ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – ச்லோகங்கள் 61 – 65

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை

<< ச்லோகங்கள் 51 – 65

ஶ்லோகம் 61 – எம்பெருமான் ஆளவந்தாரிடம் “நீர் உயர்ந்த வம்சத்தில் பிறந்துள்ளீரே. ஏன் எப்படி உதவியற்றவரைப்போல் பேசுகிறீர்?” என்று கேட்க, ஆளவந்தார் “நான் உயர்ந்த வம்சத்தில் பிறந்திருந்தாலும், என்னுடைய பெரிய பாபங்களினாலே, ஸம்ஸாரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்; என்னை நீயே இதிலிருந்து எடுத்தருள வேண்டும்” என்கிறார்.

ஜநித்வா’ஹம் வம்ஶே மஹதி ஜகதி க்யாதயஶஸாம்
ஶுசீநாம் யுக்தாநாம் குணபுருஷ தத்த்வ ஸ்திதி விதாம் |
நிஸர்கா தேவ த்வச்சரண  கமலைகாந்த  மநஸாம்
அதோ’த: பாபாத்மா ஶரணத! நிமஜ்ஜாமி தமஸி ||

புகலிடம் கொடுக்கும் ஸ்வாமியே! நான் பரிசுத்தமான, உன்னுடன் எப்பொழுதும் இருக்க விரும்புபவர்களான, சித் மற்றும் அசித் ஆகியவற்றின் ஸ்வரூபத்தையும் தன்மைகளையும் நன்கு உணர்ந்தவர்களான, உன் திருவடிகளிலேயே எப்பொழுதும் தன்கள் மனதை வைத்திருக்கும் சிறந்தவர்களான, ப்ரஸித்தமான புகழை உடைய பெரியோர்கள் அவதரித்த, உயர்ந்த வம்சத்தில் பிறந்திருந்தாலும், பாபமே வடிவெடுத்தவனாகையாலே, இந்த ப்ரக்ருதியில் ஆழமாக மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.

ஶ்லோகம் 62 – எம்பெருமான் “உயர்ந்த வம்சத்தில் பிறந்தும் அது ப்ரயோஜனப்படாமல் போகும் அளவிற்கு உம்மிடத்திலே என்ன பாபங்கள் உள்ளன?” என்று கேட்க, ஆளவந்தார் சென்ற ச்லோகத்தில் பாபாத்மா என்று சொன்னதை விளக்கி அருளுகிறார்.

அமர்யாத: க்ஷுத்ரஶ்  சலமதிர் அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஶோ வஞ்சநபர: |
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹமிதோ து:க்க ஜலதே:
அபாராதுத்தீர்ணஸ்   தவ பரிசரேயம் சரணயோ: ||

நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன், தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன், நிலை இல்லாத மனதை உடையவன், பொறாமையின் பிறப்பிடம், எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன், கைவிடவேண்டிய கர்வத்தை உடையவன், காமத்துக்கு வசப்பட்டவன், ஏமாற்றுபவன், க்ரூரமான செயல்களில் ஈடுபட்டவன் மற்றும் பாபங்களில் மூழ்கியுள்ளவன். நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக்கடலின் கரையை அடைந்து உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்?

ஶ்லோகம் 63 – எம்பெருமான் “நீர் தெரிந்தே செய்த தவறுகளை நான் எப்படிப் போக்க முடியும்?” என்று கேட்க, ஆளவந்தார் “காகாஸுரன் மற்று சிசுபாலன் ஆகியோர் செய்த அபராதங்களைப் பொறுத்த தேவரீரால், என்னுடைய தவறுகளைப் பொறுக்க முடியாதோ?” என்கிறார்.

ரகுவர! யதபூஸ்த்வம் தாத்ருஶோ வாயஸஸ்ய
ப்ரணத இதி தயாளுர்  யச்ச சைத்யஸ்ய க்ருஷ்ண! |
ப்ரதிபவம் அபராத்துர் முக்த! ஸாயுஜ்யதோ’பூ:
வத கிமபதமாகஸ்தஸ்ய தே’ஸ்தி க்ஷமாயா: ||

ரகுகுல திலகமான ஸ்ரீராமராக அவதரித்தவனே! பெரிய தவறைச் செய்த காகாஸுரன் விஷத்தில், அவனை ஒரு சரணாகதனாகக் கொண்டு, உன் கருணையைக் காட்டவில்லையோ? எந்தத் தவறுகளையும் பொருட்படுத்தாத கண்ணனே! சேதி குலத்தைச் சேர்ந்த, பிறவிதோறும் உன்னிடத்தில் அபராதம் செய்த சிசுபாலனுக்கு நீ மோக்ஷத்தையே அளித்தாயே. எந்த பாபம் தேவரீருடைய பொறுமைக்கு விஷயமாகாது? எனக்கு தேவரீர் விளக்கியருள வேண்டும்.

ஶ்லோகம் 64 – எம்பெருமான் “ஸ்வதந்த்ரனான நான் சிலருக்கு சில விசேஷ காரணங்களுக்காக உஜ்ஜீவனத்தைச் செய்து கொடுத்தால், அதுவே என்னுடைய பொதுவான நடத்தையாகக் கருதமுடியுமோ?” என்று கேட்க, ஆளவந்தார் “கடற்கரையில், நீ உன்னிடத்தில் சரணடைவர்களை ரக்ஷிப்பேன் என்று சபதம் எடுத்தபோது, அதில் என்னைத் தவிர என்று சபதம் செய்தாயோ?” என்கிறார்.

நநு  ப்ரபந்நஸ் ஸக்ருதேவ நாத!
தவாஹம் அஸ்மீதி ச யாசமாந: |
தவாநுகம்ப்ய: ஸ்மரத: ப்ரதிஜ்ஞாம்
மதேகவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே ||

ஸ்வாமி! “நான் உன்னிடத்தில் ஒருமுறை சரணடைந்துள்ளேன்” என்றும் “உனக்கே நான் தொண்டு செய்ய வேண்டும்” என்றும் சொல்லி, நீ கடற்கரையில் விபீஷணன் சரணடைய வந்த ஸமயத்தில் செய்த சபதத்தை நினைக்கும் நான், உன்னுடைய கருணையைப் பெறத் தகுந்தவன்; தேவரீருடைய சபதம் என் ஒருவனைத் தவிர்த்தோ?

ஶ்லோகம் 65 –ஆளவந்தார் “நீ ஸ்ரீராமாயணம் அயோத்யா காண்டம் 18.30இல் ‘ராமோ த்விர் நாபிபாஷதே’ (ஸ்ரீராமர் இரண்டு விதமாகப் பேச மாட்டார்) என்ற சபதத்தைக் கைவிட்டாலும், என்னுடைய புண்ய பாபங்களைக் கருதாமல், பெரிய முதலியாரான ஸ்ரீமந்நாதமுனிகளுடன் எனக்கு இருக்கும் ஞானத்தால் மற்றும் பிறப்பால் இருக்கும் ஸம்பந்தத்தைக் கருத்தில் கொண்டு, என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கேட்க, எம்பெருமானும் “இந்த வழியில் எந்தக் குறையும் இல்லை; இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று சொல்லி இந்த வரத்தை ஆளவந்தாருக்கு அளித்தான். ஆளவந்தாரும், த்ருப்தியடைந்தவராய், ஸ்தோத்ரத்தை முடிக்கிறார்.

அக்ருத்ரிம த்வச்சரணாரவிந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்மவந்தம் |
பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய
ப்ரஸீத மத்வ்ருத்தம் அசிந்தயித்வா ||

எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான, தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந்நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருளவேண்டும்.

ஆதாரம் – https://divyaprabandham.koyil.org/index.php/2020/10/sthothra-rathnam-slokams-61-to-65-simple/

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment