ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை
ஶ்லோகம் 51 – ஆளவந்தார் “உன்னுடைய அருளை வேண்டும் எனக்கும் அருளை உடைய உனக்கும் உள்ள இந்த ஸம்பந்தம், தேவரீருடைய கருணையினாலே ஏற்பட்டது; ஆகையால் இதைக் கைவிடாமல் நீ காக்க வேண்டும்” என்கிறார்.
ததஹம் த்வத்ருதே ந நாதவாந்
மத்ருதே த்வம் தயநீயவாந் ந ச |
விதி நிர்மிதம் ஏததந்வயம்
பகவந்! பாலய மா ஸ்ம ஜீஹப: ||
ஞானம் நிறைந்த ஸ்வாமியே! ஆதலால் உன்னைத் தவிர எனக்கு வேறு ஒரு ஸ்வாமி கிடையாது; அதே போல உன்னுடைய கருணைக்கும் என்னைத் தவிர வேறு யாரும் சரியான பாத்திரம் கிடையாது. உன்னுடைய கருணையால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஸம்பந்தம் காக்கப்பட வேண்டும்; அதை நழுவ விடாதே.
ஶ்லோகம் 52 – எம்பெருமான் “என்னுடைய ரக்ஷணம் ஆத்மாவின் ஸ்வரூபத்தின்படி இருக்கும்; உம்முடைய ஸ்வரூபத்தை ஆராய்ந்து, என்னிடத்தில் உம்மை ஸமர்ப்பியும்” என்று சொல்ல, ஆளவந்தாரும் ஆழ்வார் திருவாய்மொழி 2.9.6இல் “சிறப்பில் வீடு” என்று செய்தபடி, “எனக்கு எந்த நிர்பந்தமும் இல்லை; ஆத்மா என்று சொல்லப்படும் இந்த வஸ்து தேவரீரின் திருவடிகளில் என்னால் ஸமர்ப்பிக்கப்பட்டது”
வபுராதிஷு யோ’பி கோ’பி வா
குணதோ’ஸாநி யதா ததாவித: |
ததயம் தவ பாத பத்மயோ:
அஹமத்யைவ மயா ஸமர்ப்பித: ||
நான் சரீரம் முதலான எதுவாகவோ எப்படிப்பட்ட தன்மையை உடையவனாகவும் இருக்கலாம்; அதைப்பற்றி எனக்கு ஒரு நிர்பந்தமும் இல்லை; நான் என்று சொல்லப்படும் இந்த வஸ்து இப்பொழுது உன்னுடைய திருவடித்தாமரைகளில் என்னால் ஸமர்ப்பிக்கட்டது.
ஶ்லோகம் 53 –எம்பெருமான் கருணையுடன் “எப்படி நாம் ஆளவந்தாரைக் கலக்கத்தில் இருக்கும்படி விடுவது?” என்று எண்ணி “நீர் யார்; நீர் யாரை என்னிடம் ஸமர்ப்பித்தீர்?” என்று கேட்க, ஆளவந்தார், தன்னுடைய ஸ்வரூபத்தை ஆழ்வார் திருவாய்மொழி 2.3.4இல் “எனதாவி ஆவியும் நீ … எனதாவி யார்? யானார்?” (நீயே எனக்கு அந்தராத்மா; என்னுடைய ஆத்மா யார்? நான் யார்? எல்லாம் உன்னுடையவையே) என்றபடி “உன்னுடைய உடைமையை நீயே ஏற்றுக்கொண்டாய்; ஆத்மாவை ஸமர்ப்பிப்பதும் ஆத்மாவைத் திருடுவது போலன்றோ?” என்று சொல்லி தன்னுடைய ஆத்ம ஸமர்ப்பணச் செயலுக்கு வருந்துகிறார்.
மம நாத ! யதஸ்தி யோ’ஸ்ம்யஹம்
ஸகலம் தத்தி தவைவ மாதவ |
நியதஸ்வம் இதி ப்ரபுத்ததீ:
அதவா கிந்நு ஸமர்ப்பயாமி தே ||
ஸர்வஸ்வாமியான எம்பெருமானே! லக்ஷ்மீநாதனே! என்னுடைய எல்லா உடைமைப் பொருள்களும் நானும் எப்பொழுதும் உன்னுடையவையே. இது தெரிந்த நான், உனக்கு எதை ஸமர்ப்பிப்பேன்?
ஶ்லோகம் 54 – ஆளவந்தார் எம்பெருமானிடம் “ஆத்மாவைத் திருடுவதற்கு ஸமமான இந்த ஆத்ம ஸமர்ப்பணத்தை நான் நிறுத்தாததால், உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினால் என்னுடைய சேஷத்வத்தை வெளியிட்டதைப்போலே, பரபக்தி, பரஞானம் மற்றும் பரமபக்தி ஆகியவைகளையும் அளித்து, இந்த ஞானம் உன்னுடைய கைங்கர்யத்துக்கு உதவும்படிச் செய்” என்கிறார்.
அவபோதிதவாநிமாம் யதா
மயி நித்யாம் பவதீயதாம் ஸ்வயம் |
க்ருபயைததநந்ய போக்யதாம்
பகவந்! பக்திம் அபி ப்ரயச்ச மே ||
என் ஸ்வாமியே! எப்படி உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் என்னுடைய சேஷத்வத்தை எனக்கு அறிவுறுத்தினாயோ, அதேபோல வேறு எங்கும் கிடைக்காத, உன்னிடத்தில் பக்தி செய்யும் அந்த இனிய அனுபவத்தையும், நீயே அளிக்க வேண்டும்.
ஶ்லோகம் 55 – ஆளவந்தார் பகவானிடத்தில் அதிகமான பக்தியைப் பெற்றபின், பகவானிடத்தில் அடிமைத்தனத்துடன் நிறுத்தாமல், அவனுடைய அடியார்களுக்கு அடிமையாக இருப்பதை ப்ரார்த்திக்கிறார்.
தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||
எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும். மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.
ஶ்லோகம் 56 – ஆளவந்தார் “எனக்கு ஒரு வைஷ்ணவரின் திருமாளிகையில் பிறக்கும் பெருமைதான் வேண்டுமோ? அவர்கள் என்னைக் கண்டால், என்னைத் தள்ளிவிடாமல், “இவன் நம்மவன்” என்று கருதித் தங்கள் விசேஷமான கருணையை எனக்கு அளிக்க வேண்டும்படி நீ செய்ய வேண்டும்” என்கிறார்.
ஸக்ருத் த்வதாகார விலோகநாஶயா
த்ருணீ க்ருதாந் உத்தம புக்தி முக்திபி: |
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய
க்ஷணே’பி தே யத்விரஹோ’திதுஸ்ஸஹ: ||
உன்னுடைய பிரிவைத் தாங்க முடியாதவர்களான, எத்தனை இன்பங்களும் மோக்ஷமும் பெற்றிருந்தாலும் உன்னுடைய திருமேனியை ஒரு முறை பார்ப்பதைக் கருதினால், அவற்றைப் புல்லைப்போல மதிப்பவர்களான சிறந்த வைஷ்ணவர்களின் கருணைப் பார்வைக்கு நான் இலக்காகும் தகுதியை எனக்குக் கொடு.
ஶ்லோகம் 57 – முன் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஶேஷத்வத்தின் உயர்ந்த நிலையான அடியார்களுக்கு அடிமைப்பட்டிருப்பதை அனுபவித்தார். இங்கே ஶேஷத்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் விஷயங்களில் தனக்கு இருக்கும் வெறுப்பைச் சொல்லி, எம்பெருமானிடத்தில் “அவற்றை நீக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
ந தேஹம் ந ப்ராணாந்ந ச ஸுகம் அஶேஷாபிலஷிதம்
ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வ விபவாத் |
பஹிர்பூதம் நாத! க்ஷணமபி ஸஹே யாது ஶததா
விநாஶம் தத்ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபனம் இதம் ||
ஸ்வாமியே! உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும் அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும். மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை.
ஶ்லோகம் 58 – எம்பெருமான் “இந்த ஸம்ஸாரத்தில் என்னுடைய கோபத்துக் காரணமான பகவத் அபசாரம் முதலிய எத்தனையோ விஷயங்கள் இருக்க, கைங்கர்யத்துக்கு விரோதியான இவற்றில் வெறுப்பு ஏற்பட்டு, யோகிகளுக்கும் அரிதான இந்நிலையை ப்ரார்த்திப்பவரும் உளரே!” என்று ஆச்சர்யப்பட, ஆளவந்தார் “இந்த தோஷங்களை நீக்கக்கூடிய தேவரீரின் எல்லையில்லாத திருக்கல்யாண குணங்களை நினைத்து இதை ஆசைப்பட்டேன்” என்கிறார்.
துரந்தஸ்யானாதேர் அபரிஹரணீயஸ்ய மஹதோ
நிஹீநாசாரோ’ஹம் ந்ருபஶுரஶுபஸ்யாஸ் பதம் அபி |
தயாஸிந்தோ! பந்தோ! நிரவதிக வாத்ஸல்யஜலதே
தவ ஸ்மாரம் ஸ்மாரம் குணகணம் இதீச்சாமி கதபீ: ||
கருணைக் கடலான ஸ்வாமியே! என்னுடன் எல்லா உறவுகளையும் உடையவனே! வாத்ஸல்யக் கடலாக இருப்பவனே! நான் மிகப் பெரிய, அநாதி கால, முடிவில்லாத, போக்க முடியாத பாபங்களை உடையவனாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் உன்னுடைய திருக்கல்யாண குணங்களை நினைப்பதால், பயமில்லாமல் இதை ஆசைப்படுகிறேன்.
ஶ்லோகம் 59 – எம்பெருமான் “நீர் இச்சாமி என்று முன் ச்லோகத்தில் கூறியபடி உண்மையிலே என் விஷயத்தில் ஆசை கொண்டுள்ளீரா?” என்று கேட்க “நான் மந்த மனதை உடையவன் ஆகையால் தேவரீருடைய திருமுன்பே, தேவரீரின் பெருமைக்குத் தகுந்த என் ஆசையை வெளியிட முடியவில்லை. என்னுடைய ஆசையைக் காட்டும் வார்த்தைகளைக் கொண்டு மனதைத் திருத்தி, இந்நிலை எனக்கு உண்மையில் ஏற்படும்படிச் செய்ய வேண்டும்” என்கிறார்.
அநிச்சந்நப்யேவம் யதி புநரிதீச்சந்நிவ ரஜஸ்-
தமஶ் சன்னஶ்சத்மஸ்துதி வசன பங்கீமரசயம் |
ததா’பீத்தம் ரூபம் வசனம் அவலம்ப்யா’பி க்ருபயா
த்வமேவைவம் பூதம் தரணிதர! மே ஶிக்ஷய மந: ||
பூமியை எடுத்த எம்பெருமானே! இந்த அடியவன் ரஜோ மற்றும் தமோ குணங்களால் மூடப்பட்டிருந்தாலும், என்னிடத்தில் உண்மையான ஆசை இல்லாமல் இருந்தாலும், உண்மையான ஆசை உடையவர்களைப்போலே உன்னை மயக்கும் வார்த்தைகளை நான் சொன்னாலும், அதையே காரணமாகக்கொண்டு, உன்னுடைய கருணையால் என்னுடைய மனதைத் திருத்தியருள வேண்டும்.
ஶ்லோகம் 60 – எம்பெருமான் “உம்மிடத்தில் ஆசையும் இல்லாதபோதும், நானே உம்மிடத்தில் ஆசையை உண்டாக்கி உம்மைக் காக்கவும் செய்ய வேண்டும் என்கிறீரே – இவற்றை நான் ஏன் செய்ய வேண்டும்” என்று கேட்க ஆளவந்தார் தனக்கும் அவனுக்கும் உள்ள ஒழிக்க ஒழியாத உறவைக் காட்டுகிறார்.
பிதா த்வம் மாதா த்வம் தயித தநயஸ்த்வம் ப்ரிய ஸுஹ்ருத்
த்வமேவ த்வம் மித்ரம் குருரஸி கதிஶ்சாஸி ஜகதாம் |
த்வதீயஸ் த்வத்ப்ருத்யஸ் தவ பரிஜநஸ் த்வத்கதிரஹம்
ப்ரபந்நஶ் சைவம் ஸத்யஹமபி தவைவாஸ்மி ஹி பர: ||
இவ்வுலகங்களுக்கு நீயே தந்தை; நீயே தாய்; நீயே விரும்பத்தக்க பிள்ளை; நீயே நல்ல உள்ளம் கொண்ட நண்பன்; நீயே நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பன்; நீயே குரு; நீயே உபாயம் (வழி) மற்றும் உபேயம் (குறிக்கோள்); நான் உன்னுடையவன்; உன்னுடைய அடிமை; உன்னுடைய தொண்டன்; உன்னையே சிறந்த உபேயமாகவும், உபாயமாகவும் கொண்டுள்ளவன்; ஆகையால் நான் ஏன் உன்னால் ரக்ஷிக்கப்படக் கூடாது?
ஆதாரம் – https://divyaprabandham.koyil.org/index.php/2020/10/sthothra-rathnam-slokams-51-to-60-simple/
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org