை ரக்ஷிக்க முடியாது என்கிற எம்பெருமானாரின் திருவுள்ளக்கருத்தை “தேவரீரே அடியேனை ரக்ஷித்து, அடியேனுக்கு ப்ராப்ய ருசியையும் உண்டாக்கி, ப்ராப்ய தேசத்தை அடையும்படிச் செய்ய வேண்டும்” என்கிறார்.

தென் அரங்கர் தமக்காமோ? தேவியர்கட்காமோ?
சேனையர் கோன் முதலான சூரியர்கட்காமோ?
மன்னிய சீர் மாறன் அருள் மாரி தமக்காமோ?
மற்றும் உள்ள தேசிகர்கள் தங்களுக்குமாமோ?
என்னுடைய பிழை பொறுக்க யாவருக்கு முடியும்?
எதிராசா! உனக்கன்றி யான் ஒருவர்க்கு ஆகேன்
உன்னருளால் எனக்கு ருசி தன்னையும் உண்டாக்கி
ஒளி விசும்பில் அடியேனை ஒருப்படுத்து விரைந்தே

எம்பெருமானாரே! அடியேனுடைய அபராதங்களை மன்னிக்க, பெரிய பெருமாளுக்கு முடியுமோ? பெரிய பிராட்டியார் தொடக்கமான எம்பெருமானின் தேவிமார்களுக்கு முடியுமோ? ஸேனை முதலியார் முதலான நித்யஸூரிகளுக்கு முடியுமோ? நித்யமாயிருக்கும் திருக்கல்யாண குணங்களை உடைய நம்மாழ்வார், அடியார்கள் விஷயத்தில் அருள் புரியும் திருமங்கை ஆழ்வார் முதலானவர்களுக்கு முடியுமோ? மற்றுமுண்டான நம் ஆசார்யர்களுக்கு முடியுமோ? என்னுடைய பிழைகளைப் பொறுத்துக் கொள்ள யாருக்கு முடியும்? தேவரீரைத் தவிர வேறு யாருக்கும் அடிமை இல்லாத அடியேனுக்கு, தேவரீர் க்ருபையால் ருசியையும் உண்டாக்கி, மிகவும் ஒளி படைத்த பரமபதத்தில் அடியேனை விரைவில் சேர்த்து அருள வேண்டும்.

பாசுரம் 27

எம்பெருமானார் தனக்கு மோக்ஷத்தைக் கொடுப்பதில் ஆர்வத்துடன் இருப்பதைக் கண்ட மணவாள மாமுனிகள் ஸம்ஸாரத்தில் எல்லாம் கைவிட வேண்டியதாகவும், பரமபதத்தில் எல்லாம் கைக்கொள்ள வேண்டியதாகவும் ஆனபின்பு அவ்வவற்றை மறப்பது மற்றும் நினைப்பது ஆகியவற்றை தனக்கு அடங்கிய மனதுக்கு அருளிச்செய்கிறார்.

இவ்வுலகில் இனி ஒன்றும் எண்ணாதே நெஞ்சே!
இரவு பகல் எதிராசர் எமக்கு இனிமேல் அருளும்
அவ்வுலகை அலர்மகள் கோன் அங்கு இருக்கும் இருப்பை
அடியார்கள் குழாங்கள் தமை அவர்கள் அநுபவத்தை
இவ்வுயிரும் அதுக்கிட்டுப் பிறந்து இழந்து கிடந்தது
என்னும் அத்தை என்றும் அதுக்கிடைச் சுவராய்க் கிடக்கும்
வெவ்வினையால் வந்த உடல் விடும் பொழுதை விட்டால்
விளையும் இன்பம் தன்னை முற்றும் விடாமல் இருந்து எண்ணே

நெஞ்சே! இந்த உலகத்தில் இனி ஒன்றையும் சிந்தியாதே, இரவும் பகலும் எம்பெருமானார் நமக்கு அருளும் பரமபதத்தையும், மலர்மகளான பெரிய பிராட்டியார்க்கு வல்லபனான எம்பெருமான் அங்கே திவ்ய ஸிம்ஹாஸனத்தில் இருக்கும் இருப்பையும், நித்யர்கள் மற்றும் முக்தர்கள் குழாங்களையும், அவர்கள் அனுபவத்தை அதற்காக இட்டுப் பிறந்தும் இந்த ஆத்மா இழந்து கிடந்தது என்பதையும், எக்காலமும் அந்த அனுபவத்துக்குத் தடையாய் இருக்கும் நம்முடைய க்ரூர கர்மங்களால் வந்த இந்த உடலில் இருந்து விடுதலை பெறும் காலத்தையும், இந்த தேஹத்தை விட்ட பிறகு கிடைக்கும் பேரின்பத்தையும், இவை எல்லாவற்றையும் இடைவிடாமல் சிந்தித்திரு.

பாசுரம் 28

அநாதி காலமில்லாத ப்ராப்ய ருசி (பகவானை அடைவதில் உள்ள ருசி) இப்போது எம்பெருமானார் க்ருபையால் உண்டானது என்று அந்த லாபத்தைப் பேசி மகிழ்கிறார்.

பண்டு பலவாரியரும் பாருலகோர் உய்யப்
பரிவுடனே செய்தருளும் பல கலைகள் தம்மை
கண்டதெல்லாம் எழுதி அவை கற்றிருந்தும் பிறர்க்குக்
காதலுடன் கற்பித்தும் காலத்தைக் கழித்தேன்
புண்டரிகை கேள்வன் உறை பொன்னுலகு தன்னில்
போக நினைவொன்றும் இன்றிப் பொருந்தி இங்கேயிருந்தேன்
எண் திசையும் ஏத்தும் எதிராசன் அருளாலே
எழில் விசும்பே அன்றி இப்போது என் மனம் எண்ணாதே

முற்காலத்தில் ஆத்மாவை உஜ்ஜீவனம் அடையச் செய்வதிலே நோக்காக இருக்கும் நம் பூர்வாசார்யர்கள் அனைவரும் இந்த உலகத்தில் இருப்போர் அனைவரும் உஜ்ஜீவனம் அடைய வேண்டும் என்பதற்காக இவர்களிடத்தில் உள்ள அன்பினாலே அருளிச்செய்த பல ப்ரபந்தங்களைப் பார்த்ததெல்லாம் எழுதி, அவற்றை ஆசார்யன் மூலமாகக் கற்று, மற்றவர்களுக்கு அன்புடனே கற்பித்தும் காலத்தைப் போக்கினேன்; மலர்மகளான பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான எம்பெருமான் நித்யவாஸம் பண்ணுகிற பரமபதத்துக்குப் போகவேண்டும் என்கிற நினைவு சிறிதும் இல்லாமல் இந்த ஸம்ஸாரத்தில் பொருந்தி வாழ்ந்தேன்; எட்டுத் திக்கில் உள்ளோரும் ஸ்தோத்ரம் பண்ணும்படியான பெருமையை உடைய யதிராஜரின் க்ருபையாலே சிறந்ததான பரமபதத்தைத் தவிர என் மனமானது வேறொன்றை இப்போது எண்ணாது.

பாசுரம் 29

தம்முடைய தடைகளைப் போக்கி எம்பெருமானை அடையும்படிச் செய்யும் எம்பெருமானார், ஸ்ரீபாஷ்யம் முதலான க்ரந்தங்கள் மூலம் பாஹ்ய மற்றும் குத்ருஷ்டி மதத்தவர்களை ஜயித்து அருளினவற்றைச் சொல்லி, அவருடைய வீரஸ்ரீக்கு மங்களாசாஸனம் பண்ணுகிறார்.

சாருவாகமதம் நீறு செய்து சமணச் செடிக்கனல் கொளுத்தியே
சாக்கியக் கடலை வற்றுவித்து மிகு சாங்கியக்கிரி முறித்திட
மாறு செய்திடுகணாத வாதியர்கள் வாய் தகர்த்தற மிகுத்து மேல்
வந்த பாசுபதர் சிந்தியோடும் வகை வாது செய்த எதிராசனார்
கூறும் மாகுரு மதத்தோடு ஓங்கிய குமாரிலன் மதம் அவற்றின் மேல்
கொடிய தர்க்கசரம் விட்ட பின் குறுகிய மாயவாதியரை வென்றிட
மீறிவாதில் வருபாற்கரன் மத விலக்கடிக் கொடி எறிந்து போய்
மிக்க யாதவ மதத்தை மாய்த்த பெருவீரர் நாளும் மிக வாழியே

கண்ணால் காண்பது மட்டுமே உண்மை என்று சொல்லக்கூடிய சாருவாக மதத்தை பஸ்மமாகும்படிச் செய்து, சமண மதம் என்கிற செடியை எரித்து, சாக்கிய (பௌத்த) மதம் என்கிற கடலை வற்றிப்போகும்படிச் செய்து, பெருத்திருந்த ஸாங்க்ய மதம் என்கிற மலையைத் தகர்த்து, எதிர் வாதம் செய்யும் கணாத மதத்தவர்கள் [கணபதியை வழிபடுபவர்கள்] வாக்கை உடைத்தெறிந்து, மிகவும் எதிரிட்டு வந்த பாசுபத மதத்தைச் சேர்ந்தவர்கள் சிதறி ஓடும்படி வாது செய்தார் யதிராஜர்; பின்பு அவரே பெரிய பிதற்றலான ப்ரபாகர மதத்தோடு பாட்ட மதத்தின் மேல் தன்னுடைய வெல்வதற்கரிய தர்க்க பாணங்களை விட்டார்; பின்பு மாயாவாதிகள் இருந்த இடம் சென்று அவர்களை வென்றார்; அதற்குமேலே மிகவும் வாதித்து வரும் பாஸ்கர மதம் என்கிற வேர்க்கொடிகள் நெருக்க அவற்றை வெட்டி வீழ்த்தினார்; பின்பு மிகுத்திருந்த யாதவப்ரகாச மதத்தை அழித்த பெரிய வீரரான யதிராஜர் எப்பொழுதும் வளர்ந்து வரும் மங்களத்தை உடையவராக வேண்டும்.

பாசுரம் 30

இனி, இப்படி அனைத்து பாஹ்ய மற்றும் குத்ருஷ்டி மதங்களை ஜயித்த பிறகு, எம்பெருமானார் பகவத் விஷயமான திருவாய்மொழிக்கு விளக்கங்கள் அளித்துக் கொண்டு இருப்பது தம்மை மிகவும் ஈர்க்க, அவருடைய திருவடிகள் முதல் திருமுடிவரை அனுபவித்து அவை நித்யமாகச் செல்ல வேண்டும் என்று மங்களாசாஸனம் பண்ணுகிறார்.

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
திருவரையில் சாத்திய செந்துவர் ஆடை வாழி
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி
இலங்கிய முந்நூல் வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்ய செய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞான முத்திரை வாழியே

திருக்கல்யாண குணங்கள் நிறைந்திருக்கும் யதிராஜருடைய திருவடித் தாமரைகள் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்; இடுப்பிலே சாற்றியிருக்கும் காஷாய வஸ்த்ரமானது எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்; அழகு மிக்கிருக்கும் சிவந்த திருமேனி எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்; திருமார்பில் விளங்கிக் கொண்டிருக்கும் யஜ்ஞோபவீதம் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்; பொருத்தமான மாலைகளாலே அலங்கரிக்கப்பட்ட இரண்டு திருத்தோள்கள் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்; எப்பொழுதும் சுருங்காத, தூய்மையான, சிறந்ததான முகத்தின் ஒளி எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்; அடியார்களை ரக்ஷிப்பதால் வரும் ஆனந்தத்தை வெளியிடும் புன்முறுவல் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்; அடியார்களின் அமலங்களைப் போக்கும் இரண்டு தாமரை போன்ற கண்கள் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்; சிவந்த திருமேனியில் அணிந்திருக்கும் பன்னிரு திருநாமங்கள் அணிந்திருக்கும் அழகு எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்; பத்மாஸனத்தில் இனிது இருக்கும் இருப்போடு, திருக்கையில் இருக்கும் ஞான முத்திரை எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment